பிரதமருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திடீர் கடிதம்..!

வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அந்த கடிதத்தில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.

இந்தியப் பொருட்களின் மீதான இறக்குமதி வரியினை அமெரிக்கா உயர்த்தியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைக் கருத்தில் கொண்டு, வர்த்தகத்தை மீட்டெடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.

இதுதொடர்பான அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது:-

இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையில், இரு நாடுகளுக்கும் பயனளிக்கக் கூடிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டுவதாகவும், தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான மத்திய அரசின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிப்பதாகவும் குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர் அவர்கள், தற்போதைய 25 சதவீத வரி மற்றும் அதன் தொடர்ச்சியாக 50 சதவீத வரி அதிகரிப்பு காரணமாக கடுமையான தாக்கங்களை எதிர்கொள்வதால், தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் கவலை அளிக்கும் ஒரு பிரச்சனை குறித்து இந்தியப் பிரதமர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டுவருவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த நிதியாண்டில், இந்தியாவின் மொத்த பொருட்கள் ஏற்றுமதியான $433.6 பில்லியன் மதிப்பிலான பொருட்களில் 20 விழுக்காடு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், தமிழ்நாட்டின் $ 52.1 பில்லியன் பொருட்களில் 31 விழுக்காடு அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இவ்வாறு அமெரிக்க சந்தையை தமிழ்நாடு அதிகமாகச் சார்ந்திருப்பதால், இறக்குமதி வரியின் தாக்கம், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கும் என்றும், இந்த வரிவிதிப்பு தமிழ்நாட்டின் உற்பத்தித் துறை மற்றும் வேலைவாய்ப்பில் குறிப்பிடத்தக்க பாதிப்புகளை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரிவிதிப்பினால் ஜவுளி, ஆடைகள், இயந்திரங்கள், ஆட்டோமொபைல்ஸ், ரத்தினக் கற்கள் மற்றும் நகைகள், தோல், காலணிகள், கடல் பொருட்கள் மற்றும் ரசாயனங்கள் துறைகளில் மிகவும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இந்தத் துறைகள் அனைத்தும் அதிகத் தொழிலாளர்களை சார்ந்தவை என்பது இன்னும் கவலைக்குரியது என்றும், இதில் எந்தவொரு ஏற்றுமதி மந்தநிலையும் விரைவாக பெருமளவிலான பணி இழப்புகளுக்கு வழிவகுக்கும் என்றும் தனது கடிதத்தில் கவலைபடத் தெரிவித்துள்ளார். 2024-2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாடு 28 சதவீதம் பங்களித்தது என்றும், இது இந்தியாவிலுள்ள மற்ற மாநிலங்களைக் காட்டிலும் மிகவும் அதிகம் என்றும் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார். குறிப்பாக, தமிழ்நாட்டில் ஜவுளித் துறை கிட்டத்தட்ட 75 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளதாக குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர் அவர்கள், 25 சதவீதம் வரி மற்றும் முன்மொழியப்பட்டுள்ள 50 சதவீதம் வரியின் காரணமாக, 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும், இந்த நெருக்கடியைத் தணிக்க, நமது ஏற்றுமதி போட்டித்தன்மைக்கு நீண்டகாலமாகத் தடையாக இருக்கும் கட்டமைப்பு சிக்கல்களைத் தீர்ப்பது அவசியம் என்று தனது கடிதத்தில் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இது தொடர்பாக, பாதிக்கப்பட்ட துறைகளைச் சேர்ந்த தொழில் அமைப்புகளுடன் தான் விரிவான ஆலோசனைகளை நடத்தியதாகவும், இந்த ஆலோசனைகளின் அடிப்படையில், ஜவுளித் துறைக்கு இரண்டு அம்சங்களில், அதாவது, மனிதனால் உருவாக்கப்பட்ட இழை மதிப்புச் சங்கிலிக்கான ஜிஎஸ்டி விகிதங்களில் உள்ள முரண்பாடுகளை நீக்கி, தலைகீழ் வரி கட்டமைப்பை சரிசெய்தல், முழு சங்கிலியையும் 5 சதவீதம் ஜிஎஸ்டி அடுக்குக்குள் கொண்டு வருதல் மற்றும் அனைத்து வகையான பருத்திக்கும் இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளித்தல் ஆகியவற்றில் துரித நடவடிக்கை தேவைப்படுவதாக தனது கடிதத்தில் முதல்-அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

கூடுதலாக, அவசரக் கடன் வரி உத்தரவாதத் திட்டத்தின் கீழ் (ECLGS) 30 சதவீதம் பிணையமில்லாத கடன்களை 5 சதவீதம் வட்டி மானியம் மற்றும் அசலைத் திருப்பிச் செலுத்துதலில் இரண்டு ஆண்டு தற்காலிக தடையுடன் நீட்டித்தல், RoDTEP நன்மைகளை 5 சதவீதம் ஆக உயர்த்துதல், நூல் உட்பட அனைத்து ஜவுளி ஏற்றுமதிகளுக்கும் முன் மற்றும் பின் கடனை நீட்டித்தல் ஆகியவை நமது ஏற்றுமதி போட்டித்தன்மையை வலுப்படுத்துவதற்கான பிற முக்கியமான காரணிகளாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

உலகளாவிய வர்த்தகத்தில் சுங்கவரி தாக்கங்கள் மற்றும் போட்டி அழுத்தங்கள் காரணமாக மற்ற துறைகளும் இதேபோன்ற சவால்களை எதிர்கொள்கின்றன என்று குறிப்பிட்டுள்ள முதல்-அமைச்சர் அவர்கள், அதற்கு உடனடி நிவாரணம் வழங்கி, பணப்புழக்கத்தை மேம்படுத்தவும், செலவுச் சுமைகளைக் குறைக்கவும் சுங்கவரிகளால் பாதிக்கப்பட்ட அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் சிறப்பு வட்டி மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதையும், அதிக சுங்கவரி சந்தை அபாயங்களை ஈடுகட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAக்கள்) மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களை விரைவுபடுத்துவதையும் மத்திய அரசு பரிசீலிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

பிரச்சினையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் செயல்படுத்தப்பட்டதைப் போன்று, அசலைத் திருப்பிச் செலுத்துவதில் சலுகை உள்ளிட்ட ஒரு சிறப்பு நிதி நிவாரணத் தொகுப்பு நமது ஏற்றுமதியாளர்களை ஆதரிக்க வேண்டியது அவசியம் என்றும், பிரேசில் அரசு அந்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு வரி ஒத்திவைப்பு மற்றும் வரிச் சலுகைகளை அறிவித்துள்ளதைப் போன்று, இந்தியாவிலும் இதுபோன்ற ஒரு முயற்சியை தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் முதல்-அமைச்சர் அவர்கள் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் வலுவான உற்பத்தித் துறை, இதுவரை கண்டிராத ஒரு நெருக்கடியை தற்போது எதிர்கொள்வதாகவும், பல்வேறு துறைகளில் லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இந்தியப் பிரதமர் அவர்கள் இந்த விஷயத்தில் அவசரமாகத் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் தொழில்துறையைச்சார்ந்தவர்களுடன் கலந்தாலோசித்திட வேண்டுமென்று கேட்டுக் கொண்டுள்ளார்.

அதோடு, இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்கவும், வர்த்தகத்தை மீட்டெடுக்கவும் மத்திய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு முழு ஒத்துழைப்பினை வழங்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!