அன்னை தெரசா மறைந்த நாளின்று.ஒரு பெண், தன்னுடைய பன்னிரண்டு வயதில் துறவறம் புக முடிவு செய்து, பதினெட்டாவது வயதில் வீட்டை விட்டு வெளியேறி, தான் என்று இல்லாது, இந்த உலகத்தையே தன்னுடைய குடும்பமாய் பாவித்து, சக மனிதர்களின் வாழ்க்கை மேம்பட தன்னுடைய இறுதி நாள் வரை ஒரு பெண் போராடிக்கொண்டே இருந்தார் என்றால் அது “அன்னை தெரசா”வை தவிர வேறு யாராக இருக்க முடியும். அன்னாரின் பொன்மொழிகளில் சில “எப்போதும் புன்னகையுடன் ஒருவருக்கொருவர் சந்தித்துக்கொள்வோம், ஏனென்றால் புன்னகையே அன்பிற்கான தொடக்கம்.” “தனிமையும், தேவையற்றவர் என்ற உணர்வுமே மிகவும் மோசமான வறுமையாகும்.” “ஓர் எளிய புன்னகை செய்யக் கூடிய அனைத்து நன்மைகளையும் நாம் ஒருபோதும் அறிந்திருப்பதில்லை.” “சிறிய விஷயங்களில் உண்மையாக இருங்கள், ஏனென்றால் அதில்தான் உங்களது வலிமை உள்ளது.” “மற்றவர்களுக்காக வாழாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையே அல்ல.” “உங்களால் நூறு பேருக்கு உணவளிக்க முடியவில்லையென்றால், வெறும் ஒருவருக்காவது உணவளியுங்கள்.” “நாம் இந்த வேலையை செய்கிறோம் என்பது அற்புதமல்ல, அதை செய்வதில் மகிழ்ச்சியாக இருக்கிறோம் என்பதே அற்புதம்.” “நீங்கள் மக்களை மதிப்பீடு செய்துகொண்டிருந்தால், அவர்களை நேசிக்க உங்களுக்கு நேரம் இருக்காது.” “நம் அனைவராலும் உயர்ந்த விஷயங்களைச் செய்யமுடியாது. ஆனால், உயர்ந்த அன்பைக் கொண்ட சிறிய விஷயங்களைச் செய்யமுடியும்.” “அன்பான வார்த்தைகள் பேசுவதற்கு எளிதாகவும் சுலபமாகவும் இருக்கும், ஆனால் அதன் எதிரொலிகள் உண்மையிலேயே முடிவில்லாதவை.”
பன்னாட்டு ஈகை நாள் இலன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல்குலனுடையான் கண்ணே உள’இல்லையென இரந்து வந்தவருக்கு இல்லை எனாமல் இயன்றதை தருவதே ஈகை எனும் கொடையாகும். ஈரம் நிறைந்த உள்ளத்தால் பிறர் விழிநீரையும், மனவலியையும் துடைப்பதே கொடையாகும். இந்நாள் 2012ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபையால் அறிவிக்கப்பட்டது. ஈகையின் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதோடு, ஏழ்மை, பசி, பேரிடர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதை ஊக்குவிப்பதை இந்நாள் நோக்கமாகக் கொண்டுள்ளது. மனிதநேயத்தையும், பிறருக்கு உதவும் பண்பையும் மேம்படுத்துவதற்கு இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மதர் தெரசாவின் நினைவு நாளை முன்னிட்டு இந்நாள் கொண்டாடப்படுகிறது, அவரது ஈகைப் பணிகளைப் போற்றும் வகையில். நாமும் உதவுவோமாக!
தற்போது பயன்படுத்தப்படும் வடிவத்திலான பெண்களின் மேல் உள்ளாடைக்கு(ப்ரா), க்றிஸ்ட்டைன் ஹார்ட் என்னும் ஜெர்மானியப் பெண்மணி காப்புரிமை பெற்ற நாள் பிரா என்பது பெண்களின் அன்றாட வாழ்வில் இன்றியமையாத ஒரு உடை. இது வெறும் உள்ளாடை மட்டும் அல்ல, பெண்களின் உடல் வடிவம், நம்பிக்கை மற்றும் பாலியல் அடையாளத்துடன் நெருங்கிய தொடர்புடையது. பிராவின் வரலாறு என்பது பெண்களின் உடல், சமூக எதிர்பார்ப்புகள் மற்றும் நாகரிகம் ஆகியவற்றின் பரிணாம வளர்ச்சியின் ஒரு பகுதியாகும். பிராவின் துல்லியமான தோற்றம் பற்றிய தகவல்கள் குறைவாகவே கிடைக்கின்றன. ஆனால், மார்பை மறைக்கும் உடைகளை பண்டைய காலங்களிலேயே பெண்கள் அணிந்திருந்தனர். பண்டைய எகிப்திய சிற்பங்கள் மற்றும் ஓவியங்களில் மார்பை இறுக்கமாககா கட்டி வைக்கும் உடைகளைப் பார்க்கலாம். மேலும், பண்டைய ரோமானிய பெண்கள் தங்கள் மார்பை மறைக்க துணிகளைப் பயன்படுத்தினர். மார்பகங்களின் வடிவத்திற்கு மிகுந்த முக்கித்துவம் அளித்தவர்களான, கி.மு.3000-1450 காலத்திய மினோவன் (மைசீனிய கிரேக்கத்துக்கு முந்தைய) நாகரிகத்தைச் சேர்ந்த பெண்கள் அணிந்ததே முதல் பதிவுசெய்யப்பட்ட முன்னோடியாகும். பண்டைய ரோமில், பெரிய மார்பகங்கள் வயதாவதன் அடையாளம் என்று கருதப்பட்டதால், இறுக்கமான பட்டைகளை உடைகளுக்குமேல் அணிந்து பராமரித்திருக்கின்றனர். பண்டைய ரோமில் நடனம், விளையாட்டு ஆகியவற்றில் ஈடுபட்ட பெண்களும், இந்தியா உள்ளிட்ட நாடுகளின் பெண்களும் கச்சைகளை அணிந்திருக்கின்றனர். ஆனால், இடைக்காலம்வரை, மார்பகங்களுக்கென்று வேறு எந்த உடையும் அணியப்பட்டதாகத் தெரியவில்லை. இடைக்கால ஐரோப்பாவில் உருவான, வயிற்றுப்பகுதியைக் குறுக்கிக்காட்டும் கோர்செட் இருபாலராலும் அணியப்பட்டது. உடல் என்ற பொருளுள்ள லத்தீன் சொல்லான கார்ப்பஸ் என்பதிலிருந்து, உடலின் வடிவத்தைப் பராமரிக்கும் இவ்வுடைக்கான பெயர் உருவானது. மார்பிலிருந்து, இடுப்புவரையான இந்த உடையை அணியும்போது அதில், சுருக்கம் ஏற்படாமலிருக்க, உலோகப் பட்டைகள் செருக்கப்பட்டிருக்கும். இதனை பெண்கள் அணியும்போது, மார்பகங்களையும் தாங்கும் என்பதால், இதுவே போதுமானதாக அக்காலத்தில் கருதப்பட்டது. ஆனால், இந்த இறுக்கமான உடை பெண்களுக்கு உண்டாக்கும் உடல்நல பாதிப்புகள்பற்றி 19ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட விழிப்புணர்வைத் தொடர்ந்து, மார்பகங்களுக்கான தனி உடைகள் உருவாகத் தொடங்கின. 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மார்பை இறுக்கமாக பிணைக்கும் கார்செட்டுகள் பிரபலமாக இருந்தன. இந்த கார்செட்டுகள் பெண்களின் இடுப்பைச் சிறியதாகவும் மார்பை பெரியதாகவும் காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டிருந்தன. ஆனால், இந்த கார்செட்டுகள் சுவாசிக்க முடியாத அளவுக்கு இறுக்கமாக இருந்ததால், பெண்களின் உடல்நலனைப் பாதித்தன. 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், பெண்கள் தங்கள் உடைகளில் அதிக சுதந்திரத்தை விரும்பினர். இதன் காரணமாக, கார்செட்டுகளுக்கு மாற்றாக மென்மையான பிராக்கள் தயாரிக்கப்பட்டன. முதல் நவீன பிரா 1913 இல் மேரி ஜென்னிங்ஸ் என்பவரால் காப்புரிமை பெறப்பட்டது. இந்த பிரா இரண்டு தனித்தனிதுவங்கள் கொண்டிருந்தது. முதல் உலகப் போரின் போது, பெண்கள் தொழிற்சாலைகளில் வேலை செய்யத் தொடங்கினர். இதற்கு ஏற்றவாறு, சுதந்திரமாக நகர அனுமதிக்கும் வகையில் பிராக்கள் வடிவமைக்கப்பட்டன. இரண்டாம் உலகப் போரின் போது, நைலான் போன்ற செயற்கை நார் பொருட்கள் பிராவின் தயாரிப்பில் பயன்படுத்தப்பட்டன. இது பிராக்களின் விலையைக் குறைத்து, அனைத்து தரப்பு மக்களும் பிராக்களை வாங்கும் நிலை ஏற்பட்டது. 20 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பிராவின் வடிவமைப்பில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. பல்வேறு அளவுகள், வண்ணங்கள் மற்றும் வடிவங்களில் பிராக்கள் தயாரிக்கப்பட்டன. ஸ்போர்ட்ஸ் பிரா, பட்டன்-அப் பிரா போன்ற பல்வேறு வகையான பிராக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.
இறந்தபின் ‘ஃபார்முலா ஒன் உலக ஓட்டுநர் சாம்ப்பியனாக‘ ஆன ஒரே மனிதரான, ஆஸ்திரிய அணியின் ஜோச்சென் ரிண்ட், இத்தாலிய க்ராண்ட் ப்ரிக்ஸ் போட்டிகளுக்கான பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்து ஏற்பட்டு பலியான நாள் படுத்துக்கொண்டு தேர்தலில் வெல்லலாம், ஆனால், அதெப்படி இறந்தபின் சாம்ப்பியனாக முடியும்? ஒவ்வோராண்டின் சாம்ப்பியன்ஷிப்பும், அந்தத் தொடரில் நடைபெற்ற பல்வேறு பந்தயங்களில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு பந்தயத்திலும் முதல் சில இடங்களைப் பெறுபவர்களுக்கு, இடத்திற்குத் தக்கவாறு புள்ளிகள் வழங்கப்படுகின்றன. 1950இல் தொடங்கப்பட்ட இந்த சாம்ப்பியன்ஷிப்பில், 1959வரை முதல் 5 இடங்களுக்கும், பின்னர் படிப்படியாக விரிவாக்கப்பட்டு தற்போது முதல் 10 இடங்களுக்கும் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. அத்துடன், மிகவிரைவாக முடிக்கப்பட்ட் சுற்று, சிறப்பான வெற்றிகள் முதலானவற்றுக்கும் புள்ளிகள் வழங்கப்படுகின்றன. அந்த வகையில் 1970இன் சாம்ப்பியன்ஷிப்பில் மார்ச் 7இலிருந்து, அக்டோபர் 25வரை, 13 பந்தயங்கள் நடைபெற்றன. முதல் 9 பந்தயங்களில், 5இல் முதலில் வந்து வெற்றிபெற்றிருந்த ரிண்ட், பத்தாவது பந்தயத்துக்கான பயிற்சியின்போது பிரேக் செயலிழந்ததில் விபத்து ஏற்பட்டு, சீட் பெல்ட் கழுத்தை இறுக்கியதில் உயிரிழந்தார். பொதுவாக இந்த சாம்ப்பியன்ஷிப் போட்டியில், எல்லாப் பந்தயங்களும் முடிவதற்குமுன்பே, கணக்கியலின்படி மற்றவர்கள் கடக்க முடியாத அளவு புள்ளிகளை ஒருவர் பெற்றுவிட்டால், அவரது வெற்றி உறுதியாகிவிடும். ரிண்ட் இறக்கும்போது அவ்வாறான வெற்றி உறுதிசெய்யப்பட்ட நிலையில் இல்லாவிட்டாலும்கூட, அவருக்கு அருகாமை புள்ளிகள்கொண்ட போட்டியாளரான ஜாக்கி இக்ஸ் போதிய புள்ளிகளை எடுக்காததால், அடுத்த இரண்டு போட்டிகளின் முடிவிலேயே ரிண்ட்தான் சாம்ப்பியன் என்பது உறுதியானது. அனைத்துப் பந்தயங்களும் முடிவதற்குமுன்பே வெற்றி உறுதியானாலும், இறுதியில்தான் சாம்ப்பியன் பட்டம் வழங்கப்படும். அதன்படி, இறந்து 50 நாட்களுக்குப்பின் உலக சாம்ப்பியன் ஆனார் ரிண்ட். மொத்தம் 61 க்ராண்ட் ப்ரிக்ஸ் பந்தயங்களில் பங்கேற்று, ஆறில் முதலிடத்தையும், 13 போடியம் ஃபினிஷ்களையும் வென்றுள்ளார் ரிண்ட். மோட்டார்ப் பந்தயங்கள் உள்ளிட்ட பல விளையாட்டுப் போட்டிகளில், முதல் மூன்று இடங்களுள் வந்து, மேடையில் ஏறிப் பதக்கம் பெறுவது போடியம் ஃபினிஷ் என்று அழைக்கப்படுகிறது. இறந்தபின் உலகச் சாம்ப்பியன் ஆன மனிதர் என்ற தனிச்சிறப்பு இன்றுவரை ரிண்ட்டுக்கு மட்டுமே உள்ளது.
வ.உ.சிதம்பரம் பிள்ளை பிறந்த தினம்: வெள்ளையரின் ஆதிக்கத்தை தகர்க்க வேண்டும் எனில் அவர்களின் வணிக பலத்தை உடைக்க வேண்டும் என்கின்ற இலக்கோடு சுதேசி கப்பல் நிறுவனத்தைத் துவக்கி வெள்ளையருக்கு எதிராக இரண்டு கப்பல்களை வாங்கி அவர்களை கதிகலங்கடித்தவர் கப்பலோட்டிய தமிழர் என்று பெருமையாக அழைக்கப்படும் வ.உ. சிதம்பரம் பிள்ளையாவார். வெள்ளையனை விரட்டுவது என்றால் நம்மவருக்கு கடலாதிக்கம் வேண்டும். எனவே தமிழர்கள் மீதும் கடல் மேல் செல்வது எவ்வாறு என்று திட்டமிட்டேன் என்று கப்பல் விடுவது குறித்த தனது திட்டத்தை குறிப்பிட்டுள்ளார் வ.உ.சி. சுதேசி கப்பல் கம்பெனியைத் துவங்க தனது சொத்துக்களை எல்லாம் விற்றுத் தீர்தத வ.உ.சி.க்கு பாண்டித்துரைத் தேவர் ரூ. 1 லட்சம் நிதியளித்தார். சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று இந்திய விடுதலைக்கு குரல் எழுப்பிய பாலகங்காதர் திலகர் உதவிட, காலியோ, லாவோ என்ற இரண்டு கப்பல்களை வாங்கி வந்து தூத்துக்குடிக்கும், கொழும்புவிற்கும் இடையே கப்பல் போக்குவரத்தை நடத்தினார் வ.உ. சிதம்பரம் பிள்ளை. வ.உ.சி.யின் கப்பல் நிறுவனத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்குடன் தனது நிறுவன கப்பல்களின் பயணக் கட்டத்தை பிரிட்டிஷ் – இந்தியன் ஸ்டீம் நேவிகேஷன் கம்பெனி குறைத்தது. ஆயினும் அந்த சதி நிறைவேறவில்லை. வ.உ.சி. இயக்கிய கப்பல் நிறுவனத்தால் பிரிட்டிஷ் நிறுவனத்திற்கு மாதத்திற்கு ரூ.40,000 வரை நட்டம் ஏற்பட்டதாக வரலாறு கூறுகிறது. கப்பலோட்டியது மட்டுமின்றி, சுப்ரமணிய சிவாவுடனும், பாரதியாருடனும், பத்மநாப ஐயங்கருடனும் இணைந்து வெள்ளையர் ஆட்சியை அகற்ற பலப் போராட்டங்களை நடத்திய வ.உ.சி.யை வழக்குப் போட்டு சிறையில் அடைத்தது வெள்ளையர் அரசு. சிறையில் செக்கிழுக்கும் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டும் சுதந்திர உணர்ச்சி குன்றாத சிதம்பரம் பிள்ளை, விடுதலைக்குப் பின்னர் வறுமையில் உழன்றாலும் கடைசி வரை வெள்ளையரை எதிர்ப்பில் முனைப்புடனே போராடினார் என்பது குறிப்பிடத்தக்கது..
ஆசிரியர் தினம் உலகில் பல தொழில்கள் செய்தாலும் உழவும், ஆசிரியப் பணியுமே புனிதமானவை. ஆனால், அந்தச் சேவையைத் தொழில் என்று கூறும் அளவுக்கு கால ஓட்டத்தில் எல்லாப் புனிதங்களும் அடித்துச் செல்லப்பட்டன என்பதுதான் பெரும் சோகம். உழவுத் தொழில் மக்களின் பசிப்பிணிக்கு மருந்தாக விளங்குகிறது. ஆசிரியர் சேவை, தொழிலாக மாறிப் போனாலும் அறியாமை என்ற பிணியைப் போக்கும் மேன்மை பொருந்தியதாகவே திகழ்கிறது. வெறுமனே ஊதியத்திற்காகச் செய்கின்ற பணி அல்ல ஆசிரியர் பணி. எவ்வளவு காலமானாலும், ”இவரிடம்தான் நான் கல்வி கற்றேன். இவரால்தான் நான் இந்த நிலைக்கு உயர்ந்தேன்” என்று நினைவுகூர்ந்து போற்றப்படும் மகத்தான பணியே ஆகச் சிறந்த ஆசிரியர் பணி. டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடி வருகிறோம். ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவர்தான் ஆசிரியர். . பல நாடுகளிலும் அவரைக் கவுரவிக்கும் வகையில் கவுரவ டாக்டர் பட்டங்கள் வழங்கப் பட்டிருக்கின்றன. அவற்றின் எண்ணிக்கை மட்டும் எவ்வளவு தெரியுமா? 133 டாக்டர் பட்டங்கள்! இவை எல்லாமே கல்வியால் அவர் கண்ட பலன்கள். கல்வியில் சிறந்த விளங்கிய ராதாகிருஷ்ணன் ஆசிரியர்கள் என்றால் மிகவும் மதிப்பு கொடுப்பார். இவர் குடியரசுத் தலைவராக இருந்தபோது, சில மாணவர்களும், நண்பர்களும் அவரிடம் போய், அவரது பிறந்த தினத்தைக் கொண்டாட அனுமதி கேட்டார்கள். அப்போது அவர் என்னுடைய பிறந்த நாளைக் கொண்டாடுவதற்குப் பதிலாக அன்றைய தினத்தில் ஆசிரியர்களைப் போற்றும் விதமாக ஆசிரியர் தினம் கொண்டாடுங்கள் என்று கேட்டுக்கொண்டார். அதனால், 1962-ம் ஆண்டு முதல் இந்தத் தினத்தைக் கொண்டாடி வருகிறோம். இது, வழக்கமான சடங்கல்ல. மிகத் தூய்மையான பணிக்கு நாம் கிரீடம் சூட்டும் விழா.
