மனங்கவர்ந்த தாய்லாந்து பயண கட்டுரை (பாங்க்காக் மற்றும் பட்டாயா)
பகுதி 3
இரண்டாம் நாள் காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு சரியாக எட்டு முப்பது மணிக்கு ஹோட்டலில் ரெஸ்டாரன்ட் பகுதி உள்ள தரை தளத்திற்கு மூவரும் சென்றோம்.
சற்று விசாலமான இடத்தில் ரெஸ்டாரன்ட் அமைந்திருந்தது.
காலை உணவிற்கு பல்வேறு வகையான உணவுகள் வரிசையாக வைக்கப்பட்டிருந்தது.
அதில் அவித்த முட்டை டோஸ்ட்டேட் பிரட், பட்டர், சீஸ், muffin, croissant, pan cake, honey, chicken sausage, ஃப்ரூட் சாலட் வெஜிடபிள் சாலட் சீரியல் மில்க் ஆரஞ்சு ஜூஸ் காப்பி மற்றும் டீ ஆகியவையும் அடங்கும்.
காலை உணவை நன்றாக ஒரு பிடி பிடித்து விட்டு லாபியில் அமர்ந்திருந்தோம்.
எனது telegram ஆப்பில் வாகன எண் தெரியும்படியான ஒரு வாகனத்தின் புகைப்படமும் ஓட்டுனர் பெயர் மற்றும் அலைபேசி எண் ஆகியவை அனுப்பப்பட்டது.
சரியாக 9:30 மணிக்கு கோரல் ஐலாண்டுக்கு எங்களை அழைத்துச் செல்லும் வாகனம் வந்தது.
இன்று புதிய ஓட்டுநர் மற்றும் வாகனம் எனவே ஓட்டுநர் எங்கள் முகங்களையும் தன்னிடம் உள்ள புகைப்படத்தையும் ஒப்பிட்டு பார்த்துவிட்டு எங்களையும் ஒரு புகைப்படம் எடுத்துக கொண்டு வாகனத்தில் ஏற்றிக்கொண்டு பட்டாயா நகரில் துறைமுகம் அமைந்துள்ள பகுதியில் எங்களை இறக்கி விட்டார்.
அங்கே எங்களுக்காக அளிக்கப்பட்ட டோக்கன்களை நாங்கள் பெற்றுக் கொண்டு அந்த சுற்றுலா ஏற்பாட்டாளரின் இடத்தில் எங்களைப் போன்று பலரை ஒன்றாக சேர்த்து அமர வைத்திருந்தார்கள்.
எங்கள் இடது கையில் permanent marker கொண்டு இனிஷில் மற்றும் எண் எழுதினார்கள்.
பத்து நிமிடம் கழித்து எங்களை அங்கிருந்து வரிசையாக அழைத்துச் சென்று பின்புறத்தில் மலையில் பட்டாயா என போடப்பட்டிருக்கும் அந்த பேனர் தெரியும்படி எங்களை புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள்.
இங்கு தான் உலகம் சுற்றும் வாலிபன் படத்தில் வரும் நிலவு ஒரு பெண்ணாகி என்ற பாடல் காட்சி படம் ஆக்கப்பட்டதாம்.
இங்கு வெயிலின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்ததால் தொப்பி கூலிங் கிளாஸ் தண்ணீர் பாட்டில் ஆகியவற்றின் வியாபாரம் படுசோராக நடந்து கொண்டிருந்தது. நாங்களும் தொப்பி வாங்கி அணிந்து கொண்டோம். தங்கையும் தங்கையின் கணவரும் கூலிங் கிளாஸ் வாங்கி போட்டுக் கொண்டார்கள்.

பின்னர் நேராக அந்த துறைமுகப் பகுதியில் கடலுக்கு மேல் செல்வதற்கு அமைக்கப்பட்டிருந்த பாலத்தில் நடத்திச் சென்று அங்கே படகு நிறுத்தும் இடத்தில் எங்களை நிறுத்தி வைத்திருந்தார்கள்.
ஒரு ஐந்து நிமிடத்திற்குள்ளாக அங்கே படகு வந்தது.
அது ஒரு சிறிய படகு தான் சுமார் 25 பேர் மட்டும் பயணிக்கும் விதத்தில் இருந்தது.
அதில் எங்களை ஏற்றிக் கொண்டு படகு வேகமாக சென்று கடலின் ஒரு பகுதியில் உள்ள பாலம் போன்ற அமைப்புடன் கூடிய ஒரு சதுர வடிவில் அமைந்த பகுதியில் எங்களை இறங்கச் சொன்னார்கள்.

அங்கே மொழிவாரியாக எங்களைப் பிரித்தார்கள். நாங்கள் ஆங்கில மொழி குறிப்பிடப்பட்ட இடத்தில் சென்று அமர்ந்தோம்.
அதன் பிறகு தான் தெரிந்தது அது para sailing நடக்கும் இடம் என்று.
ஆங்கிலத்தில் பேசக் கூடிய ஒருவர் வந்து அங்கே parasailing மற்றும் snorkelling jet skiing விளையாட்டுக்கள் போன்ற நான்கு ஈவன்ட் கொண்ட ஒரு காம்போ நிகழ்வுக்காக 900 தாய் பாட் என்று தொகையை எங்களிடம் சொன்னார்கள்.
தனியாக வேண்டுமானாலும் அந்த ஒரு நிகழ்வுக்கு மட்டும் செல்லலாம் என்றும் அதற்கான ஒரு தொகையையும் சொன்னார்கள்.
நான் ஏற்கனவே அமெரிக்காவில் 1200 அடி உயரத்தில் para sailing செய்திருக்கிறேன். இது மிகவும் குறைவான உயரம் தான்.
எனவே எனக்கு வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.
என் தங்கையும் தங்கையின் கணவரும் para sailing செல்வதற்காக தலா 300 தாய் பாட் செலுத்தி பதிவு செய்து கொண்டார்கள்.
சிறிது நேரத்தில் அவர்கள் இருவரையும் அதே மேடையில் மற்றொரு பகுதிக்கு அழைத்துச் சென்று அங்கே பாராசூட்டில் வந்து இறங்கும் நபர்களை இறக்கிவிட்டு இவர்களை ஏற்றினார்கள்.
ஆனால் பலமான பெல்ட் அமைப்புடன் பாதுகாப்பாக அவர்களை அணியச் செய்துவிட்டு படகு புறப்படுகிறது.
அப்போது இவர்கள் ஒரு 30 அடி தூரம் ஓடி அப்படியே மேல் நோக்கி பறந்து விடுகிறார்கள்.
ஒரு பத்து நிமிடத்திற்குள் அவர்களை மீண்டும் வந்து அதேபோன்று பேராசூட்டிலிருந்த அந்த மேடையில் இறக்கி விட்டார்கள்.

என் தங்கைக்கும் அவரது கணவருக்கும் ஒரே பரவசம். முதல் முறை பேராசெய்லிங் சென்றதால் அவர்கள் மிகவும் உற்சாகத்துடன் மகிழ்ச்சியாக காணப்பட்டார்கள்.
அதிலும் தங்கையின் கணவர் பறக்கும் போது இரு கைகளையும் விரித்து மகிழ்ச்சியாக சென்றார். இது ஒரு அபூர்வமான அனுபவம் என்று சொல்லி மகிழ்ச்சி அடைந்தார்கள்.
முதல் முறை நானும் என் பெரிய பேத்தியும் பேரா செய்லிங் செய்த போது அப்படித்தான் இருந்தது.
அதன் பின்பு எங்களை அங்கிருந்து மீண்டும் படகில் ஏற்றி அந்த கோரல் ஐலண்ட் எனப்படும் தீவுப் பகுதியில் இறக்கினார்கள்.
கோரல் ஐலாண்டை நெருங்கும்போது அந்த மலையும் கடலும் இணைந்த பகுதி மிகவும் அழகாக காணப்பட்டது. அந்த இயற்கை அழகையும் உடனே கிளிக் செய்து கொண்டேன்.
அந்த தீவு கடற்கரை பகுதியில் உள்ள மணல் வெண்மை நிறத்திலேயே காணப்பட்டது.
அமெரிக்காவின் பிளோரிடா மாகாணத்தின் கிளியர் வாட்டர் பீச் எனும் ஒரு இடத்திற்கு ஏற்கனவே நாங்கள் சென்று வந்த நினைவு வந்தது.
அந்த கடற்கரையில் இதைவிட பளிச்சென்று வெண்மையாக மணல் இருக்கும்.
முதல் முறையாக அதை பார்க்கும் பொழுது எனக்கும் ஆச்சரியமாகத்தான் இருந்தது. அதேபோன்று என் தங்கையும் தங்கையின் கணவரும் அந்த மணலை பார்த்து எப்படி இவ்வளவு வெண்மையாக மணல் இருக்கிறது எனறு
வியந்தார்கள்.
தாய்லாந்து பயணத்தை துவக்குவதற்கு 15 நாட்களுக்கு முன்பு பத்திரிகையில் ஒரு செய்தியை படித்திருந்தேன்.
அதில் ஒரு இந்திய பெண் தாய்லாந்து கடலில் குளிக்க சென்று அந்த கடல் நீரை குடித்ததால் பயங்கரமான பாக்டீரியா தாக்குதலுக்கு உள்ளாகி மிகவும் அபாயகரமான கட்டத்தில் மருத்துவமனையில் இருப்பதை அந்த செய்தி தெரிவித்தது.
எனவே நான் தாய்லாந்து செல்வதற்கு முன்பாகவே கடலில் குளிப்பதில்லை என்ற முடிவோடு தான் இருந்தேன்.
ஆனால் என் தங்கையின் கணவரோ மச்சான் நல்லா அழகா தண்ணி வெண்மையா தெளிவா இருக்கு நாம் போய் குளிக்கலாம் வாங்க என்று சொல்லி என்னை கட்டாயப்படுத்தியதால் நானும் அவரும் இணைந்து கடலில் இறங்கி குளிக்க ஆரம்பித்தோம்.
ஆனால் என்னுடைய எச்சரிக்கையை கடைபிடித்து அவரும் தலையை தண்ணீருக்குள் மூழ்காமல் பார்த்துக் கொண்டார்.
கடல் நீர் வாய்க்குள் செல்லாதவாறு எச்சரிக்கையாக கடலில் குளித்துவிட்டு கரை ஏறினோம்.
அதன் பிறகு கரைப்பகுதியில் இருந்த குளியலறை பகுதிக்கு சென்று தலா 10 தாய் பாட் அளித்து அங்கே இருந்த குளியல் அறையில் குளித்து முடித்தோம்.
அதன் பிறகு அங்குள்ள கடைகளில் சில பொருட்களை வாங்கிக் கொண்டு கடற்கரை ஓரமாக நடந்து சென்று அந்த கடற்கரை அழகை ரசித்தோம்.
இந்த கடற்கரையில் பல்வேறு விதமான விளையாட்டுகளை கட்டண விகிதத்தில் நடத்தினார்கள்.
அதில் பனானா போட்டிங் எனும் சவாரி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. அந்த சவாரிக்கு அழைத்துச் சென்று மீண்டும் திரும்பவும் கடற்கரை பகுதிக்கு அருகே வரும் பொழுது வேண்டுமென்றே அந்த பனானா போட்டை கவிழ்த்து விடுகிறார்கள்.
முதலில் இதை ஏதோ விபத்து என்று தான் நாங்கள் நினைத்தோம். ஆனால் அடுத்தடுத்து வருகிற எல்லா பனானா போட்டையும் அதேபோன்று கவிழ்த்து விடுகிறார்கள். அது ஒரு திரில்லிங் அனுபவத்தை மக்களுக்கு அளிக்கும் என்பதால் தான். ஆனாலும் நாங்கள் அந்த சவாரியை மேற்கொள்ளவில்லை.
ஏற்கனவே தாய்லாந்து சென்று இருக்கும் நமது குழுவின் ராவ் சார் நிச்சயமாக பேரா செய்லிங் மற்றும் பனானா போட்டிங் சென்றிருப்பார் என நினைக்கிறேன்.
சரியாக இரண்டு மணிக்கு எங்களை அந்த தீவில் இருந்து மீண்டும் படகில் அழைத்துக் கொண்டு பட்டாயா நகரின் கரைப்பகுதியில் கொண்டு வந்து விட்டார்கள்.

அங்கிருந்து மீண்டும் எங்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட வாகனத்தில் ஏறி அவர்கள் அளிக்கும் மதிய உணவை உட்கொள்ள சென்றோம்.
இதில் ஆச்சரியம் என்னவென்றால் அவர்கள் நேராக நாங்கள் தங்கியிருக்கும் Mind resort ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார்கள். என்னவென்று விசாரித்த பொழுது அங்கு தான் எல்லோருக்குமே மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நல்ல அருமையான இந்திய உணவுகளுடன் சைவ மற்றும் அசைவ உணவு அங்கே பரிமாறப்பட்டு பட்டது.
மதிய உணவு அருந்திவிட்டு எங்களுடைய அறைகளுக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டோம்.
( தொடரும். )
-அலெக்சாண்டர்

