இன்றைய முக்கிய நிகழ்வுகள் (செப்டம்பர் 08)

உலக எழுத்தறிவு தினம் அறிவு ஒரு கூர்மையான ஆயுதம்… அறிவுடையார் எல்லாம் உடையார். அவ்வகையில், எழுத்தறிவுதான் இந்தச் சமூகத்தின் ஆணிவேர் ஆகும். எழுத்தறிவின்மையை, ஒரு குற்றம் என்று கூறியுள்ளார் காந்தியடிகள். ஒரு மொழியில் எழுத்துக்களை எழுதவும், படிக்கவும் தெரியாமல் இருத்தல் எழுத்தறிவின்மை என்று கூறப்படுகிறது. உலகின் பலதரப்பட்ட விவரங்கள் எழுத்துக்களாக விரவிக்கிடக்கும் வேளையில், எழுத்தறிவின்மையால் அவற்றை உணர்ந்துகொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது. எழுத்தறிவு பிரச்னைதான் கல்வியால் தீர்க்கப்பட வேண்டிய மிகப்பெரிய சமூகப் பிரச்னையாகக் கருதப்படுகிறது. 2011-ம் ஆண்டு கணக்குப்படி, இந்தியாவில் 74 சதவிகிதம் பேர் எழுத்தறிவுப் பெற்றவர்களாக உள்ளனர். இதில் 82 சதவிகிதம் ஆண்களும், 65 சதவிகிதம் பெண்களும் உள்ளனர். இதன்படி எழுத்தறிவில், கேரளா முதல் இடத்திலும், பீகார் கடைசி இடத்திலும் உள்ளது. யுனெஸ்கோவின், ‘அனைவரும் கல்வி பற்றிய உலக அறிக்கை’யின்படி, தெற்கு மற்றும் மேற்கு ஆசியா பகுதிகளில் எழுத்தறிவு இல்லாதவர்கள் மிகக் குறைந்த அளவில் உள்ளனர். எழுத்தறிவு, ஒரு தனியாளுக்குத் தன்னுடைய இலக்கை அடைவதற்கும், தனது அறிவையும், தகுதியையும் வளர்ப்பதற்கும், பரந்த சமூகத்தில் தனது பங்கினை முழுமையாக ஆற்றுவதற்கும் உதவுவது. ஆகையால், எழுத்தறிவு என்பது மிகவும் முக்கியமானது. இந்த நிலையில் ஒவ்வொரு மனிதனுக்கும் எழுத்தறிவு என்பது உண்ணும் உணவைவிடவும், பார்க்கும் கண்ணைவிடவும் முக்கியம் பெறுகிறது. கல்வியும் எழுத்தும் பள்ளியிலோ அல்லது கல்லூரியிலோ படித்து முடித்தவுடன் முடிவதில்லை. அது வாழ்நாள் முழுவதும் திகழவேண்டும். கல்விக்கும் எழுத்துக்களுக்கும் முடிவே கிடையாது.

சர்வதேச இயன்முறை மருத்துவ தினம் பிசியோதெரப்பி எனப்படும் இந்த இயன் முறை மருத்துவத்தின் முறைகள் பற்றியும் பலன் பற்றியும் ஒரு மினி ரிப்போர்ட்… உடலியக்க செயல்பாட்டை விஞ்ஞான ரீதியாக அறிந்து உடலியக்க குறைபாடு களைப் போக்கும் நவீன மருத்துவ வடிவமாக இன்று பிஸியோதெரபி என்ற இயன்முறை மருத்துவம் வளர்ந்துள்ளது. வலியைத் தோற்றுவிக்கும் அனைத்து உடல் குறைபாடுகளை பின்விளைவு ஏற்படுத்தாத வகையில் சரி செய்வதே இதன் சிறப்பு அம்சம் ஆகும். இயன்முறை மருத்துவம் என்பது நவீன உலகில் வளர்ந்துவரும் ஒரு சிறப்பு மருத்துவ முறை. இது முற்றிலுமாக மருத்துவத்துறையைச் சார்ந்த மருத்துவப் பிரிவு. முதுமை, காயம், விபத்து அல்லது சூழல் காரணமாக உறுப்புகளின் இயக்கமும் பயன்பாடும் பாதிக்கப்படும்போது இயன்முறை சிகிச்சை அளிக்கப்படும். நோயாளிகளின் உடலியக்கத்தை மீட்கவும் உறுப்புகளின் பயன்பாட்டைப் பழைய நிலைக்குக் கொண்டுவந்து பராமரிக்கவும், மேம்படுத்தவும் இந்த மருத்துவத்துறை உதவுகிறது. மருத்துவ உலகில் தினமும் பற்பல புதியகண்டுபிடிப்புகள் எத்தனையோ நோய்களுக்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டு இருந்தாலும் சர்க்கரை நோயால் ஏற்படும் தோள்பட்டை வலி பாதிப்பால் பொது மக்கள் பெரிது பாதிக்கப்பட்டு வருகின்றனர். சக்கரையின் அளவை கட்டுக்குள் வைத்து கொள்ளவும் தோள்ப்பட்டை வலியை குறைக்கவும் பதினைந்து நாட்களுக்குள் இயன்முறை மருத்துவம் மூலம் பாதிக்கப்பட்டவரின் தோள்பட்டையை பழைய நிலைக்கு கொண்டு வர முடியும் என்கின்றனர் மருத்துவர்கள் ஆரோக்கியமான உடல் திறனுடன் இருக்கவும், உடல் பருமன் மேம்பாட்டை தக்கவைத்துக் கொள்ளவும், அறுவை சிகிச்சைகளுக்குப் பின் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பவும் இயன்முறை மருத்துவம் மிக அத்தியாவசிய தேவையாகி உள்ளtது. உலக முழுவதும் இன்று இயன் முறை மருத்துவ தினம் கொண்டாடும் வேலையில் இயன்முறை மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பொதுமக்களிடம் இல்லை என்கிறார் மற்றொரு மருத்துவர். பிசியோதெரப்பி சிகிச்சை பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடம் எடுத்துச் சென்று அதன் மூலம் அனைவரும் பயன்பெற வேண்டும் என்பதே இந்த நாளில் அனைத்து தரப்பு மருத்துவர்களின் கோரிக்கையாக உள்ளது.

தேசிய கண் கொடை நாள் ( National Eye Donation Day ) செப்டம்பர் 8 . இந்தியாவின் தேசிய கண் கொடை நாள் ( National Eye Donation Day ) ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 8 -ஆம் நாள் கடைப்பிடிக்கபட்டு வருகிறது. இந்நிகழ்வு இருவாரக் கொண்டாட்டமாக ஆகத்து 25 இல் ஆரம்பித்து செப்டம்பர் 8 இல் முடிவடைகிறது. இக்காலக்கட்டத்தில் கண் கொடை சிறப்புகள் பற்றிய பரப்புரைகள், பொதுக்கூட்டம், கருத்தரங்கு முகாம்கள் நடத்தபடுவதோடு, பொதுமக்களுக்கு கண் தானம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், ஊக்கம் தரும் வகையிலும், இந்திய அரசு சார்பில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. உலகம் முழுவதும் 3 கோடியே 70 லட்சம் மக்கள் பார்வையற்றோர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. அதில் ஒரு கோடியே 50 லட்சம் பேர் இந்தியாவில் உள்ளனர். இதில், 26 விழுக்காடு குழந்தைகள். 75 சதவீதம் பார்வை இழப்பைத் தடுக்கக்கூடியதாகும். போதிய கண் தானம் செய்வோர்கள் இல்லாமையால் இதை குறைக்க முடியவில்லை என ஆய்வறிக்கை கூறுகிறது. சிறப்புத் தகவல்கள் : ஒரு வயது முதல், அனைத்து வயதினரும் கண்தானம் செய்யலாம். கண்கள் மாற்று அறுவை செய்ய 20 நிமிடங்கள் முதல் 30 நிமிடங்கள் வரையே ஆகும். கண் தானம் செய்ய விரும்புவோர், அருகில் உள்ள கண் வங்கியில் பதிவு செய்யலாம். கண் தானம் செய்தவர் இறந்ததும், உடனடியாக அவரது கண்களைமூடி, ஐஸ் அல்லது ஈரமான பஞ்சை வைக்க வேண்டும்.உலகிலேயே இலங்கையே கண் தானம் செய்வதில் முதலிடம் வகிக்கிறது.

குன்னக்குடி வைத்தியநாதன் நினைவு நாளின்று: குன்னக்குடி பற்றி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பார்வை! அதுவே அவரின் பெரிய வெற்றியும் கூட!

  • அவர் நெற்றியில் திருநீறும் குங்குமமும், அவர் ஜிலுஜிலு சட்டைகளும், அவர் செய்யும் அங்க சேட்டைகளும், குழந்தைகளை மட்டுமில்லை, இக்கால இளைஞர்களையும் வெகுவாகவே கவரும்!

அவர் கச்சேரியில் செவிக்கு மட்டும் விருந்து இல்லை! கண்களுக்கும் விருந்து தான்! smile உணர்ச்சிலை

  • அவர் இசை, பலதரப்பட்ட ரசிகர்களைக் கவர்ந்திழுக்கும்! தூய இசை வல்லுனர்கள், குன்னக்குடி செய்யும் வித்தைகளை ஒப்பா விட்டாலும், குன்னக்குடியின் ஜனரஞ்சகத்தையோ, இசை எளிமையையோ மறுக்கவே முடியாது!

மெல்லிசைக்கும், மேடை இசைக்கும் பாலம் போட்டவர் குன்னக்குடி!

  • வயலின் என்றால், ஏதோ தலைவர்கள் மறையும் போது மட்டும் தொலைக்காட்சியில் வாசிப்பது என்று இருந்த ஒரு நிலையை மாற்றிக் காட்டியவர் குன்னக்குடி!

*வயலின் என்னும் பக்க வாத்தியம், பக்கா வாத்தியம் ஆனது!

  • சின்ன வயலினுக்கு, பெரிய தவில் என்ற நினைத்துப் பார்க்க முடியாத ஜோடிப் பொருத்தம் எல்லாம் ஏற்படுத்திக் காட்டிய Experimenter தான் குன்னக்குடி!
  • தமிழிசைக்கு அவர் ஆற்றிய பணி அளவில்லாதது! தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத் தலைவராகவும் இருந்திருக்கிறார்! திருவையாறு தியாகராஜ ஆராதனையை பல ஆண்டுகள் நன்முறையில் நடத்திக் காட்டியவரும் கூட!

புலவர் புலமை பித்தன் காலமான தினமின்று ராமசாமி என்ற இயற்பெயர் கொண்ட புலமைப்பித்தன் சென்னை சாந்தோம் உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றியவர். மரபுக்கவிதைகளில் தோய்ந்த புலமைப்பித்தன் ‘குடியிருந்த கோயில்’ திரைப்படத்தில் ”நான் யார நான் யார்” பாடலின் மூலம் எம்ஜிஆரின் அபிமானத்தைப் பெற்றார். பின்னர் ‘அடிமைப்பெண்’ படத்தில் ஆயிரம் நிலவே வா… போன்ற பாடல்களையும் எழுதி தொடர்ந்து இறவாப் புகழ் பெற்றார். ‘இதயக்கனி’ திரைப்படத்தில் நீங்க நல்லா இருக்கணும் நாடு முன்னேற என்ற மிகவும் புகழ்பெற்ற பாடலை எழுதியவரும் இவரே. சிரித்து வாழ வேண்டும், ஓடி ஓடி உழைக்கணும் உள்ளிட்ட இவர் எழுதிய ஏராளமான சமூக அக்கறையுள்ள பாடல்கள் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் மறையாத இடத்தைப் பெற்றுத் தந்தன. ‘உன்னால் முடியும் தம்பி’ படத்தில் புஞ்சை உண்டு நஞ்சை உண்டு என்று கமல்ஹாசனுக்கும் இவர் பாடல்கள் எழுதியுள்ளார். ‘நாயகன்’ படத்தில் இடம்பெற்றுள்ள தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே, சிவகுமாரின் 100-வது படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் இடம் பெற்ற உச்சி வகுந்தெடுத்து பிச்சிப் பூ வச்ச கிளி போன்ற உருக்கமான பாடல்களையும் எழுதியுள்ளார். வடிவேலு நடித்த ‘எலி’ (2015) படத்திலும் , தெறி, அரிமாநம்பி, இந்திரஜித் போன்ற படங்களுக்காக தனது கடைசிப் பாடல்களை எழுதினார். தமிழக முன்னாள் முதல்வர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோருடன் நெருங்கிய நட்பு கொண்டிருந்ததன் காரணமாக பல்வேறு அரசியல் பதவிகள் அவரைத் தேடி வந்தன. புலவர் புலமைப்பித்தன் தமிழக அரசின் முன்னாள் சட்டப்பேரவை மேலவைத் துணைத் தலைவராகவும், அரசவைக் கவிஞராகவும், அதிமுக அவைத்தலைவராகவும் பணியாற்றியவர் ஆவார்.

சாண்டோ சின்னப்பா தேவர் நினைவு நாளின்று ஒரு படத்தைத் திட்டமிட்டபடி எடுக்கமுடியுமா? எடுக்கின்ற படத்தை குறுகியகாலப் படைப்பாக தயாரிக்கமுடியுமா? குறிப்பிட்ட நடிகரை வைத்து தொடர்ந்து பல படங்கள் கொடுக்கமுடியுமா? நடிகர்களுக்கும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் சம்பளத்தை ஒரேதவணையில் வழங்கும் தயாரிப்பாளர் உண்டா? படத்துக்குப் பூஜை போடும்போதே, பட ரிலீஸ் தேதியை அறிவித்து, அந்தத் தேதியில் படத்தை வெளியிடுவது சாத்தியமா? அத்தனையும் நிகழ்த்திக் காட்டியவர்… சாண்டோ சின்னப்பா தேவர். பிறந்தது ராமநாதபுரம் மாவட்டம் என்றாலும் வளர்ந்தது கோவையில்தான். வறுமைக்கு வாக்கப்பட்ட குடும்பத்தில் மில் வேலை உட்பட பல வேலைகளைச் செய்தார். சின்னச்சின்னதாக தொழில்கள் செய்தார். சகோதரர்களுடன் சேர்ந்து உடற்பயிற்சிக் கூடம் வைத்திருந்தார். அந்தக் கூடம் லேசான திருப்புமுனையை ஏற்படுத்தியது. அப்போது கோவையில்தான் இருந்தது ஜூபிடர் ஸ்டூடியோ. இந்த நிறுவனத்தில் மாதச் சம்பளத்துக்கு நடித்தவர்களில் ஒருசிலர், இவரின் உடற்பயிற்சிக் கூடத்துக்கு வந்தார்கள். பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து கட்டுமஸ்தான உடம்பு கொண்ட சின்னப்பா தேவருக்கு, ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. மெல்ல மெல்ல திரைத்துறையில் ஆர்வம் வந்தது. அந்த சமயத்தில், கிடைத்த நடிகருடனான நட்பு, மரணிக்கும் வரை நீடித்தது. அதுமட்டுமல்ல… திரைத்துறையில் மிகப்பெரிய வெற்றிக்கும் வித்திட்டது. சின்னப்பா தேவருக்கு அப்படிக் கிடைத்த நண்பர்… எம்ஜிஆர். சினிமா ஆசையில் சென்னைக்கு வந்தார் தேவர். ‘சொந்தமாக படமெடுத்தால் என்ன’ எனும் எண்ணம் தோன்றியது. நண்பர்கள் கையிலிருந்த பணத்தைக் கொடுத்து உதவினார்கள். ‘தேவர் பிலிம்ஸ்’ உருவானது. எம்ஜிஆரை ஹீரோவாக்கினார். பானுமதி, கண்ணாம்பா முதலானோர் நடித்த ‘தாய்க்குப் பின் தாரம்’ மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. முதல் படத்தில் ‘மாடு’ பிரதானக் காட்சியில் இடம்பிடித்து மிரட்டியெடுத்தது. பின்னர், சிங்கம், புலி, யானை உள்ளிட்ட பல மிருகங்களை படத்தில் கொண்டுவந்தார் என்பது தனிக்கதை. ‘தேவர் பிலிம்ஸா… மிருகங்களை வைச்சு அசத்துவாங்களேப்பா’ என்று எல்லோரும் சொல்லும் அளவுக்கு தனி அடையாளத்துடன் திகழ்ந்தார். முதல் படம் எம்ஜிஆருடன். ஆனால் இருவருக்கும் முட்டிக்கொண்டது. ஒருவழியாக படத்தை எடுத்து முடித்து, ரிலீஸ் செய்து, வெற்றிப் படமாகவும் அமைந்தது. பின்னர் ஒருவழியாக எம்ஜிஆரும் சின்னப்பா தேவரும் பிணக்கில் இருந்து வெளிவந்தார்கள். பழைய நட்பு இன்னும் கெட்டிப்பட்டது. ‘தாய் சொல்லைத் தட்டாதே’, ‘தாயைக் காத்த தனயன்’ என்று தொடர்ந்து படங்கள் பண்ணினார்கள். எல்லாமே ஹிட்டடித்தன. நடுவே, ரஞ்சன், சி.எல்.ஆனந்தன், ஜெமினி கணேசன் என ஒரு ரவுண்டு போய்விட்டு வந்தார் எம்ஜிஆரிடம். சிவாஜியை வைத்து ஏ.பீம்சிங் ‘ப’ வரிசை படங்களை இயக்கினார் என்றால், சின்னப்பா தேவர் எம்ஜிஆரை வைத்து ‘த’ வரிசைப் படங்களை தயாரித்தார். தன் படங்களுக்கென கதை இலாகாவை உருவாக்கினார். டைட்டிலில் ‘தேவர் பிலிம்ஸ் கதை இலாகா’ என்றே வெளிவரும். இசைக்கு கே.வி.மகாதேவன். பாடலுக்கு கண்ணதாசன். இயக்கத்துக்கு சகோதரர் எம்.ஏ.திருமுகம். பாட்டெல்லாம் ஹிட்டாகின. குழுவினரை அழைத்து கதை உருவாக்கச் சொல்லுவார். கதை இவருக்குப் பிடித்திருந்தால்தான் அடுத்தக்கட்டத்துக்குச் செல்வார். இல்லையெனில் மீண்டும் கதை உருவாக்கும் வேலை தொடங்கிவிடும். அந்தக் கதையில், எம்ஜிஆருக்கென சின்னச்சின்ன விஷயங்கள் சேர்க்கப்படும். எல்லோரும் பார்க்கும்படியான கதையாக அமைக்கப்பட்டிருக்கும். சண்டைக்காட்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். சென்டிமென்ட்டுகள் கவனம் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கும். அவ்வளவுதான்… கதை ரெடி. எம்ஜிஆருக்குச் சொல்லப்படும். கால்ஷீட் கொடுப்பார். பூஜை தேதி அறிவிக்கப்படும். பூஜையின் போதே, ரிலீஸ் தேதியும் தைரியமாக அறிவித்துவிட்டுதான் வேலையில் இறங்குவார். சொன்ன தேதியில் ரிலீஸ் செய்தும்விடுவார். இதைக் கண்டு வியக்காத தயாரிப்பாளர்களே இல்லை. அதேபோல், படத்தில் நடிகர், நடிகைகள் முடிவு செய்யப்படும். அவர்களிடம் பேசப்படும். சம்மதம் வாங்கப்படும். டெக்னீஷியன்களும் அப்படித்தான். எல்லாம் முடிவானதும், எல்லோருக்கும் ‘சிங்கிள் பேமெண்ட்’ வழங்கப்படும். அதாவது, ஒரு படத்துக்கான சம்பளத்தை, இரண்டு மூன்று தவணைகளாகக் கொடுப்பதெல்லாம் சின்னப்பா தேவருக்குப் பிடிக்கவே பிடிக்காத விஷயங்கள். இந்தித் திரைப்படத்துக்காக, ‘ஹாத்தி மேரா சாத்தி’ படத்துக்காக ராஜேஷ்கண்ணாவிடம் கதையைச் சொல்லி, சம்மதம் வாங்கினார் தேவர். இத்தனைக்கும் தேவருக்கு இந்தியெல்லாம் தெரியாது. அதேபோல், ராஜேஷ்கண்ணா தேவரின் செயலைக் கண்டு மிரண்டுபோனாராம். படத்துக்கு சம்பளம் சொன்னதும், அந்தத் தொகை முழுவதையும் கையில் வைத்திருந்த ஹேண்ட் பேக்கில் இருந்து எடுத்துக் கொடுத்தாராம். காசோலை பயன்படுத்தமாட்டார் தேவர் என்றும் நீண்டகாலமாக வங்கியில் கணக்கு கூட வைத்துக் கொள்ளவில்லை என்றும் சொல்லுவார்கள். நடிகரும் தயாரிப்பாளருமான கே.பாலாஜி, சிவாஜியை வைத்து ஏகப்பட்ட படங்கள் தயாரித்தார். ஆனால் ஒரு படம் கூட எம்ஜிஆரை வைத்து தயாரிக்கவில்லை அவர். அதேபோல, சின்னப்பா தேவர் எம்ஜிஆரை வைத்து, 26 படங்கள் தயாரித்தார். சிவாஜியை வைத்து ஒரு படம் கூட தயாரிக்கவில்லை. எம்ஜிஆரும் தேவரும் நகமும் சதையும் போல. அப்படியொரு நட்பு இருவருக்கும். ஆனாலும் உடம்பு முழுக்க சந்தனமும் நெற்றி நிறைய விபூதியும் பூசிக்கொண்டிருக்கும் தேவர், எம்ஜிஆரை, ‘ஆண்டவரே’ என்றுதான் அழைப்பார். எத்தனையோ பேருக்கு வள்ளலென வாரிவாரிக் கொடுத்த எம்ஜிஆர், சின்னப்பா தேவரை ‘முதலாளி’ என்றுதான் கூப்பிடுவார். தேவர் பிலிம்ஸில் எம்ஜிஆர் நடிக்கிறார் என்றாலே, விநியோகஸ்தர்களும் தியேட்டர் அதிபர்களும் ரசிகர்களும் குஷியாகி விடுவார்கள். அந்த அளவுக்கு இந்தக் கூட்டணி மிகப்பெரிய நம்பிக்கையைக் கொடுத்தது. இவர்களின் கூட்டணியில் படுதோல்வியைச் சந்தித்த படம்… ‘தேர்த்திருவிழா’வாகத்தான் இருக்கும். பார்ப்பதற்கு பயில்வான் போல், கொஞ்சம் முரட்டு ஆசாமியாகவும் கறார் பேர்வழியாக இருந்தாலும் சிறந்த பக்திமானாகவும் திகழ்ந்தார் சின்னப்பா தேவர். மிகச்சிறந்த முருகபக்தர். அதிலும் மருதமலை முருகன் மீது அப்படியொரு பக்தி கொண்டிருந்தவர். வார்த்தைக்கு வார்த்தை ‘முருகா முருகா’ என்று சொல்லிக் கொண்டே இருப்பார். மருதமலை கோயிலுக்கு கணக்கிலடங்காத அளவுக்கு திருப்பணிகள் செய்திருக்கிறார். சொல்லப்போனால், மருதமலை முருகன் கோயில் இன்றைக்கு பிரசித்தமாகி இருப்பதற்கு, சின்னப்பாதேவர்தான் காரணம். கோவையில் மிகப்பெரிய விநியோகஸ்தர் அவர். தேவரின் படங்களை தொடர்ந்து அவர்தான் அந்தப் பகுதியில் ரிலீஸ் செய்து வந்தார். ஒருநாள் அவரை தேவர் போனில் அழைத்தார். ‘இப்போ எடுத்திட்டிருக்கிற படத்துக்கு நீங்க பணம் எதுவும் தரவேணாம். அதுக்கு பதிலா ஒண்ணு செய்யணும்’ என்றார். ‘சொல்லுங்க முதலாளி’ என்றார். ‘மருதமலைக்குப் போறதுக்கு ஒரு ரோடு போட்டுக் கொடுங்க போதும்’ என்றார் தேவர். அப்படித்தான் கோயில் பிரபலமானது. அதேபோல் தேவர் செய்த இன்னொரு விஷயம்… ஐம்பதுகளில், கோவையில் நண்பர்கள் ஆளுக்குக் கொஞ்சமாக பத்தாயிரம் ரூபாய் வரை கொடுத்ததை ஒருபோதும் மறக்கவில்லை தேவர். ஒவ்வொரு படத்தில் கிடைக்கும் லாபத்தில் ஒரு தொகையை தனக்கும் இன்னொரு தொகையை உதவிக்காகவும் குறிப்பிட்ட தொகையை முருகன் கோயில்களுக்காகவும் குறிப்பிட்ட சதவிகிதத் தொகையை தன் நண்பர்களுக்குமாகவும் வழங்கி வந்தாராம். ’’உழைப்பால் உயர்ந்தவர் சின்னப்பா தேவர். தானும் உயர்ந்து, பிறரையும் உயர்த்தியவர். யாருக்கெல்லாம் முடியுமோ, யாரெல்லாம் உதவி என்று கேட்கிறார்களோ, அவர்களுக்கெல்லாம் அள்ளிக்கொடுத்தவர். எல்லோருக்கும் நம்பிக்கையுடன் நடந்துகொள்வார். மிகவும் நாணயமாக வாழ்ந்தார். இனி அவரைப் போல ஒருவரைப் பார்க்கவே முடியாது. அப்பேர்ப்பட்ட உத்தமர் அவர்’’ என்று சின்னப்பா தேவரின் மரணத்தின் போது நெகிழ்ந்து உருகிச் சொன்னார் எம்ஜிஆர். தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி, தனக்கென, தன் படங்களுக்கென ஒரு பாணியை கட்டமைத்து, திரையுலகில் அழியாப் புகழ் பெற்ற சாண்டோ எம்.எம்.ஏ.சின்னப்பா தேவர் காலமான நாளின்று.

இதய’நாயகன் முரளி; சத்தமே இல்லாமல் கலெக்‌ஷன் காட்டிய வசூல் நாயகன்! – நடிகர் முரளி நினைவுதினம் இன்று

சிவாஜி ரசிகர்கள், எம்ஜிஆர் ரசிகர்கள் என்றெல்லாம் பிரிந்து பேசிக்கொள்வார்கள். கமல் – ரஜினிக்கும் இப்படியெல்லாம் இருந்தது. சிவாஜியைப் பிடித்தால் அவரைப் பிடிக்காது என்பார்கள். அவரைப் பிடித்தவர்கள் இவரைப் பிடிக்காது என்று சொல்லுவார்கள். ஆனால், எல்லா ரசிகர்களுக்கும் பிடித்த நடிகராக இருப்பவர்கள் மிகச்சிலரே. அந்த ஹீரோ நடிகர்கள், இந்த ஹீரோ நடிகர்கள் என ஹீரோ நடிகர்களின் ரசிகர்களுக்கும் பிடித்த நடிகர்… முரளி. கன்னடத் திரையுலகில், சித்தலிங்கையா மிகப்பெரிய தயாரிப்பாளர். எண்ணற்ற படங்களைத் தயாரித்திருக்கிறார். இவரின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் என்றாலே, ரசிகர்களுக்குக் கொண்டாட்டம்தான். எத்தனையோ வெற்றிப் படங்களைக் கொடுத்திருக்கிறார். பின்னாளில், தன்னுடைய மகன், தமிழில் இந்த அளவுக்கு மிகப்பெரிய நடிகராக வருவார் என்றோ, ஏராளமான வெற்றிப் படங்களின் நாயகனாக வலம் வருவார் என்றோ அன்றைக்கு அவரும் நினைக்கவில்லை. தன்னைப் பற்றி முரளியும் நினைக்கவில்லை. 84ம் ஆண்டு ‘பிரேம பர்வா’ என்ற கன்னடப்படத்தில் அறிமுகமானார் முரளி. அப்போது அவருக்கு வயது 20. அதேவருடத்தில், தமிழ்த் திரையுலகிலும் அறிமுகமானார். கே.பாலசந்தரின் கவிதாலயாவின் துணை பேனரில், கைலாஷ் கம்பைன்ஸ் பேனரில், பாலசந்தரிடம் உதவி இயக்குநராக இருந்த அமீர்ஜானின் இயக்கத்தில் ‘பூவிலங்கு’ திரைப்படம் வெளியானது. முரட்டுத்தனமும் பிள்ளை குணமும் கொண்ட கல்லூரி இளைஞன் வேடம் முரளிக்கு அழகாகப் பொருந்தியது. சொல்லப்போனால், முதல் படத்தில் மட்டுமல்ல… முக்கால்வாசி படங்களில், கல்லூரி இளைஞராக வலம் வந்தது, அநேகமாக முரளி எனும் ஒரேயொரு நடிகராகத்தான் இருக்கும். வீரம், ஆவேசம், துடிப்பு, காதல், காதலிக்குக் கட்டுப்படுதல், அவலத்தை எதிர்த்தல் என்று முதல் படத்திலேயே ஸ்கோர் அடித்து முன்னேறினார். கருகருவென நிறமும் வெள்ளைவெளேரென கண்களும் ரொம்பவே ரசிகர்களை ஈர்த்தன. 85ம் ஆண்டிலேயே ‘புதிர்’ படத்தில், இரட்டை வேடத்தில் நடித்தார். இதையடுத்து தமிழில் நிலையான இடம் கிடைத்தது முரளிக்கு. முரளியா… சம்பளக் கெடுபிடி செய்யமாட்டார் என்று தயாரிப்பாளர்கள் சொன்னார்கள். முரளியா… எந்தக் கேரக்டராக இருந்தாலும் நடித்துக் கொடுப்பார் என்று இயக்குநர்கள் சொன்னார்கள். முரளியின் படங்கள்… முதலுக்கு மோசம் செய்யாது என்று விநியோகஸ்தர்கள் மகிழ்ந்து போனார்கள். எண்பதுகளில், சுமாரான படம் என்றாலே நாற்பது நாள், ஐம்பது நாள் ஓடிவிடும். கமல், ரஜினி, விஜயகாந்த், பிரபு, சத்யராஜ், கார்த்திக், மோகன் என்று பல நடிகர்கள் தங்களுக்கென ஒரு மார்க்கெட் வேல்யூ வைத்திருந்தார்கள். அப்படியொரு மார்க்கெட் வேல்யூ கொண்ட நடிகராக முரளியும் உயர்ந்தார். முரளி இன்றைக்கு இருந்திருந்தால், கல்லூரி மாணவ ஹீரோவாக… இன்றைக்கும் வலம் வந்துகொண்டிருப்பார் என்று மட்டும் நம்ப தோன்றுகிறது.

முன்னாள் இந்திய பிரதமரான இந்திராவின் கணவரும், படுகொலை செய்யப்பட்ட இந்திய பிரதமர் ராஜிவ் காந்தியின் தந்தையுமான பெரோஸ் காந்தி காலமான தினமின்று! இயற்பெயர் பெரோஸ் ஜகாங்கீர் காந்தி (Feroze Jehangir Ghandy). பார்சி சமுதாயத்தை சேர்ந்த பெரோஸ் காந்தி, 1912ல் செப்டம்பர் 12ம் தேதி பம்பாயில் பிறந்தவர். இவரது தந்தை ஜகாங்கீர் பரீதூன் காந்தி மரைன் இன்ஜினியராக பணியாற்றி வந்தவர். வீட்டில் 5 குழந்தைகளில் கடைசி மகன் இவர். இவருக்கு இரண்டு சகோதரர்கள் மற்றும் இரண்டு சகோதரிகள் இருந்தனர். 1920களின் ஆரம்பிக் காலக்கட்டத்தில் பெரோஸ் காந்தியின் தந்தை மறைவிற்கு பிறகு, மொத்த குடும்பமும் அலகாபாத்-க்கு குடிபெயர்ந்தனர். அங்கு, சர்ஜனாக பணியாற்றி வந்த திருமணமாகாத அத்தை ஒருவரின் வீட்டில் வசித்து வந்தனர்.1930ல் பெரோஸ் காந்தி காங்கிரஸின் இளைஞர்கள் சுதந்திர போராட்ட அணியான வானர் சேனாவில் தன்னை இணைத்துக்கொண்டார். அப்போது தான் அலகாபாத்தில் இருந்த ஈவிங் கிறிஸ்துவ கல்லூரி அருகே ஒரு மறியல் போராட்டம் நடந்து வந்தது. அந்த போராட்ட களத்தில் தான் முதல் முறையாக பெரோஸ் காந்தி, கமலா நேரு மற்றும் இந்திரா காந்தியை சந்தித்தார். அங்கே, வெயிலின் தாக்கத்தில் சோர்ந்திருந்த கமலா நேரு போன்ற போராட்டக்களத்தில் இருந்தவர்களுக்கு பெரோஸ் காந்தி மற்றும் அவரது நண்பர்கள் துணையாக இருந்து உதவிகளை செய்தனர்.இப்போராட்டத்தின் மறுநாளே பெரோஸ் காந்தி தனது கல்வியை கைவிட்டு, இந்திய சுதந்திர போராட்டக்களத்தில் முனைப்புடன் இறங்கினர். மகாத்மா காந்தியின் பேரில் கொண்ட பேர் ஈர்ப்பின் காரணத்தால், தனது உப பெயரான Ghandy-ஐ, Gandhi என மாற்றிக் கொண்டார் பெரோஸ் காந்தி. 1930ல் சுதந்திர இந்தியாவின் இரண்டாவது பிரதம மந்திரியான லால் பகதூர் சாஸ்திரி உடன் போராட்டத்தின் போது கைதாகி, பைசாபாத்-ல் 19 மாதங்கள் சிறையில் இருந்தார். வெளியான உடனே மீண்டும் விவசாயிகளுடன் ஐக்கிய மாகாணத்தில் (தற்போதைய உத்திர பிரதேசம்) ஒரு போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்ட பெரோஸ் காந்தி 1932 மற்றும் 1933ல் இரண்டு முறை கைதாகி சிறைக்கு சென்றார். இச்சமயத்தில் தான் பெரோஸ் காந்தி நேரு குடும்பத்துடன் நெருங்கி பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே 1933ல் இந்திராவிடம் பிரபோஸ் செய்தார் பெரோஸ் காந்தி. ஆனால், அச்சமயத்தில் இந்திரா காந்தி வெறும் 16 வயது பெண் என்பதால் கமலா நேரு மறுத்துவிட்டார். அந்த காலக்கட்டத்தில் கமலா நேரு காசநோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது பெரோஸ் காந்தி அவரது உடல்நலம் சார்ந்து அருகே இருந்து நிறைய உதவிகள் செய்து வந்தார். மருத்துவ சிகிச்சைக்காக ஐரோப்பா சென்று வந்த போதும் கமலா நேருவிற்கு பெரோஸ் காந்தி உதவியாக இருந்தார். கமலா நேரு மீது பெரோஸ் காந்தி செலுத்திய அன்பினால் நேருவின் மனம் கவர்ந்தார். 1936ல் கமலா நேரு உடல்நலம் மிகவும் குன்றி மரணமடைந்தார். பிறகு, 1940ன் ஆரம்பக் காலக்கட்டத்தில் பெரோஸ் காந்தி மற்றும் இந்திரா காந்தி இருவரும் இங்கிலாந்தில் இருந்த போது, இவரை இடையே நெருக்கம் அதிகரித்தது. இதன் விளைவாக 1942ல் இருவரும் இந்துமத சடங்கு முறைப்படி திருமணம் செய்துகொண்டனர்.ஆனால் நேருவிற்கு பெரோஸ் – இந்திரா காந்தியின் திருமணத்தில் விருப்பம் இருக்கவில்லை. அதே சமயம், 1942 ஆகஸ்ட் மாதம், திருமணமான 6 மாதத்தில் ‘வெள்ளையனே வெளியேற இயக்க’ (Quit India Movement) போராட்டத்தில் பெரோஸ் – இந்திரா காந்தி கைதாகி சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது பெரோஸ் காந்தி ஓராண்டு காலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அதற்கடுத்த சில ஆண்டுகள் இந்த தம்பதியருக்கு ராஜிவ் (1944) – சஞ்சய் (1946) என இரண்டு மகன்கள் பிறந்தனர். சுதந்திரத்திற்கு பிறகு, நேரு இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக தேர்வானார். பெரோஸ் – இந்திரா காந்தி அலகாபாத்-ல் தங்களது இரண்டு மகன்களுடன் வசித்து வந்தனர். அலகாபாத்-ல் நேருவின் தி நேஷனல் ஹெரால்டு பத்திரிகையை பெரோஸ் காந்தி நடத்தி வந்தார். 1952ல் நடந்த இந்தியாவின் முதல் பொது தேர்தலில் Raebareli தொகுதியில் போட்டியிட்டு வென்ற பெரோஸ் காந்தி, தனது மாமனாரான நேருவின் அரசுக்கு எதிராக ஊழலை எதிர்த்து போராட துவங்கினர். நிறைய இந்திய தொழில்கள் அரசியல் தலைவர்கள் வசம் சென்றடைவதாக அவர் குற்றம் சாட்டி வந்தார். 1957ம் ஆண்டு பொது தேர்தலில் மீண்டும் அதே தொகுதியில் நின்று வென்றார் பெரோஸ் காந்தி. பெரோஸ் காந்திக்கு 1958ம் ஆண்டு திடீர் மாரடைப்பு ஏற்பட்டது . இதை அடுத்து இந்திரா காந்தி பெரோஸ்-ஐ அருகில் இருந்து கவனித்து வந்தார். 1960ல் ஏற்பட்ட இரண்டாவது மாரடைப்பு காரணத்தால் இதே செப் 8இல் பெரோஸ் மரணம் அடைந்தார். பெரோஸ் காந்தி போட்டியிட்டு வென்ற Raebareli தொகுதியில் 1967, 1976ல் இந்திரா காந்தியும், 2004ம் ஆண்டு முதல் தற்போது வரை மருமகளான சோனியா காந்தியும் போட்டியிட்டு வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே செப்டம்பர் 8 உலகின் முதல் அழகிப் போட்டி நடந்த நாள்! அமெரிக்காவின் அட்லாண்ட்டிக் நகரில், அதற்கு முந்தைய ஆண்டில் நடத்தப்பட்ட ஓர் கேஷூவல் அணிவகுப்புக்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து, ”’நீந்துபவர்களின் நிகழ்ச்சி’ என்ற பெயரில் முதல் அழகிப் போட்டி நடைபெற்றது. போட்டியின் தொடக்கமும் வெற்றியாளரும் போட்டி ஏற்பாட்டாளர்கள், அமெரிக்கா முழுவதும் உள்ள செய்தித்தாள்களுக்கு, தத்தமது பகுதிகளில் உள்ளூர் அழகிப் போட்டிகளை நடத்தி, வெற்றியாளர்களை அட்லாண்ட்டிக் நகருக்கு அனுப்புமாறு வேண்டுகோள் விடுத்தனர். போட்டியாளர்களின் உடை மற்றும் அலங்காரச் செலவுகளை செய்தித்தாள்கள் ஏற்றால், அவர்களின் போக்குவரத்துச் செலவை ஏற்பாட்டாளர்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், சுமார் ஒரு லட்சம் பார்வையாளர்கள் கலந்துகொண்டனர். போட்டியில் பங்கேற்ற 16 வயது மார்கரெட் கோர்மன், ‘தங்கக் கடற்கன்னி’ என்ற பட்டத்தைச் சூடினார். அப்போது ஒரு செய்தியாளர், அவரை ‘மிஸ் அமெரிக்கா’ என்று குறிப்பிட்டதிலிருந்துதான் இந்தப் போட்டி அதிகாரபூர்வமாக ‘அமெரிக்க அழகிப் போட்டி’ என்று அழைக்கப்பட்டது. வரலாற்றில் ஏற்பட்ட மாற்றங்கள் வெற்றி விதிகளில் மாற்றம்: 1922 மற்றும் 1923 ஆகிய ஆண்டுகளில் அழகிப் பட்டத்தை வென்ற பெண், 1924-இல் மீண்டும் போட்டியிட்டு இரண்டாமிடம் பெற்றார். இதனால், ஒருமுறை பட்டம் வென்றவர் மீண்டும் போட்டியிடத் தடை விதிக்கப்பட்டது. பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட தடை: பொருளாதார நெருக்கடி காரணமாக 1928 முதல் 1932 வரை இந்தப் போட்டி நடத்தப்படவில்லை. வயது வரம்பு: 1933-இல் போட்டி மீண்டும் தொடங்கப்பட்டபோது, 15 வயதுப் பெண் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதால், இனி போட்டியாளர்கள் 18 முதல் 26 வயதுக்குள் இருக்க வேண்டும் என்ற விதி அமல்படுத்தப்பட்டது. அறிவுத்திறன் சேர்க்கை: அழகிப் போட்டி என்பது வெறும் தோற்றத்தைப் பற்றியது அல்ல என்பதை உணர்ந்து, 1938-இல் அறிவுத்திறன் பிரிவு சேர்க்கப்பட்டது. இனப் பாகுபாடு நீக்கம்: 1950-இல் வெள்ளையினத்தவர் மட்டுமே பங்கேற்கலாம் என்ற விதி நீக்கப்பட்டது. இருப்பினும், முதல் 50 ஆண்டுகளுக்கு கருப்பினப் போட்டியாளர்கள் யாரும் இதில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. உலகப் போட்டிகளின் வளர்ச்சி 1951-இல் இங்கிலாந்தில் பிகினி உடையை பிரபலப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட பிகினி போட்டியே, பின்னாளில் ‘மிஸ் வோர்ல்ட்’ என்று அழைக்கப்பட்டு, உலக அழகிப் போட்டியாக மாறியது. அதைத் தொடர்ந்து, 1952-இல் ‘மிஸ் யுனிவர்ஸ்’, 1960-இல் ‘மிஸ் இண்ட்டர்நேஷனல்’ மற்றும் 2001-இல் ‘மிஸ் எர்த்’ போன்ற பல சர்வதேசப் போட்டிகள் தொடங்கப்பட்டன. இன்று, திருநங்கைகளுக்காகவும் அழகிப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. 2004-இல் ‘மிஸ் இண்ட்டர்நேஷனல் குவீன்’ மற்றும் 2010-இல் ‘மிஸ் ட்ரான்ஸ் ஸ்டார் இண்ட்டர்நேஷனல்’ ஆகியவை, இந்தத் துறையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் காட்டுகின்றன. செப்டம்பர் 8, ஒரு நூற்றாண்டுக்கு முன்பு, ஒரு சிறிய நீச்சல்குள நிகழ்ச்சியில் தொடங்கி இன்று உலகளாவிய நிகழ்வாக மாறி, சமூகத்தின் பல்வேறு தளங்களிலும் பிரதிபலிக்கும் ஒரு பயணத்தைக் குறிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!