உலக தேங்காய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. தென்னை மரம் தெற்கில் இருந்து வருவதால், அதன் பழம் (“காய்”), தெங்கு + “காய்” = தேங்காய் என அழைக்கப்படுகின்றது என நன்னூல் (187) குறிப்பிடுகிறது. Coconut என்னும் மரம் இந்தோனேசியா தீவுகளில் இருந்து இலங்கை ஊடாக தமிழ்நாடு மற்றும் கேரளக் கடற்கரையை அடைந்தது. எனவே, அது தென்காய் என்று விளிக்கப்பட்டது. மாலத்தீவின் தேசிய மரமாக தென்னை மரம் உள்ளது. உலகில் ஆண்டுதோறும் சுமார் 61 மில்லியன் டன் தேங்காய்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. தென்னை மரங்கள் அதிகபட்சமாக 25 மீட்டர்கள் வரை வளரும். தேங்காய் உற்பத்தியில் இந்தோனேசியா முதல் இடத்தில் உள்ளது. அதற்குஅடுத்த இடங்களில் பிலிப்பைன்ஸ், இந்தியா ஆகிய நாடுகள் உள்ளன. சில நாடுகளில் தேங்காய்களைப் பறிக்க குரங்குகள் பயன்படுத்தப்படுகின்றன. தென்னை மரங்கள் பொதுவாக 6 ஆண்டுகளில் காய்க்கத் தொடங்கும். ஒரு மரத்தில் இருந்து ஆண்டுக்கு 75 தேங்காய்கள் வரை கிடைக்கும். காட்டுப்பகுதிகளில் உள்ள தென்னை மரங்கள் 100 ஆண்டுகள் வரைகூட அழியாமல் இருக்கும். பிலிப்பைன்ஸ் நாட்டின் துணை அதிபர் இல்லம் மற்றும் அலுவலகம், அதிக அளவில் தென்னை மரத்தை பயன்படுத்தி கட்டப்பட்டுள்ளது. அட்சினல் ரிப்போர்ட் தேங்காயின் முக்கிய பயன்கள் இதோ..
- தேங்காய் உட்கொள்வது இதய நலத்தைப் பேணுவதுடன், உடலில் கொலஸ்ட்ரால் அளவைக் குறைப்பதற்கும் தேவையானதாக இருக்கிறது.
- தேங்காயின் குறைவான கார்போஹைட்ரேட் அளவும், அதன் அதிகமான நார்ச்சத்து அளவும், இதை மிகச்சிறந்த உணவாக மாற்றுகிறது. மேலும், நீரிழிவு நோயை சரியாக நிர்வகிப்பதுடன், இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைக்கிறது.
- தேங்காய் ஆண்டி ஆக்ஸிடெண்டுகள் நிறைந்த உணவாக உள்ளது.
- உங்களின் சரும நலனைக் கணக்கில் கொள்ளும் இயற்கையான வழிமுறைகளில் தேங்காய் பயன்பாடு முதன்மை வகிக்கிறது. சருமத்துக்கு ஈரப்பதத்தை கொடுப்பதுடன், பொலிவையும் தக்கவைக்கிறது.
- தேங்காய் ஜீரண மண்டலத்தைச் சிறப்பாக்கி, நார்ச்சத்து ஊட்டத்துடன் குடல் நலத்தைப் பாதுகாக்கிறது.
- தேங்காய் தண்ணீர் நீரேற்றத்துக்கு சிறந்ததாக இருப்பதுடன், தேவையான தாத்துக்களுடன் உடல் இயக்கத்தைச் சீராக வைக்கிறது.
- பொட்டாசியம் நிறைந்ததாக இருப்பதுடன், ஒட்டுமொத்த உடல் இயக்கத்தையும் சீராக வைக்கிறது.
1946 செப்டம்பர் 2 ஆம் நாள் ஜவஹர்லால் நேரு தலைமையில் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. 1946-ம் ஆண்டு மார்ச் 24-ம் தேதி, இந்தியத் தலைவர்களோடு பேசுவதற்கு கிரிப்ஸ், லாரன்ஸ், அலெக்சாண்டர் ஆகியோர் அடங்கிய கேபினட் மிஷனை இந்தியாவுக்கு அனுப்பிவைத்தார் பிரிட்டிஷ் பிரதமர் அட்லி. முழு விடுதலைக்கு முன்னர் இந்திய அரசியல்வாதிகளுக்கு நிர்வாக அனுபவம் ஏற்படுத்துவதற்காக இடைக்கால அரசாங்கம் ஏற்படுத்துவதென முடிவெடுக்கப்பட்டது 1946 ஜூலையில் அரசியலமைப்புக் குழுவிற்கான தேர்தல்கள் நடைபெற்றன. 214 பொதுத் தொகுதிகளில் 205 இல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. 78 தொகுதியில் 73 இல் முஸ்லீம் லீக் வெற்றி பெற்றது. 1946-ம் ஆண்டு ஆகஸ்ட் 6-ம் தேதி மத்தியில் இடைக்கால மந்திரிசபை அமைக்க நேருவை அழைத்தார் வைஸ்ராய். இடைக்கால அரசின் தலைவராக அப்போது ஜவஹர்லால் நேரு ஏற்றுக் கொண்ட பதவியின் பெயர் துணை ஜனாதிபதி என்பதுதான். முழு விடுதலைக்குப் பின்னர் இது பிரதம மந்திரி என்றும் வைஸ்ராயின் பெயர் கவர்னர் ஜெனெரல் என்றும் மாற்றப்படும் என்று அப்போதே முடிவு செய்யப்பட்டது இந்த இடைக்கால அரசில் சேருவது பாகிஸ்தான் பிரிவினையை பாதிக்கும் என்று கருதிய ஜின்னா இடைக்கால அரசில் சேருவதற்கு மறுத்தார்.. என்றாலும் புதிய வைஸ்ராய் மவுண்ட் பேட்டன் சமரசத்துக்குப் பின்னர் அக்டோபர் மாதம் முஸ்லீம் லீக் கட்சியும் இந்த இடைக்கால அரசில் இணைந்து கொண்டது.
வியட்நாமின் தந்தை ஹோ சி மின் நினைவு நாள் – இவர் வியட்நாமின் புரட்சித் தலைவராக இருந்தவர், பின்னர் வடக்கு வியட்நாமின் பிரதமராகவும் (1946–1955), அதிபராகவும் (1946–1969) இருந்தவர். ஹோ சி மின் வியட்நாமின்வியட் மின் விடுதலை இயக்கத்தை 1941 இலிருந்து முன்னின்று நடத்தி, 1954 இல் பிரெஞ்சுப் படையினருடன் சண்டையிட்டு வெற்றி பெற்றார். அவ்வெற்றி அவருக்கு கம்யூனிச நாடாக வடக்கு வியட்நாமை அமைக்க உதவியது. வியட்நாம் போரை அவரது இறப்பு வரையில் முன்னின்று நடத்தினார். ஆறு ஆண்டுகளின் பின்னர் வட வியட்நாமின் வெற்றியுடன் போர் முடிவுக்கு வந்ததுடன் இரண்டு வியட்நாம்களும் ஒன்றிணைந்தன. 20 ஆண்டுகளாக நடைபெற்ற ரத்த கறை படிந்த போருக்கு பின்னர், வியட்நாமை தவிர வேறு எந்த நாடும் வல்லரசான அமெரிக்காவை போரில் தேற்கடித்தது கிடையாது. வியட்நாம் மக்கள் இது பற்றி பெருடையடைகின்றனர். அவருடைய வாழ்நாளில் ஹோ சி மின் வட வியட்நாமின் அதிபராக மட்டுமே இருந்தார். நாட்டை ஒன்றிணைப்பதற்காக அவர் போராடியதற்கு பலன் அவர் இறந்து ஆறு வருடங்களுக்கு பிறகே கிடைத்தது. வியட்நாம் போராளிகள் அனைவரும் அந்த மண்ணின் மைந்தர்கள். உலகின் மிகப் பெரிய ஏகாதிபத்திய அரசிடம் அடிமைப்படாமல், “சுதந்திரம் மட்டுமே எங்கள் கனவு” என முழங்கிய வியட்நாம் போர், வரலாற்றில் மனித இனத்தை மீட்டு எடுத்து இருக்கிறது. தெற்கு வியட்நாமின் தலைநகராயிருந்த சாய்கோன் நகரம் ஹோவின் நினைவாக ஹோ சி மின் நகரம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்தியாவிலும் டெல்லி மற்றும் கொல்கத்தாவில் ஒரு சாலைக்கு இந்திய அரசால் ஹோ சி மின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இன்று (செப்டம்பர் 02) பார்பரா மெக்லின்டாக் காலமான நாள்.1983ஆம் ஆண்டில், மருத்துவத்திற்கான நோபல் விருது பெற்ற அமெரிக்க அறிவியலாளர். இதில் சிறப்பு என்னவென்றால், மருத்துவத் துறையில் தனியாக நோபல் பரிசு வென்ற முதல் பெண் இவர்தான். மரபணு மாற்றம் (Genetic transposition), அதாவது க்ரோமசோம்களில் மரபணுக்கள் எப்போதெல்லாம் இடம் மாற்றம் அடைகிறது என்பதைக் குறித்து இவர் ஆய்வு செய்தார். இந்தக் கருத்தைக் கொண்டுதான், ஏன் குறிப்பிட்ட பண்புகள் குறிப்பிட்ட நபர்களில் தோன்றுவதும் மறைவதுமாக இருக்கின்றன என்று கண்டுபிடிக்கிறோம். எடுத்துக்காட்டாக, ஒரே சோளத்தில், வெவ்வேறு சோளமுத்துக்கள் வெவ்வேறு நிறங்களில் இருப்பதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்கலாம். 1921ஆம் ஆண்டில், கார்னெல் பல்கலைக்கழகத்தில், தாவரவியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றார் பார்பரா. இவர் அப்பல்கலைக்கழகத்தில் மரணுவியல் (genetics) படிக்க வேண்டும் என்று விருப்பப்பட்டார், ஆனால் அக்காலத்தில் அப்பல்கலைக்கழகத்தில் பெண்கள் மரபணுவியலில் பட்டம் பெற அனுமதிக்கப்படவில்லை. எனவே பார்பரா தாவரவியலில் பட்டம் பெற்று, maize cytogeneticsஇல் தனது ஆய்வை நடத்தினார். Cytogenetics என்றால், செல்களின் அமைப்பு மற்றும் வேலையை ஆய்வு செய்யும் மரபணுவியலின் ஒரு பகுதி. அந்தத் துறையில் பல மதிப்புமிக்க பட்டங்களையும், விருதுகளையும் பெற்றதோடு, 1944ஆம் ஆண்டில், தேசிய அறிவியல் அகாடமியில் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சோளத்தில் மரபணுக்கள் மற்றும் அவற்றை உருவாக்கும் செல்களைப் பற்றி ஆய்வு செய்யத் தொடங்கினார் பார்பரா. இவரும், ஹாரியட் க்ரெய்டன் எனப்படும் அறிவியலாளரும் இணைந்து, க்ரோமசோம் எனப்படும் சின்ன பாகங்கள் இணைந்துதான் DNA என்ற பொருளை உருவாக்குகின்றன என்று கண்டுபிடித்தனர். ஆனால், அப்போது DNA பற்றி யாரும் அறிந்திருக்கவில்லை. DNA என்ற பெயர்கூட உருவாகியிருக்கவில்லை. பார்பரா தன்னுடைய ஆய்வை, தான் படித்த கார்னெல் பல்கலைக்கழகத்தில் தொடர வேண்டும் என்று விருப்பபட்டார். ஆனால், அங்கு பெண் பேராசிரியர்களை நியமிக்க அவர்கள் விரும்பாததால், மிசௌரி பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் ஆனார். பிறகு நியூ யார்க்கிற்கு வந்து சோளத்தில் தன்னுடைய ஆய்வைத் தொடர்ந்த அவர், சில நேரங்களில் மரபணுக்கள் மாற்றம் அடைகின்றன என்றும், அதுவும் வெளிப்புறக் காரணங்களால் மாற்றம் ஏற்படலாம் என்றும் கண்டுபிடித்தார். இதை, சோளத்தில் நிற மாற்றத்தை ஏற்படுத்தும் காரணிகளை வைத்துக் கண்டுபிடித்தார். மரபணுக்களில் பார்பரா நடத்திய ஆய்வு, மிகவும் நவீனமானதாக இருந்தது. இதனாலேயே அவரின் ஆய்வுகள் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. மேலும், பெண் என்ற காரணத்தினால் ஒடுக்குமுறையைச் சந்திக்க வேண்டியிருந்தது. எனவே, அம்மாதிரியான சூழலில் வேலை பார்க்க முடியாமல், தன்னுடைய வேலைகளை வெளியிடுவதை நிறுத்திவிட்டார். 1970களில், அவர் ஆய்வு செய்த பொருளின் பெயர் DNA என்று கனுட்கொண்டதும், அவர் ஆய்வுகளை ஆராய்ந்து, அனைத்துமே உண்மை என்று ஒப்புக்கொண்டனர். இறுதியில், அனைவருக்கும் முன்பே அதைக் கண்டுபிடித்ததற்காக, அவருக்குப் பல விருதுகளும் பரிசுகளும் கொடுக்கப்பட்டன. 1983ஆம் ஆண்டில், அவருடைய 81வது வயதில், உயரிய விருதான நோபல் விருதைப் பெற்றார்.
வி.சா.காண்டேகர் காலமான தினமின்று! ‘கலை, கலைக்காக அல்ல; மக்களுக்காக; மக்களின் வாழ்விலே மணம் பரப்புவதற்காக; வாழ்க்கையைச் செம்மைப்பட வைப்பதற்காக’ – என்ற கொள்கையைத் தனது இலட்சியமாகக் கொண்டவர் இந்த- வி.சா.காண்டேகர்!
கொடுமைகளைக் கண்டு புரட்சி வீரர்கள் வாளை ஏந்திப் போராடுவார்கள்; மாறாக, எழுத்தாளர்கள் தங்கள் எழுதுகோலை ஏந்தி நாட்டு விடுதலைக்காக நாளும் போராட வேண்டும்’- என அறைகூவல் விடுத்தவர்! “இலக்கியம் என்பது மனிதத் தன்மையின் மேன்மையை உயர்த்த வேண்டும்; சமூகத்தில் நசுக்கப்பட்டும், ஒதுக்கப்பட்டும், மிதிக்கப்பட்டும் அடிமையாகக் கிடக்கும் அடித்தட்டு மக்களை விழிப்படையச் செய்ய வேண்டும். இதுவே, எழுத்தாளர்களின் கடமை”- என்று அறிவித்தவர். வாழ்க்கையில், ‘தொண்டு’ ‘அன்பு’ முதலியவற்றைத் தமது நியதியாகக் கொள்ள வேண்டும் என வலியுறுத்தியவர். சமூகத்திலுள்ள இடர்ப்பாடுகளைக் களையவும், கொடுமைகளைப் போக்கிடவும், நீதி கிடைக்கவும், சமூகம் முன்னேற்றமடைந்திடவும் தனது எழுதுகோலைச் சுழற்றியவர் வி.சா. காண்டேகர்.
லண்டன் பெரும் தீ என்றழைக்கப்படும் மிகமோசமான தீவிபத்து ஏற்பட்ட நாள்
செப்டம்பர் 5 வரை, 4 நாட்களாக எரிந்த இந்தத் தீயில் 430 ஏக்கர், அதாவது அன்றைய லண்டன் நகரின் 80 சதவீதம் எரிந்து சாம்பலானாது. 13,200 வீடுகள், 89 தேவாலயங்கள், புனித பால் பேராலயம், 100 ஆண்டுகள் பழைமையான ராயல் எக்ஸ்ச்சேஞ்ச் கட்டிடம் ஆகியவை எரிந்து போயின. அன்றைய லண்டனில் குடியிருந்த 80 ஆயிரம் பேரில் 70 ஆயிரம் பேர் வீடிழந்தனர். தாமஸ் ஃபேரினர் என்பவரின் பேக்கரியில் பிடித்த தீ, அக்காலத்திய லண்டன் கட்டிடங்களின் பெரும்பகுதி ஓக் மரத்தாலானவை என்பதால் விரைந்து பரவியது. தீயை அணைக்க தீத்தடுப்புக்கோடு என்ற தீயணைப்பு முறை மட்டுமே இருந்தது. அதாவது, தீ பரவி வரும் வழியில் உள்ள எரியக்கூடிய பொருட்களை அகற்றுவதே தீத்தடுப்புக்கோடு. இது காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தப்படும். நகருக்குள் தீத்தடுப்புக்கோடு என்றால், கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும். அதற்கு அன்றைய லண்டன் மேயர் தாமஸ் ப்ளட்வொர்த் தயங்கினார். வேறு வழியின்றி அம்முடிவை அவர் எடுத்தபோது, காற்றின் உதவியோடு தீ வேகமாகப்பரவி, ஒரு தீச்சூறாவளியாய் மாறியிருந்தது. ஞாயிறன்று பற்றிய தீயை, இறுதியாக ஏராளமான கட்டிடங்களை இடித்துத் தீத்தடுப்புக்கோடு உருவாக்கி புதனன்று அணைத்தனர். 2005 ஆண்டு பணமதிப்பின்படி ரூ.8000 கோடி சேதம் என்று மதிப்பிடப்பட்டது. அதன்பின், லண்டனில் வசிக்க மக்கள் விருப்பம் குறைந்தாலும், மீண்டும் பழைய அமைப்பிலேயே லண்டன் மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. இத்தீவிபத்திற்கு காரணமாக இருந்ததற்கு, 1986ல் (ஆம்! 1986ல்தான்!) லண்டனின் பேக்கரி உரிமையாளர்கள் மன்னிப்புக் கோரினர்.
இன்றைய நாளில்தான் விவேகானந்தர் நினைவு மண்டபம் திறந்து வைக்கப்பட்டது கடந்த 1892-ம் ஆண்டு டிசம்பர் 25-ம் தேதி கன்னியாகுமரிக்கு வந்த சுவாமி விவேகானந்தர், கடலுக்குள் 500 மீட்டர் நீந்திச் சென்று அங்கிருந்த பெரிய பாறையில் 3 நாட்கள் கடும் தவத்தில் இருந்தார். அவரது நூற்றாண்டு விழாவையொட்டி, அவருக்கு ஞானம் வழங்கிய கன்னியாகுமரி பாறையில் நினைவு மண்டபம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி கடந்த 1963-ல் சிறப்புக் குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவின் அமைப்புச் செயலாளராக சமூக ஆர்வலர் ஏக்நாத் ரானடே நியமிக்கப்பட்டார். அப்போது தமிழக முதல்வராக பக்தவத்சலம் பதவி வகித்தார். சில எதிர்ப்புகள் காரணமாக நினைவு மண்டப விவகாரம் அன்றைய பிரதமர் நேரு வரை சென்றது. நினைவு மண்டபம் அமைப்பதற்கு ஆதரவாக 323 எம்பி.க்கள் கையெழுத்திட்ட கடிதம் நேருவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.நேரு ஒப்புதல் அளித்த பிறகு 1964-ல் கன்னியாகுமரி பெரிய பாறையில் கட்டுமானப் பணிகள் தொடங்கின. தலைமை ஸ்தபதி எஸ்.கே.ஆச்சாரி தலைமையில் ஆறே ஆண்டுகளில் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று 1970,செப்டம்பர் 2-ம் தேதி விவேகானந்தர் நினைவு மண்டபம் திறக்கப்பட்டது. அன்றைய குடியரசுத் தலைவர் வி.வி.கிரி, நினைவு மண்டபத்தை திறந்து வைத்தார். அப்போதைய முதல்வர் கருணாநிதி திறப்பு விழாவுக்கு தலைமை வகித்தார். புரி, துவாரகா, பத்ரிநாத், ராமேஸ்வரம், கன்னியாகுமரி உள்ளிட்ட புனித தலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட சந்தனங்களின் கலவையை, நினைவு மண்டப கதவில் வி.வி.கிரி பூசி, நினைவு மண்டபத்தை திறந்து வைத்தார். திறப்பு விழாவில் வி.வி.கிரி பேசும்போது, “சுவாமி விவேகானந்தர் போதித்த உண்மை, மனிதநேயம், சுயநலமற்ற சேவையை அனைவரும் பின்பற்றி நடக்க வேண்டும். அவரது போதனைகள், சிந்தனைகள் முன்னெப்போதும்விட இப்போது மிகவும் முக்கியமானவை. ஒவ்வொருவரும் தனித்தன்மையுடன் செயல்பட வேண்டும். இந்தியாவின் ஒருமைப்பாட்டை காக்க வேண்டும். நாட்டுக்கு சுயநலமின்றி சேவையாற்ற வேண்டும் என்று விவேகானந்தர் வலியுறுத்தினார். அவரது போதனைகளை நாம் நாள்தோறும் நினைவில் கொள்ள வேண்டும்” என்று கூறினார். திறப்பு விழாவில் கருணாநிதி சிறப்புரையாற்றினார். ‘‘சுவாமி விவேகானந்தர் சாமானிய மக்களின் உயர்வு குறித்து மட்டுமே சிந்தித்தார். அவரது உரைகள் நலிவுற்ற மக்களின் நலன்களை வெளிப்படுத்தின. அவருடைய போதனைகள் சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தின. விவேகானந்தரின் அறிவுரைகள் ஒட்டுமொத்த உலகமும் பின்பற்றக்கூடியவை. ஏழை, எளிய மக்களின் முன்னேற்றத்தில்தான் மனித குலத்தின் முன்னேற்றம் அடங்கி இருக்கிறது என்று அறிஞர் அண்ணா கூறுவார். ஏழைகளின் சிரிப்பில் நாங்கள் இறைவனை காண்கிறோம். ஏழைகளின் முகத்தில் சிரிப்பை ஏற்படுத்துவதே எங்கள் அரசின் லட்சியம். சாதி, இனம் ஆகிய பேதங்களை அகற்றிவிட்டு இந்தியாவின் அனைத்து குடிமக்களும் சமமானவர்கள் என்ற எண்ணத்தை உருவாக்க வேண்டும்” என்று கருணாநிதி பேசினார். கடோபநிஷதத்தில் இருந்து விவேகானந்தர் எடுத்துக் கையாண்ட முக்கிய அறிவுரையான ‘உத்திஷ்டத, ஜாக்ரத, ப்ராப்ய வரான் நிபோதத’ (எழு, விழித்தெழு,இலக்கை அடையும் வரை ஓயாதே!) என்ற வரிகளைச் சொல்லி தனது உரையை முடித்தார் கருணாநிதி. கன்னியாகுமரியில் விவேகானந்தர் நினைவு மண்டபம் கட்டப்பட்டு செப்.2-ம் தேதியுடன் 55 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. அரை நூற்றாண்டை கடந்தும் நினைவு மண்டபம் கம்பீரமாக காட்சியளிக்கிறது.
