பெண் என்றால் இனப்பெருக்கத்துக்கும், பணப்பெருக்கத்துக்கும், மனப்பெருக்கத்துக்கும், அடுப்படிக்கும் என கடுப்படிக்கும் இச்சமூக சூழலில் பெண் என்றால் வலிமை, பெண் என்றால் எளிமை, பெண் என்றால் புதுமை, பெண் என்றால் கடமை, பெண் என்றால் திறமை, பெண் என்றாலே பெருமை என வாழ்ந்துக்கொண்டிருக்கும் தன் போலுள்ள பல பெண்களை வாழ வைத்தும் கொண்டிருக்கும் ஒரு கதைக்குயிலுக்கு வாழ்த்துமடல் இது.

பெண்ணின் அருமை உணரும்வரை அவள் பெருமையை தன் பேனாவின் கரு’மையில் இட்டு பல கரடு முரடான பாதையில் பல மயில் கடந்து வந்து பலரை தன் எழுத்துக்களால் கவர்ந்து, எழுதி எழுதி சிவந்து போன கரம் அவர் கரம். குடும்பத்தின் மீதான அக்கறை ஒருபுறமிருக்க, கணவர் இட்ட கட்டளையின் கடமை ஒருபுறமிழுக்க, நாற்புறமும் எதிர்க்கனைகள் பலர்த் தொடுக்க, ஏளனப் பேச்சு விடுக்க அத்தைனையும் உடைத்து, கொண்ட கடமையிலும், தன் துறையிலும் பல சாதனைப்படைத்து ஓயாமல் உழைத்துக்கொண்டிருக்கும் ஓர் உன்னதம்.
தான் என்னும் அகந்தையை கந்தையாய் கிழித்து சொற்பல கோர்த்து பற்பல கவிதைகளும் கதைகளும் வார்த்துக் கொடுப்பதில் சிறந்தவர் இன்று (28 செப்டம்பர்) பிறந்தவர்.
சமூகநீதி, சமத்துவம், தனித்துவம், இவைகளை தன் கதைகளின் கருவாக்கியவர், மெல்லிய திறமை உடையவரையும் மேம்பட உருவாக்கியவர்.அவர்கள் குறைகளை கலைத்து நிறைகளை நிறையச் செய்பவர்.துணிச்சல் மிகுந்த அணிச்சல்.

ஒரு தலைப்பை கொண்டு எழுத எத்தனிக்கும் முன்பு வார்த்தைகளும் வாய்த் திறக்கும் அனைவரையும் கவரும் வித்தை இவர் எழுத்திற்கு மட்டுமே வாய்த்திருக்கும். கதைகள் வடிக்க இவருள் கற்பனைகள் ஏராளம், தன்னைப்போல் பிறரை நேசிக்கும் இவர் பாங்கு என்றுமே தாராளம்.
இன்று! நீங்கள் பிறந்த நாள். உங்களை வாழ்த்திக் கொண்டிருக்கும் அந்த பூங்கொத்தில் எனது வாழ்த்தும் ஒரு பூவாய் ஏற்று, வெகுமதி குறையா திருமதி. லதா சரவணன் அவர்கள் பூரண நலத்துடனும் வளத்துடனும் வாழ இந்த அன்பனின் வாழ்த்துகள்.
இப்படிக்கு நான்
-சதீஸ்
(மின்கைத்தடி மின்னிதழ்)
