இன்றைய முக்கிய நிகழ்வுகள் (செப்டம்பர் 16)

பன்னாட்டு ஓசோன் படலப் பாதுகாப்பு நாள். பூமியை சுற்றும் மிக மெல்லிய படலம் ஓசோன் படலம் எனப்படுகிறது. அதாவது சூரியனின் புறஊதாக் கதிர்வீச்சு ஏற்படுத்தும் மோசமான பாதிப்புகளில் இருந்து பூமிப் பந்தில் வாழும் உயிரினங்களைப் பாதுகாப்பது ஓசோன் படலம் ஆகும். இதைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில், 1994 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை ஓசோன் அடுக்கைப் பாதுகாப்பதற்கான அனைத்துலக நாளாக, இந்நாளைத் தேர்வு செய்து அறிவித்தது. 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 16 ஆம் தேதியன்று ஒப்புக்கொண்டப்படி ஓசோன் அடுக்கைக் குறைக்கும் பொருட்களின் மீதான மாண்ட்ரீல் நெறிமுறையில் நாடுகள் கையெழுத்திட்ட 2000 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19 ஆம் தேதியின் நினைவாக இந்த நாள் கடைப்பிடிப்பது உருவாக்கப்பட்டது. ஓ3 எனப்படும் இந்த ஓசோன் படலம், மூன்று ஆக்சிஜன் அணுக்களினால் ஆன ஒரு மூலக்கூறு ஆகும். பூமியின் பரப்பில் இருந்து கிட்டத்தட்ட 6 மைல்களில் இருந்து31 மைல்கள் வரை இவை காணப்படுகின்றன. கடந்த 1985 முதல் 1988 வரை தென்துருவத்தில் ஆராய்ச்சி மேற்கொண்ட அறிவியலாளர்கள் ஓசோன் படலத்தில் ஏற்பட்ட சிதைவை கண்டறிந்தனர். ஓசோன் படலம் சிதைவுக்கு பல காரணங்கள் உள்ளன. குளிர்பதனப் பெட்டி (ஃபிரிட்ஜ்), குளிர்சாதனப் பெட்டிகளில் (ஏ/சி) இருந்து வெளியான குளோரோ புளூரோ கார்பன்,குப்பையில் இருந்து வரும் மீத்தேன் வாயு, வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளிவரும் புகை, தேவையற்ற பொருட்களை மண்ணில் போட்டு எரிப்பதால் வெளிவரும் புகை போன்ற வாயுக்கள் ஓசோன் படலத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இதனால் ஏற்படும் ஓட்டையின் வழியாக புறஊதாக் கதிர்கள் பூமியை நேரடியாக வந்தடைகின்றன. இதனால் பூமியில் வாழும் உயிரினங்களுக்கு தோல் புற்றுநோய், கண்பார்வை கோளாறு உள்ளிட்ட பலவித பாதிப்புகள் ஏற்படுகின்றன என்பதை நினைவூட்டும் நாளின்று.

தென்கச்சி கோ. சுவாமிநாதன் நினைவு தினம் செப்டம்பர் 16, தென்கச்சி கோ. சுவாமிநாதன் (1946 – செப்டம்பர் 16, 2009) புகழ்பெற்ற பேச்சாளரும், எழுத்தாளரும் ஆவார். ‘இன்று ஒரு தகவல்’ நிகழ்ச்சி மூலம் வானொலி நேயர்களிடையே பிரபலமாக விளங்கினார். அகில இந்திய வானொலியில் உதவி இயக்குநராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தொலைக்காட்சியில் ‘இந்த நாள் இனிய நாள்’ என்ற நிகழ்ச்சியை நடத்தி வந்தார். பல சிறுகதைகளையும் எழுதியிருந்தார். அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ. சுவாமிநாதன் சென்னை மடிப்பாக்கத்தில் வசித்து வந்தார். வேளாண்மைப் பட்டதாரி ஆவார். நெல்லை வானொலியில் அறிவிப்பாளராகப் பணியைத் தொடங்கியவர். சென்னை வானொலி நிலையத்தில் இன்று ஒரு தகவல் நிகழ்ச்சி வழியாக உலகத் தமிழர் உள்ளங்களில் நிலையான இடம் பிடித்தவர். திரைப்படங்களிலும் தொலைக்காட்சியிலும் நடித்தவர். இவர் தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 1977 முதல் 1984 வரை திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணிபுரிந்தார். அகில இந்திய வானொலியில் வேளாண்மை நிகழ்ச்சிப் பிரிவு இயக்குனராக இருந்தபோது “வீடும் வயலும்” என்ற சிறப்பான நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். “அன்பின் வலிமை”, “தீயோர்”, மற்றும் “அறிவுச்செல்வம்” உட்பட பல நூல்களை எழுதியுள்ளார். “இலக்கணம்” என்ற திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

சினிமாஸ்கோப் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி முதலில் வெளியிடப்பட்ட திரைப்படம், ‘த ரோப்‘ (The Robe) ரிலீஸா நாளின்று. தொலைக்காட்சியின் வருகை, திரையரங்குகளுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையைக் குறைத்த நிலையில், அவர்களை மீண்டும் திரையரங்குகளுக்கு ஈர்க்கும் ஒரு முயற்சியாக இந்தத் தொழில்நுட்பம் உருவாச்சு. சினிமாஸ்கோப் என்றால் என்ன? அகலமான காட்சியைப் பதிவு செய்ய, வழக்கமான 35மி.மீ. ஃபிலிமிலேயே அனமார்ஃபிக் (anamorphic) என்ற ஒரு சிறப்பு லென்ஸைப் பயன்படுத்தும் முறைதான் சினிமாஸ்கோப். இந்த லென்ஸ், அகன்ற காட்சியை செங்குத்தாகச் சுருக்கி, வழக்கமான ஃபிலிமில் பதிவு செய்யும். பின்னர், திரையரங்குகளில் உள்ள ப்ரொஜெக்டரில் உள்ள இதேபோன்ற லென்ஸ், அந்தச் சுருக்கப்பட்ட காட்சியை விரித்து, அகன்ற திரையில் காட்டும். இதன் மூலம், ஃபிலிமின் தரத்தை இழக்காமல் அகலமான காட்சியைப் பெற முடியும். தொழில்நுட்பத்தின் வரலாறு ஆரம்பக்கட்ட முயற்சிகள்: வீடியோ தொழில்நுட்பம் வந்தவுடனேயே, இயற்கையான காட்சியைப் போல ஒரு உணர்வை ஏற்படுத்தவில்லை என்பதால், அகலத்திரை காட்சிகளுக்கான தேடல் தொடங்கியது. 1897-லேயே 63மி.மீ. ஈஸ்ட்மென் ஃபிலிம் பயன்படுத்தப்பட்டு, அகலத் திரையில் திரைப்படம் காட்டப்பட்டது. 1900-ஆம் ஆண்டு பாரிஸ் உலகக் கண்காட்சியில், சினியோரமா (Cinerama) என்ற பெயரில் 10 ப்ரொஜெக்டர்களைப் பயன்படுத்தி, வெப்பக்காற்று பலூனில் பறப்பது போன்ற ஒரு அனுபவம் உருவாக்கப்பட்டது. அனமார்ஃபாஸ்கோப்: 35மி.மீ. ஃபிலிமில் அகலக் காட்சியைப் படமெடுக்கும்போது, காட்சியின் தரம் குறைவதை சரிசெய்ய, பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஹென்றி ஃக்ரெஷியன் 1926-ல் அனமார்ஃபாஸ்கோப் என்ற தொழில்நுட்பத்தை உருவாக்கினார். இந்தத் தொழில்நுட்பத்தை வாங்கியே, 2.66:1 என்ற உருவ விகிதத்தில் ‘த ரோப்’ திரைப்படம் படமாக்கப்பட்டது. எனினும், சிறப்பு வசதியில்லாத திரையரங்குகளுக்காக, 1.37:1 என்ற வழக்கமான விகிதத்திலும் ஒரு பதிப்பு உருவாக்கப்பட்டது. பாலிவிஷன் மற்றும் சினிரமா: 1927-ல் உருவாக்கப்பட்ட பாலிவிஷன் முறையின் அடிப்படையில், மூன்று கேமராக்களில் படமெடுத்து, ஒரே நேரத்தில் ப்ரொஜெக்ட் செய்து, 146 பாகை அளவு திரையில் காட்டும் சினிரமா (Cinerama) 1952-ல் அறிமுகமானது. ஆனால், தொழில்நுட்பச் சிக்கல்கள் காரணமாக இது கைவிடப்பட்டது. மேக்னாவிஷன் மற்றும் சூப்பர் பானாவிஷன் சினிமாஸ்கோப் பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், அகலமான 70மி.மீ. ஃபிலிமில் படமெடுக்கும் முயற்சிகளும் தொடர்ந்தன. மேக்னாவிஷன்: 1930-ல் உருவாக்கப்பட்ட மேக்னாவிஷன் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அல்ட்ரா பானாவிஷன் 70: 1957-ல், 65மி.மீ. ஃபிலிமில் அனமார்ஃபிக் லென்ஸ் பயன்படுத்திய அல்ட்ரா பானாவிஷன் 70 அறிமுகமானது. இது அதிக செலவு காரணமாக வரவேற்பைப் பெறவில்லை. சூப்பர் பானாவிஷன் 70: ஆனால், படத்தின் துல்லியத்துக்கான தேடலில், 70மி.மீ. ஃபிலிமில் உருவான சூப்பர் பானாவிஷன் 70 என்ற தொழில்நுட்பம் பின்னர் அறிமுகமாகி பெரும் வெற்றி பெற்றது. இவ்வாறு, தொலைக்காட்சிகளுக்குப் போட்டியாக, திரையரங்குகளில் சிறப்பான காட்சி அனுபவத்தை வழங்குவதற்கான முயற்சிகளில் சினிமாஸ்கோப் ஒரு முக்கியப் பங்கை வகித்தது.

உலகின் முதலாவது வாகன வெடிகுண்டு, அமெரிக்க நிதித்துறையின் முக்கிய இடமான வால் தெருவில் வெடித்ததில் 38 பேர் உயிரிழந்ததுடன், 143 பேர் படுகாயமுற்ற நாள் குதிரை இழுக்கும் ஒரு சரக்கு வாகனத்தில், குறிப்பிட்ட நேரத்தில் வெடிக்கும்படி 45 கிலோ வெடிகுண்டுடன், 230 கிலோ இரும்புத் துண்டுகளும் வைக்கப்பட்டிருந்தன. இந்த இரும்புத்துண்டுகள் பலதிசைகளிலும் பாய்ந்து மோசமான சேதத்தை ஏற்படுத்தின. குதிரையும், வாகனமும் சிதறிப்போனாலும், வெடிப்பதற்கு முன்பே ஓட்டுனர் தப்பித்துவிட்டதாக நம்பப்படுகிறது. இந்த குண்டுவெடிப்புக்குக் காரணம் யார் என்பது இறுதிவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

மலாயா கூட்டமைப்பு, சரவாக், வட போர்னியோ மற்றும் சிங்கப்பூர் ஆகியவை சேர்ந்து மலேசியாவாக உருவான நாளை மலேசியா நாளாக கொண்டாடப்படுகிறது. Malaysia – truly Asia என்கிறார்கள்! காரணம் ஆசியக் குடிகளான இந்தியர்கள், சீனர்கள், மலாய் இனத்தவர், மத்திய கிழக்கின் மக்கள் என எல்லோரும் வாழும் மலைநாடாக மலேசியா உள்ளதால் மலாயா, சிங்கப்பூர், மற்றும் போர்ணியோவின் சாபா, சரவாக் ஆகியன இணைந்து மலேசியா உருவாக்கப்பட்டது. 1963ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி மெர்டேக்கா அரங்கத்தில் மாட்சிமை தங்கிய பேரரசர், மலாய் மன்னர்கள், சிங்கப்பூர், சபா, சரவாக் பிரதிநிதிகள் இன்னும் பல முக்கிய பிரமுகர்கள், சிறப்பு வருகையாளர்கள், சுமார் 30,000 பொதுமக்கள் மத்தியில் தேசத் தந்தை துங்கு அப்துல் ரஹ்மான் ‘மலேசியா’வைப் பிரகடனப்படுத்தினார்.

கோலிவுட் ரசிகர்களால் இன்னிக்கும் மறக்க முடியாத திரைப்படங்களில் ஒன்று 1983-ம் ஆண்டு இதே செப் 15இல் வெளியான சினிமா ‘மண் வாசனை’.* ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜாவின் டைரக்‌ஷனில் உருவான இந்தப் படத்தில்தான் நடிகை ரேவதியும், நடிகர் பாண்டியனும் தமிழ்ச் சினிமாவுக்கு அறிமுகம் ஆனாய்ங்க அதோடு இந்தப் படம்தான் பத்திரிகை தொடர்பாளர், இயக்குநர், நடிகரும், இப்பத்திய என்சைக்ளோபீடியா சித்ரா லட்சுமணன் தயாரிச்ச முதல் படமாகும். பாரதிராஜாவின் படைப்புகளில் ‘கிராமத்துச் சாயல்’ இருந்ததைப் போலவே வணிக அம்சங்களைக் கொண்ட ‘சினிமா’வும் அதிகம் இருந்துச்சு. அசலான கிராமத்து மனிதர்கள் ஒருபுறம் நடமாடிக் கொண்டிருப்பாய்ங்க என்றால் அதன் இன்னொரு பக்கம் மரத்தின் மறைவில் இருந்து ஒரு கண் மட்டும் தெரிய வெட்கப்பட்டு வானத்தை நோக்கி சிரிக்கும் ‘சினிமா ஹீரோயினும்’ இருந்தார். இப்படி யதார்த்தமும் ரொமாண்டிசஸம் ஆகிய இரு பண்புகளும் கலந்ததுதான் பாரதிராஜாவின் சினிமா.பாரதிராஜா இயக்கிய திரைப்படங்களில் கிராமத்துக் கலாசாரமும் பண்பாடும் நிலவெளியின் அழகியலும் மிக வலுவாக வெளிப்பட்ட படைப்புகளில் முக்கியமானது ‘மண் வாசனை’.தலைப்பிற்கு ஏற்றபடி ஒரு தமிழக கிராமத்தின் அசலான வாசனையை வெளிப்பட்ட திரைப்படம். இதில் காட்டப்பட்ட கிராமத்து சந்தைக் காட்சிகள், ஜல்லிக்கட்டு, சடங்குகள், கிராமத்து மனிதர்களின் வெள்ளந்தித்தனங்கள், அறியாமை, விரோதங்கள், வீறாப்புகள் போன்றவை நகரம் சார்ந்த பார்வையாளர்களுக்குப் புதிய அனுபவமாக அமைஞ்சுது. இந்தப் படத்தில் நாயகி ரேவதி, நாயகன் பாண்டியன் ஆகியோரை தேர்வு செய்தவிதம் பற்றி நம் ஆந்தை சினிமா அப்டேட்ஸ் நண்பர்களுக்காக பாரதிராஜா சொன்னதிதோ. ‘அலைகள் ஓய்வதில்லை’யின் தெலுங்குப் பதிப்பை முடித்துவிட்டு அப்படியே பாலிவுட்டுப் போய்ட்டேன். அங்கே ஒரு படத்தை டைரக்ட் பண்ணி வந்த நிலையில் அடுத்து தமிழில் ஒரு சொந்தப் படம் எடுக்கலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தேன். அந்த நேரத்தில் எனது நீண்ட நாள் நண்பரும், என் படங்களுக்கெல்லாம் பத்திரிகை தொடர்பாளராகவும் இருந்த சித்ரா லட்சுமணன் ‘எனக்கு ஒரு படம் செய்து கொடுங்க’ அப்படீன்னு கேட்டுக் கொண்டிருந்தார். சரி.. அடுத்தப் படத்தை அவருக்கே செய்து கொடுப்போம் என்று சொல்லி தீர்மானிச்சேன். சித்ரா லட்சுமணனின் ‘காயத்ரி பிலிம்ஸ்’ சார்பா இந்தப் படம் தயாராச்சு. படத்தின் கதை, திரைக்கதை எல்லாம் ரெடியாயிருச்சு. இதற்கு முன்னதாகவே ரேவதியை நான் ஒரு படத்தில் நடிக்க வைக்க வேண்டும் என்று எண்ணி பார்த்து வைத்திருந்தேன். அந்த ரேவதியின் கண்களில் ஒரு ஸ்பார்க் தெரிந்தது. அந்தப் பெண்ணை எந்தக் கேரக்டரிலும் நடிக்க வைக்கலாமுன்னு எனக்குத் தோணிச்சு.இந்த நேரத்தில் எனது தயாரிப்பில் வேறொரு இயக்குநரின் இயக்கத்தில் ஒரு படத்தைத் துவக்கினேன். அதுதான் ‘மெல்லப் பேசுங்கள்’ படம். அதை இயக்கியவர்கள் சந்தானபாரதியும், பி.வாசுவும். அப்போது அவர்கள் மீது எனக்கு ஒரு தனி பிரியம் இருந்தது. அதனால் அவர்கள் இயக்கும் படத்தை நானே தயாரிக்கிறேன் என்று சொல்லியிருந்தேன். அவிய்ங்களும் ஒரு ஹீரோயினைத் தேடிக் கொண்டிருந்தாய்ங்க. அப்ப நான் ரேவதியை அவிய்ங்ககிட்டே சொன்னேன். ஆனால் அவிய்ங்க ரேவதியை ‘வேண்டாம்’முன்னாட்டாய்ங்க .காரணம் கேட்டா ‘ரேவதி குள்ளமா இருக்கு ஸார். நாங்க எதிர்பார்த்த கேரக்டருக்கு அது ஷூட் ஆகாது’ அப்படீனு சொன்னாய்ங்க. சரி.. வேற ஆள் தேடுவோம் என்று தேடிக் கொண்டிருந்தோம். அந்த நேரத்தில் என் மகன் மனோஜ் உட்லண்ட்ஸ் ஹோட்டலில் நீச்சல் பயிற்சிக்கு அடிக்கடி போவான். அப்படி போய்வரும்போது ‘ஹோட்டல்ல ஒரு பொண்ணைப் பார்த்தேன்பா.. பிரமாதம்…’ என்றான். ‘அது யார்ரா அப்படியொரு பிரமாதமான பொண்ணு?’ன்னு தேடிப் பிடிச்சுப் பார்த்தால்.. அதுதான் பானுப்பிரியா.அந்த பானுப்பிரியாவை பாரதியும், வாசுவும் தங்களுக்கு ஓகே என்று சொன்னாய்ங்க. அதனாலே ‘மெல்லப் பேசுங்கள்’ படத்தில் பானுப்பிரியா அறிமுகமானார். ரேவதி என்னுடைய ‘மண் வாசனை’ படத்திற்கு நாயகியாக செலக்ட் ஆனார். ஹீரோயின் கிடைச்சாச்சு. ஹீரோ கிடைக்கலை. நானும் மும்பைல ஹிந்தி ஷூட்டிங்ல இருந்தேன். அதை முடிச்சிட்டு வந்து ஹீரோவைத் தேடலாம்ன்னு இருந்தேன். அதுக்கு முன்னாடி தேனி பக்கத்துல போடில ஷூட்டிங்குன்னு எல்லாத்தையும் பிக்ஸ் பண்ணியாச்சு.நானும் ஹிந்தி ஷூட்டிங்கை முடிச்சிட்டு சென்னைக்கு வந்து ஹீரோ தேடினேன். தேடினேன்..ஸ்டான்லி மெடிக்கல் காலேஜ், அப்புறம் மத்த இரண்டு மெடிக்கல் காலேஜ் ஸ்டூடண்ட்ஸ்ன்னு நிறைய பேரை வரவழைச்சு பார்த்தேன். ஒண்ணும் சூட்டாகலை. சரி.. மதுரைப் பக்கம் போவோம். நம்ம கதைக் களமே மதுரைதானே.. அங்க யாரையாவது பிடிச்சிருவோம்ன்னு சொல்லிட்டு நானும், சித்ரா லட்சுமணனும் மதுரைக்குக் கிளம்பிட்டோம். எங்களுக்கு முன்னாடியே பட யூனிட்டை கிளப்பி போடிக்கு அனுப்பி வைச்சிட்டோம். இன்னும் ஹீரோ மட்டும்தான் பாக்கி. கிடைச்சா அப்படியே தூக்கிட்டுப் போயிரலாம்ன்னு முடிவு மதுரைக்குப் போனவுடனே மீனாட்சியம்மன் கோவிலுக்கு நானும் சித்ராவும் போனோம். தரிசனம் முடிஞ்சு வெளில வரும்போது நிறைய பேர் என்னை அடையாளம் கண்டுக்கிட்டு வந்து ஆட்டோகிராப் கேட்டாய்ங்க. அப்ப கார்ல உக்காந்திருந்தேன். அப்போதான் ஒரு வெள்ளந்தியா முகத்தோட ஒரு பையன் வந்து என்கிட்ட ஆட்டோகிராப் கேட்டான். அப்போ நிமிந்து பாத்தா அவனோட பின்னாடி லைட் அடிச்சு அப்படியொரு அழகா தெரிஞ்சான். அதோட மதுரைக்கார பாஷைய அழகாவும் பேசினான்.. எனக்குள்ள பட்டுன்னு ஏதோ ஒண்ணு பட்டுச்சு. ‘கார்ல ஏறுடா’ன்னு சொல்லி அவனை ஏத்திக்கிட்டேன். சித்ரா பதறிட்டான். ‘இவனை எதுக்கு கார்ல ஏத்துறீங்க?’ன்னு கேட்டான். ‘விடு.. பார்த்துக்குவோம்’ன்னுட்டு நேரா ஒரு நல்ல சாப்பாட்டு கடைக்கு போனோம். நல்லா சாப்பிட்டோம். அவனையும் சாப்பிட வைச்சோம். அப்ப நான் மதுரைல தமிழ்நாடு ஹோட்டல்ல தங்கியிருந்தேன். ஹோட்டல் ரூமுக்கு பாண்டியனை கூட்டிட்டுப் போனேன். ‘சினிமால நடிக்கிறியா?’ன்னு கேட்டேன். ‘சினிமாவா..?’ ‘நடிப்பா?’ன்னான் பாண்டியன். ‘சினிமால்லாம் பார்த்திருக்கியா?’ன்னு கேட்டேன். ‘அப்பப்போ.. நைட் ஷோ போவேன்’ணான். ‘சரி’ன்னு சொல்லி அவனுக்கு சில டெஸ்ட் வைச்சேன். மாறு கண் இருக்குமோன்னு நினைச்சு செக் செஞ்சேன். அது இல்ல.. அப்புறமா கோபமா பார்க்குற மாதிரி ஒரு லுக் விடச் சொன்னேன். உடனே செஞ்சான். ‘இது போதும்டா.. நீதான் என் படத்துக்கு ஹீரோ. நாளைக்கு போடிக்கு வந்து சேரு..’ன்னு சொல்லிட்டு நானும், சித்ராவும் அன்னிக்கே போடிக்கு கிளம்பிட்டோம். மறுநாள் பாண்டியன் சொன்ன மாதிரியே ஷூட்டிங்குக்கு வந்து சேர்ந்தான். முதல் நாளே முதல் காட்சியே வயக்காட்டுல பரண் மேல படுத்திருக்குற பாண்டியன், ரேவதியையும், அவ பிரெண்டையும் விரட்டுற மாதிரி சீன் வைச்சேன். நான் வியூ பைண்டர்ல பாக்குறேன்.. அந்த விரட்டுறதையும், மதுரை வசனத்தையும் கச்சிதமா பேசினான்.. எனக்கு ரொம்பப் பிடிச்சிருச்சு. இவன்தான் நான் எதிர்பார்த்த ஆளுன்னு முடிவு பண்ணிட்டேன். 2, 3 நாள் ஆச்சு.. ஒரு நாள் ராத்திரி நான் தங்கியிருந்த வீட்டுக்கு வசனகர்த்தா கலைமணி, சித்ரா லட்சுமணன், என் அஸிஸ்டெண்ட் மனோஜ்குமார்ன்னு ஏழெட்டு பேர் வந்தாங்க.. ‘என்னப்பா.. இந்த நேரத்துல..?’ என்று கேட்டேன்.பூனைக்கு யார் மணி கட்டுறதுன்னு தெரியலை.. அதுனால கலைமணி மெதுவா சொன்னான்.. ‘இந்தப் பையனை வைச்சுத்தான் நீங்க படம் எடுக்கப் போறீங்களா?’ என்று கேட்டார்கள். எனக்குப் புரிஞ்சு போச்சு.. இவங்களுக்கெல்லாம் பாண்டியனை பிடிக்கலைன்னு தெரிஞ்சுக்கிட்டேன். ‘சரிப்பா.. ஷூட்டிங்கை நிறுத்திடறேன்.. நீங்க போய் ஜெமினி கணேசன் மாதிரி ஒரு ஆளை கூட்டிட்டு வாங்க. அப்புறமா ஷூட்டிங்கை நடத்திக்கலாம்’ன்னு சொல்லி ‘பேக்கப்’ சொல்லிட்டேன். உடனேயே சித்ரா பயந்துட்டான். ‘ஐயோ.. எனக்கும், இதுக்கும் சம்பந்தமில்லை ஸார்.. இவங்க கூப்பிட்டாய்ங்க வந்தேன்’ணான்..அப்புறம் ஒரு வாரம் எடுத்தவரைக்கும் ரஷ் போட்டு பார்த்தப்ப.. பாண்டியன் பிரமாதமா தெரிஞ்சான். அப்புறம்தான் அவங்களும் அதை ஒத்துக்கிட்டாங்க..” என்றார்( கட்டிங் கண்ணையா) இதே மண்வாசனை திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரேவதி. பாரதிராஜா கண்ட நாயகிகள் மார்க்கெட்டை இழந்ததாக வரலாறு கிடையாதே! . கோலிவுட் சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்றது ரேவதியை. அதன் பிறகு ரேவதிக்கு வந்த வாய்ப்பால் 80 மற்றும் 90 களில் தவிர்க்க முடியாத ஹீரோயினாக அவதாரம் எடுத்தார். கண்களை உருட்டி உருட்டி ரேவதி பேசும் வசங்கள் இன்றைய கால இளைஞர்களையும் இன்ஸ்டாகிராமில் கட்டிப்போட்டு வைத்திருக்கிறது. ரேவதியின் இயற்பெயர் ஆஷா. 70 – 80 களில் நடிகர் , நடிகைகளின் ஒரிஜினல் பெயர்களை மாற்றுவது என்பது இயல்பான ஒன்றுதான் என்றாலும் கூட தனது பெயர் மாற்றத்தில் ஆரம்பத்தில் தனக்கு துளியும் விருப்பம் இல்லை என்றார் ரேவதி. அது பத்தி ஒரு தபா “நான் அந்த பெயர் வைத்த பொழுது ரொம்ப அழுதேன். பிடிக்கவே இல்லை எனக்கு பெயர் மாற்ற வேண்டாம் அப்படினு சொன்னேன். என் அம்மா அப்பா வைத்த பெயர் ஆஷா. அதை எதுக்கு மாத்துறீங்க அப்படினு கேட்டேன். அதுக்கு ஏற்கனவே ஆஷா போன்ஷ்லே இருக்காங்க, ஆஷா பரேக் இருக்காங்க. இந்தி படத்துல நிறைய நடிகைகள் இருக்காங்க. அந்த பெயர் இங்கு எடுபடவே படாது அப்படினு சொன்னாய்ங்க. நான் வேண்டாம்னு சொன்னேன். ரேவதினு பெயர் வைச்ச பிறகு பத்திரிக்கைகளில் எல்லாம் ஆர்டிக்கிள் வந்தது. நான் சொன்னேன் எனக்கும் அந்த பெயருக்கும் சம்பந்தமே கிடையாதுனு. அவ்வளவு அடம் எனக்கு. அதன் பிறகு அந்த பெயரை என்ஜாய் பண்ண ஆரமித்துவிட்டேன். குடும்பத்தில் , நண்பர்கள் வட்டத்தில் ஆஷா. முதல் சில மாதங்களில் ரேவதினு யார் கூப்பிட்டாலும் திரும்பி கூட பார்க்க மாட்டேன். இப்போ வந்து பெயர்ல என்ன இருக்கு அப்படினு ஆயிடுச்சு!” அப்படீன்னு சொன்னார்.

இன்று: கி. ரா என்று சுருக்கமாக அழைக்கப்படும் கி. ராஜநாராயணன் அவர்களின் பிறந்த தினம் கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று கருதப்படுபவர். கோவில்பட்டியின் அருகில் உள்ள இடைசெவல் கிராமத்தைச் சேர்ந்தவர். 1958இல் சரஸ்வதி இதழில் இவரது முதல் கதை வெளியானது. இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பவை. கி. .ராஜநாராயணன் இயல்பில் ஒரு விவசாயி. ஒரு தேர்ந்த கதை சொல்லி. நான் மழைக்குத்தான் பள்ளிக்கூடம் ஒதுங்கியவன். பள்ளிக்கூடத்தைப்பார்க்காமல் மழையைப் பார்த்துக்கொண்டு இருந்துவிட்டேன்’ என்று தன்னைப் பற்றிக் கூறிக்கொள்ளும் கி.ரா., பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தின் சிறப்புப் பேராசிரியராக பணியாற்றிய பெருமைக்குரியவர். நல்ல இசை ஞானம் கொண்டவர். கரிசல் வட்டார அகராதி என்று மக்கள் தமிழுக்கு அகராதி உருவாக்கிய முன்னோடி இவரே.

எம். எஸ். சுப்பு லட்சுமி பிறந்த தினம் இன்று ‘’ரகுபதிராகவ ராஜாராம்’ எனும் பாடல் உலகத் தமிழர்களுக்குப் பிடித்த பாடல்.மகாத்மா காந்திக்கும் பிடித்த பாடல். ‘தன்னை இழந்து பாடுகிறார்’ என்று எம்.எஸ்.சுப்புலட்சுமியை மனம் விட்டுப் பாராட்டினார் காந்தி. இந்திய வானொலியில் மகாத்மா காந்திஜியின் அஞ்சலிக்கு இன்றைக்கும் இந்தப் பாடல்தான் ஒலிக்கிறது. திருப்பதி திருமலையில் தினமும் கோவில் நடை திறக்கும் போது பாடப் படும் வெங்கடேச சுப்ரபாதம் எம். எஸ். சுப்புலட்சுமி பாடிய பாடலே. “இந்தியா இந்தத் தலைமுறையில் ஒரு மாபெரும் கலைஞரை உருவாக்கி உள்ளது என்பதில் நீங்கள் பெருமிதம் கொள்ளலாம்” என ஒருவரை பார்த்து சரோஜினி நாயுடு ஒரு முறை கூறினார். ஆம். அவர்தான் கர்நாடக சங்கீத மேதை எம்.எஸ். சுப்புலட்சுமி. எம். எஸ். சுப்புலட்சுமி யின் முழுப்பெயர் மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி. 1916 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி தமிழ்நாட்டின் மதுரையில் பிறந்தார். மிக இளம் வயதிலேயே இசை கற்றுக் கொள்ளத் தொடங்கிய இவர் தனது பத்தாவது வயதில் முதல் இசைப் பதிப்பை வெளியிட்டார். தனது 17-வது வயதில் தன் முதல் அரங்கேற்றததை நிகழ்த்தினார். இவர் பல மொழிகளில் பாடியுள்ளார். சிறந்த வீணைக் கலைஞ்ராகவும் திகழ்ந்த இவர் இசை உலகில் எம்.எஸ். என்று அன்புடன் அழைக்கப் பட்டார். குடும்பத்தார் அழைத்த பெயர் குஞ்சம்மாள். அவரது முதல் குரு அவருடைய தாயார் சண்முகவடிவு தான். சுப்புலட்சுமி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். 1945-ல் இவர் நடித்து ’பக்த மீரா’ படம் மிகவும் புகழ் பெற்றது. விடுதலைப் போராட்ட வீரரான கல்கி சதாசிவம் 1940 ஆம் ஆண்டு சுப்புலட்சுமியை மணந்தார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. 1941ம் ஆண்டு சாவித்திரி என்ற படத்தில் எம். எஸ். சுப்புலட்சுமி நாரதர் வேடத்தில் நடித்தார். அதில் அவருக்குக் கிடைத்த ஊதியம் 50 ஆயிரம் ரூபாய். அதை மூலதனமாகக் கொண்டு தான் ‘கல்கி’ பத்திரிகை தொடங்கப் பட்டது. பத்திரிகையின் அப்போதைய விலை இரண்டு அணா. ராஜாஜி, டி.கே. சிதம்பரநாத முதலியார், ராஜா சர் அண்ணாமலைச் செட்டியார். கல்கி கிருஷ்ணமூர்த்தி, ஆர்.கே. சண்முகம் செட்டியார், அறிஞர் அண்ணா போன்றவர்களால் தொடங்கப் பட்ட தமிழிசை இயக்கத்திற்கு பக்க பலமாக நின்றவர் எம்.எஸ். சுப்புலட்சுமி. பெண்ணிய மனுஷி சரோஜினி நாயுடு அவர்களுடன் மகாகவி பாரதியார், சுத்தானந்த பாரதியார், வள்ளலார், இராமலிங்க அடிகளார், பாபநாசம் சிவன் போன்ற மேதைகளின் தமிழ்ப் பாடல்களை மேடை தோறும் பாடி ரசிகர்கள் மனதில் பதிய வைத்த பெருமை எம்.எஸ். சுப்புலட்சுமியையே சாரும். இந்தியில் வெளிவந்த மீரா திரைப் படத்தைப் பார்த்த பிரதமர் நேரு “இந்த இசையரசிக்கு முன்னால் நான் யார்? வெறும் பிரதமர்!” என எம். எஸ். சுப்புலட்சுமியைப் பாராட்டிப் புகழ்ந்தார்.அந்தப் படத்தில் எம்.எஸ். சுப்புலட்சுமி பாடிய ‘காற்றினிலே வரும் கீதம்’ எனும் பாடல் இன்றைக்கும் மிகவும் பிரபலமானது. அவ்வளவு பிரபலம், புகழ், சம்பாத்தியம் இருந்து. சுப்புலட்சுமி சாதாரண மனுஷியாகவே வாழ்ந்தார். பல நூற்றுக்கணக்கான கச்சேரிகளின் மூலம் அவருக்கு கிடைத்த செல்வத்தை எல்லாம் தானமாக நற்பணிகளுக்கும், சமூக சேவைக்கும் கொடுத்த ஒரே இசைக் கலைஞர் எம்.எஸ். சுப்புலட்சுமிதான். இதற்காகவே இவருக்கு பிலிப்பைன்ஸ் நாட்டின் மாக்சேசே விருது வழங்கப் பட்டது. இவர் உலகின் பல நாடுகளுக்குப் பண்பாட்டுத் தூதுவராகச் சென்று பல நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளார். 1966 அக்டோபரில் ஐ.நா. சபையில் இவர் தன் அரங்கேற்றத்தை நிகழ்த்தியுள்ளார். 1997-ல் அவரது கணவரின் இறப்புக்குப் பிறகு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளவில்லை. 1998 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயர்ந்த விருதான பாரத ரத்னா விருது இவருக்கு வழங்கி கௌரவிக்கப்பட்டது. இவர் 2004 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி இயற்கை எய்தினார்.

சுதந்திரபோராட்ட வீரர் எஸ் எஸ் ராமசாமி படையாச்சி பிறந்த நாள் இவர் தமிழக அமைச்சரவையில் உறுப்பினராகவும் இந்திய மக்களவை உறுப்பினராகவும் இருந்தவர். இவரின் பெயரே விழுப்புரம் மாவட்டத்தின் முந்தைய பெயராக இருந்தது இந்திய விடுதலைக்குப் பின்னர் தமிழ்நாட்டில் ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு அரசுக்கு ராமசாமி வெளியிலிருந்து ஆதரவளித்தார்.1954ல் அவர் தன் கட்சியை காங்கிரசுடன் இணைத்து விட்டார். காமராஜர் முதல்வரான பின்னர் ராமசாமி அவரது அமைச்சரவையில் உள்ளாட்சித் துறை அமைச்சரானார். காங்கிரசிலிருந்து விலகி ராமசாமி மீண்டும் தமிழ்நாடு உழைப்பாளர் கட்சியை உருவாக்கினார். தேர்தலில் சுதந்திராக் கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டார். அவர் உட்பட இக்கட்சியின் அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்தனர். . சிறிது காலத்துக்குப் பின்னர் ராமசாமி கட்சியை மீண்டும் கலைத்து விட்டு இந்திய தேசிய காங்கிரசில் இணைந்துவிட்டார். 1980 மற்றும் 1984 பொதுத்தேர்தல்களில் காங்கிரசு சார்பாக திண்டிவனம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு இந்திய நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1992ல் மரணமுற்றார். திரு ராமசாமி தன்னுடைய கட்சியை எப்போதுமே சாதிக்கட்சியாக நடத்தியது இல்லை. சென்னை கிண்டியில் ராமசாமி படையாச்சிக்கு சிலை நிறுவப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!