இந்தியாவில் வருமான வரி நாள் (Income Tax Day) கொண்டாடப்படுகிறது. 1860 ஆம் ஆண்டு இதே நாளில், சர் ஜேம்ஸ் வில்சன், இந்தியாவின் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் முதல் நிதியமைச்சராக (Finance Member of the Viceroy’s Executive Council) இருந்தவர், இந்தியாவில் முதன்முதலாக வருமான வரி சட்டத்தை அறிமுகப்படுத்தினார். இது இந்திய பொருளாதார வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது. வரலாற்றுப் பின்னணி: 1860-ல் அறிமுகம்: பிரிட்டிஷ் இந்திய அரசாங்கம், 1857-ன் சிப்பாய் கிளர்ச்சிக்குப் பின் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, வருமான வரியை அறிமுகப்படுத்தியது. இந்த வரி, அரசாங்கத்தின் நிதி ஆதாரங்களை வலுப்படுத்துவதற்காக விதிக்கப்பட்டது. சர் ஜேம்ஸ் வில்சன்: இவர் இந்தியாவின் முதல் பட்ஜெட்டை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமைக்கு உரியவர். அவரது முயற்சியால், வருமான வரி ஒரு முறையான வருவாய் மூலமாக உருவாக்கப்பட்டது. வருமான வரியின் பரிணாமம்:ஆரம்ப காலம்: 1860-ல் அறிமுகப்படுத்தப்பட்ட வரி, முதலில் மிகவும் எளிமையானதாக இருந்தது. ஆனால், பின்னர் பல மாற்றங்களுக்கு உட்பட்டது. நவீன காலம்: இன்று, இந்தியாவில் வருமான வரி சட்டம் 1961 (Income Tax Act, 1961) மூலம் நிர்வகிக்கப்படுகிறது. இது தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் வருமானத்தின் மீது விதிக்கப்படுகிறது. வருமான வரித் துறை: இந்திய வருமான வரித் துறை (Income Tax Department), மத்திய நேரடி வரிகள் வாரியத்தின் (CBDT) கீழ் இயங்குகிறது. இது வரி வசூல், மதிப்பீடு மற்றும் நிர்வாகத்தை கவனிக்கிறது. வருமான வரி நாளின் முக்கியத்துவம்:விழிப்புணர்வு: இந்த நாள், வரி செலுத்துவதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கும் மக்களின் பொறுப்பை நினைவூட்டுகிறது. பொருளாதார பங்களிப்பு: வருமான வரி, அரசாங்கத்தின் முக்கிய வருவாய் மூலங்களில் ஒன்றாக உள்ளது. இது உள்கட்டமைப்பு, கல்வி, மருத்துவம், பாதுகாப்பு போன்றவற்றுக்கு நிதியளிக்க உதவுகிறது. வெளிப்படைத்தன்மை: இந்திய வருமான வரித் துறை, டிஜிட்டல் மயமாக்கல் மூலம் (e-filing, PAN, Aadhaar இணைப்பு) வரி செலுத்துவதை எளிதாக்கியுள்ளது. கொண்டாட்டம்:வருமான வரித் துறை, இந்த நாளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் பொது மக்களுக்கு வரி செலுத்துவதன் முக்கியத்துவத்தை விளக்கும் பிரச்சாரங்களை நடத்துகிறது. வரி செலுத்துவோருக்கு மரியாதை செலுத்தும் வகையில், சிறந்த வரி செலுத்துவோருக்கு விருதுகளும் வழங்கப்படுகின்றன. இந்த நாள், இந்திய பொருளாதாரத்தின் வளர்ச்சியில் வருமான வரியின் பங்கை மக்களுக்கு உணர்த்துவதற்கு ஒரு சிறந்த வாய்ப்பாக அமைகிறது.
உலகக் குடிமகன் – காரி டேவிஸ் காலமான தினமின்று! அமெரிக்கக் குடியுரிமையைத் துறந்து, ‘உலகக் குடிமகன்’ என்று தன்னை அறிவித்துக்கொண்டவர்; ஐ.நா.சபைக் கூட்டத்தில் தனது பாஸ்போர்ட்டை கிழித்தெறிந்தவர்; சமூக அமைதியின் பொருட்டு, உலக குடிமகன்களுக்கான சர்வதேச அரசாங்கத்தை ஏற்படுத்திய காரி டேவிஸ் (Garry Davis, 1921-2013) காலமான நாள் இன்று. அடக்கு முறை, சிறைவாசம், ஏளனம், நகைச்சுவை இவைகளையெல்லாம் பொருட்படுத்தாத மனதுடன் , 1953 செப்டம்பர் மாதம் ‘உலக அரசாங்கத்தை’ ஏற்படுத்தினார் காரி டேவிஸ். இன்றும் அவர்கள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு ‘ உலக பாஸ்போர்ட்’ வழங்கப்பட்டு வருகிறது. 150 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த பாஸ்போர்ட்டை (நிபந்தனைக்குட்பட்டு) அங்கீகரித்துள்ளன. நியூயார்க் நகரில் செயல்படும் இந்த அமைப்பின் “World Service Authority” பிரிவில், இதுவரை 25,00,000 பேர் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். அவர்களுக்கென்று தனி சட்டங்களும் வரையறை செய்யப்பட்டுள்ளன. அதில் இணைந்து கொள்வதற்கான விதிகளும், விண்ணப்பமும் அவர்களது தளத்தில் உள்ளன. (www.worldservice.org).
இந்திய செயற்கை கோள் மனிதர்‘ உடுப்பி ராமச்சந்திர ராவ் காலமான தினம் இன்று! உடுப்பி ராமச்சந்திர ராவ். நம்ம மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் இளங்கலை அறிவியல் பட்டம் பெற்றார். பனாரஸ் ஹிந்து பல்கலை, குஜராத் பல்கலை ஆகியவற்றில் பட்டங்கள் பெற்றார்.’ ‘காஸ்மிக்’ கதிர் ஆராய்ச்சி செய்யும் இயற்பியலாளராக தன் பணியை தொடங்கினார். பின், சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘நாசா’வில் பணியாற்றினார். 1966-ல் நாடு திரும்பியவர், அகமதாபாதில் வானியல் தொடர்பான படிப்பை துவக்கி வைத்தார். செயற்கை கோள் தொடர்பான ஆராய்ச்சிகளில் தீவிரமாக பங்கேற்றார். 1975-ல் நம் நாடு ஏவிய முதல் செயற்கை கோளான, ‘ஆரியப்பட்டா’வின் வெற்றியில் பெரும் பங்காற்றினார். 1984 முதல் 19-94 வரை ‘இஸ்ரோ’ தலைவராக பணியாற்றினார். ‘பத்மபூஷன், பத்மவிபூஷன்’ உட்பட ஏராளமான விருதுகளை பெற்றுள்ளார். 2017 இதே ஜூலை- 24ம் தேதி தன் 85வது வயதில் இயற்கை எய்தினார்.
நிலாவில் இறங்கிய அப்பல்லோ 11 விண்கலம் மூன்று விண்வெளி வீரர்களுடன் பூமிக்கு வெற்றிகரமாக திரும்பி வந்து பாதுகாப்பாக பசிபிக் கடலில் இறங்கியது. அப்பல்லோ 11 என்பது சந்திரனிலிறங்கிய முதல் ஆளேற்றிய பயணத் திட்டமாகும். இது அப்பல்லோ திட்டத்தின் 5 ஆவது ஆளேற்றிய பயணத் திட்டமாகும். இது ஜூலை 16, 1969இல் 39ஏ ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்டது. ஜூலை 24, 1969ல் திரும்பியது. இத்திட்டத்தில் கட்டளை அலுவலராக நீல் ஆம்ஸ்ட்ரோங்கும், கட்டளைக் கூறு விமானியாக மைக்கேல் கொலின்சும், சந்திரக் கூறு விமானியாக எட்வின் ஆல்ட்ரினும் சென்றனர். ஆம்ஸ்ட்ராங் நிலவில் நடந்த முதல் மனிதராவார். அல்ட்ரின் அவருக்கு அடுத்தவராவார். கொலின்ஸ், நிலவின் மேல் சுற்றுப்பாதையிலேயே இருந்தார்.
1985 ஜூலை 24 இதேநாளில் வண்டலூரில் 7 கோடி செலவில் உயிரியல் பூங்காவை அப்போதைய முதல்வர் எம் ஜி ஆர் திறந்துவைத்தார் சென்னையில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதிகம் கூடும் இடங்களில் ஒன்று வண்டலூர் உயிரியல் பூங்கா. ஆயிரக்கணக்கான விலங்குகளுடன் பல ஏக்கர் பரப்பளவில் பரந்து விருந்திருக்கும் இந்த பிரம்மாண்ட பூங்காவை அமைக்க பிண்ணனியாக இருந்தது ஒரு தனி நபரின் முயற்சி என்று சொன்னால் நம்ப முடிகிறதா?, ஆனால் அதுதான் உண்மை. அந்த சாதனை நபர் தான் எட்வர்ட் கிரீன் பால்ஃபர் என்பவர். மருத்துவரான இவர் 1836 இல் இந்தியாவிற்கு வருகை தருகிறார். நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இவர், அடிக்கடி அரசின் மொழி பெயர்ப்பாளராகவும் செயல்பட்டு வந்துள்ளார். இதற்கிடையில் தான் பால்ஃபர் இந்தியாவின் புள்ளி விவரங்களை திரட்டி நமது நாட்டின் பருவ நிலைகள் மற்றும் அதனால் தங்களது படைகளை எப்படி பாதுகாப்பது?, தட்ப வெப்பத்தால் உடலில் ஏற்படும் தாக்கங்கள் குறித்து விஞ்ஞான ரீதியாக விரிவாக விளக்கி கட்டுரைகளை வெளியிடுகிறார்.மேலும் அப்போதைய மதராசபட்டினத்தை ஆக்கிரமித்திருந்த கிழக்கிந்திய கம்பெனிக்கு பால்ஃபர் அறிவுறுத்தல் படி பஞ்சத்தில் இருந்து தப்பிக்க மரங்களை அழிக்கக்கூடாது என்ற முடிவுக்கு வருகின்றனர். இப்படித்தான் மெட்ராஸ் வனத்துறை என்று கிழக்கு இந்திய கம்பெனியால் இந்த உயிரியல் பூங்கா தொடங்கப்பட்டது. இந்த நிலையில் இதற்கு பொறுப்பாளராக இருந்த பால்ஃபர் முதன்முறையாக ஒரு சிறிய முயற்சியாக புலி மற்றும் சிறுத்தையை அருங்காட்சியகத்தில் வைத்து சோதனை செய்கிறார். அப்போது இந்த விலங்குகளை பார்க்க கூட்டம் கூட்டமாக மக்கள் படையெடுத்துள்ளனர். இந்த கூட்டத்தை பயன்படுத்தி, தன்னுடைய நண்பரும், கர்நாடகாவின் நவாபான குலாம் கவுஸ் கானிடம் மெட்ராஸ் உயிரியல் பூங்காவிற்கு காட்டு விலங்குகளை அனுப்பி வைக்க கோரிக்கை விடுத்துள்ளார். அதன்படி கர்நாடகாவில் இருந்து 360 விலங்குகள் அனுப்பி வைக்கப்படுகிறது. இதனையடுத்து பூங்காவை பார்வையிட வரும் மக்கள் கூட்டத்தின் கணக்கெடுப்புகள் மூலம் 1855 இல் தொடங்கப்பட்டது தான் மெட்ராஸ் உயிரியல் பூங்கா.1855 ஆம் ஆண்டு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மெட்ராஸ் பூங்கா என்ற பெயரில் விலங்கியல் பூங்கா அமைக்கப்பட்டது. இதுதான் இந்தியாவின் முதல் உயிரியல் பூங்கா. பின்னர் 1985 ஆம் ஆண்டு பூங்காவை விரிவாக்கம் செய்வதற்காக வண்டலூருக்கு மாற்றப்பட்டு, வண்டலூர் உயிரியல் பூங்கா என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. அப்போதைய முதலமைச்சர் எம்ஜிஆர் 1985 ஆம் ஆண்டு 24 ஆம் தேதி வண்டலூரில் உயிரியல் பூங்காவை திறந்து வைத்தார். இப்படித்தான் 1200 ஏக்கர் பரப்பளவில் பால்ஃபர் என்ற ஒற்றை மனிதர் போட்ட விதை இன்று ஆயிரக்கணக்கான விலங்குகள் அமைதியாக இளைப்பாற விருட்சமாக மாறி நிற்கிறது.
