“ஜெய்சங்கர் சாலை”- பெயர் பலகையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்..!

எஸ்.வி.வெங்கடராமன் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் 5-வது குறுக்கு தெருவிற்கு “எஸ்.வி.வெங்கடராமன் தெரு” என்று பெயர் சூட்டி, அதற்கான பெயர்பலகையை மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில், பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில், மக்கள் கலைஞர் என்றும், தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்றும் அழைக்கப்பட்ட திரைப்பட நடிகர் ஜெய்சங்கர் வசித்து வந்த நுங்கம்பாக்கம், கல்லூரி பாதைக்கு “ஜெய்சங்கர் சாலை” என்றும், நாடக நடிகர், தமிழ்நாட்டின் முதல் தொலைக்காட்சி தொடர் தயாரிப்பாளர், அரிமா சங்கத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த எஸ்.வி.வெங்கடராமன் வசித்து வந்த மந்தைவெளிப்பாக்கம் 5-வது குறுக்கு தெருவிற்கு “எஸ்.வி.வெங்கடராமன் தெரு” என்றும் புதிய பெயர் சூட்டப்பட்ட சாலைகளின் பெயர் பலகைகளை காணொலிக் காட்சி வாயிலாக திறந்து வைத்தார்.

ஜெய்சங்கர் சாலை:

மக்கள் கலைஞர் என்றும், தமிழ் சினிமாவின் ஜேம்ஸ் பாண்ட் என்றும் அழைக்கப்பட்ட நடிகர் ஜெய்சங்கர் அவர்கள் 35 ஆண்டு காலத்திற்கு மேலாக தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருந்தார். முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடன் நெருங்கிய தொடர்புடைய அவர் பல்வேறு தொண்டு நடவடிக்கைகளிலும ஈடுபட்டுள்ளதோடு, கலைமாமணி விருது பெற்ற பெருமைக்குரியவர் ஆவார். அவரது கலைச்சேவையை சிறப்பிக்கும் வகையில் அவர் வசித்து வந்த நுங்கம்பாக்கத்திலுள்ள கல்லூரி பாதையை (College Lane) “ஜெய்சங்கர் சாலை” என்று பெயர் சூட்டப்பட்டு, தமிழ்நாடு முதல்-அமைச்சரால் இன்றையதினம் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது.

எஸ்.வி.வெங்கடராமன் தெரு:

மயிலாப்பூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.வி.சேகரின் தந்தை எஸ்.வி.வெங்கடராமன், விஜயா வாஹினி ஸ்டுடியோவில் லேப் உயரதிகாரியாக பணியாற்றினார். மேடை நாடகங்களில் பெண் வேடமிட்டு நடித்துள்ளதோடு, தமிழ்நாடு திரைப்படக் கல்லூரிகளில் தற்காலிக பேராசிரியாக பணியாற்றியுள்ளார். அவர் தமிழ்நாட்டின் முதல் தொலைக்காட்சித் தொடர் “வண்ணக்கோலங்கள்” தயாரிப்பாளர் ஆவார். அரிமா சங்கத்தில் பல முக்கிய பொறுப்புகளை வகித்த அவர் கண்தானம், ரத்த தானம், குழந்தைகளுக்கு ஏற்படும் சர்க்கரை குறைபாடு பற்றி விழிப்புணர்வு குறும்படத்தை தயாரித்ததோடு, தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். அவரது சேவையை சிறப்பிக்கும் வகையில், அவர் வசித்த மந்தைவெளிப்பாக்கம் 5-வது குறுக்கு தெருவிற்கு “எஸ்.வி. வெங்கடராமன் தெரு” என்று பெயர் சூட்டப்பட்டு, தமிழ்நாடு முதல்-அமைச்சரால் இன்றையதினம் பெயர் பலகை திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் நா.எழிலன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் தா.கார்த்திகேயன், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ஜெ.குமரகுருபரன், அரசு உயர் அலுவலர்கள், நடிகர் ஜெய்சங்கர் மற்றும் எஸ்.வி.சேகர் ஆகியோரின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

காணொலிக் காட்சி வாயிலாக பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, சட்டமன்ற உறுப்பினர் த.வேலு, துணை மேயர் மு.மகேஷ்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி நிலைக் குழு தலைவர் நே.சிற்றரசு, மண்டல குழுத் தலைவர் எஸ்.மதன்மோகன், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!