மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பேங்க்காக் மற்றும் பட்டாயா)

பகுதி ~ 10
(இறுதிப் பகுதி)

மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பேங்க்காக் மற்றும் பட்டாயா)

பகுதி ~ 10
(இறுதிப் பகுதி)

சபாரி வேர்ல்ட் பூங்காவில் இருந்து வெளியே வந்த எங்களை அழைத்துக் கொண்டு ஓட்டுனர் அங்கிருந்து ஒரு ஐந்து நிமிட பயண தூத்தில் உள்ள safari park என்ற வனவிலங்குகள் சரணாலயம் போன்ற பகுதிக்கு அழைத்துச் சென்றார்.
அதுவும் சபாரி வேர்ல்ட் பூங்காவின் இணைப்பு.
ஓட்டுனரிடம் உள்ள எங்கள் டிக்கெட்டை சரி பார்த்து உள்ளே அனுப்புகிறார்கள்.

எச்சரிக்கை பலகையில் யாரும் வாகனத்தை விட்டு கீழே இறங்க கூடாது. வாகனத்திற்கு உள்ளேயே பயணிக்க வேண்டும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்தது.
மெதுவாக செல்லும் அந்த வாகனத்தின் கண்ணாடி வழியே அந்த சரணாலயம் போன்ற பகுதியில் வாழும் விலங்குகளை பார்த்துக் கொண்டே செல்ல வேண்டும்.
அதுதான் அந்த திறந்தவெளி வனவிலங்கு புகலிடத்தின் ஏற்பாடு.
முதலில் பறவைகள், அதற்கு பிறகு மான்கள், கரடிகள், சிங்கங்கள், காண்டா மிருகம், நீர் யானைகள்,புலிகள்,வரி குதிரைகள், ஒட்டகங்கள், காட்டெருமைகள்
என வன விலங்குகள் சுதந்திரமாக சுற்றித் திரியும் நிலையில் அந்த காட்சிகளை பார்த்துக் கொண்டு வரும்போது வாகனம் நகர்ந்து சென்றது.
அநேக விலங்குகள் படுத்து கொண்டிருந்த நிலையிலேயே இருந்தன. இயன்றவரை போட்டோ வீடியோ எடுத்துக் கொண்டேன்.

அப்போது பாதுகாப்பான ஒரு பெரிய கூண்டு வண்டியில் ஒரு சிலரை அழைத்து வந்து அவர்கள் அந்த வாகனத்தில் உள்ளே இருந்து கொண்டு இறைச்சியை சிங்கங்களுக்கும் புலிகளுக்கும் கொடுக்கிறார்கள்.
கூண்டு பகுதியில் உள்ளே இருந்து அதில் உள்ளவர்கள் ஒரு நீண்ட இரும்பு கம்பியில் கோர்க்கப்பட்ட இறைச்சி துண்டுகளை டிக்கெட் கவுண்டர் போன்ற சிறிய வளைவான திறந்த பகுதியின் மூலம் கொடுக்கும் பொழுது சிங்கங்களும் புலிகளும் வெளியில் இருந்து அவற்றை பெற்று உண்கின்றன.
அனேகமாக அவர்கள் சிறப்பு விருந்தாளிகளாக இருக்க வேண்டும் அல்லது சிறப்பு கட்டணம் செலுத்தி அந்த கூண்டு வண்டியில் டைகர் சபாரி லயன் சபாரி என்று அவர்களை அழைத்து போயிருக்கக்கூடும் என கணித்துக் கொண்டோம்.

ஒரு குறிப்பிட்ட தூரம் வரை பார்த்துக் கொண்டு சென்ற பிறகு வெளியேறும் கேட் வந்தது.
அதன் பிறகு வாகனம் வேகமாக புறப்பட்டு அடுத்த ஒரு மணி நேரத்தில் எங்களை எங்களது ஹோட்டலில் வந்து ஓட்டுனர் இறக்கிவிட்டு அன்றைய தினம் நிகழ்வுகள் முடிந்துவிட்டது என்று சொல்லி விடை பெற்று சென்றார்.

தங்கையும் சற்று நலமடைந்தவராக காணப்பட்டார். நாங்கள் அந்த சபாரி வேல்டில் எடுத்த புகைப்படங்களையும் வீடியோக்களையும் தங்கையிடம் காண்பித்தோம்.
அவர் இந்த நல்ல வாய்ப்பை எனது உடல் நிலை காரணமாக தவற விட்டேனே என்று மன வருத்தமடைந்தார்.
எனினும் மனதை தேற்றிக்கொண்டு மற்றொரு முறை தன்னுடைய மகளுடைய குடும்பத்தை அங்கே அழைத்து போவதாகவும் அப்போது அவற்றை பார்த்துக் கொள்கிறேன் என்றும் மனதை தேற்றிக்கொண்டார்.

பட்டாயாவில் நாங்கள் பார்த்த பிளோட்டிங் மார்க்கெட் பற்றி குறிப்பிடும் பொழுது உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் காண்பிக்கப்படும் ஃப்ளோட்டிங் மார்க்கெட் பேங்க்காக் நகருக்கு அருகில் உள்ளது என்று குறிப்பிட்டு இருந்தேன்.
அது ஒரு மிகப்பெரிய ஏரியில் மிக அழகாக வடிவமைக்கப்பட்ட ஒரு மிகப்பெரிய ஃப்லோட்டிங் மார்க்கெட் என்று எங்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

எனவே நான் என் தங்கையிடம் ‘நாம் மேலும் இரண்டு நாட்கள் பேங்காக்கில் தங்கி இருந்து நமது பயணத்தை நீட்டிக்கலாம்’ என ஆலோசனை சொன்னேன்.
‘அதற்கான விமான டிக்கெட் எதையும் கேன்சல் செய்ய இயலாது என்பதால் நமக்கு இழப்பு அதிகமாக ஏற்படும் மேலும் எனக்கு வீட்டிற்கு திரும்பிப் போய் விடலாம் என்று தோன்றுகிறது’ என்று சொன்னார்.
ஆனால் என் மைத்துனரோ மேலும் இரண்டு நாட்கள் அங்கு பயணத்தை நீடிக்க விருப்பம் கொண்டவராய் காணப்பட்டார்.

விமான டிக்கெட்டுக்கு உரிய தொகை போனாலும் பரவாயில்லை என்று
நாங்கள் இருவருமாய் சேர்ந்து என் தங்கையை ஒப்புக்கொள்ள வைக்க முயற்சி செய்தோம்.
ஆனால் அது பலன் அளிக்கவில்லை.
அவர் என்னிடம் ‘அண்ணே நாங்கள் இருவரும் சென்னை திரும்புகிறோம் நீங்கள் மட்டும் வேண்டுமானால் இரண்டு நாட்கள் கூடுதலாக தங்கி இருந்து பார்த்துவிட்டு வாருங்கள்’ என்று சொன்னார்.
அதிலே எனக்கு உடன்பாடு இல்லை.
எனவே எங்களுடைய பயணத்தை நீட்டிக்கும் திட்டத்தை கைவிட்டோம்.

அப்போது பேங்க்காக் நகரில் மழை பெய்து கொண்டு இருந்தது.
என் தங்கை ‘நீங்கள் இருவரும் சென்று இரவு உணவருந்தி விட்டு எனக்கும் ஏதாவது வாங்கிக் கொண்டு வாருங்கள்’ என்று சொல்லிவிட்டார்.

எனவே நாங்கள் இருவரும் ரிசப்ஷனிஸ்ட் இடம் இருந்த குடை ஒன்றை வாங்கிக் கொண்டு அருகில் உள்ள ஸ்ட்ரீட் மார்க்கெட்டை நோக்கி சென்றோம்.
அங்கே ஸ்ட்ரீட் ஃபுட் கடைகள் நிறைய இருந்தன.
ஒரே குடையில் இருவரும் சென்றதால் இருவருமே நனைந்து போகிற நிலைமையில் நான் ஒரு கடையின் அருகில் ஒதுங்கி கொண்டேன்.
என் மைத்துனர் ஒவ்வொரு கடையாக சென்று நாங்கள் விரும்பி உண்ணும் உணவாகிய பாட் தாய் உணவு வேண்டுமென்று கேட்கிறார.

ஆனால் எல்லா கடைகளிலும் அவரை போ போ என்று முகத்தை சுளித்துக்கொண்டு விரட்டி விடுகிறார்கள்.
எனக்கு ஒன்றுமே புரியவில்லை
நாம் என்ன சும்மாவா கேட்கிறோம் காசு கொடுத்து தானே வாங்குகிறோம்.
கடையில் நாங்கள் கேட்கும் ஐட்டம் இருக்கிறது ஆனால் இல்லை என்று துரத்துகிறார்கள் என்று மிகவும் குழம்பி போனேன்.

மைத்துனர் என்னிடம் வந்து’ என்ன மச்சான் எந்த கடையில போய் கேட்டாலும் முகத்தை சுளிச்சுகிட்டு விரட்டுறாங்க.
ஏன் என்று தெரியல நமக்கு கொடுக்க மாட்டாங்களா’ என்று என்னிடம் கேட்டார்.
அப்போது நான் ‘நீங்கள் என்ன கேட்டீர்கள்’ என்று அவரிடம் கேட்டேன்
அதற்கு அவர் ‘தாய் பாட் ‘என்று கேட்டேன் என்று சொன்னார்.
எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.
“உங்களை பிச்சைக்காரர் என்று நினைத்து தான் எல்லோரும் விரட்டி இருக்கிறார்கள் ‘என்று சொன்னேன்.
அவருக்கு ஒன்றும் விளங்கவில்லை.
‘ஏன் அப்படி நினைக்கிறார்கள்’ என்று என்னிடம் கேட்டார்.
‘பின்பு என்ன பாட் தாய் என்று கேட்பதற்கு பதில் தாய் பாட் என்று கேட்டிருக்கிறீர்கள்.
தாய் பாட் என்றால் தாய்லாந்து நாணயம்.
எனவே நீங்கள் பிச்சை கேட்டு வருகிறீர்கள் என்று உங்களை துரத்தி இருக்கிறார்கள்.
நல்லவேளை யாரும் உங்கள் கையில் சில்லறை போடாமல் விட்டார்களே ‘என்று சொல்லி சிரித்தேன்.
அப்போதுதான் அவருக்கு விளங்கியது ‘அய்யய்யோ ஆமா மச்சான் ‘என்று அவரும் சிரித்தார்.

பின்னர் எந்த கடையில் அவரை துரத்தினார்களா அந்த கடைகளில் ஒரு கடைக்கு சென்று ‘பாட் தாய்’ என்று அவர் கேட்க அவர்கள் அந்த உணவை பார்சல் செய்து கொடுத்தார்கள்.
அதை வாங்கிக்கொண்டு எங்களது அறைக்கு திரும்பினோம்.
அந்த நிகழ்வை என் தங்கையிடம் தெரிவித்தேன்.
அவரும் குலுங்கி குலுங்கி சிரித்தார்.
இந்த நிகழ்வை நாங்கள் சென்னை வந்த பிறகு கூட மற்றவர்களிடம் சொல்லும் போது எல்லோரும் குலுங்கி குலுங்கி சிரித்தார்கள்.
அதன் பிறகு வாங்கி வந்த உணவை
மூவரும் உட்கொண்டோம்.

இரவே அனைத்து துணிமணிகளையும் பொருட்களையும் பேக் செய்து வைத்து விட்டு உறங்கினோம்.

ஆறாவது நாள் காலையில் மீண்டும் எழுந்து வழக்கம்போல் ரெஸ்டாரண்டில் காலை உணவை முடித்துக் கொண்டு தயாராக இருந்தோம்.

ஒன்பது மணிக்கு எங்களை விமான நிலையத்தில் இறக்கி விடுவதற்கான வாகனம் வந்தது.
ஹோட்டலை செக் அவுட் செய்து கொண்டு வாகனத்தில் ஏறி விமான நிலையத்தை நோக்கி பயணம் செய்தோம்.
எங்களுக்கு பிற்பகல் 12 30 மணிக்கு விமானம்.
அரை மணி நேரத்தில் எங்களை பாங்காக் சுவர்ணபூமி விமான நிலையத்தில் இறக்கி விட்டு விட்டு ஓட்டுனர் சென்று விட்டார்.

நேராக நாங்கள் டேக்ஸ் ரீபண்ட் கவுண்டருக்கு சென்று எங்களுக்கு கிடைக்க வேண்டிய டாக்ஸ் ரீஃபண்ட் பணத்தை பெற்றுக் கொண்டோம்.
அவர்கள் தாய் பாட் நாணயமாக கொடுத்தார்கள்.
அதன் அருகிலேயே எக்ஸ்சேஞ்ச் கவுண்டரும் இருந்தது. அங்கே அந்த தாய் பாட்கள் எல்லாம் கொடுத்து விட்டு இந்திய பணத்தை வாங்கிக் கொண்டோம்.
சில்லறை தாய்லாந்து நோட்டுகள் மற்றும் நாணயங்கள் கொஞ்சம் எங்களிடம் மீதி இருந்தது.

அதன்பின்பு எங்களுடைய பெட்டிகளை செக் இன் செய்து விட்டு செக்யூரிட்டி செக் முடித்துக் கொண்டு விமான நிலையத்தின் கேட்பகுதியில் வந்து அமர்ந்தோம்.
அப்போது தண்ணீர் தாகம் எடுத்தது.
எனவே எங்கள் கைகளில் இருந்த சில்லறை தாய் பாட் நாணயங்களைக் கொண்டு தண்ணீர் பாட்டில் வாங்கலாம் என்று அங்கிருந்த ஒரு கடைக்குச் சென்றோம்.
‘தண்ணீர் பாட்டில் எவ்வளவு ‘என்று கேட்டதற்கு அந்த பெண்மணி ஆங்கிலத்தில்’ 120 பாட்டு% என்று சொன்னார்.
எனவே எங்களிடமிருந்து சில்லறை நாணயங்களையும் 10 20 தாய் பாட் நோட்டுகளையும் எடுத்து எண்ணிப் பார்த்து அவரது மேஜையின் மேல் வைத்தோம்.
அவர் அதை எண்ணிப் பார்த்துவிட்டு தனது முகத்தை கடுகடு என வைத்துக் கொண்டு எங்களை அவமானப்படுத்துவது போன்று வேகமாக தனது கைகளால் அந்த மேஜையின் மூலைப்பகுதிக்கு தள்ளி விட்டார்.
எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது.
‘ஏன் அப்படி தள்ளி விட்டாய்’ என்று ஆங்கிலத்தில் கேட்டேன்.
அதற்கு அவர்’ 120 தாய் பாட்டு இல்லை ‘என்று சொன்னார்.
‘சரி எவ்வளவு குறைகிறது’ என்று கேட்டேன். ‘ஐந்து பாட்டு குறைகிறது’ என்று சொல்லிவிட்டு வேறொரு கஷ்டமருக்கு விற்பனை செய்ய ஆரம்பித்து விட்டார்.
நான் கோபத்தில் சற்று உரத்த குரலில் ‘சுற்றுலா பயணிகளை நம்பி இருக்கும் இந்த நாட்டில் வருகின்ற சுற்றுலா பயணிகளிடம் நடந்து கொள்ளும் முறை இதுதானா.
குறைவாக இருக்கிறது என்று சொன்னால் அதை கொடுக்க போகிறோம் ஏன் அப்படி தள்ளி விட வேண்டும்.
உங்கள் நாட்டின் நாணயத்திற்கு நீங்கள் கொடுக்கும் மதிப்பு இதுதானா’ என்றும் உரத்த குரலில் சத்தமிட்டு விட்டு என்னிடமிருந்த 20 தாய் பாட் நோட்டை அந்த சில்லறையோடு சேர்த்து கொடுத்தேன்.
அங்கே கூடியிருந்தவர்களும் அந்த பெண்மணியை ஒரு மாதிரி பார்த்தார்கள்.
ஒன்றும் பேசாமல் தலை கவிழ்ந்து இருந்த அந்தப் பெண்மணி தண்ணீர் பாட்டிலை எடுத்து கொடுத்துவிட்டு மீதி சில்லறையாக 15 தாய் பாட்டை மேஜை மீது வைத்தார்.
“அதை நீயே வைத்துக்கொள் “என்று சொல்லிவிட்டு தண்ணீர் பாட்டில் எடுத்துக் கொண்டு வேகமாக அந்த இடத்தை விட்டு வந்து விட்டோம்.

விமானம் புறப்படும் நேரத்திற்கு இன்னும் ஒரு மணி நேரம் 45 நிமிடம் நிலுவை இருந்தது
அப்போது அங்கு வைக்கப்பட்டுள்ள சில அலங்கார சிலைகளுக்கு அருகில் சென்று போட்டோ எடுத்துக் கொண்டோம்.
மிக நீளமான பாம்பு போன்ற வடிவத்தில் ஒரு சிலை அங்கே வைக்கப்பட்டு இருந்தது. அதன் அருகிலும் சென்று புகைப்படம் எடுத்துக்கொண்டோம்.
பின்னர் விமானத்தில் போர்டிங் செய்ய வேண்டிய நேரம் வந்தது. நாங்கள் விமானத்தில் ஏறி மூன்றரை மணி நேரத்தில் சென்னை விமான நிலையம் வந்து சேர்ந்தோம்.
அங்கு இறங்கியவுடன் இமிகிரேஷனில் பாஸ்போர்ட்டில் சீல் வாங்கிக்கொண்டு எங்களது பெட்டிகளை சேகரித்துக் கொண்டு விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தோம்.

பயணத் திட்டத்தின் படி ஆறு நாட்களும் ஐந்து இரவுகளும் என்று இருந்தது.
ஆனால் ஆறாவது நாள் வெறும் விமான பயணம் மட்டுமே நடைபெற்றது.
எனவே இந்த ஆறு பகல் என்பது உண்மையல்ல. ஐந்து பகல்கள் மட்டுமே இதுவும் ஒரு வியாபார உத்தி தான்.

தங்கையும் தங்கையின் கணவரும் தங்களது பேத்தியை அழைத்துக் கொண்டு திருச்சி செல்வதற்காக தனியாக டாக்ஸி பிடித்து தாம்பரத்தில் உள்ள அவர்களது சம்மந்தியின் இல்லத்திற்கு சென்றார்கள்.
நான் தனியாக டாக்ஸி பிடித்து கடந்த ஐந்து நாட்கள் நடைபெற்ற நிகழ்வுகளை எல்லாம் மனதில் நினைத்துக் கொண்டு இந்தப் பயணம் நல்லபடியாக பாதுகாப்பாக அமைந்ததற்கு இறைவனுக்கு மனதில் நன்றி செலுத்திக்கொண்டே மகிழ்ச்சியோடு எனது இல்லத்திற்கு சென்றேன்.

இத்துடன் இந்த பயணக் கட்டுரை முடிவுற்றது.
சுபம்.

என்னோடு பயணம் செய்த உங்களையும் இந்தக் கட்டுரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியிருக்கும் என்ற நம்பிக்கையோடு விடைபெறுகிறேன்.
(முற்றும் )

a

–அலெக்ஸாண்டர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!