உலக மாலைக்கண் நோய் தினம் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 13ஆம் தேதி உலக மாலைக்கண் நோய் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்நோய் வைட்டமின் ஏ குறைபாட்டினால் ஏற்படுகிறது. மாலைக்கண் நோய் உள்ளவர்கள் பிரகாசமான வெளிச்சம் இருந்தால் மட்டுமே அவர்களால் நன்றாகப் பார்க்க முடியும். சூரிய ஒளிக்கு மட்டுமே அந்த சக்தி உள்ளது. சூரிய ஒளிக்கு குறைந்த வெளிச்சத்தில் அட்ஜஸ்ட் செய்து கொள்ளும் விழித்திரை செல்கள் அவர்களுக்கு மிகவும் குறைவாக இருப்பதால் சூரியன் மறைந்த உடனேயே அவர்களுடைய பார்வை மங்கிப் போய்விடுகிறது.
இண்டர்நேஷனல் சாக்லேட் டே! சாக்லேட்… இந்த வார்த்தையைக் கேட்டவுடன், குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை முகத்தில் மகிழ்ச்சி திளைக்கும். இது வாய், மனது மற்றும் இதயத்தை புத்துணர்வு ஆக்கும். எந்த ஒரு மகிழ்ச்சியான தருணத்திலும், முதலிடம் பிடிப்பது இதுவாகத்தான் இருக்கும். அந்தளவுக்கு சாக்லேட் அனைவருக்கும் பிடித்த ஒன்றாக இருக்கிறது. உலகளவில் ‘சாக்லேட் தினம்’, வெவ்வேறு தினங்களில் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று -செப் 13 சாக்லேட் தினம் என்று தெரிய வருகிறது. ஆனால் கூகுளில் ஜூலை 7 என்றிருக்கிறது. ஆனால் என்ன? இன்றும் சாக்லேட் டே கொண்டாடுவோமே சாக்லேட் சாப்பிடுவதால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும். இது பக்கவாதத்தைத் தடுக்க உதவுகிறது, இதயம் தொடர்பான நோய்களைத் தடுக்கிறது என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சாக்லேட் சாப்பிடுவதால் உடல் பருமன், வயிற்றில் பூச்சி உள்ளிட்ட சில தீமைகளும் உள்ளன எனவும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்). அதையெல்லாம் மறந்து விட்டு இத்தினத்தில் சாக்லேட்- டை ஹோம் மேட்-டாக செய்து வருமானம் பார்க்கும் வழியை அறிந்து கொள்வோமா? அதிக அளவில் முதலீடு தேவைப்படாத, மூலப் பொருட்கள் தட்டுப்பாடு இல்லாத, அதே நேரத்தில் எதிர்காலத்தில் மிகச் சிறந்து விளங்கி, நல்ல வருமானத்தை தரக்கூடிய , இந்தத் தொழிலில் இருக்கும் ஏதாவது ஒரு நிறுவனத்தில் நேரடி அனுபவ பயிற்சி பெற்றபிறகு, இத்தொழிலை நீங்கள் செய்ய ஆரம்பித்தால் நிச்சயம் ஜெயிக்கலாம். ஹோம் மேட் சாக்லேட் தேவையான முதலீடு : குறைந்த பட்சம் 10,000 லாபம்: 15 முதல் 20 சதவீதம் வரை சாதகமான அம்சம்கள் : பெரிய அளவில் இடவசதியோ, முதலீடுகளோ தேவையில்லை. ஒரு சில நாள் பயிற்சியே போதும். மூலப் பொருள் தருபவர்களே பயிற்சியும் தருகிறார்கள். மூலப் பொருட்கள் எளிதாகவும் தட்டுப்பாடின்றியும் கிடைக்கும். தரமாக செய்தால் ஒரு வருடம் வரை வைத்து விற்பனை செய்யலாம். பாதகம் : 24 மணிநேரமும் குளிர்சாதன வசதி வேண்டும் அதற்கு தடையில்லா மின்சாரம் தேவை. சரியாக பேக்கிங் செய்யாவிட்டால் காற்று புகுந்து சாக்லேட் வீணாகிவிடும். முன்னணி சாக்லேட் நிறுவனங்களுடன் போட்டி போட்டு மார்க்கெட்டிங் செய்வது.எந்த வயதினரும் விரும்பி சாப்பிடக்கூடியது என்பது இத்தொழிலில் உள்ள மிகப்பெரிய பாசிடிவ் அம்சம். வழக்கமான சாக்லேட்களை மட்டுமே தராமல் , புதுப்புது சுவைகளை எல்லோரையும் கவரும் வகையில் பேக்கிங் செய்து , வித்தியாசமான டிசைனில் சாக்லேட்களை செய்து விற்றால் வெற்றி நிச்சயம். கொஞ்சம் வித்தியாசமான வடிவமைப்புகளில் சாக்லேட்களை நாம் தயாரிக்க வேண்டும். சாக்லேட் தயாரிக்க தேவையான வித விதமான அச்சுகள் சந்தியிலேயே கிடைக்கின்றன. சக்கரை நோயாளிகளுக்கேற்ப சாக்லேட்கள் , ஹெல்த்கேர் சாக்லேட்கள் என வெளிநாடுகளில் சாக்லேட் சந்தைகள் வேகமாக மாறிவருகிறது. சந்தையில் பிராண்டட் சாக்லேட்கள் பல இருந்தாலும் வீட்டில் தயாராகும் சாக்லேட்களுக்கு தனி மவுசு இருக்கிறது. எனவே தைரியமாக இத்தொழிலில் இறங்கலாம். ஒரு கிலோ 300 முதல் 400 வரை விற்பனையாகிறது.
இந்திய விடுதலைக்குப் பின்னர் அனைத்து சமஸ்தானங்களும் ஒன்றன்பின் ஒன்றாக இந்தியாவோடு இணைக்கப்பட்டன – ஹைதராபாத் தை தவிர. ஹைதராபாத் நிஜாம் இந்தியாவோடு இணைய மறுத்தார். இந்நிலையில், ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைக்க ” ஆப்ரேஷன் போலோ” என்ற பெயரில் ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. 1948-ம் ஆண்டு இதே நாளில்தான், ( Sept 13) ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. நிஜாம் படைகளுடன் தொடர்ந்து 5 நாட்கள் நடைபெற்ற சண்டைக்குப் பிறகு, செப்டம்பர் 18-ம் நாள் ஹைதராபாத்தை இந்திய ராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தது. இதனையடுத்து ஹைதராபாத் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது.
ஜத்தீந்திர நாத் தாஸ் காலமான நாள் ஜத்தின் தாஸ் (Jatin Das) என்று அறியப்படும் ஜதீந்திர நாத் தாஸ் (Jatindra Nath Das) என்பவர் ஒரு புரட்சிகர இந்திய விடுதலை வீரர் ஆவார். லாகூர் சிறையில் இவர் 63 நாட்கள் உண்ணா நோன்பிருந்து இறந்தது இந்தியாவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய விடுதலைக்கு முன்னர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்து உயிர் விட்டவர் ஜட்டின் தாஸ் ஒருவரே லாகூரிலிருந்து கொல்கத்தாவிற்கு ஜத்தின் தாசின் உடல் எடுத்துச் செல்லப்பட்ட வழிநெடுகிலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூட்டங் கூட்டமாய்க் கூடி வந்து இவருக்கு மரியாதை செலுத்தனர். கொல்கத்தாவில் சுடுகாட்டை நோக்கி இரண்டு மைல் நீளத்திற்கு ஊர்வலமாய் மக்கள் திரண்டனர்.
நின்று எரியும் விளக்கு ஆர்.சூடாமணி நினைவு நாளின்று! ஆர். சூடாமணி (ஜனவரி 10, 1931 – செப்டம்பர் 13, 2010) தமிழகப் பெண் எழுத்தாளர். உளவியல் எழுத்தாளர் என புகழப்பட்டவர். இவர் ஏராளமான சிறுகதைகளையும், புதினங்களையும் எழுதியிருக்கிறார். தமிழில் மட்டுமல்லாமல் சூடாமணி ராகவன் என்ற பெயரில் பல ஆங்கில ஆக்கங்களையும் எழுதியவர். மணம் முடிக்காமல் தனித்து வாழ்ந்த சூடாமணிக்கு எழுத்தே வாழ்க்கையின் முக்கிய பிடியாக இருந்திருக்கிறது. 600-க்கும் மேற்பட்ட சிறுகதைகளை அவர் எழுதி இருக்கிறார். 1957-ல் தொடங்கி 2000-க்குப் பிறகும் அவர் எழுத்து தொடர்ந்துள்ளது. சமூகச் சிக்கலுக்குப் புரட்சியைத் தீர்வாக முன்மொழியும் கதைகளுக்கு இடையில் நடக்கக்கூடியதை மட்டும் இவர் சொன்னார். உதாரண புருஷர்களைக் கதை நாயகர்களாகக் கொண்டு வெளிவந்த கதைகளுக்கு நடுவே அவற்றுக்கு மாறாக இயல்பான மனிதர்களைக் குறித்து எழுதினார். 1957-இல் அவரது முதல் சிறுகதையான காவேரி கலைமகள் வெள்ளி விழாப் பரிசை வென்றது. 2001-இல் வெளியான ஆர். சூடாமணி கதைகள் என்ற சிறுகதைத் தொகுப்புக்குத் தமிழ்வளர்ச்சித் துறை சிறந்த சிறுகதைப் படைப்புக்கான பரிசு வழங்கியுள்ளது. 2009-இல் கலைஞர் பொற்கிழி விருது வென்றிருக்கிறார் எழுத்தாற்றல் மற்றுமின்றி, மனத்திண்மை, தீர்க்கதரிசனம், பெருநோக்கு, சேவை போன்ற அரிய பல பண்புகள் கொண்ட இவர் தமது காலத்திற்குப் பின்னர் சுமார் ஏழு கோடி மதிப்பிலான தமது சொத்துகளின் கிரய மதிப்பை ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் மூன்று தொண்டு நிறுவனங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்திருந்தவர். சூடாமணி தானமளித்த தொகை மாணவர்களின் கல்விக்கும், தொழுநோயாளிகளின் சிகிச்சைக்காகவும் நவீன வசதிகள் கொண்ட அறுவை சிகிச்சை அறையாக நோயாளிகளுக்கும் பயன்படுகின்றது.நாட்டிலேயே தன் சொத்து அனைத்தையும் சேவை நிறுவனங்களுக்கு உயில் எழுதி வைத்த ஒரே எழுத்தாளர் சூடாமணிதான்.
வேர்க்கடலை தினம் (தேசிய வேர்க்கடலை நாள்) செப்டம்பர் 13 அன்று அனுசரிக்கப்படுகிறது. இந்த நாள் உலகெங்கிலும் பலரால் விரும்பப்படும் வேர்க்கடலை வகைகளைக் கொண்டாடுவதற்கான ஒரு வழியாகும் வேர்க்கடலை நீண்ட காலமாக ஒரு பிரபலமான சிற்றுண்டியாக இருந்து வருகிறது. வேர்க்கடலையை வறுத்தாலும், வேகவைத்தாலும் அல்லது பச்சையாக சாப்பிட்டாலும் அதன் ஊட்டச்சத்துக்கள் நமக்கு முழுமையாக கிடைக்கும். வேர்க்கடலை சுவையானது மட்டுமின்றி இதனை நாம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நமது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தில் சாத்தியமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. சமச்சீரான உணவில் வேர்க்கடலையின் பங்கு கவனத்தை ஈர்த்துள்ளது. ஒவ்வொரு நாளும் ஒரு கைப்பிடி வேர்க்கடலை சாப்பிடுவதன் மூலம் கிடைக்கும் நன்மைகள் குறித்து உணவியல் நிபுணரும், நீரிழிவு கல்வியாளர்கள் கூறும்போது, “வேர்கடலையில் காணப்படும் அதிக அளவிலான தாதுக்கள் ஆரோக்கியத்தில் பெரும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்” என்றனர்.அவற்றின் மோனோசாச்சுரேட்டட் கொழுப்புகள், குறிப்பாக, HDL (நல்ல) கொழுப்பின் அளவை அதிகரிக்கின்றன மற்றும் LDL (கெட்ட) கொழுப்பைக் குறைக்கின்றன, எனவே இதய நோய் அபாயத்தைக் குறைக்கின்றன. வேர்க்கடலை அதிக நார்ச்சத்து மற்றும் புரத உள்ளடக்கம் இருப்பதால் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது, எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு ஆரோக்கியமான சிற்றுண்டாக அமைகிறது. இதய ஆரோக்கியம் மற்றும் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குப்படுத்தவது மட்டுமின்றி, ரெஸ்வெராட்ரோல் உள்ளிட்ட வேர்க்கடலையில் காணப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மூளை திசுக்களை ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்திலிருந்து பாதுகாக்க உதவுவதோடு அறிவாற்றல் சிதைவின் வாய்ப்பைக் குறைக்கும் என்று அவர்கள் கூறினர்.மேலும் வைட்டமின் ஈ, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை வேர்க்கடலையில் காணப்படும் முக்கிய வைட்டமின்கள் ஆகும், இது பல்வேறு உடல் செயல்முறைகளை ஆதரிக்கின்றன.
