இன்றைய முக்கிய நிகழ்வுகள் (செப்டம்பர் 26)

தமிழ்நாட்டின் 20-ம் நூற்றாண்டின் மறுமலர்ச்சிக் கவிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்களில் ஒருவரான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை (Kavimani Desika Vinayagam Pillai) நினைவு நாளின்று! குமரி மாவட்டம், தேரூரில் பிறந்தார் (1876). ஐந்து வயதில் தேரூர் ஆரம்பப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். ஒன்பதாவது வயதில் தந்தையை இழந்தார். திருவாவடுதுறை மடத் தலைவர் சாந்தலிங்கத் தம்பிரானிடம் தமிழ் இலக்கிய, இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார். எம்.ஏ. பட்டம் பெற்றார். திருவனந்தபுரம் ஆசிரியப் பயிற்சி நிறுவனத்தில் பயின்றார். கோட்டாறு, நாகர்கோவில் பாடசாலைகளில் ஆசிரியர், திருவனந்தபுரம் பெண்கள் கல்லூரியில் பேராசிரியர் என 36 ஆண்டுகள் கல்விப் பணியாற்றினார். இவரது இலக்கிய வெளிப்பாட்டில் ஒரு அறிவியல் கண்ணோட்டம் பிரதிபலித்தது. நாட்டின் பண்டைய வரலாற்றை அறிந்து கொள்ளும் ஆர்வம் காரணமாக கல்வெட்டு ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். சுதந்திர போராட்டத்தில் காந்தியத்துக்கு ஆதரவாகக் கவிதைகளை எழுதியதால் ‘விடுதலைக் கவிஞர்’ எனவும் போற்றப்பட்டார். ‘ஆங்கிலத்தில் உள்ளதுபோல தமிழில் குழந்தைப் பாடல்கள் இல்லையே என்றுதான் நான் பள்ளிப் பிள்ளைகளுக்கு எளிய நடையில் பாடல்கள் எழுதினேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார். ‘மலரும் மாலையும்’, ‘ஆசிய ஜோதி’, ‘உமர்கய்யாம் பாடல்கள்’, ‘நாஞ்சில் நாட்டு மருமக்கள்வழி மான்மியம்’, ‘அழகம்மை ஆசிரிய விருத்தம்’, ‘கதர் பிறந்த கதை’, ‘குழந்தைச் செல்வம்’ உள்ளிட்ட இவரது படைப்புகள் குறிப்பிடத்தக்கவை. இவரது ‘தேவியின் கீர்த்தனங்கள்’ என்ற இசைப்பாடல் தொகுப்பில் இடம் பெற்ற பல பாடல்களை, இசைக் கலைஞர்கள் மேடைகளில் விரும்பிப் பாடினார்கள். இவரது சொற்பொழிவுகள் ‘கவிமணியின் உரை மணிகள்’ என்ற நூலாக வெளிவந்தது. சிறந்த மொழிபெயர்ப்பாளரான இவர் எட்வின் ஆர்னால்டின் ‘தி லைட் ஆஃப் ஏஷியா’ என்ற படைப்பைத் தழுவி ‘ஆசிய ஜோதி’ என தமிழில் எழுதினார். பாரசீகக் கவிஞர் உமர் கய்யாமின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட பாடல்களைத் தழுவி தமிழில் எழுதினார்.‘மனோன்மணியம் மறுபிறப்பு’ என்ற திறனாய்வுக் கட்டுரை எழுதியுள்ளார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரகராதி உருவாக்கத்தில் மதிப்பியல் உதவியாளராகப் பணியாற்றினார். ‘கம்பராமாயணம் திவாகரம்’, ‘நவநீதப் பாட்டியல்’ உள்ளிட்ட பல நூல்களின் ஏட்டுப் பிரதிகளைத் தொகுத்துள்ளார். ‘தேசியக் கவிஞர்’, ‘குழந்தைக் கவிஞர்’, ‘சமுதாயக் கவிஞர்’, ‘விடுதலைக் கவிஞர்’, ‘உணர்ச்சிக் கவிஞர்’ என்றெல்லாம் போற்றப்பட்டார். ‘பைத்தியக்காரன்’, ‘மணமகள்’, ‘தாயுள்ளம்’, ‘வேலைக்காரன்’, ‘கள்வனின் காதலி’, ‘கண்ணின் மணிகள்’, ‘நன் நம்பிக்கை’ ஆகிய திரைப்படங்களில் இவர் எழுதிய பாடல்கள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டன. ‘தேசிய விநாயகத்தின் கவிப்பெருமை தினமும் கேட்பது என் செவிப்பெருமை’ என நாமக்கல் கவிஞர் பாராட்டியுள்ளார். 1940-ல் சென்னை பச்சையப்பன் கல்லூரியில் உமாமகேஸ்வரம் பிள்ளை இவருக்கு ‘கவிமணி’ பட்டம் வழங்கினார். இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற தமிழ்க் கவிஞர்களுள் ஒருவருமான கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை 1954-ம் ஆண்டு, 78-வது வயதில் மறைந்தார். இவர் பிறந்த ஊரில் நினைவு நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசு இவர் நினைவாக 2005-ல் தபால் தலை வெளியிட்டது.

இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் எனப் பன்முகம் கொண்ட எஸ். வி. ரமணன் நினைவு நாள். பெரும் கலைக் குடும்பத்தை சேர்ந்தவரான இவர் பிரபல தமிழ் திரைப்பட இயக்குநரும், தயாரிப்பாளருமான கே. சுப்பிர மணியம்-மீனாட்சி தம்பதியரின் மகனும், பரத நாட்டியக் கலைஞர் பத்மா சுப்பிரமணியத்தின் உடன் பிறந்தவரும் ஆவார். இவரது சிற்றன்னை திரைப்பட நாயகி எஸ். டி. சுப்புலட்சுமி ஆவார். இசையமைப்பாளர் அனிருத் இவருடைய பேரன் ஆவார். மேடை நாடகங்களில் நடித்து வந்த எஸ். வி. இரமணன் தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பல நாடகங்களையும், ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். அனைத்திந்திய வானொலியில் ஒலிபரப்பான விளம்பர படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்துள்ளார். 1983-ல் ஒய். ஜி. மகேந்திரன், சுஹாசினி நடிப்பில் வெளியான உருவங்கள் மாறலாம் எனும் திரைப்படத்தை இயக்கி, இசை அமைத்துள்ளார். 1966-ல் ஜெயகாந்தன் திரைக்கதை, இயக்கத்தில் வெளியான யாருக்காக அழுதான் திரைப்படத்திற்கு இசையமைத்திருந்தார்.

திருக்குறளார் என்றழைக்கப்பட்ட திருக்குறள் முனுசாமி பிறந்த நாள் இன்று. திருக்குறள் வீ.முனுசாமி (செப்டெம்பர் 26, 1913 – ஜனவரி 4, 1994) திருக்குறள் வகுப்புகள் நடத்தியும், தொடர் சொற்பொழிவுகள் ஆற்றியும் . உலகப் பொதுமறை திருக்குறளுக்காகப் பணி செய்தவர். திருக்குறள் மக்களின் அன்றாடப் பயன்பாட்டில் இருக்க வேண்டும் என விரும்பிய இவர், தமிழகத்தின் மூலை, முடுக்கெங்கும் பயணம் செய்து திருக்குறள் பரப்பும் பணியில் ஈடுபட்டார். 1935 ஆம் ஆண்டில் திருச்சி மலைக்கோட்டை நூற்றுக்கால் மண்டபத்தில் தனது திருக்குறள் பரப்பும் பணியை ஆரம்பித்தார். 1941 ஆம் ஆண்டு முதன்முதலாக சேலத்தில் இவர் நடத்திய திருக்குறள் மாநாட்டில் தேவநேயப் பாவாணர் உள்ளிட்ட தமிழறிஞர்கள் பங்கேற்றனர். சென்னை புரசைவாக்கத்தில் தங்கி, சட்டப் படிப்பினை மேற்கொண்டு திருக்குறள் வகுப்பினையும் நடத்தியபோது தமிழறிஞர்கள் அ.கி.பரந்தாமனார், நடேசனார், வடிவேலனார் ஆகியோருடன் இணைந்து குறட்பாக்களை அட்டைகளில் எழுதி தெருக்கள் தோறும் தமிழ் முழக்கம் செய்யும் தொண்டிலும் திருக்குறளார் ஈடுபட்டார். தொடர்ந்து சென்னையில் இவர் முன்னின்று நடத்திய திருக்குறள் மாநாட்டில், பேராசிரியர்கள் ரா.பி.சேதுப்பிள்ளை, சுப்பிரமணியப்பிள்ளை, இராசாக்கண்ணனார் உள்ளிட்டவர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர். திருக்குறளாரின் பணியை “குறட்பயன் கொள்ள நம்திருக்குறள் முனுசாமி சொல் கொள்வது போதுமே” என புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் (1948) பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஈஸ்வர் சந்திர வித்யாசாகர் பிறந்தநாள் இன்று. மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த வித்யாசாகர், பெண் அடிமைத் தனத்திற்கு எதிராகவும், சமூக சீர்திருத்த வாதியாகவும், ஏழை மக்களின் சேவையாளராகவும், புத்தக வெளியீட்டாளராகவும், சிறந்த மொழி பெயர்ப்பாளராகவும், கல்வியாளராகவும், வள்ளலாகவும் விளங்கினார். சமஸ்கிருதம் மற்றும் தத்துவங்களில் புலமை பெற்று விளங்கிய அவர், 1839ஆம் ஆண்டு சட்டப்படிப்பையும் முடித்தார். பெங்காலி மொழியின் வரிவடிவத்தில் சில முக்கிய மாற்றங்களை கொண்டு வந்தார். பதோதாய், பெடால், உபக்ராமானிக்கா, சீபன்சரித் உள்ளிட்ட பல சமூகத்திற்கு தேவையான நூல்களை வெளியிட்டுள்ளார். இவருடைய சிறந்த மக்களின் சேவைக்காக ராமகிருஷ்ண பரமஹம்சரின் பாராட்டைப் பெற்றவர் ஆவார்.

சிறந்த எழுத்தாளரும் இலக்கிய அறிஞருமான பெரியசாமி தூரன் பிறந்த நாள்- செப்டம்பர் 26, 1908. பெ. தூரன் என்கிற . பெரியசாமித் தூரன் ஒரு சிறந்த எழுத்தாளரும் தமிழில் கலைக்களஞ்சியம் தொகுத்த அறிஞரும் ஆவார். பெ. தூரன் ஒரு நாட்டுப்பற்றாளராகவும் தமிழ்ப் புலவராகவும் கருநாடக இசை வல்லுநராகவும் அறியப்படுகிறார்; நாடகங்களும் இசைப்பாடல்களும் சிறுகதைகளும் சிறுவர் இலக்கியங்களும் எழுதியுள்ளார்; மொழிபெயர்ப்புக்களை மேற்கொண்டுள்ளார்; பதிப்புப் பணிகளும் செய்துள்ளார். இவரின் நூல்கள் சில நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. பெ. தூரன் 1940களில் காலச்சக்கரம் என்ற வாரப் பத்திரிகையின் ஆசிரியராகப் பணியாற்றினார்.தமிழகக் கல்வியமைச்சர் தி. சு. அவிநாசலிங்கத்தின் முயற்சியால் தமிழ் வளர்ச்சிக்காக தமிழ் வளர்ச்சிக் கழகம் தொடங்கப்பட்டது. தன்னாட்சி உரிமை உடைய இக்கழகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட கலைக்களஞ்சியத்தின் ஆசிரியராக 1948 இல் பொறுப்பேற்று 1968 வரை 750க்கு மேற்பட்ட பக்கங்களையுடைய பத்து தொகுதிகளை வெளியிட்டார். பிறகு 100 பக்கங்களையுடைய குழந்தைகள் கலைக்களஞ்சியம் பத்து தொகுதிகளையும் 1976 வரை வெளியிட்டார். குழந்தைகளுக்கு கதையாக, பாடலாக, நெடுங்கதையாக, அறிவியல் முறையில் 14 நூல்களைத் தூரன் இயற்றியுள்ளார். சுப்பிரமணிய பாரதியின் படைப்புகள் பற்றிப் பதினொரு நூல்கள் எழுதியுள்ளார். உளவியல் தத்துவம் தொடர்பாக ஒன்பது நூல்கள் எழுதியுள்ளார்.

இந்தியாவின் 14வது பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் பிறந்த நாள்,. இந்தியாவின் முன்னாள் பிரதமரான டாக்டர் மன்மோகன் சிங் 1932ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி தற்போது பாகிஸ்தானிலுள்ள கா (புயா) என்னும் ஊரில் பிறந்தார். ⚑ மத்திய நிதியமைச்சகத்தின் செயலாளர், திட்டக்குழுவின் துணைத் தலைவர், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர், பிரதமரின் ஆலோசகர், பல்கலைக்கழக மானியக் குழுவின் தலைவர் என்று பல்வேறு முக்கியப் பதவிகளை வகித்துள்ளார். ⚑ டாக்டர் மன்மோகன் சிங் பொது வாழ்க்கையில் பல்வேறு விருதுகளையும், பெருமைகளையும் பெற்றுள்ளார். இதில் முக்கியமானது இந்தியக் குடிமை விருதுகளில் இரண்டாவது உயரிய விருதான பத்ம விபூஷண், இந்திய அறிவியல் மாநாட்டில் ஜவஹர்லால் நேரு நுற்றாண்டு பிறந்த நாள் விருது (1995), சிறந்த நிதியமைச்சராக இருந்ததற்காகக் கிடைத்த ஆசியச் செலாவணி விருது, சிறந்த நிதியமைச்சருக்கான யூரோ செலாவணி விருது (1993), கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் ஆடம் ஸ்மித் பரிசு (1956) ஆகியவற்றை இவர் பெற்றுள்ளார். ⚑ தன்னுடைய அரசியல் வாழ்க்கையில் டாக்டர் சிங், நாடாளுமன்றத்தின் மேலவையில் (மாநிலங்களவை) உறுப்பினராக 1991ல் இருந்து இருக்கிறார். இவர் 1998 முதல் 2004 வரையில் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்துள்ளார். 1991 இல், இந்தியா கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டபோது, புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரி பி.வி. நரசிம்ம ராவ், வியக்கத்தக்க வகையில் மன்மோகன் சிங்கை நிதியமைச்சராக தனது அமைச்சரவையில் சேர்த்துக்கொண்டார். அடுத்த சில ஆண்டுகளில், கடுமையான எதிர்ப்பையும் மீறி, இந்தியாவின் பொருளாதாரத்தை தாராளமயமாக்கும் பல கட்டமைப்பு சீர்திருத்தங்களை மன்மோகன் சிங் மேற்கொண்டார் ⚑ 2004ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலுக்குப் பின்னர், மே மாதம் 22ம் தேதி டாக்டர் மன்மோகன் சிங் பிரதமராகப் பதவியேற்றார். அதன்பின்னர் 22 மே 2009ல் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார். ⚑மத்திய ஆட்சியில் பல்வேறு பொறுபேற்றிருந்த டாக்டர் மன்மோகன் சிங்கின் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட பல பொருளாதார மற்றும் வர்த்தக சீர்த்திருத்தங்கள் இலங்கையை போல திவாலாகி போகும் அளவுக்கு அதல பாதாளத்தில் வீழ்ந்து கொண்டு இருந்த இந்திய பொருளாதாரத்தில் மிக பெரும் ஏற்றத்தை கொண்டுவந்து அதை மேலும் வலுவான பொருளாதாரமாக மாற்றியது. இப்படிப்பட்ட சீர்த்திருத்தங்களை நடைமுறைக்கு கொண்டு வந்து இந்தியாவை திவால் ஆகும் நிலையில் இருந்து மீட்டெடுத்து இந்திய பொருளாதாரத்தை ஒரு சூப்பர் பொருளாதாரமாக மாற்றி கட்டமைத்த திரு மன்மோகன் சிங் அவர்களை ” இந்திய பொருளாதாரத்தை மறுசீரமைத்த சூப்பர் மேன் ” என்றே கூற வேண்டும். மன்மோகன் சிங் அவர்களின் பொருளாதார சீர்த்திருத்தங்களை பற்றியும் மேலும் அறிய கீழ்கண்ட புத்தகங்களை படியுங்கள் : 1) 1991 How P. V. Narasimha Rao Made History – By Sanjaya Baru 2) An Economist in the Real World – Dr. Manmohan Singh – By Kaushik Basu 3) Dr. Manmohan Singh – A Tempestuous Tenure – By Sujay Shastri 4) How P V Narasimha Rao Transformed India – By Vinay Sitapati 5) Making and Unmaking of Manmohan Singh – By Sanjaya Baru 6) To the Brink and Back India`s 1991 Story – By Jairam Ramesh See less

நியூயார்க்கில், ஐ.நா. பொது அவையில், கியூபா அதிபர் ஃபிடல் காஸ்ட்ரோ உரையாற்றிய நாள் 4 மணி 29 நிமிடம் நீடித்த இந்த உரை, ஐநா வரலாற்றில் மிக நீண்ட உரை என்று கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் போர் வெறியை மிகக் கடுமையாகச் சாடிய இந்த உரை நெடுகிலும், கைத்தட்டல்களையும், ஆரவார வரவேற்பையும் சந்தித்தது.

சாய்வு நாற்காலி படைப்பாளி தோப்பில் முகமது மீரான் பிறந்த நாளின்று கன்னியாகுமரி மாவாட்டம் தேங்காய் பட்டினத்தில் 1944 ஆம் ஆண்டு பிறந்தவர் தோப்பில் முகமது மீரான் (74). இவர் பல்வேறு புதினங்கள், சிறுகதை தொகுப்புகள், மொழிபெயர்ப்பு நூல்களை எழுதி உள்ளார். சாய்வு நாற்காலி என்ற நாவலுக்காக 1997-ல் சாகித்ய அகாடமி விருது பெற்றவர். அவரது ஒரு கடலோர கிராமத்தின் கதையை வாசிக்காமல் யாரும் இலக்கிய பயணத்தை கடந்து செல்ல முடியாது. துறைமுகம், கூனன் தோப்பு, அஞ்சுவண்ணன் தெரு, குடியேற்றம், சாய்வு நாற்காலி உள்ளிட்ட நாவல்களையும், பல சிறுகதை தொகுப்புகளையும் எழுதியுள்ளார். நெல்லை மாவட்டம் திருநெல்வேலி நகர் பேட்டையில் வசித்து வந்த இவர், 2019 மே 10 வெள்ளி, அதிகாலை 1:20 மணிக்கு உடல்நலக் குறைவால் காலமானார். இவர் எழுதியவை பெரும்பாலும் இஸ்லாமிய சமூகத்தின் கதைகள். ஆனால் இன்றைக்கும் எல்லா இடங்களிலும் வாழும் எல்லா சமுதாயத்தினரோடும் பொருந்திப் போவது இவருடைய எழுத்தின் சிறப்பு. இவருடைய கதைகள் சமுதாயத்திற்கு நேராக வெளிச்சம் காட்டும் கதைகள் அல்ல. வகுப்புவாத சிந்தனையால மனிதநேயம் தொலைந்துபோவதை, மேல்தட்டு மக்கள் வாழும் பகுதிகளில் மனிதர்கள் தனிமையுணர்வோடு தவிப்பதை, தாய் தந்த உறவுகளை இழுத்து அறுத்துக் கொண்டு தனிமனிதர்களாக வாழ விரும்பும் இன்றைய தலைமுறையின் மனோபாவங்களை , பச்சையிலை வாசம் கமழும் கிராமச் சூழலில் நகரநாகரீகம் புகுந்து முகங்களில் சாயம் பூசி விடப்பட்ட மனிதமனங்களின் ஆழங்களை எல்லாம் மிகத் துல்லியமாகத் துழாவி எழுத்தால் உருமாற்றிக் காட்டுகின்றன இவருடைய எழுத்துக்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!