விவேகானந்தர் – சிகாகோ சொற்பொழிவு நிகழ்த்திய நாள் அமெரிக்காவுக்கு 9/11 என்கிற தேதி மறக்க முடியாத நாள். பிற்காலத்தில் அந்த நாட்டின் இரட்டைக் கோபுரம், தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்ட நாள். சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு அதே தேதியில், இன்னொரு குண்டு வெடித்தது. அது, அமெரிக்கர்களை மனங்களை விசாலப்படுத்தியது; இந்தியா தொடர்பான அவர்களின் பார்வையைச் சரி செய்தது. அந்த நாளில்தான், தங்களை அந்த மாநாட்டுக்கு வரவேற்றமைக்கு மறுமொழி கூறும்விதமாக சுவாமி விவேகானந்தர் பேசினார். எடுத்தவுடனே ‘அமெரிக்க சகோதரிகளே’ என்று அழைத்து, பெண்களை முன்னிலைப்படுத்தினார் அவர். அவருக்கு முன்பு பேசியவர்கள் எல்லாம் ‘கணவான்களே… சீமாட்டிகளே..’ என்று விளித்து பேச்சைத் தொடங்க, விவேகானந்தரோ ‘சகோதரிகளே, சகோதரர்களே’ என்று தன் உரையைத் தொடங்கினார். அந்த உரை, அங்கு கூடியிருந்த மக்களை விழித்தெழச் செய்தது. முன்னதாக கிறிஸ்துவ மதத்தை உலகின் பெரிய மதமாக அறிவிக்க வேண்டும் என்ற ஆசையோடும் அனைத்து மதப் பிரிவுகளையும் சமத்துவமாக ஒருங்கிணைக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தோடும் அமெரிக்காவில் உலக மதங்களின் பாராளுமன்றம் என்ற அமைப்பு ஒரு கூட்டத்தை 1893-ல் ஏற்பாடு செய்தது.அந்த நேரத்தில் விவேகானந்தர் சென்னையில் இருந்தார். பச்சையப்பன் பள்ளியில் ஆசிரியரான அவரது நண்பர் அளசிங்கர் அமெரிக்க மாநாட்டுக்கு விவேகானந்தர் போகவேண்டும் என்றார். விவேகானந்தர் சம்மதித்தார். ஏதேனும் ஒரு மதப் பிரிவின் பிரதிநிதி என்ற சான்று இருந்தால்தான் மாநாட்டில் பங்கேற்க முடியும்.அடையாறில் பிரம்ம ஞான சபை இருந்தது. அதன் தலைவரும் அமெரிக்கருமான கர்னல் ஆல்காட் தனது சபையில் சேர்ந்தால் சான்று தருகிறேன் என்றார். விவேகானந்தர் மறுத்துவிடடார். தேவையான பணத்தைத் திரட்ட நடந்த முதல் முயற்சி தோற்றுப்போனது. இரண்டாவது முயற்சியில் விவேகானந்தர் சான்று இல்லாமலேயே அமெரிக்கா போய்விட்டார். ஆனால் மாநாட்டை ஒருமாதம் தள்ளிவைத்துவிட்டார்கள் என்பது அங்கு போன பிறகுதான் தெரிந்தது. தெரிந்த ஒருவர்கூட இல்லாத அமெரிக்காவில் ஏறக்குறைய வெறுங்கையாய் இருக்கிறவர் எப்படி ஒரு மாதம் தள்ளுவது? அவரது காவி சாமியார் உடை மக்களின் கேலிக்கு ஆளாகி அவரது நடமாட்டத்தை ஆபத்துக்குள்ளாக்கியது. யாசகம் கேட்பது அமெரிக்காவில் சட்ட விரோதம். ரயில் பயணத்தில் பழக்கமான கேத்தரின் என்பவர் விவேகானந்தருக்குத் தங்க இடம் அளித்தார். கேத்தரின் மூலம் அறிமுகமான ஹார்வர்ட் பல்கலைக்கழகப் பேராசிரியர் ரைட்ஸ் அவரைப் பல்கலைக்கழகத்தில் பேசவைத்தார்.அவருக்குச் சான்று அளித்து மதங்களின் பாராளுமன்றத்தில் உரையாற்ற ஏற்பாடு செய்தார். இதற்கிடையே அளசிங்கர் தன் மனைவியின் நகைகள் முதலான தங்கள் உடமைகளை விற்று மறுபடியும் பணம் அனுப்பி விவேகானந்தரைப் பாதுகாத்தார். மாநாட்டுக்குள் விவேகானந்தர் நுழைந்தார். பேச்சின் தொடக்கத்தில் அமெரிக்க சகோதர, சகோதரிகளே என அழைத்தார். அனைவரையும் கவர்ந்தார். உலகின் மிகப் பழமையான துறவிகளின் பிரதிநிதியாக, மதங்களின் தாயான இந்தியாவின் பிரதிநிதியாக, வந்திருப்பதாக அறிவித்தார்.அனைத்து மதங்களும் ஒன்றே என்னும் பகவத் கீதையின் மொழி மாநாட்டின் நோக்கத்தோடு இணைகிறது என்ற அவர் மதவெறியும் பிரிவினைவாதமும் பிசாசுகளைப் போல மனித ரத்தத்தைக் குடித்துப் பல நாடுகளை அழித்துவிட்டன. அவை இல்லாமல் இருந்தால் மனித இனம் மேலும் முன்னேறி இருக்கும் என்றார். விவேகானந்தரின் ஆன்மிக உரை அதுவரை இந்து மதம் பற்றி வெளிநாட்டினர் கொண்டிருந்த கருத்துகளை மாற்றியது. ஆழமான தத்துவ விவாதங்களை அவர்களுக்கு அறிமுகப்படுத்தியது. அமெரிக்கப் பத்திரிகைகள் அவரது உரைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளித்தன. ஆம்.. சிகாகோவில் இந்து சமயப் பெருமைகளை சுவாமி விவேகானந்தர் எடுத்துக்கூறுவதற்கு முன்னர் வரை இந்தியாவை சாதுக்களும் சர்ப்பங்களும் குரங்காட்டிகளும் நிறைந்த நாடு என்பதாக மட்டுமே வெளிநாட்டினர் கற்பனை செய்துவைத்திருந்தனர். ‘இந்த உலகின் அறிவியல் உண்மைகள் எல்லாம் இருளில் கிடந்தன. கடவுள் நியூட்டனைப் படைத்தார். எல்லாம் வெளிச்சமானது’ என்று சொல்வார்கள். சுவாமி விவேகானந்தரின் வருகைக்குப் பிறகே, அதுவரையில் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டிருந்த இந்து மதமும், இந்தியாவின் நெடிய ஆன்மிக மரபும் மேற்கில் உள்ளவர்களுக்குத் துலக்கமாயிற்று அன்று தொடங்கி 16 நாட்கள் நடந்த மாநாட்டுக்குப் பிறகு அவர் மிகவும் புகழ்பெற்றவராகிவிட்டார். தினமும் பல திசைகளிலிருந்து அவருக்கு அழைப்புகள் குவிந்தன. அமெரிக்காவில் இருந்து இங்கிலாந்துக்குச் சென்ற விவேகானந்தர் முதிர்ந்த நிலையில் இருந்த பேராசிரியர் மாக்ஸ்முல்லரைச் சந்தித்தார். தனது ஆன்மிக வாரிசான சகோதரி நிவேதிதாவை அங்கேதான் உருவாக்கினார். முகவரி இல்லாதவராக அங்கு சென்றவர் தனது ஆன்மிக நிலையத்தை அங்கே உருவாக்கினார். நான்கு ஆண்டுகள் அங்கே ஆன்மிகப் பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பினார். இந்து மதம் பற்றிய பல்வேறு தத்துவ அம்சங்களை மாக்ஸ்முல்லர் போன்ற ஐரோப்பிய மேதைகள் அறிந்து அங்கே பரப்பிக்கொண்டு இருந்தாலும் விவேகானந்தரின் கருத்துகள், ஒரு ஆன்மிகத் துறவி என்ற வகையில் சொந்த அனுபவங்களாக அவர் வெளியிட்டவை, பெரிய தாக்கத்தை உலகளவில் ஏற்படுத்தின.
மகா கவி பாரதியார் மறைந்த நாள் தேடிச் சோறுநிதந் தின்று பல சின்னஞ் சிறுகதைகள் பேசி மனம் வாடித் துன்பமிக உழன்று பிறர் வாடப் பல செயல்கள் செய்து நரை கூடிப் கிழப்பருவம் எய்தி கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் பல வேடிக்கை மனிதரைப் போலே நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’’ மகாகவியின் கடைசிப் பயணம்! இன்று உலகம் போற்றும் நம் மகாகவி சுப்ரமணிய பாரதியின் நினைவு நாள். அந்த அக்னி குஞ்சு தனது பூத உடலை விட்டு பறந்து 10495 வருடங்கள் ஆகிறது. யுகங்கள் கழிந்தாலும் அவனின் மிகச் சிறந்த எண்ணமும், சீரிய சிந்தனையும், அவனது ஒளிபடைத்தப் பார்வையில் இந்த உலகையும், மானிடத்தையும் ஒரு சேர தனது அன்பால் அணைத்து, இந்த மானுடமும் வையமும் வாழ்வாங்கு வழி கூறிச் சென்ற அந்த தீர்க்கதரிஷி நம்மை விட்டுப் பிரியவில்லை, நம்மோடு அவனது சிந்தனைகளாக வாழ்ந்தும் கொண்டிருக்கிறான். அந்த மகாகவியின் கடைசி நாளையும், அந்த இளஞ்சூரியனைத் தாங்கி இருந்த அவனது பூத உடல் அக்னிக்கு ஆகுதியானதையும் மீண்டும் ஒருமுறை அவனது நினைவு நாளிலே நினைத்துப் பார்ப்போம்.அந்த நாட்களினைப் பற்றிய நிகழ்வுகளை பாரதிப் பிரியரும் தமிழறிஞருமான திருவாளர். ரா. அ. பத்பநாபன் அவர்கள் தொகுத்து வழங்கிய ‘சித்திர பாரதி’ என்னும் நூலில் காணும் இப்பகுதியை நான் இங்கே பகிர்கிறேன். யானையின் மூலம் உயிரைக் கவராத யமன், இரண்டு மாதம் காத்திருந்து, வேறொரு எளிய வழியில் பாரதியை நெருங்கினான். 1921 செப்டம்பர் முதல் தேதி பாரதிக்கு வயிற்றுப் போக்கு ஏற்பட்டது. பூஞ்சை உடல் தாங்கவில்லை. விரைவில் அது இரத்தக் கடுப்பாக மாறியது. முதல் தேதியிலிருந்து விடுப்பில் இருந்த பாரதி எப்போது வேலைக்குத் திரும்புவார் என்றறிய ‘மித்திரன்’ அலுவலகத்திலிருந்து ஓர் சக ஊழியர் வந்து விசாரித்தார்.சில தினங்களில், சரியாக செப்டம்பர் 12ஆம் தேதி திங்களன்று வேலைக்குத் திரும்புவதாகச் சொல்லி அனுப்பியுள்ளான் பாரதி. அன்றுதான் அந்த இளஞ்சூரியனின் பூத உடல் எரிகாடு சென்றது ! 1921 செப்டம்பர் 11 ஆம் தேதி இரவு பாரதி வீட்டில் கவலையுடன் விழித்திருந்த நண்பர்களில் ஒருவரான நீலகண்ட பிரம்மச்சாரி கூறுகிறார்: “அன்றிரவு பாரதி ‘அமானுல்லா கானைப் பற்றி பற்றி ஒரு வியாசம் எழுதி ஆபீஸுக்கு எடுத்துக் கொண்டு போகவேண்டும்’ என்று சொல்லிக் கொண்டிருந்தார். அமானுல்லா கான் அப்பொழுது ஆப்கானிஸ்தானத்து மன்னராக இருந்தவர். 1914-18 முதல் மகாயுத்தத்தில் ஜெர்மாநியருக்குச் சாதகமாக இருந்தாரென்று சண்டையில் வெற்றிப் பெற்ற பிரிட்டிஷார் அவர் மீது கறுவிக் கொண்டிருந்தார்கள். முன்னிரவில் பெரும்பாகம் மயக்கத்திலிருந்த பாரதி, இறப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்னால் சொன்ன இந்த வார்த்தைகளே அவர் பேசிய கடைசி வார்த்தைகளாகும்” நெல்லையப்பர், “எங்களுக்குத் தூக்கம் வரவில்லை. அடிக்கடி எழுந்து, எமனுடன் போராடிக் கொண்டிருந்த பாரதியாரைக் கவனித்துக் கொண்டிருந்தோம். பின்னிரவில் சுமார் இரண்டு மணிக்கு பாரதியாரின் மூச்சு அடங்கி விட்டது. உலகத்தாருக்கு அமரத்துவ உபதேசம் செய்த பாரதியார் மரணம் அடைந்தார். “கரவினில் வந்து உயிர்க் குலத்தினை அழிக்கும் காலன் நடுநடுங்க விழித்தோம்” என்றும், “காலா, உன்னை நான் சிறு புல்லென மதிக்கிறேன் – என்றன் காலருகே வாடா ! சற்றே உன்னை மிதிக்கின்றேன், அட (காலா)” என்றும் பாடிய பாரதியார் காலனுக்கு இரையானார்” என்று கூறுகிறார். பாரதி காலமானது சரியாக இரவு 1:30 மணி. இதை நீலகண்ட பிரம்மச்சாரி, ஹரிஹர சர்மா முதலியோர் தெரிவித்துள்ளனர். பாரதியின் மரணச் செய்தியைப் பொழுது விடிந்ததும் நண்பர்களுக்குச் சொல்லியனுப்பினார்கள். துரைசாமி ஐயர், ஹரிஹர சர்மா, வி.சக்கரைச் செட்டி, கிருஸ்துவப் பாதிரியாராகப் புரசைவாக்கத்தில் ஒரு பங்களாவில் குடியிருந்த யதிராஜ் சுரேந்திரநாத் ஆர்யா, மண்டயம் ஸ்ரீநிவாஸாச்சாரியார், எஸ்.திருமலாச்சாரியார், குவளை கிருஷ்ணமாச்சாரியார் முதலியோர் வந்தனர். பாரதி குடும்பத்துக்கு எப்போதும் ஆதரவுப் புரிந்துவந்த துரைசாமி ஐயரே பாரதியின் கடைசி நாள் கிரியைகளுக்கும் உதவி புரிந்தார். “பாரதியார் உடலைக் காலை எட்டு மணிக்குத் திருவல்லிக்கேணி (கிருஷ்ணாம்பேட்டை) மயானத்திற்கு கொண்டு சென்றோம். நானும், லஷ்மண ஐயரும், குவளை கிருஷ்ணமாச்சாரியார், ஹரிஹர சர்மா, ஆர்யா முதலியவர்களும் பாரதியார் பொன்னுடலை சுமந்து செல்லும் பாக்கியம் பெற்றோம்.பாரதியார் உடல் மிகச் சிறியது. அன்று தீக்கிரையான அவர் உடல் நிறை சுமார் 100 பவுண்டுக்கும் குறைவாகவே இருக்கும். இன்று உலகம் போற்றும் கவிச்சக்ரவர்த்தியுடன் அன்று அவரது கடைசி நாளில் திருவல்லிக்கேணி மயானத்திற்குச் சென்றவர்கள் சுமார் இருபது பேருக்கும் குறைவாகவே இருக்கலாம்.பாரதியின் பொன்னுடலை அக்னி தேவரிடம் ஒப்புவிக்கு முன்னர் நண்பர் சுரேந்திரநாத் ஆர்யா சிறியதோர் சொற்பொழிவு நிகழ்த்தினார்” -இவ்வாறு நெல்லையப்பர் கடைசி நாளை விவரித்துள்ளார். பாரதிக்குப் ஆண் பிள்ளை இல்லாததால் யார் அவருக்குக் கொள்ளியிடுவது என்ற பேச்சு வந்தபோது, யாரோ நீலகண்ட பிரமச்சாரி கொள்ளியிடலாமென்று சொன்னார்கள். உடனே அவர், “என்ன, நானா? இந்தச் சடங்குகளிலெல்லாம் துளிக்கூட நம்பிக்கை இல்லாதவன் நான். என் தகப்பனாராகவே இருந்தாலும் இந்தச் சடங்குகளைச் செய்யமாட்டேன். அப்படியிருக்க, பாரதிக்காக நான் செய்வேனென்று எப்படி நினைத்தீர்கள்?” என்று மறுத்துவிட்டார்.முடிவில் பாரதியின் தூரத்து உறவினரான ஹரிஹர சர்மாதான் கர்மங்களைச் செய்தார். பல நூட்ட்ராண்டுக்கொருமுறை தோன்றும் அதிசய மேதை ஒருவரின் வாழ்வு இவ்வாறு முடிவெய்தியது. தம்மிடையே ஒரு மகாபுருஷர் வாழ்ந்தாரென அவர் காலத்துத் தமிழுலகம் அறியவில்லை. நண்பர்களும், அறிஞர்கள் சிலருமே உணர்ந்திருந்தனர்.தென் தமிழ்நாட்டில் 1882 டிசம்பர் 11 தோன்றிய அந்த சித்த புருஷர், சென்னை திருவல்லிக்கேணியில் 1921 செப்டம்பர் 12 ஞாயிறன்று, அதிகாலை 1:30 மணிக்குப் புகழுடல் எய்தினார். அப்போது அவருக்கு வயது 39 நிரம்பவில்லை! சரியாக 38 வயதும் 9 மாதங்களுமே ஆகியிருந்தன!
இம்மானுவேல் சேகரன் நினைவு நாள் –
ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகப் போராடிய ஒரு அரசியல் தலைவராகவும், தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் வாழும் மக்களின் ஒடுக்குமுறைக்கு எதிரான எழுச்சிக்குப் பின்னால் முக்கிய காரணமாகவும், அவர்களின் சமூக அடையாளத்தை நிலைநாட்டவும், ஒரு அரசியல் சக்தியாக அணிதிரளவும் அவர் இருந்தார். அவர் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறைக்குச் சென்று இரட்டை குவளை முறையிலிருந்து பாதுகாத்தார்.
தீண்டாமை ஒழிப்பு குறித்த மாநாட்டை நடத்தினார்.
1957 முதுகுளத்தூர் இடைத்தேர்தலுக்குப் பிறகு, தொகுதியில் காங்கிரஸ்-ஃபார்வர்டு பிளாக் கட்சிகளுக்கு இடையிலான அரசியல் மோதல் ஒரு சாதிக் கலவரமாக மாறியது, அதில் இம்மானுவேல் சேகரன் கொல்லப்பட்டார்.
இந்திய அஞ்சல் துறை அக்டோபர் 9, 2010 அன்று சிறப்பு தபால் தலையை வெளியிட்டு இம்மானுவேல் சேகரனாரை கௌரவித்தது.
முகம்மதலி ஜின்னா நினைவு நாள் இவர் ஒன்றுபட்ட இந்தியாவில் துவக்கத்தில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து காந்தி அடிகளோடு இணைந்து விடுதலை போராட்டங்களில் பங்கேற்றார் ஜின்னா அடிப்படையில் காங்கிரஸ் வாதியாகவே இருக்க ஆசைப்பட்டார். ஒரு கட்டத்தில் முஸ்லீம் லீக் கட்சியை மதச் சார்பில்லாமல் நடத்த வேண்டும் என்பதுக்காகவே அதன் தலைவர் பொறுப்பேற்றார். ஜின்னா, முஸ்லீம் லீக் கட்சியின் தலைமை பொறுப்பேற்றபோதும், தொடர்ந்து காங்கிரஸ் எடுத்த போராட்டங்களுக்கு ஆதரவு மட்டும் தெரிவிக்காமல், தனது பங்கையும் அளித்து வந்தார். 1940 ல் முஸ்லீம் லீக் கட்சியின் மாநாடு நடந்தது. அதில் மதச்சார்பற்ற நாடாகப் பஞ்சாப், காஷ்மீர், மேற்கு வங்காளம் இப்போதிருக்கும் பாகிஸ்தான் ஆகிய பகுதிகளைப் பிரித்து பாகிஸ்தான் என்ற நாடு பிரிக்கப்படும் எனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முஸ்லீம் மக்களின் அழுத்தம் காரணமாக முஸ்லிம் லீக் தலைவராக இருந்த ஜின்னா இந்திய முஸ்லிம் லீக் கட்சியின் முதல் நோக்கமாக தனி நாடு கோரிக்கையை முன் நிறுத்தினார். இந்தியா பிரிக்கப்பட்டு, பாகிஸ்தான் என்ற தனிநாடு ஏற்பட்ட பின் அந்த நாட்டின் தந்தை (பாபா-ஏ-கௌம்) என்றழைக்கப்படுகிறார். இவரின் பிறந்த நாள் பாகிஸ்தானில் ஒரு தேசியத் திருவிழாவாகக் கொண்டாடப்படுகிறது. இவர் பாகிஸ்தானின் முதல் தலைமை ஆளுநர் (Governor-General) ஆவார். ஜின்னா பாகிஸ்தான் கவர்னர் ஜெனரலாக ஓராண்டு காலமே பதவி வகித்தார். 1948 செப்டம்பர் மாதம் 11ம் ஆம் தேதி மரணமுற்றார்
