உலக மாலுமிகள் தினம் சர்வதேச அளவில் நடைபெற்று வரும் சரக்கு வர்த்தகத்தில் கிட்டத்தட்ட 90 சதவீதம் கப்பல்களால் கொண்டு செல்லப்படுகிறது, இந்த இந்த கப்பல்களை நிர்வகிக்கும் கடற்படையினர் வர்த்தகம் சீராக நடத்துவதை உறுதி செய்ய இரவு பகல் பாராது அயராது உழைக்கின்றனர். அவர்களின் பங்களிப்புகளை கவுரவிக்கும் வகையிலும், அவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காகவும் சர்வதேச மாலுமிகள் தினம் கொண்டாடப்படுகிறது. வரலாற்றில் புதிய புதிய நிலங்களைத் தேடி ஆழ்கடல் முழுவதும் பயணித்த பலத் தரப்பட்ட மாலுமிகளைப் பற்றி நிறைய படித்திருப்போம். அவர்களின் கப்பல், மாலுமிகள் வாழ்க்கை, இன்ப துன்பங்கள், கஷ்ட நஷ்டங்கள், போராட்டங்கள் என்னென்ன என்பதைப் பற்றிப் படித்துள்ளோமா! ஒரு மாலுமி எப்படி உருவானார் அல்லது எப்படி உருவாக்கப்பட்டார் என்பதைப் பற்றி தெரிந்துள்ளோமா? கடல் பயணம் என்பது கடலில் மிதந்து ஊஞ்சலாட்டம் போடும் ‘நிலா அது வானத்து மேலே’ பாடலைப் போன்றதல்ல. பொங்கும் அலைகளுக்கு மத்தியில் ஆடும் சூதாட்டம். அந்தச் சூதாட்டத்தில் மாலுமிகள் பணயம் வைப்பது தங்கள் உயிரை. கடல் ஒரு போதை வஸ்துவைப் போன்றது. கடல் பயணம் மேற்கொள்பவர்களில் அதைக் கண்டு பயந்து மிரண்டு ஓடிவந்தவர்களும் உண்டு. அதுவே கதியெனக் கிடந்து கடலிலேயே கரைந்தவர்களும் உண்டு. அப்படி ஒருவர் மாலுமியா உருவாகுவது இப்போது நான்கு ஆண்டுகள் ஏட்டுக் கல்வியில் நடந்து முடிந்துவிடுகிறது. ஆனால் அந்தக் காலத்துப் பெற்றோர் தன் மகனை மாலுமியாக்க விரும்பினால், 14 வயசு முடிஞ்சவுடன் அவரைச் சம்பளமே இல்லாத வேலையாளாக ஒரு கப்பலில் சேர்த்துவிடுவார்கள். காமெடி கிங் நேசமணியின் மொழியில் சொல்ல வேண்டுமென்றால் அப்பரசன்டிகளாகச் சேர்த்துவிடுவார்கள். அந்தக் கப்பலில் அவர் கண்டிப்பாக ஒன்பது ஆண்டுகள் பணி புரிய வேண்டும். தன் கப்பலில் சம்பளமின்றிப் பணிபுரிவதற்குக் கைம்மாறாக அந்தக் கப்பல் தலைவர் கடல் பயணம் குறித்த அனைத்து விஷயங்களையும் பாடங்களையும் கற்பிக்க வேண்டும். அப்படி அனுபவக் கல்வியாகக் கற்று வரும் மாணவர்கள் தங்கள் ஒன்பது ஆண்டுப் பயணத்தை முடித்துத் திரும்புகையில் ஏதேனும் ஒரு கப்பலில் முதல்கட்ட பணியாளாகவோ, கப்பல் தலைவனாகவோ வருமளவுக்குத் தரம் உயர்ந்துவிடுவார்கள். செல்வந்தரின் மகனாக இருந்தாலும் சரி ஏழைக் குடும்பத்தில் பிறந்த மகனாக இருந்தாலும் சரி அந்த மாணவன் ஒன்பது ஆண்டுகள் முழுவதும் தாங்கள் பயணிக்கும் கப்பலின் தலைவனுக்குக் கீழ் பணிபுரிந்தே தீர வேண்டும். 14 வயதில் கப்பல் தலைவனிடம் மகனை ஒப்படைக்கும் பெற்றோர், ஒரு குறிப்பிட்ட தொகையையும் கொடுத்து அனுப்புவார்கள். அது தன் மகனுக்கு அனைத்து நுணுக்கங்களையும் தந்திரங்களையும் கற்றுக்கொடுக்கத் தரப்பட்டது. செல்வந்தர்கள் மட்டுமே இந்தத் தொகையைத் தந்துள்ளார்கள். ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் இதைக் கொடுக்கத் தேவையில்லை. ஆனால், அதில் சில இழப்புகளும் இருக்கின்றன. தங்கள் மகனுக்குக் கப்பல் தலைவன் எல்லா நுணுக்கங்களையும் கற்றுத் தர மாட்டான். சில ரகசியமான சூட்சுமங்கள் ஏழை மகன்களுக்குக் கற்றுக் கொடுக்கப்படாமலே போகும். அதனால், அவர்கள் பெரும்பாலும் ஒரு தலைவனின் ஊழியன் என்ற அளவுக்கு மட்டுமே வளர முடிந்துள்ளது. அப்பரசன்டிகள் என்று அழைக்கப்பட்டாலும் அவர்களுக்கான ஊதியத்தையும் கப்பல் தலைவன் கொடுத்தே அனுப்புகிறான். கப்பல் பயணம் செய்யும் அந்த ஒன்பது ஆண்டுக்காலத்தில் அவர்களுக்குப் பணிகளைத் தவிர ஊதியம் என்று எதுவும் கொடுக்கப்படாது. ஆனால், இறுதியில் மொத்தமாக அவர்களுக்கு ஒரு தொகை ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது. அப்படி கிடைக்கும் பெரும் ஊதியத் தொகையை எதிர்பார்த்துக்கூடப் பல ஏழைக் குடும்பங்கள் தங்கள் மகன்களை இப்படியாக அனுப்பி வைத்து, எதிர்காலத்தில் அவர்களே பல சாகசங்களுக்குச் சொந்தக்காரர்களான வரலாறுகளும் கடலுக்குள் மாலுமிகளின் கதையாக மிதந்து கொண்டிருக்கின்றன. மாலுமிகளுக்குப் பல்வேறு பணிகள் உண்டு. கடல் பயணம் தொடங்கும் முன் எந்தக் கப்பலாக இருந்தாலும் சரி, அதற்குச் செப்பனிடுதல் அவசியம். அதன் முந்தைய பயணத்தில் ஏற்பட்ட தொய்வுகளை, சேதங்களைச் சரிசெய்து அடுத்தகட்ட நீண்ட பயணத்துக்குத் தயார்படுத்த வேண்டும். பாய்மரங்கள், உமி என்று பலவும் சேதமடைந்திருக்கும். அவை புதுப்பிக்கப்பட வேண்டும். கடலில் ஏற்படும் கடுமையான புயல் மற்றும் மோசமான அலைகளால் அதன் ஓரங்கள், இணைப்புகள் தேய்ந்திருக்கலாம். அதை மறுசீரமைக்க வேண்டும். எவ்வளவு உறுதியான சிறந்த கப்பலாகவே இருந்தாலும் மறுசீரமைப்பு வேலைகளைச் செய்யாமல் மீண்டும் கடலில் இறக்குவது தற்கொலை செய்துகொள்வதற்குச் சமம். இந்தப் பணிகளையெல்லாம் மாலுமிகள் செய்ய வேண்டும். கடல் பயணம் தொடங்கும் முன் மறுசீரமைப்பு வேலைகளைச் செய்துமுடிக்கும் மாலுமிகள், அடுத்த பயணத்துக்குத் தேவையான நீர், உணவு மற்றும் இதரப் பொருள்களைக் கப்பலில் ஏற்றுவார்கள். ஆடு, பன்றி, மாடு என்று இறைச்சிக்காகவே அவற்றையும் ஏற்றிக்கொள்வார்கள். இந்த முதல்கட்ட வேலைகள்தான் மாலுமிப் பாடத்தின் முதல் பகுதி. இவற்றையெல்லாம் செய்து செய்து தேர்ந்த பிறகு, மாணவர்கள் அடுத்தகட்டத்துக்குச் செல்வார்கள். பயணத்தின்போது, உணவு, பீர் போன்றவை அளவுக்கு அதிகமாகவே எடுத்துச் செல்லப்படும். கடலில் கப்பல் ஆடும் ஆட்டத்தில் பேரல்கள் விரிசல் விழுந்து நிறைய உணவுகள், பீர், நீர் போன்றவை சேதமடையும். அதனால், அவற்றை அளவாக மட்டுமே எடுத்துச் செல்லக் கூடாது. அவை தேவைக்கு அதிகமாகவே இருக்க வேண்டும். கடல் பயணத்தின்போது கயிறுகளில் ஏறிச்சென்று கப்பல் பாய்மரத்தின் உச்சியில் நின்று சுற்றிப் பரந்திருக்கும் கடலை நோட்டமிட வேண்டும். 30 முதல் 50 அடிகள் உயரத்தில் ஒரு பாய்மரத்திலிருந்து இன்னொன்றுக்கு நீண்டிருக்கும் கயிறுகளில் நடந்து சென்று அவற்றை விரிக்கும் வேலைகளை, அவிழ்த்துக் கட்டிவைக்கும் வேலைகளைச் செய்ய வேண்டும். கேட்பதற்குச் சாதாரணமாகத் தோன்றலாம். ஆடிக்கொண்டேயிருக்கும் கப்பலில் அதுவும் அதிகமான அலைகளுக்கு மத்தியிலே கவிழ்ந்துவிடும் வேகத்தில் கப்பல் ஆடும்போதும் அதே 50 அடி உயரத்தில் கைப்பிடியற்ற குச்சியில் நின்று கப்பல் ஏதேனும் உதவிக்கு வருகிறதா என்பதிலிருந்து வானிலையைப் புரிந்துகொள்ள, காற்றின் தன்மையை உணர, கரை ஏதேனும் தெரிகிறதா என்பது வரை அனைத்தையும் அதில் ஏறித்தான் தெரிந்துகொள்ள முடியும். அச்சுப் பிசகினாலும் அதிலிருந்து விழுந்துவிடும் நிலைதான். அதிலிருந்து விழுகையில் கப்பலில் விழுந்தால் என்ன கடலில் விழுந்தால் என்ன, எங்கு விழுந்தாலும் மரணம் நிச்சயம். அந்த அளவுக்கு ஆபத்தான வேலையை ஏதோ வீட்டுச் சுவரில் சாய்த்து வைத்திருக்கும் ஏணியில் ஏறுவதைப் போல் ஏறிச்சென்று தங்கள் பணியை முடிப்பார்கள் மாலுமிகள். பெரும்பாலும் ஒருவர் கடலில் விழுந்துவிட்டால் அவரைக் காப்பாற்ற எடுக்கப்படும் முயற்சிகள் மிகக் குறைவே. அவரைக் காப்பாற்றச் சென்று மற்றவர்களும் தங்கள் உயிரைத் தியாகம் செய்யத் துணிய மாட்டார்கள். ஏனென்றால், கடலுக்கு நடுவே பயணிக்கும் ஒரு கப்பலும் அதன் மாலுமிகளும் பிழைக்க வேண்டுமென்றால் ஆள் பலம் மிக மிக முக்கியம். ஆகவே, எந்தத் தலைவனும் பிழைக்க வாய்ப்பிருந்தால் மட்டுமே ஒருவரைக் காப்பாற்றத் தன் மாலுமிகளுக்குக் கட்டளையிடுவான். ஊதித்தள்ளும் சூறாவளிக் காற்றுக்கு மத்தியில்தான் ஆபத்துகள் அதிகமிருக்கும். கும்மிருட்டிலும் கடுங்குளிரிலும்கூடத் தங்கள் பணிகளை மாலுமிகள் சிறப்பாகச் செய்தாக வேண்டும். இல்லையேல், நீரின் நடுவே நிற்கும் அந்த ஒற்றைக் கப்பலில் அவர்கள் அனைவரும் உயிர்பிழைப்பது சிரமம். சூறாவளிக் காற்றின் நடுவே கப்பலை நிரப்பும் கடல் நீரில் வழுக்கி விழும் மாலுமிகளைத் தூக்கிப் பிடித்துக் காப்பாற்றக்கூட நேரமிருக்காது. கப்பல் மூழ்கிவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கப்பல் தளத்தை நிரப்பும் கடல்நீரையும் வெளியேற்றியாக வேண்டும். மாலுமிகள் வழுக்கி விழுந்துகொண்டேயிருந்தால் யார் கப்பலைக் காப்பாற்றுவது. ஆளுக்கொரு வேலையாகப் பிரித்துக் கொடுத்துத் திறம்படக் கப்பலைக் காப்பாற்றத் திட்டமிட வேண்டியது தலைவனின் பொறுப்பு. தலைவன் ஒரு தவறான முடிவை எடுத்தாலும், அது அவரது கப்பலில் இருக்கும் அனைவரின் உயிரையுமே பறித்துவிடும் அளவுக்கு ஆபத்தைக் கொண்டுவந்துவிடும். இதை எல்லாம் சகலரும் அறிய வேண்டுமென்ற நோக்கில்தான் ஐ.நா.,சபையின் சிறப்பு நிறுவனமான சர்வதேச கடல்சார் அமைப்பு 2010ம் ஆண்டு ஜூன் 25ஐ சர்வதேச மாலுமிகள் தினமாக அறிவித்தது. 2011 முதல், உலகளாவிய வர்த்தகம் மற்றும் போக்குவரத்துக்கு இன்றியமையாத மாலுமிகள் / கடற்படையினரை கவுரவிக்கவும், அவர்களை ஊக்குவிக்கவும் சர்வதேச மாலுமிகள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் பின்பற்றப்பட்டு வருகிறது. இந்த தினம் ஐக்கிய நாடுகளின் பட்டியலிலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தினத்தில், வெளிநாட்டு துறைமுகங்களில் மாலுமி உரிமைகள், அவற்றின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் போன்ற பிரச்சினைகளை முன்னிலைப்படுத்தவும், விவாதிக்கவும் (ஐ.எம்.ஓ) வாய்ப்பை பெறுகிறது. உலகம் முழுவதும் உள்ள 1.5 மில்லியன் மாலுமிகளுக்கு நன்றி செலுத்தவும், அவர்களை கவுரவிக்கவும் இந்த தினத்தில் உறுதி ஏற்போம். சர்வதேச மாலுமிகள் தினமான இன்று, சில நகரங்களில் மாலுமிகளுக்காக சிறப்பு நிகழ்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
உலக வெண்புள்ளிகள் தினம் வெண்புள்ளி நோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஜூன் 25-ம் தேதி உலக வெண்புள்ளி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. புகழ்பெற்ற பாப் இசைக்கலைஞர் மைக்கேல் ஜாக்சன் இந்நோயால் பாதிக்கப்பட்டார். அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஜாக்சன் மறைந்த தினமான ஜூன் 25-ம் தேதி உலக வெண்புள்ளி தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. வெண்புள்ளி நோயால் நாடுமுழுவதும் 6.25 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 40 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் உளவியல்ரீதியான பிரச்சினைகளால் பாதிக்கப்படுகின்றனர். இந்நோய்க்காக லூகோஸ்கின் என்ற மூலிகை மருந்தைடிஆர்டிஓ கண்டுபிடித்துள்ளது. இம்மருந்தை 300 முதல் 400 நாட்கள் வரை தொடர்ந்து உட்கொண்டால் வெண்புள்ளிகள் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்கிறது. சத்து குறைபாடு காரணமாக இந்நோய் ஏற்படுகிறது. இது தொற்று நோய் அல்ல, கரோனா போல உயிர்க்கொல்லி நோயும் அல்ல. ‘வெண்புள்ளி உள்ளவர்களை வெண்குஷ்டம் கொண்டவர்கள் என்று சொல்லக்கூடாது’ என அரசு ஆணையிட்டுள்ளது.ஆனால், சமூகத்தின் அறியாமைப் பார்வை அவர்களை ஒருகடுமையான நோயாளி மனோபாவத்துக்குத் தள்ளிவிடுகிறது. இதனால், இதுகுறித்த அறிவியல் உண்மைகளை மத்திய, மாநில அரசுகள் அறிவிக்க வேண்டும். அதன்மூலம் லட்சக்கணக்கானோர் மன அழுத்தத்தில் இருந்து விடுபட முடியும். மேலும் முதல்வர் காப்பீட்டு திட்டத்தின்கீழ் பயன்பெற வழி செய்ய வேண்டும் என்று பல ஆண்டுகளாக் எழுப்பும் கோரிக்கை செவி சாய்போர் யாருமில்லை.
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, 1975-ல் அவசர நிலையை (Emergency Period) அறிவித்த தினம் 1975 இல் அப்போதைய பிரதமர் அவசரநிலை பிரகடனம் செய்ததை ஆண்டு தோறும் நினைவுப் படுத்தி வருகிறார்கள் இப்போதைய பிரதமர் மோடி & டீம். உண்மையில் அந்த அவசரநிலைச் சட்டத்தால் நாடெங்கும் சட்டம் ஒழுங்கு நிலைமை மேம்பட்டது. திருட்டு, கொள்ளை போன்ற குற்றங்கள் குறைந்தன. தொழில் துறை மற்றும் உற்பத்தித் துறைகளில் வேலைகள் மற்றும் உற்பத்தி அதிகரித்தது. வேலைநிறுத்தங்கள் மற்றும் போராட்டங்கள் இல்லாததால், உற்பத்தித் திறன் உயர்ந்தது.ஊழல் மற்றும் வரி ஏய்ப்பைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இது அரசுக்கு வருவாயை அதிகரிக்க உதவியது. ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து சீராக இயங்கியது. தாமதங்கள் மற்றும் ரத்துகள் குறைக்கப்பட்டன.தேசிய அளவில் திட்டமிட்டு செயல்படுவது ஊக்குவிக்கப்பட்டது. அவைகளில் ஒன்றுமே மோடி டீமுக்கு தெரியாதாக்கும். அந்த அவசர நிலைக்கு இணையாக மோடி எடுத்த பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் பலரிம் மனதில் ஆறா ரணமாகி உள்ளது தெரியுமா?அதாவது அடுத்த 4 மணி நேரத்தில் ரூபாய் நோட்டுகள் செல்லுபடியாகாமல் போகும் என்றார். கருப்பு பணத்தை ஒழிக்கவும், நாட்டில் ஹவாலா பரிவர்த்தனையை ஒழிக்கவும் இந்த நடவடிக்கையை எடுப்பதாக மோடி தெரிவித்தார். அடுத்த பல மாதங்கள் வங்கிகளிலும் அஞ்சலகங்களிலும் மக்கள் நீண்ட வரிசையில் கால் கடுக்க நின்றனர். வங்கிகளில் தங்களின் பணத்தை மாற்றவும், ஏடிஎம்-களில் பணம் எடுக்கவும் பலரும் பல மணி நேரம் காத்து கிடந்தனர். இதில் பலர் உயிரிழக்கவும் நேரிட்ட நிகழ்வு அந்த காங்கிரசின் 22 மாத அவசர நிலையை விடக் கொடுமையாக இருந்ததை யார் மறக்க முடியும் விவசாயிகளுக்கு எதிராக தீர்மானத்தை எதிர்த்து நிகழ்ந்த போராட்டத்தை அடக்க மோடி அரசு கையாண்ட வழிமுறைகள் அவசரநிலையில் கூட யாருக்கும் தோணாதவை மோடி ஆட்சியில் எதிர்த்து குரல் எழுப்புபவர்கள் நசுக்கப்படுவதும்.. மக்களை அச்சுறுத்துவதும், பணபலத்தால் அதிகாரத்தை விலைக்கு வாங்குவதும், நண்பர்களுக்கு ஆதரவாக செயல்படுவதும் குறிப்பாகச் சொல்வதானால் அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் மக்கள் அச்சுறுத்தப்படுவதெல்லாம் அவசர நிலை காலத்தில் நிகழாதவை அல்லவா? அவசரநிலைக் காலத்தில் பத்திரிகை சுதந்திரம் பறி போனதாக சொல்லும் இந்த நரேந்த்திர மோடி & டீம் அதிகாரத்துக்கு வந்த பிறகு கடந்த பத்தாண்டுகளில் நவீன ஊடகங்கள் முதல் தேசிய-சர்வதேசிய ஊடகங்கள் வரை வேட்டையாடப்பட்டு வருகின்றன. குறிப்பிட்டுச் சொல்வதானால்.. பிபிசி குஜராத் இனப் படுகொலையில் நரேந்திர மோடியின் பங்கை “இந்தியா: மோடியின் கேள்வி” என்ற ஆவணப் படத்தை ஒளிபரப்பி அம்பலப்படுத்தியது. பின்னர் பிபிசியின் தில்லி மற்றும் மும்பை அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். ஊழியர்களின் செல்பேசிகள் மற்றும் மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது ஆய்வு மட்டுமே என்றும், ரெய்டு இல்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. ரெய்டுகள் வழக்கமான நிகழ்வாக மாறியதால், இந்தியாவில் பிபிசி நேரடியாக வேலை செய்வதை நிறுத்திக் கொண்டது. இப்போது இந்தியாவில் அதன் ஊழியர் சங்கம் செய்திகளின் பொறுப்பில் உள்ளது. தி வயர் பாஜக அரசின் பார்வையை உறுத்திய நிறுவனம் தி வயர். அவதூறு வழக்குகளை தாக்கல் செய்து வயர் பலமுறை நீதிமன்ற உத்தரவின் பேரில் அமைதிப்படுத்தும் முயற்சிகளை எதிர்கொண்டது. பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மாளவியாவின் புகாரின் பேரில் தில்லி காவல்துறையினர் வயர் மீது வழக்கு பதிவு செய்தனர். நிறுவன ஆசிரியர்களான சித்தார்த் வரதராஜன், எம்.கே.வேணு, சித்தார்த் பாட்டியா, ஜானவி சென் ஆகியோரின் அலுவலகம் மற்றும் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. ஏப்ரல் 2020 முதல் ஜூன் 2021 வரை உபியின் கோவிட் தடுப்பு நடவடிக்கைகளில் தோல்விகளைப் பற்றி செய்தி வெளியிட்டதற்காக நான்கு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. ஆதித்யநாத் அரசின் நடவடிக்கைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது. ஊடக நிறுவனங்களில் முதலீடு செய்வது குறித்த செய்திக்கு எதிராக ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் மேற்கொண்ட நடவடிக்கை நீதிமன்றத்தில் தோல்வியடைந்தது. அமித்ஷாவின் மகன் ஜெய் ஷா தொடர்ந்த அவதூறு வழக்கில் விசாரணை தொடர்கிறது. 2014-இல் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு, ஜெய் ஷாவின் பொருளாதார வளர்ச்சி 6,000 மடங்கு அதிகரித்ததாக செய்திகள் வெளியாகின. காஷ்மீர் வாலா ஸ்ரீநகரை தளமாகக் கொண்ட காஷ்மீர் வாலா செய்தி நிறுவனம், 2023 ஆகஸ்ட் 23, முதல் தடை செய்யப்பட்டுள்ளது. ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் அந்த நிறுவனத்தில் இருந்து கணினிகள் உள்ளிட்ட அனைத்து உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர். 2022 பிப்ரவரி 4 அன்று, ஆசிரியரும் நிறுவனருமான ஃபஹத் ஷா பொது பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். புல்வாமா துப்பாக்கிச் சூடு தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 26-ஆம் தேதி ஜாமீன் கிடைத்ததும், மீண்டும் கைது செய்யப்பட்டார். ஃபஹத் 21 மாதங்கள் சிறையில் இருந்தார். தி ஸ்க்ரோல் நரேந்திர மோடியால் தத்தெடுக்கப்பட்ட டோமாரி கிராமத்தில் உணவுப் பஞ்சம் குறித்து செய்தி வெளியிட்டதற்காக வாரணாசி மாவட்ட அதிகாரிகள் ஸ்க்ரோலின் ஆசிரியர் பிரியா சர்மா மீது வழக்குப் பதிவு செய்தனர். கோவிட் முழுஅடைப்பின் போது சமூக சமைய லறை மூடப்பட்டதாக புகாரளித்ததற்காக அவர் மீது குற்ற வியல் சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்டது. மதிய உணவு திட்டத்தில் நடந்த ஊழல் குறித்து செய்தி வெளியிட்ட ஜன சந்தேஷ் நாளிதழுக்கு விளம்பரம் வழங்குவதைக் கூட அரசு நிறுத்தியது. நியூஸ் லாண்டரி நிதி முறைகேடு புகாரின் பேரில் வருமான வரித்துறையினர் 2 முறை நியூஸ் லாண்டரி அலுவலகத்தில் சோதனை நடத்தினர். முதல் சோதனை 2021 ஜூனில் நடத்தப்பட்டது. கைப்பற்றப்பட்ட தகவல்கள் கசிந்தது தொடர்பாக நீதிமன்றத்தின் தலையீடு வருமான வரித் துறைக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. நியூஸ் லாண்டரி இணை நிறுவனர் அபிநந்தன் சேக்ரியின் தனிப்பட்ட தகவல்கள் கசியாமல் இருப்பதை உறுதி செய்யு மாறு வருமான வரித் துறைக்கு தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டைனிக் பாஸ்கர் 2021 ஜூலை 22 அன்று, தில்லி, மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மற்றும் மகாராஷ்டிராவில் டைனிக் பாஸ்கர் குழுமத்தின் 30 இடங்களில் வருமான வரித்துறை சோதனை செய்தது. அரசாங்கத்தின் கோவிட் நடவடிக்கை களின் தோல்வியை அம்பலப்படுத்தியதற்கு பதிலடியாக இந்த சோதனை நடத்தப்பட்டது. பாரத் சமாச்சார் உ.பி.யில் முக்கிய செய்தி சேனலான பாரத் சமாச்சார் அலுவலகம் உட்பட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். கோவிட் காலத்தில் அரசாங்கத்தின் நடவடிக்கைகள் மீதான விமர்சனத்திற்குப் பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. சித்திக் கப்பன் ஹத்ராஸில் தலித் சிறுமி கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர் சித்திக் கப்பன் உத்தரப் பிரதேச காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். யுஏபிஏ சட்டத்தின் கீழ் 846 நாட்கள் சிறைவாசத்திற்குப் பிறகு சித்திக் ஜாமீன் பெற்றார். நியூஸ் க்ளிக் மோடி அரசின் ஊழல் மோசடிகள், இந்துத்துவா வெறுப்பு அரசியலை தொடர்ந்து அம்பலப்படுத்தியது நியூஸ் க்ளிக் இணையதள செய்தி நிறுவனம். சீனாவிடமிருந்து நியூஸ் க்ளிக்குக்கு பணம் வருவதாக குற்றம் சுமத்தி நிறுவனத்திலும் ஊழியர்களிடமும் சோதனை நடத்தியது. இதன் முதன்மை ஆசிரியர் பிரபீர் புர்காயஸ்தாவை மோடி அரசு யுஏபிஏ சட்டத்தின் கீழ் கைது செய்தது. மே 15 புதனன்று உச்சநீதிமன்றம் கைது நடவடிக்கை தவறு என்றும் உடனே அவரை விடுதலை செய்யுமாறும் உத்தரவிட்டது. ஆக முன்னொரு கால 250 ஆண்டுகால பிரிட்டிஷ் ஆட்சியின் தவறுகளை சரிசெய்து இந்தியாவை முன்னேற்ற பாதையில் பயணிக்க வைக்க பாடுபட்ட காங்கிரஸின் நடவடிக்கைகளில் ஒன்றான அவசர நிலையை அன்றாடம் அல்லது அவ்வப்போது அவசர நிலை கால நிகழ்வுகளை சுட்டுக்காட்டி தங்களை மேம்படுத்திக் கொள்ள முயலும் பாஜவும், மோடி அரசுக்குதான் இது பலவீனமாகும் என்பதை காலம் உணர்த்தும்.
கிரிக்கெட் உலக கோப்பையை கபில் தேவ் தலைமையிலான இந்திய அணி வென்ற நாள். இந்த உலகக் கோப்பை போட்டிக்குமுன் கத்துக்குட்டி அணியாக கருதப்பட்ட இந்திய அணி விஸ்வரூபமெடுத்து இறுதிபோட்டிக்கு முன்னேறி இருந்தது. என்றாலும் மேற்கிந்திய தீவுகள் தான் கோப்பையை வெல்லும் என எல்லோராலும் கணிக்கப்பட்டது. மேற்கிந்திய தீவுகள் அணியில் வேகப்பந்து வீச்சிற்கு பெயர்போன ராபர்ட்ஸ்,ஹோல்டிங்,கார்னர், மார்ஷல் என மிரட்டலாக களமிறங்கியது. 2 ரன்களை சேர்ப்பதற்குள் இந்தியா முதல் விக்கெட்டை இழந்தது. 183 ரன்களுக்கு மொத்த அணியும் சுருண்டது. இதில் அதிகபட்சமாக தமிழக வீரர் ஸ்ரீகாந்த் 38 ரன்கள் குவித்தார். மேற்கிந்திய தீவுகள் அணியின் பேட்டிங் ஜாம்பவான்கள் விவியன் ரிச்சர்ட்ஸ், க்ளைவ் லாயிட் என வரிசைகட்டி நிற்க இந்திய அணி பந்துவீச்சைத் தொடங்கியது. 76 ரன்னுக்குள் முன்னணி பேட்ஸ்மேன்களை சுருட்டியது. 140 ரன்களில் ஆல் அவுட். அனைவரது எதிர்பார்ப்பையும் தாண்டி லார்ட்ஸ் மைதானத்தில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக கோப்பையை வென்ற நாள் இன்று.
சிவகங்கைச் சீமையின் மன்னர் முத்து வடுகநாதர் பெரிய உடையாத் தேவர், ஆங்கிலேயர் மற்றும் நவாப் படைகளுக்கு எதிரான காளையார்கோவில் போரில் வீரமரணம் அடைந்தார். தன் நிலத்தின் சுதந்திரத்தைக் காக்கப் போரிட்டு, தன்னுயிரைத் தியாகம் செய்த ஒரு மாபெரும் வீரரின் நினைவு நாளாக இது வரலாற்றில் பதிவாகியுள்ளது. ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு அடிபணிய மறுத்ததால், தளபதி ஜோசப் ஸ்மித் தலைமையிலான படைகளுடன் நவாப் படைகள் சிவகங்கையை முற்றுகையிட்டன. பெரும் பலத்துடன் வந்த எதிரிகளுக்கு எதிராக, முத்து வடுகநாதர் காளையார்கோவில் கோவில் வளாகத்தில் இறுதி வரை போராடி, பீரங்கித் தாக்குதலில் உயிர்நீத்தார். அவரது மறைவுக்குப் பின், மனைவி ராணி வேலுநாச்சியார், ஹைதர் அலியின் உதவியுடன் படைகளைத் திரட்டி, எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஆங்கிலேயர்களைத் தோற்கடித்து சிவகங்கையை மீட்டெடுத்தார். முத்து வடுகநாதரின் தியாகம், வெறும் ஒரு மன்னரின் மரணம் மட்டுமல்லாமல், அன்னிய ஆதிக்கத்திற்கு எதிரான தமிழகத்தின் சுதந்திர வேட்கைக்கு ஒரு அடையாளமாகவும், மக்களின் எழுச்சிக்கு உந்துசக்தியாகவும் இன்றும் நிலைத்திருக்கிறது.
உலகப் புகழ்பெற்ற ‘பாப் இசையின் மன்னன்‘ மைக்கேல் ஜாக்சன் தனது 50 வது வயதில் திடீரென காலமானார். அவரது மரணம் உலகெங்கிலும் உள்ள இசை ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. தன் தனித்துவமான குரல், மின்மினியாய் மின்னும் நடனம் (குறிப்பாக மூன்வாக்), மற்றும் புதுமையான இசை வீடியோக்கள் (த்ரில்லர், பில்லி ஜீன் போன்றவை) மூலம் உலகையே வசீகரித்தவர் மைக்கேல் ஜாக்சன். “த்ரில்லர்” ஆல்பம் உலகிலேயே அதிக விற்பனையான ஆல்பமாக இன்றும் உள்ளது. சமூக விழிப்புணர்வுப் பாடல்களையும் பாடிய அவர், இசையின் மூலம் உலகளாவிய கலாச்சார அடையாளமாக விளங்கினார். ஜூன் 25 அன்று அவர் மறைந்தாலும், அவரது இசை, நடனம் மற்றும் கலைப் படைப்புகள் காலத்தால் அழியாத மரபாக இன்றும் வாழ்கின்றன.
வி.பி.சிங் பிறந்தாள் அடிப்படையில் விஸ்வநாத் பிரதாப் சிங் ஓர் அரசக் குடும்ப வாரிசு. 1931-ல் தையா அரண்மனையில் பிறந்த வி.பி.சிங்கை மண்டாவின் ராஜா தத்தெடுத்துக்கொள்வதற்கு முன்னரும் ‘ராஜா’ என்றுதான் அழைத்தார்கள். ஆனால், ஆச்சார்ய வினோபா பாவே சொன்னதுபோல, அடித்தட்டு மக்களைச் சந்தித்து, ‘நவீன சித்தார்த்தர்’ ஆக அவர் உருவெடுப்பதை அவரைச் சுற்றியிருந்த எந்த அரண்மனைச் சுவரும் தடுக்கவில்லை. 1990-ல் மண்டல் ஆணையப் பரிந்துரைகளை அமலாக்க வி.பி.சிங் எடுத்த முடிவானது இந்திய அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு முன்னெடுப்பு. வெறும் 11 மாதக் காலத்திலேயே அவர் ஆட்சியை இழக்க அதுவும் முக்கியமான காரணம். ஆனால், தான் செய்யும் காரியத்தின் முக்கியத்துவத்தை அவர் உணர்ந்திருந்தார். இந்திய நாடாளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட நெகிழ்ச்சியான உரைகளில் ஒன்று தன்னுடைய ஆட்சி பறிபோகும் என்பதை உணர்ந்து, தன்னுடைய செயல்பாட்டுக்கு அவர் துணிந்த தருணம். சில சமயங்களில் வாழ்வதைக் காட்டிலும் மரணத்தைத் தேர்ந்தெடுப்பது நல்ல வாய்ப்பு என்று சொன்னார் அவர். தன்னுடைய லட்சியத்துக்காக உயிர்த் தியாகம் செய்யும் ஒருவர் தன் மரணத்தைப் பெரிதாகப் பொருட்படுத்துவதில்லை என்றார். பல நூற்றாண்டு பழைய அமைப்புடன் மோதும்போது எத்தகைய சிரமங்களை எதிர்கொள்ள வேண்டிவரும் என்பது தாங்கள் அறியாதது அல்ல என்றார். சமூக வாழ்க்கையில் மரியாதைக்காகப் போராடும் எளிய மக்களுக்கு அதிகாரத்தில் எப்போது பங்களிக்கப்போகிறோம் என்பதே நம் முன் உள்ள பெரிய கேள்வி என்றார். ஆம்.. சுதந்திர இந்தியாவின் முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் தலைவரான காகா கலேல்கரை காந்தியவாதியாக மட்டுமே அறிகிறோம். அவரது அறிக்கையை மத்திய அரசு கடைசிவரைக்கும் கண்டுகொள்ளவே இல்லை. இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையமும் அதற்குத் தலைவராகப் பொறுப்புவகித்த பி.பி.மண்டலுமே இன்றும் விவாதப்பொருளாக இருக்கிறார்கள். மண்டல் குழுவின் பரிந்துரைகள் நிறைவேற்றப்பட்டதே அதற்குக் காரணம். நாட்டின் ஏழாவது பிரதமராகப் பதவி வகித்த விஷ்வநாத் பிரதாப் சிங், மண்டல் குழுவின் பரிந்துரையை ஏற்று பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இடஒதுக்கீட்டை அமல்படுத்தினார். பத்தாண்டு காலம் கிடப்பில் போடப்பட்டிருந்த அந்தப் பரிந்துரைகளை நிறைவேற்றியதற்காக வி.பி.சிங் தமது பிரதமர் பதவியையே விலையாகக் கொடுக்க வேண்டியிருந்தது. ஆனால், செயற்கரிய செயலைச் செய்துமுடித்த மனநிறைவோடு பதவி விலகினார் வி.பி.சிங். பதவி விலகல் என்பது வி.பி.சிங்கைப் பொறுத்தவரை அவரது அரசியல் வாழ்வு முழுவதும் தொடர்ந்துவந்த ஒன்று. உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களில் ஒருவராக இருந்த வி.பி.சிங், 1980-ல் அம்மாநிலத்தின் முதல்வராகப் பதவியேற்றார். கொள்ளையர்களின் அட்டகாசங்களைக் கட்டுப்படுத்த முடியாத நிலையில், இரண்டாண்டுகளிலேயே அப்பதவியிலிருந்து விலகினார் வி.பி.சிங் முதல்வராகப் பொறுப்பேற்றபோது ‘கறைபடியாத கரங்கள்’ என்று எடுத்த நற்பெயர் அவர் அரசியலின் இறுதிக்காலம் வரை தொடர்ந்தது. இந்திரா காந்தியின் ஆட்சியில் வர்க்கத் துறையின் துணை அமைச்சராகவும் இணை அமைச்சராகவும் பதவி வகித்த வி.பி.சிங், 1984-ல் ராஜீவ் காந்தி பிரதமராகப் பொறுப்பேற்றபோது நிதியமைச்சரானார். காங்கிரஸ் தலைமை தனக்கு உயரிய பதவிகளை அளித்தாலும், விசுவாசம் காட்டுகிறவராக இல்லாமல் தனது மனசாட்சியின்படியே பணியாற்றியவர் அவர். நிதியமைச்சராகப் பதவிவகித்தபோது வரி ஏய்ப்பில் ஈடுபட்ட தொழிலதிபர்களைக் கைதுசெய்து நடவடிக்கை எடுத்தார். அதனால், வரி ஏய்ப்பில் குற்றஞ்சாட்டப்பட்ட தொழிலதிபர்களின் கோபத்துக்கும் அவர்களோடு நெருக்கம்காட்டிய கட்சித் தலைமையின் கோபத்துக்கும் ஆளானார். விளைவாக, நிதியமைச்சர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு, பாதுகாப்புத் துறை அமைச்சராக்கப்பட்டார். வி.பி.சிங்கின் நடவடிக்கைகளுக்குக் கடிவாளம் போடுவதற்காகவே ராஜீவ் காந்தி பாதுகாப்புத் துறையை வழங்கினார். ஆனால், அதுவே ராஜீவ் காந்தி மீதான ஊழல் குற்றச்சாட்டை வெளிக்கொண்டுவரவும் விவாதிக்கவும் காரணமாயிற்று. போஃபர்ஸ் பீரங்கி வாங்கியதில் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தது குறித்து எதிர்க்கேள்வி எழுப்பிய வி.பி.சிங், அதனாலேயே காங்கிரஸிலிருந்து வெளியேற்றப்பட்டார். அதுவே அவரது அரசியல் வாழ்வின் திருப்புமுனையாகவும் மாறியது. ஜன மோர்ச்சா என்ற அரசியல் கட்சியைத் தொடங்கிய வி.பி.சிங், அதன் தொடர்ச்சியாய் ஜனதா கட்சி, லோக் தளம், இந்திய தேசிய காங்கிரஸ் (ஜெகஜீவன்) உள்ளிட்ட கட்சிகளை இணைத்து ஜனதா தளம் என்ற பெயரில் பெரும் கட்சியாக மாற்றினார். திமுக, தெலுங்கு தேசம், அஸ்ஸாம் கண பரிஷத் போன்ற மாநிலக் கட்சிகளுடன் இணைந்து தேசிய முன்னணியைத் தொடங்கினார். மக்களவைத் தேர்தலில் பெரும்பான்மையைப் பெற முடியாவிட்டாலும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் பாஜகவும் வெளியிலிருந்து ஆதரவு அளிக்க, மத்தியில் காங்கிரஸ் அல்லாத இரண்டாவது அரசுக்குத் தலைமையேற்றார். கொள்ளையர்களைக் கட்டுப்படுத்துவதிலும் வரி ஏய்ப்பைத் தடுப்பதிலும் ஊழலை எதிர்ப்பதிலும் ஏற்கெனவே உறுதியோடு நின்ற வி.பி.சிங் பிரதமரானபோது பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் சமூக, அரசியல், பொருளாதார விடுதலையை அடைவதிலும் உறுதியோடு நின்றார். பி.பி.மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளை அவர் நடைமுறைப்படுத்த முயன்ற அதேவேளையில், ராமஜென்ம பூமி விஷயத்தைக் கையிலெடுத்தார் எல்.கே.அத்வானி. ரத யாத்திரையைத் தொடங்கினார். மதவாத அரசியலை விரும்பாத வி.பி.சிங் அதை அனுமதிக்கவில்லை. பாஜக தனது ஆதரவை விலக்கிக்கொண்டது. பிரதமராகப் பதவி விலகிய வி.பி.சிங் அதன்பிறகு கலந்துகொண்ட கூட்டங்களில் திட்டமிட்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டன. தேசிய முன்னணியின் சார்பில் அவர் கிழக்கு உத்தர பிரதேசத்தில் சுற்றுப்பயணத்தைத் தொடங்கியபோது, கோரக்பூரில் வி.பி.சிங் பேசிக்கொண்டிருந்த மேடையின் மீது கற்கள் வீசப்பட்டன. வி.பி.சிங் அருகில் நின்றிருந்த சரத் யாதவும் அஜீத் சிங்கும் பலத்த காயமடைந்து மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார்கள். ‘நான் உங்கள் முன்னால், ரத்தமும் சதையுமாக நின்றுகொண்டிருக்கிறேன். என் முன்னால் வந்து உங்கள் விருப்பப்படி தாக்குங்கள். ஆனால், நான் ஏற்றுக்கொண்டிருக்கிற சமூக நீதிக் கொள்கையில் நான் உறுதியாகவே இருக்கிறேன்’ என்று முழங்கியவர் வி.பி.சிங். ஏற்றுக்கொண்ட கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்தார் வி.பி.சிங். பிரதமராகப் பதவி விலகிய பிறகு அவர் எந்தப் பதவியையும் விரும்பவில்லை. தானாகத் தேடிவந்தபோதும்கூட ஏற்றுக்கொள்ளவில்லை.
