வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதில் நமது பொறியாளர்கள் முக்கிய பங்கு வகிப்பார்கள் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
இந்தியாவின் தலைசிறந்த பொறியாளர்களில் ஒருவர் என புகழப்படும் எம்.விஸ்வேஸ்வரய்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 15-ந்தேதி ‘தேசிய பொறியாளர்கள் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று தேசிய பொறியளர்கள் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“பொறியாளர்கள் தினமான இன்று, இந்தியாவின் பொறியியல் துறையில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்த எம்.விஸ்வேஸ்வரய்யாவுக்கு நான் மரியாதை செலுத்துகிறேன். தங்கள் படைப்பாற்றல் மற்றும் உறுதிப்பாட்டின் மூலம், புதுமைகளை புகுத்தி, கடுமையான சவால்களை சமாளிக்கும் அனைத்து பொறியாளர்களுக்கும் நான் அன்பான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வளர்ச்சியடைந்த பாரதத்தை உருவாக்குவதற்கான கூட்டு முயற்சிகளில் நமது பொறியாளர்கள் தொடர்ந்து முக்கிய பங்கு வகிப்பார்கள்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
