நாளை கரூரில் விஜய் பிரசாரம்; தொண்டர்களுக்கு த.வெ.க. அறிவுறுத்தல்..!

விஜய்யின் வாகனத்தை யாரும் பின்தொடர வேண்டாம் என தொண்டர்களுக்கு த.வெ.க. அறிவுறுத்தியுள்ளது.

சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள த.வெ.க. தீவிர முன்னெடுப்பை எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக மக்களை சந்தித்து ஆதரவு திரட்டும் பணியில் தற்போது விஜய் ஈடுபட்டுள்ளார். தனது முதல் மக்கள் சந்திப்பு பயணத்தை கடந்த 13-ந்தேதி திருச்சியில் தொடங்கினார்.

அதனைத்தொடர்ந்து 20-ந் தேதி நாகப்பட்டினம், திருவாரூரில் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்வில் பங்கேற்றார். இந்நிலையில், நாளை (சனிக்கிழமை) நாமக்கல், கரூர் ஆகிய 2 பகுதிகளில் விஜய் மக்கள் சந்திப்பு பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறார். இன்று காலை வரை விஜய் பிரசாரம் செய்யும் இடம் இறுதி செய்யப்படாத நிலையில், தற்போது கடும் நிபந்தனைகளுடன் போலீசார் அனுமதி அளித்துள்ளனர்.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று பிரசாரம் செய்த ஈரோடு ரோடு வேலுசாமிபுரம் பகுதியில் நின்று பேசுவதற்கு விஜய்க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல், நாமக்கல்லில் விஜய் பிரசாரம் மேற்கொள்வதற்கும் போலீசார் அனுமதி வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில், விஜய் மேற்கொள்ளும் மக்கள் சந்திப்பு சுற்றுப் பயணத்தின்போது தொண்டர்களும், பொதுமக்களும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என த.வெ.க. கேட்டுக் கொண்டுள்ளது. இது தொடர்பாக த.வெ.க. தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது;-

“தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு மக்களை சந்தித்து வருவதை அனைவரும் அறிவீர்கள். நாளை நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெறும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மக்கள் விரும்பும் முதல்வர் வேட்பாளர், நம் வெற்றித் தலைவர் கலந்துகொள்ள உள்ளார். தமிழக வெற்றிக் கழகம், தகுதியும் பொறுப்பும் மிக்க ஓர் அரசியல் பேரியக்கம் என்பதை நமது ஒவ்வொரு செயலிலும் காட்ட வேண்டியது நமது தலையாய கடமை.

எனவே நம் வெற்றித் தலைவரின் இந்த மக்கள் சந்திப்புச் சுற்றுப் பயணத்தின்போது கழகத் தோழர்களும், பொதுமக்களும் பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனக் கழகத் தலைவரின் ஒப்புதலோடு கேட்டுக்கொள்கிறோம்.

  1. நம் தலைவர், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிக்கு வரும் போதும், நிகழ்ச்சியை முடித்துவிட்டுச் செல்லும் போதும் அவரது வாகனத்தை யாரும் இருசக்கர வாகனங்களில் அல்லது வேறு வாகனங்களில் பின்தொடர வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறோம்.
  2. மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், காம்பவுண்டு சுவர்கள், மரங்கள், மின்விளக்குக் கம்பங்கள் (EB Lamp Posts), மின் கம்பங்கள் (EB Posts), மின்மாற்றிகள் (EB Transformers), வாகனங்கள் (பஸ், வேன், ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்கள்), கொடிக் கம்பங்கள், சிலைகள் ஏதேனும் இருந்தால் அவற்றைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு கிரில் கம்பிகள் மற்றும் தடுப்புகள் ஆகியவற்றின் அருகில் செல்வதைத் தவிர்க்க வேண்டும். உயரமான இடங்களின் மேலே கண்டிப்பாக ஏறக் கூடாது.
  3. கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் இருக்கும் சகோதரிகள், முதியவர்கள், உடல்நலம் குன்றியோர், பள்ளிச் சிறுவர், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் நம் தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளில் நேரில் வந்து கலந்துகொள்வதைத் தவிர்த்து, வீட்டில் இருந்தபடியே நேரலையில் கண்டு மகிழுமாறு பேரன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
  4. தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியின்போது, அப்பகுதிகளில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கும் பொது மக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பள்ளி மாணாக்கர்களுக்கும் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கும் எவ்விதப் போக்குவரத்து இடையூறும் ஏற்படாத வகையில் கலந்துகொள்ள வேண்டும்.

5.காவல் துறையின் அறிவுறுத்தலின்படி, அனைத்து வகையான வரவேற்பு நடவடிக்கைகளையும் கழகத் தோழர்கள் தவிர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறோம்.

  1. வாகனங்களை நிறுத்தும் பொழுது, பிறருக்கு எவ்வித இடையூறும் இல்லாமல் நிறுத்த வேண்டும். போக்குவரத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையூறாக வாகனங்களைக் கண்டிப்பாக நிறுத்தக் கூடாது.
  2. தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வரும் நாம் அனைவரும் சகோதர சகோதரிகளே! இதைக் கருத்தில் கொண்டு பிறர் மனம் புண்படும் வகையில் பேசுவதோ அல்லது நடந்துகொள்வதோ கண்டிப்பாகக் கூடாது.
  3. தலைவரின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் அல்லது அங்கே செல்லும் வழிகள் மற்றும் திரும்பி வரும் வழிகளில் சட்டம் ஒழுங்கைப் பேணிப் பாதுகாக்க உதவும் வண்ணம் மிகவும் கண்ணியத்துடன் நடந்துகொள்ள வேண்டும். நம் கழகத்திற்கு அவப்பெயரை உண்டாக்கும் உள்நோக்கம் கொண்டு யாரேனும் செயல்பட முற்பட்டால், அதற்கு இடம் கொடாதவாறு கவனத்துடன் செயல்பட வேண்டும்.
  4. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைகளிலும், பிற சாலைகளிலும், நெடுஞ்சாலை / இதர சாலைகளின் இரு புறங்களிலும் பிளக்ஸ் பேனரோ, அலங்கார வளைவுகளோ, கொடி கட்டப்பட்ட கம்பிகளோ உரிய அனுமதி பெறாமல் வைக்கக் கூடாது.
  5. நம் கழகத் தலைவரின் இந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகளின்போதும், தலைவரின் வருகை உள்ளிட்டவற்றின்போதும் கழகத் தோழர்கள் பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறோம்.”

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!