கார்கில் போர் வெற்றி தினம் இன்று கொண்டாட்டம். 1999-ம் ஆண்டு இந்தியாவின் கார்கில் மலைப்பகுதியை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்தது. இதன் காரணமாக இந்தியா – பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடைபெற்றது. இந்த போரின் போது வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை மாதம் 26-ம் தேதி கார்கில் போர் வெற்றி தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
உலகின் முதலாவது பயணிகள் ரயில் சேவை நடைபெற்ற நாள். இங்கிலாந்தில் லண்டன் நகருக்கு அருகில் வேண்ட்ஸஒர்த் மற்றும் கிராய்டன் என்ற இரு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டது. தி சர்ரே அயன்(The Surrey Iron ) என்கிற தனியார் நிறுவனம் இந்த ரயிலை இயக்கியது.திறந்த – கட்டை வண்டிகள் போன்ற இரண்டு பெட்டிகளில் பயணிகள் அமர்ந்திருந்தனர். இந்த இரு நகரங்களுக்கு இடையே ஆன தூரம்14 மைல் ஆகும் அதற்கு முன்னர் சரக்கு ரயில்கள் மட்டுமே இயக்கப்பட்டுவந்தன.
உலக சதுப்புநிலக் காடுகள் தினம் புயல், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் பேரழிவுகளை தடுக்கும் கேடயமாக சதுப்புநிலக் காடுகள் உள்ளன. இவை கடற்கரையை ஒட்டி உள்ளன. இதனை மாங்ரோவ் காடுகள், அலையாத்திக் காடுகள் என்றும் அழைக்கப்படுகின்றன. எனவே யுனெஸ்கோ அமைப்பு ஜூலை 26ஆம் தேதியை சர்வதேச சதுப்புநிலக் காடுகள் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு தினமாக அறிவித்துள்ளது.
கல்வி வரலாற்றில் ஒரு சிறப்புமிக்க தினமாக இது அமைந்துள்ளது. பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய எலெனா கார்னரோ பிசுகோபியா அவர்களின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 1646 இல் வெனிஸ் நகரில் பிறந்த பிசுகோபியா, அக்காலத்தில் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்ட நிலையில், பல மொழிகளிலும், தத்துவம், கணிதம் போன்ற துறைகளிலும் சிறந்து விளங்கினார். அவரது அபார அறிவாற்றலை அங்கீகரித்து, 1678 ஆம் ஆண்டு ஜூன் 25 ஆம் தேதி பதுவா பல்கலைக்கழகத்தில் தத்துவத்தில் முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இது வெறும் ஒரு தனிநபரின் சாதனை அல்ல; மாறாக, பெண்களுக்கு உயர்கல்வியில் இருந்த தடைகளை உடைத்தெறிந்த ஒரு புரட்சிகரமான நிகழ்வு. 1684 ஆம் ஆண்டு ஜூலை 26 ஆம் தேதி மறைந்த பிசுகோபியா, தனது வாழ்நாள் முழுவதும் கல்விப் பணியில் ஈடுபட்டு, உலகெங்கிலும் உள்ள பெண்களுக்கு கல்விக்கான உத்வேகத்தை அளித்தார். அவரது நினைவு தினமான இன்று, கல்விச் சமத்துவத்திற்கான அவரது போராட்டத்தையும், பங்களிப்பையும் நினைவு கூர்வோம்.
இந்தியாவில் முதன்முதலாக பார்ப்பனரல்லாத மக்களுக்கு அரசுப் பணியில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஆணை வெளியிடப்பட்டது. இதனை வெளியிட்டவர் கோலாப்பூர் சமஸ்தானத்தின் மன்னர் சத்ரபதி சாகுமகாராஜா ஆவார். இவர் சமூக நீதி மற்றும் சமுதாய சீர்திருத்தத்தின் முன்னோடியானவர் இந்தியாவின் நிர்வாகத்துறை, காவல்துறை, நீதித்துறை என அனைத்துத் தளங்களிலும் இந்தியர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டும் என்கிற கோரிக்கையை இந்திய காங்கிரசு 1861ம் ஆண்டு கோரிக்கையாக வைத்தது. அந்த அடிப்படையில் பார்த்தால் இடஒதுக்கீடு கொள்கையை இந்தியாவில் அறிமுகப்படுத்த தூண்டுகோலாய் இருந்தது காங்கிரசிலுள்ள பார்ப்பன வர்க்கமே என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். வெள்ளையர்கள் இந்தியர்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க ஆரம்பித்தபோது அனைத்து மட்டங்களிலும் பார்ப்பனர்களே ஆதிக்கம் செலுத்தினர். இதனைக் கண்டு பார்ப்பனரல்லாதோர் வெகுண்டு எழுந்தனர். மைசூர் சமஸ்தானத்தில் பார்ப்பனரல்லாதாரின் கிளர்ச்சி உச்சம் கண்டது. இதனால் 1895ம் ஆண்டு, மைசூர் அரசர் பார்ப்பனரல்லாதார் அனைவருக்கும் சமஸ்தான வேலைகளில் இடஒதுக்கீடு என்பதை ஆணையாகப் பிறப்பித்தார். இதுவே நமக்கு இங்கு கிடைத்திருக்கும் இடஒதுக்கீட்டிற்கு மூலவித்து எனலாம். ஆனால், 1921 ம் ஆண்டு வரை அந்த இடஒதுக்கீட்டை நமது பார்ப்பன நண்பர்கள் அமல்படுத்த தடைக்கல்லாக இருந்தனர். இதே போல் மகாராஸ்டிரத்தில் கோல்கபூர் சமஸ்தானத்தில் சாகு மகாராசா வேலை வாய்ப்பில் வகுப்பு வாரி இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். சாகு மகராஜா என்கிற பெருந்தகையால் புனரமைக்கப்பட்டவர்தான் சமூக நீதிப் போராளி பாபாசாகாப் அம்பேத்கர். ஆக மைசூர் சமஸ்தானமும், மகராஸ்டிரா கோல்கபூர் சமஸ்தானமும் இடஒதுக்கீட்டிற்கு முன்னோடி என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். அப்படி சாகு மகாராஜா இந்த இடஒதுக்கீட்டை கொண்டு வந்ததும் பார்ப்பனர்கள் மற்ற சமஸ்தான மன்னர்கள் இவரைப் போலவே ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு தந்து தொலைத்தால் என்ன செய்வது என அஞ்சினர். சமஸ்தான மன்னர்களிடம் இடஒதுக்கீடு திட்டத்தைப் பற்றி குறைகூறினர். மன்னர்களும் பார்ப்பனர்கள் குடைச்சல் கொடுத்தால் தாங்கமுடியாதே என்றும், பார்ப்பனரல்லாதார் இடஒதுக்கீடு கேட்டு போராட்டத்தில் இறங்கிவிடக்கூடாதே என்றும் கவலைப்பட்டனர். எனவே எப்படியாவது சாகு மகாராஜாவை மனம்மாற்றி இடஒதுக்கீட்டை கைவிட வைக்க சிலர் விரும்பினர். இதன் பொருட்டு சங்லி எனும் சமஸ்தான மன்னர் பட்வர்தன் தன் பார்ப்பன வழக்கறிஞர் கண்பத்ராவ் அபயங்கர் என்பரை சாகு மகாராஜாவை கன்வின்ஸ் பண்ண அனுப்பினார். அபயங்கர் கோலப்பூர் சென்று சாகு மகாராஜாவை சந்தித்து “எங்களுக்கு (பார்ப்பனர்களுக்கு) ஏன் இத்தகு அநீதியை (பிற்பட்டோர் இடஒதுக்கீடு) இழைக்கிறீர்கள்?” என்று கேட்டார். இடஒதுக்கீட்டை கைவிடக் கோரிக்கை வைத்தார். சாகு பொறுமையாக அபயங்கள் சொல்வதைக் கேட்டார். பிறகு வாருங்கள் பேசிக்கொண்டே ஒரு முக்கிய இடத்துக்குக் செல்வோம் என வழக்கறிஞரை தன் குதிரைலாயத்திற்கு அமைத்துக் சென்றார். குதிரைகளுக்கு அது தீவனம் வைக்கும் நேரம். ஒவ்வொரு குதிரையின் வாயோடு தீவனம் வைக்கப்பட்ட கூடை பிணைக்கப்பட்டிருந்தது. அது அது அமைதியாக சாப்பிட்டுக்கொண்டிருந்தன. மகாராஜா எல்லா குதிரைகளின் முகத்தில் பிணைக்கப்பட்ட தீவனக் கூடைகளை கழட்டச்சொன்னார். பணியாளர்கள் உடன் கழட்டினர். இப்போது ஒரு விரிப்பை விரித்து அதில் தீவனத்தை கொட்டக் சொன்னார். பின் ஒரே நேரத்தில் குதிரைகளை அவிழ்த்துவிடச்சொன்னார். குதிரைகள் பாய்ந்து கொண்டு விரிப்பில் இருந்த தீவனத்தை தின்ன ஓடின. வலிமையான குதிரைகளும் வளர்ந்த குதிரைகளும் பாய்ந்து ஓடி விரிப்பில் இருந்த தீவனத்தை தின்ன ஆரம்பித்தன. நலிவுற்ற வலிமையற்ற குதிரைகள் தீவனத்தை உண்ண முயன்றும் வலிமையான குதிரைகள் நெட்டித் தள்ளியும் பின்னங்கால்களால் உதைத்தும் வலிமையற்றவையைத் துரத்தின.சிறிது நேரத்தால் நோஞ்சான் குதிரைகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு ஒதுங்கி அமைதியாக நின்று தீவனத்தையே பார்த்தவண்ணம் இருந்தன. இதை எல்லாம் பார்ப்பன வழக்கறிஞர் அபயங்கர் பார்த்தார். இப்போது அபயங்கரிடம் சாகு மகாராஜா பேசத்தொடங்கினார். திரு.அபயங்கர், என்ன செய்யலாம் ? வலிமையற்ற குதிரைகளை சுட்டுக்கொன்றுவிடலாமா? அப்படி செய்வது சரியா? அதனால்தான் நான் எவ்வொரு குதிரைக்கும் அதற்கான தீவனத்தை அது மட்டுமே உண்ணும்படி ஏற்பாடு செய்திருக்கிறேன். இந்த ஏற்பாடு இல்லாமல் இப்போது பார்த்தோமே அது போல் தீவனத்தை ஒரு இடத்தில் வைத்து விட்டு அனைத்து குதிரைகளுக்கும் போட்டியை உருவாக்கினால் வலிமையான குதிரைதான் ஜெயிக்கும். வலிமை இல்லாதது பட்டினி கிடக்கும். இதற்கு மாற்றாக நான் எவ்வொரு குதிரைக்கும் உரிய தீவனத்தை உத்ரவாதப்படுத்தும் ஏற்பாட்டுக்குப் பெயர்தான் இடஒதுக்கீடு. இந்த விலங்குகளுக்கான ஏற்பாட்டை நான் என் குடிமக்களுக்கு செய்கிறேன். நீங்கள் (பார்ப்பனர்கள்) மனிதர்களில் சாதியை உருவாக்கி சூத்திரர்களையும் ஆதி சூத்திரர்களையும் காலங்காலமாக விலங்குகளைப்போல நடத்தி வந்துள்ளீர்கள். இப்போது அவர்களுக்கு மறுக்கப்பட்ட உரிமையைப் பெற அவர்களுக்கு வாய்ப்பு தந்துள்ளேன்” என்றார். அபயங்கரால் எதுவும் பேசமுடியவில்லை. மன்னரிடம் விடைபெற்றுக்கொண்டார்.
மும்பை நகரில் 24 மணி நேரத்தில் பெய்த வரலாறு காணாத பெரும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 1094 பேர் வரை உயிரிழந்தனர். அன்று ஒரே நாளில் மட்டும் மும்பை நகரில் 94 செ .மீ மழை பெய்தது. 14000 கோடி ருபாய் மதிப்பிலான சொத்துக்கள் நாசமாகின. இவ்வளவு பெரிய மழை பெய்யும் என்று கணிக்கப்படவில்லை. மிக முக்கியமாக, அத்தகைய பேரழிவிற்கு நகரம் ஒருபோதும் தயாராக இல்லை. புறநகர் பகுதிகள் அதிகம் சேதமாயின. வெள்ளம் ஏற்பட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, நீர் மூலம் பரவும் நோய்கள் வெடித்தன, தொடர்ச்சியான கட்டிடங்கள் மற்றும் சுவர் இடிந்து விழுந்தன….சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையம் 30 மணி நேரத்திற்கும் மேலாக மூடப்பட்டது. கிட்டத்தட்ட இரண்டு நாட்களுக்கு மத்திய ரயில்வே மற்றும் மேற்கு ரயில்வேயின் புறநகர் ரயில்கள் ஓடவில்லை. இந்தப் பேரழிவு மும்பை மெகா வெள்ளம் என்ற தலைப்பிலான நேஷனல் ஜியோகிராஃபிக் ஆவணப்படத்தில் இடம்பெற்றது
பி.ஆர்.பந்துலு: தமிழ் மற்றும் கன்னட சினிமாவின் பிரம்மாண்ட பழம்பெரும் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான பி.ஆர். பந்துலுவின் பிறந்த தினம்! இந்திய சினிமாவில், குறிப்பாக தமிழ் மற்றும் கன்னடத் திரைப்பட உலகில், தனது தனித்துவமான முத்திரையைப் பதித்தவர் பி.ஆர். பந்துலு. ஒரு சிறந்த இயக்குநராகவும், 50க்கும் மேற்பட்ட படங்களைத் தயாரித்த ஒரு வெற்றிகரமான தயாரிப்பாளராகவும் அவர் திகழ்ந்தார். தமிழ்த் திரையுலகில் பி.ஆர். பந்துலு: தமிழில் அவர் இயக்கிய பல பிரம்மாண்ட திரைப்படங்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளன. அவற்றில் சில: வீரபாண்டிய கட்டபொம்மன் (1959): இது பி.ஆர். பந்துலுவின் தனித்த அடையாளத்தை வெளிப்படுத்திய ஒரு தலைசிறந்த படைப்பு. காட்சியமைப்புகளாலும், வீரம் செறிந்த வசனங்களாலும் இன்றும் கொண்டாடப்படும் இந்தப் படம், வீரபாண்டிய கட்டபொம்மன் என்றாலே நடிகர் திலகம் சிவாஜிகணேசனை நம் கண்முன்னே நிறுத்துகிறது. கட்டபொம்மனின் வரலாறு குறித்த சர்ச்சைகள் இருந்தாலும், வெள்ளையனை எதிர்த்து நின்று தூக்குக் கயிற்றை முத்தமிட்ட அந்த மாவீரனின் தியாகத்தைத் தமிழகத்தின் பாமர மக்களுக்கும் அறிமுகம் செய்த பெருமை பி.ஆர். பந்துலுவையே சாரும். கர்ணன்: மகாபாரதத்தின் ஒரு பகுதியான கர்ணனின் தியாக வாழ்க்கையை அழுத்தமாகப் பதிவு செய்த ஒரு காவியப் படைப்பு. தங்கமலை ரகசியம்: திகில் மற்றும் சாகசக் கலவையாக அமைந்த ஒரு வெற்றிப் படம். சபாஷ் மீனா: காமெடி மற்றும் காதல் நிறைந்த ஒரு பொழுதுபோக்கு திரைப்படம். பலே பாண்டியா: எம்.ஜி.ஆரை வைத்து இயக்கிய ஒரு சாகசத் திரைப்படம். ஆயிரத்தில் ஒருவன்: எம்.ஜி.ஆரின் திரை வாழ்க்கையில் ஒரு மைல்கல்லாக அமைந்த சரித்திர சாகசப் படம். ரகசிய போலீஸ் 115: அதிரடி மற்றும் மர்மம் நிறைந்த ஒரு ஸ்பை த்ரில்லர். தேடிவந்த மாப்பிள்ளை: ஒரு குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம். கன்னடத் திரையுலகில் பங்களிப்பு: தமிழில் மட்டுமல்லாமல், கன்னடத்திலும் பி.ஆர். பந்துலுவின் பங்களிப்பு மகத்தானது. அவர் இயக்கிய கன்னடப் படங்கள் இன்றைக்கும் போற்றப்படுகின்றன: கிட்டூர் சென்னம்மா: வீரமங்கை கிட்டூர் ராணி சென்னம்மாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு சரித்திரப் படம். கிருஷ்ண தேவராயா: விஜயநகரப் பேரரசர் கிருஷ்ணதேவராயரின் பெருமைகளைச் சித்தரிக்கும் வரலாற்றுப் படம். ஸ்கூல் மாஸ்டர்: சமூக கருத்துள்ள ஒரு திரைப்படம். பி.ஆர். பந்துலு, தனது திரைப்படங்கள் மூலம் வெறும் பொழுதுபோக்கை மட்டும் வழங்காமல், சரித்திர சம்பவங்களையும், சமூகக் கருத்துக்களையும் மக்களிடம் கொண்டு சேர்த்தவர். அவரது படங்கள், காலத்தால் அழியாத கலைப் படைப்புகளாக இன்றும் போற்றப்படுகின்றன. அவரது பிறந்த தினத்தில், தமிழ் மற்றும் கன்னடத் திரையுலகிற்கு அவர் அளித்த மகத்தான பங்களிப்பை நினைவு கூர்வோம்.
உலகறிந்த ஆங்கில இலக்கியவாதி ,இலக்கியத்திற்கான நோபல் பரிசு (1925) மற்றும் ஆஸ்கார் (1938) விருது ஆகிய இரண்டையும் பெற்ற ஜார்ஜ் பெர்னாட்ஷா பர்த் டே டுடே! ஜார்ஜ் பெர்னாட் ஷா… அயர்லாந்தைச் சேர்ந்த நாடக ஆசிரியரான இவர் 1856-ஆம் ஆண்டு ஜூலை 26-ல் பிறந்து 1950 நவம்பர் 2 வரை 94 ஆண்டுகள் இந்த பூமியில் வாழ்ந்தார். தந்தை அரசாங்க உத்தியோத்தில் இருந்தாலும் அவரின் குடிப்பழக்கம் காரணமாக சிறுவயதில் சராசரியான ஒரு வாழ்க்கையை வாழ முடியாதவராக இருந்தார் பெர்னாட் ஷா. சிறுவயதில் அவரை வெளியே அழைத்துச் சென்று ஊர் சுற்றிக் காண்பிக்க அவர் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணிடம் சொல்லிருந்தனர் பெற்றோர். அதன்படி அந்தப் பணிப்பெண், அவரை பூங்கா, கால்வாய், செல்வந்தர் வாழும் பகுதிகளுக்கு அழைத்துச் செல்லாமல், தான் இருக்கும் ஏழைகளின் குடியிருப்புப் பகுதிக்கு அழைத்துச் சென்று பொழுதைக் கழித்தார். இது வாழ்நாள் முழுவதும் வறுமைக்கு எதிராக பெர்னாட் ஷா இருந்ததற்கும், வறுமையை ஒழிப்பதில் வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றுவதற்குமான முதல் அனுபவமாக இருந்தகாக பின்னாளில் பெர்னாட் ஷாவே நினைவுகூர்ந்துள்ளார். அதேபோல பெரிய சொற்பொழிவாளராகி மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போது, காரல் மார்க்ஸின் மூலதனத்தை படிக்காதவர்கள், பொருளாதாரம் பற்றி பேசக்கூடாது என கூட்டத்தில் ஒரு தெரிவித்ததைத் தொடர்ந்து, மூலதனத்தை தேடிப் படிக்கத் தொடங்கிய ஷாவின் வாழ்க்கைப் பயணமே அதன் பின்னர் மாற்றம் அடையத் தொடங்கியது. அதன் பின்னர் ஒரு தீவிர சமூகவாதியாக ஃபேபியன் சொசைட்டிக்காக (Fabian Society) பெர்னாட் ஷா எழுதியும் சொற்பொழிவாற்றியும் வந்தார். ஆணுக்கு சமமான பெண்ணுரிமையைப் பெறுதல், உழைக்கும் வர்க்கத்தினர் சுரண்டப்படுவதை ஒழித்தல், உற்பத்தி நிலங்களின் தனியார் உரிமையை மீட்டல், ஆரோக்கியமான வாழ்க்கை முறையை பரப்புதல் என சுரண்டலுக்கு எதிராக சொற்பொழிவுகளை நிகழ்த்தும் சொற்பொழிவாளரானார். ஆரம்ப நாட்களில் இசை, இலக்கிய விமர்சனமே அவரது பொருளாதார ரீதியாக வெற்றியைத் தேடித் தந்தன. அவற்றில் தனது திறனைக் கொண்டு மிக நேர்த்தியான பத்திரிகைப் படைப்புகள் பலவற்றை எழுதினார். ஆனாலும் அவரது பிரதான திறமை நாடகமே. பார்க்கும் அனைத்தையும் நாடகமாகவே பார்க்கும் பெர்னாட் ஷா அவர் 60-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதியுள்ளார். இலக்கியம், இசை விமர்சனம், நாவல், சிறுகதை, நாடகம் என கலையின் அனைத்து வடிவங்களிலும் பங்காற்றியுள்ள பெர்னாட் ஷா புகைப்படக் கலையிலும் ஆர்வம் கொண்டு ஒரு அமெச்சூர் ‘போட்டோகிராஃபரா’கவும் விளங்கினார். இலக்கியத்திற்காக நோபல் (1925) பரிசும், திரைப்பட பணிக்காக ஆஸ்கர் விருதும் பெற்றிருக்கிறார். இவ்விரண்டு விருதுகளையும் பெற்ற ஒரே கலைஞர் இவர் மட்டுமே. விடாது வறுமை வாட்டிய போதும் துவண்டு விடாமல், தொடர்ந்து போராடி வாழ்க்கையை வெற்றிகரமானதாக மாற்றிக்கொண்டவரிவர் அப்பேர்பட்ட பெர்னாட் ஷாவின் மேற்கோள்களில் சில இங்கே… மாற்றம் இல்லாமல் முன்னேற்றம் சாத்தியமற்றது; எண்ணங்களை மாற்றிக்கொள்ள முடியாதவர்களால் வேறு எதையும் மாற்ற முடியாது. மனிதர்களுள் இரு வகையினர் உண்டு. திறமையானவர்கள் ஒருவகை, மற்றவர்கள் திறமையைப் பயன்படுத்தாதவர்கள். நகைச்சுவை உணர்ச்சி இல்லாதவர்களுக்கு வாழ்க்கை ஒரு பெருஞ்சுமை ஆகிவிடும். உயிருள்ளவரை உழைத்து வாழ விரும்புகிறேன். உழைக்க உழைக்க எனக்கு உயிர் வாழும் விருப்பம் அதிகமாகிறது. அனுபவம் ஒரு கடுமையான ஆசிரியர், அது வலிகளை தந்த பிறகுதான் பாடத்தை கற்பிக்கிறது. இன்பமும் துன்பமும் பணத்தைச் சார்ந்தவை அல்ல. மனதைச் சார்ந்தவை. பணம் பசியைத்தான் போக்கும். துன்ப உணர்ச்சியைப் போக்காது. எதைச் செய்ய வேண்டும், எப்படிச் செய்ய வேண்டும், எங்கே செய்ய வேண்டும் என அறிந்திருப்பவரே நல்ல தலைவர். பெண்ணை ஒரு பொருள்போல நடத்துவதால்தான் எல்லா இன்னல்களும் வருகின்றன. செல்வத்தை சம்பாதிக்காமல் அனுபவிக்க உரிமை கிடையாது. அதுபோலவே இன்பத்தையும் உண்டாக்காமல் நுகரமுடியது.
