LUCY – 2014 (FRENCH/ENGLISH)
உலக சினிமா
LUCY – 2014 (FRENCH/ENGLISH)
மனிதனின் மூளை 10% மட்டுமே சராசரியாக பயன்படுத்தப்படுகிறது என்பது தற்போதைய கான்செப்ட்களில் ஒன்று.
(டால்ஃபின் 20% பயன்படுத்துகிறதாம்.)
தன் முழு திறனான 100% ஐயும் நம் மூளை பயன்படுத்தும்போது என்னென்ன மாதிரியான மாற்றங்கள் நிகழும் என்பதை அறிவியல் கலந்த கற்பனை கதையாக அற்புதமாக சொல்லியிருக்கிறார்கள்.
சுஜாதா நாவல்களில் இந்த சப்ஜெக்ட் சிலமுறை டச் செய்யப்பட்டிருப்பது படத்தை பார்க்கும்போது அடிக்கடி தோன்றிக்கொண்டே இருந்தது.
ஜாலியாக பாய்பிரண்ட், பார்ட்டி என்று சுற்றிக்கொண்டிருந்த லூஸியிடம் ஒரு பெட்டியை ஒரு நபரிடம் ஒப்படைக்க சொல்கிறான் அவள் பாய்பிரண்ட்.
அவள் பெட்டியை ஒப்படைக்கும்போது அவள் கண் முன்பே பாய்பிரண்ட் சுட்டுக் கொல்லப்படுகிறான்.

தான் ஒரு பயங்கரமான போதைமருந்து கடத்தும் கும்பலிடம் சிக்கிக்கொண்டிருப்பது லூஸிக்கு புரிய ஆரம்பிக்கிறது.
அங்கிருந்து அந்த கும்பலால் அவள் வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்படுகிறாள்.
அவள் வயிற்றின் உள்ளே மனித மூளையின் செயல்பாட்டு உணர்வுகளை தூண்டிவிடக்கூடிய போதைமருந்துகள் அடங்கிய பண்டல் ஒன்று வைத்து ஆப்பரேஷன் மூலம் பேக்கிங் செய்யப்பட்டுவிடுகிறது.
அம்மருந்துகள் ஐரோப்பிய நாடுகளுக்கு ஹ்யூமன் கேரியர் முறையில் கடத்த ஏதுவாக இது செய்யப்படுகிறது.

இந்நிலையில் அறையில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் லூஸியை பலாத்காரம் செய்ய முயற்சிக்கும் ஒருவனால் அவள் வயிற்றில் காயம் ஏற்பட்டு பேக்கிங் செய்யப்பட்டிருந்த உணர்வூக்க போதைப்பொருள் அவள் ரத்ததில் கலந்து மூளையை அடைகிறது.
அவள் மூளையின் செயல்பாட்டுத்திறன் 20%, 30%, 40% என்று அதிகரிக்கத் துவங்குகிறது.
அசால்டாக அந்த இடத்தை விட்டு தப்பிக்கும் லூஸி தன் மூளையின் செயல்திறன் அதிகரிப்பால் இருந்த இடத்தில் இருந்தவாறே பொருட்கள், மனிதர்கள், காலம் என அனைத்தையும் கட்டுப்படுத்துகிறாள்.
லூஸியுடன் ஹியுமன் கேரியர் ஆக ட்ரக்ஸ்களை சுமந்து வந்த மேலும் மூன்றுபேரையும் அவர்களை இயக்கும் சில ஐரோப்பிய போதைமருந்து கடத்தல்காரர்களையும் லூஸியின் உதவியினால் ஃபிரெஞ்ச் போலீஸார் பிடிக்கின்றனர்.
அடுக்கடுக்கான இந்த நிகழ்வுகளினால் கோபத்தின் உச்சத்திற்கு செல்லும் போதைமருந்து கடத்தல்காரர்கள் லூஸியை தீர்த்துக்கட்டும் பொருட்டு விடாது அவளைத் துரத்துகின்றனர்.
இந்நிலையில் லூஸியின் மூளை செயல்திறன் 100% ஐ எட்டுகிறது.
இந்த எஃபெக்ட்டினால் லூஸி என்ன ஆனாள், கடத்தல் கும்பல் என்ன ஆனது என்பதை கொஞ்சமும் விறுவிறுப்பு குறையாமல் தட தடவென ஜெட் வேகத்தில் சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
~
100% மனித மூளையின் செயல்பாட்டுத் திறன் அதிகரித்தால் என்ன ஆகும் என்ற கற்பனைக்கே கதாசிரியர்/இயக்குனருக்கு ஒரு சபாஷ் போடலாம்.
அந்த கற்பனையில் உருவான கதைக்கு, அட்டகாசமான திரைவடிவம் கொடுத்திருப்பதற்கு இயக்குனர் குழுவுக்கு பெரிய சலாம் போடலாம்.
கொஞ்சம் சுணங்கியிருந்தால் காம்ப்ளிக்கேட் ஆகக்கூடிய சாத்தியக்கூறு உள்ள இக்கதைக்கு இடையிடையே நியுரோ நிபுனர் பாத்திரம் ஒன்றின் மூலம் எளிமையான விளக்கங்களை வழங்கியிருப்பது, சொல்ல வந்த கருத்தை எல்லோருக்கும் புரியும் வண்ணம் தெளிவாக சொல்ல வேண்டும் என்ற இயக்குனரின் ரெஸ்பான்ஸிபிலிட்டியை காட்டுகிறது.
லூஸியாக ஸ்கார்லட் ஜோஹன்ஸன் அற்புதமாக நடித்திருக்கிறார். மார்கன் ஃப்ரீமன் அறிவியல் விளக்கங்கள் கூறும் ஒரு ஆராய்ச்சியாளராக வருகிறார். அவரின் நடிப்பும் வழக்கம்போல் அருமை.
படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிக்கு முன் வரும் கார் சேஸிங் காட்சி மிக அருமையாக படமாக்கப்பட்டிருக்கிறது.
க்ளைமேக்ஸ்ஸில் கடத்தல்காரர்கள் லூஸியை தீர்த்துக்கட்ட துடிப்பதும், அதற்கு முன் தான் செய்யவேண்டிய வேலைகளைப் பற்றிய தெளிவுடன் லூஸி அதை செய்து முடிப்பதும் பிரமாதம்.
உலக சினிமாக்களில் முக்கியமான ஒரு இடத்தை விமர்சகர்கள் லூஸிக்கு வழங்கியிருப்பதில் வியப்பேயில்லை.
சுஜாதா கதைகள் படிக்கும்போது கிடைக்கும் விறுவிறுப்பான ஆச்சரியமான வாசிப்பனுபவத்தை விஷுவல் உணர்வாகத் தரும் படம் “லூஸி”.
பார்க்காதவர்கள் கண்டிப்பாக பார்க்கலாம். Google Play Video, Netflix ஆகியவைகளில் கிடைக்கிறது.
–காளி சுதன் சக்தி முத்துக்குமார்

