தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் அதிரடி..!

பெப்சி, கோக், கேஎஃப்சி போன்ற அமெரிக்க பொருட்கள், அமெரிக்க நிறுவனங்களின் மினரல் வாட்டர்களை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியா உள்பட 70 நாடுகளில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி ஆகும் பொருட்களுக்கு கடந்த 1-ந்தேதி அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அதிரடியாக வரிகளை உயர்த்தினார். இந்திய பொருட்கள் மீது 25 சதவீத வரி விதித்தார். இந்த வரிவிதிப்பு கடந்த 7-ந்தேதி அமலுக்கு வந்தது. மேலும், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய், ராணுவ சாதனங்கள் ஆகியவை வாங்குவதற்கு அபராதமாக இந்திய பொருட்கள் மீது மேலும் 25 சதவீத வரி விதிக்கப்பட்டது. இந்த வரிவிதிப்பு கடந்த 27-ந்தேதி அமலுக்கு வந்தது. இதன்மூலம் இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் வரி 50 சதவீதமாக உயர்ந்தது.

50 சதவீத வரிவிதிப்பு காரணமாக, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் ஜவுளி பொருட்கள், ஆயத்த ஆடைகள், இறால், தோல், நவரத்தினங்கள் மற்றும் ஆபரணங்கள், ரசாயனங்கள், மின்சார எந்திரங்கள், என்ஜினீயரிங் பொருட்கள் தேக்கமடைந்துள்ளன. ஏற்றுமதியில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக ஓட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் வெங்கடசுப்பு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அமெரிக்கா இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்துள்ளது. எனவே, தமிழக ஓட்டல்களில் அமெரிக்க உணவு பொருட்களை புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். பெப்சி, கோக், கேஎஃப்சி போன்ற அமெரிக்க பொருட்கள், அமெரிக்க நிறுவனங்களின் மினரல் வாட்டர்களை புறக்கணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பொருட்களுக்கு பதிலாக இந்திய பொருட்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விகி, சொமேட்டோவையும் புறக்கணிக்க முடிவு செய்துள்ளோம். தமிழ்நாட்டை சேர்ந்த சாரோ என்ற செயலியை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளோம். ஸ்விகி, சொமேட்டோவில் பணிபுரிபவர்கள் சாரோவில் பணிபுரிய வாய்ப்பு அளிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!