‘தினம் தினம் திருநாளே!’ தினப்பலன் ஜூன் 11-ம் நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையுள்ள 12 ராசிக்காரர்களுக்கும் பலன்கள் எப்படி இருக்கிறது என்று நமது மின்கைத்தடியின் இப்பகுதியில் பார்க்கலாம்.
மேஷ ராசி அன்பர்களே!
அலுவலகத்தில் அர்ப்பணிப்புடன் வேலை பார்க்க வேண்டும். வெளி எதிரியை விட உள்ளுக்குள் தான் அதிகமான எதிரிகள் உங்களுக்கு இருக்கிறார்கள். வேலை மாறுதல் கிடைத்தால் தவிர்க்க வேண்டாம். ஏனென்றால் இந்த இடத்தை விட அந்த இடம் மிக சிறப்பாக இருக்கும். உறவினர்களின் ஒத்துழைப்பு நல்ல முறையில் கிடைக்கும். ‘இரந்து குடித்தாலும் இனத்தில் குடி’ என்ற பழமொழியை மனதில் வைத்து உறவுகளோடு ஒன்றி போவீர்கள். மனைவி மகிழ்ச்சியுடன் குடும்பம் நடத்துவார். குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் மறைந்து மறுமலர்ச்சி ஏற்படும். பிள்ளைகள் விளையாட்டில் ஆர்வம் காட்டுவார்கள். விளையாட்டு எனில் சேர்வதற்காக பெற்றோர்களின் அனுமதி கேட்பார்கள். திருச்செந்தூர் முருகனை வழிபடுங்கள். சிறப்புகள் அதிகரிக்கும்.
ரிஷப ராசி அன்பர்களே!
தொழில் சிக்கலை சாமர்த்தியமாக களைய வேண்டும். வழக்கறிஞர் உதவியை நாடி சட்ட சிக்கலில் இருந்து விடுபட வேண்டும். எதிர்ப்புகளை கண்டு கலக்கம் அடைய வேண்டாம். என்னதான் நடக்கும் நடக்கட்டுமே என்று அடுத்த காரியத்தில் இறங்க வேண்டும்.உறவினர்கள் சுற்றி நின்று உபத்திரம் தருவார்கள். உறவுகளில் நொந்து போவதை விட ஒரு கட்டு விறகில் வெந்து போகலாம் என்று நினைப்பீர்கள். மனைவியோடு மல்லுக்கட்டி மன நிம்மதி இழப்பீர்கள். நோயோடும் பேயோடும் வாழும் ஞான நிலையை நீங்கள் அடைவீர்கள். பிள்ளைகளின் நடவடிக்கையை கண்காணிப்பது அவசியம். ‘தென்னைய பெத்தா இளநீரு பிள்ளைய பெத்தா கண்ணீரு’ இதை உணரக்கூடிய காலகட்டம் இது. மகாலட்சுமியை வழிபடுங்கள். மனக்கலக்கம் நீங்கும்.
மிதுன ராசி அன்பர்களே!
அலுவலகத்தில் உங்கள் சேவை பாராட்டப்பட வேண்டும். உரிமையோடு செய்கின்ற காரியத்தால் உன்னத நிலையை அடைவீர்கள்.தவறான செயல்களின் மனதை அலைபாய விட வேண்டாம். நல்ல மனதை கெடுத்து விஷ விதையை தூவி உங்களை சிலர் வீழ்த்த நினைப்பார்.உறவினர் வீட்டு கல்யாணத்திற்கு பண உதவி செய்வீர்கள். சொந்த பந்தங்களோடு அரவணைத்து செல்ல நினைப்பீர்கள். மனைவியின் ஒத்துழைப்பால் பொருளாதார மேன்மை ஏற்படும். சட்ட மந்திரியாக இருந்து ஒவ்வொரு காரியத்தையும் திட்டமிட்டு செய்வார். வீட்டு நிலை அறிந்து பிள்ளைகள் நடந்து கொள்வார்கள். இரவு நேரத்தில் வெளியே சுற்றுவதை தவிர்க்க வேண்டும். சௌமிய நாராயணப் பெருமாள் வழிபடுங்கள். சங்கடங்கள் தீரும்.
கடக ராசி அன்பர்களே!
தொழில் சம்பந்தப்பட்ட தடைகளை விலக்க முயற்சி செய்ய வேண்டும். நம்பிக்கையான நண்பரின் துணையோடு அதை நிறைவேற்ற வேண்டும். இனம் தெரியாத எதிர்ப்புகளை கண்டு அஞ்ச வேண்டாம். இளம் கன்று பயமறியாது என்ற நிலையிலும் நீங்கள் இயங்க வேண்டாம். நெருங்கிய உறவுக்கிடையே சின்ன மன வருத்தம் உண்டாகும். அதை போக்குவதற்காக விட்டுக் கொடுத்து நடந்து சொந்தத்தை ஒன்று சேர்ப்பீர்கள். மனைவி சில நேரங்களில் பிடிவாதமாக இருப்பார். மாற்றம் முயன்று நீங்கள் தோற்றுப் போவீர்கள். விலை உயர்ந்த பொருட்களைக் கேட்டு பிள்ளைகள் அடம்பிடிப்பார்கள். அதை வாங்கிக் கொடுக்க நீங்கள் சிரமப்படுவீர்கள். யோக நரசிம்மரை வழிபடுங்கள். ஆயுள் பலம் அதிகரிக்கும்.
சிம்ம ராசி அன்பர்களே!
முக்கியமான காரிய நிமித்தமாக வெளியூர் பயணம் செல்வீர்கள். வேலை இடத்தில் உங்கள் திறமையை வெளிப்படுத்துவீர்கள். தொழிலை சாமர்த்தியமாக நடத்தி லாபத்தை அதிகரிப்பீர்கள். அரசியல்வாதி நண்பரின் உதவியால் ஒரு முக்கியமான காரியத்தை முடிப்பீர்கள். பெண்களுக்கு உதவி செய்யுங்கள் ஆனால் ஒரு எல்லைக்கோட்டை நிர்ணயித்துக் கொள்ள தவறாதீர்கள். உறவினர்களின் ஒத்தாசை உங்களுக்கு கை கொடுக்கும். விவேகமான முறையில் வியாபாரத்தை பெருக்குவீர்கள். மனைவி சேர்த்து வைத்த பணத்தை சிரமத்திற்கு கொடுப்பார். கண்களில் விளக்கெண்ணையை விட்டு வியாபாரத்தை கவனிக்க வேண்டும். பிள்ளைகளால் குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். உணவுத் தொழில் உங்களுக்கு சிறப்பாக நடக்கும். சிவபெருமானை வழிபடுங்கள். மரண பயம் விலகும்.
கன்னி ராசி அன்பர்களே!
தொழிலில் லாபம் அதிகரிக்கும். அதை நீங்கள் நிலை நிறுத்த வேண்டும். சிக்கனமாக இருந்து வங்கி இருப்பை உயர்த்த வேண்டும். முக்கிய கடன்களை அடைக்க வேண்டும். வியாபாரம் உயரும். விசனத்தில் மூழ்க வேண்டாம். லாபத்தை மனை இடங்கள் வாங்கி போடுங்கள். தக்க சமயத்தில் உறவினர் ஒத்தாசையாக இருப்பார். உறவுகளை மேம்படுத்துவதில் மிகுந்த அக்கறை காட்டுவீர்கள். மனைவியின் அன்பு மனத் தைரியத்தை கொடுக்கும். குடும்பத்திலிருந்து குழப்பங்களுக்கு விடிவு பிறக்கும். பிள்ளைகள் நிலை உணர்ந்து நடந்து கொள்வார்கள். கமிஷன் வியாபாரம் தக்க சமயத்தில் உங்களுக்கு கை கொடுக்கும். ஸ்ரீரங்க பெருமாளை வழிபடுங்கள். பணப் பற்றாக் குறை நீங்கும்.
துலா ராசி அன்பர்களே!
இந்த நேரத்தில் நீங்கள் தொட்டது துலங்கும். கேட்டது கிடைக்கும். நினைத்தது நடக்கும். எல்லா வகையிலும் உங்களுக்கு நன்மை உண்டாகும். அதே நேரத்தில் வேலை பார்க்கும் இடத்தில் வில்லங்கமாக பேச வேண்டாம். அது உங்களுக்கு கெட்ட பெயரை கொண்டு வரும். உறவினர்களுக்கு இடையே மனத்தாங்கல் ஏற்படும். கலகத்தை உண்டு பண்ணி அதில் குளிர்காய நினைப்பார்கள். அதற்கு இடம் கொடுக்க வேண்டாம். குடும்பத்தில் நோய் தாக்கம் ஏற்படலாம். மருத்துவச் செலவு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது. பிள்ளைகளுக்கு கல்விக்காக கடன் வாங்குவீர்கள். நீண்ட நாள் எதிர்பார்ப்பு கிட்டத்தில் வந்து கை எட்டாமல் போகலாம். சுந்தர ராஜ பெருமாளை வழிபடுங்கள். வந்த சிக்கல் விலகும்.
விருச்சிக ராசி அன்பர்களே!
தொழில் உங்கள் கை ஓங்கி நிற்கும். அதை ஒருமைப்படுத்த வேண்டும். எதிர்பாராத நிலையில் உங்களுக்கு தேவையான உதவி வந்து சேரும். வாழ்க்கை வசந்தமாக நீங்கள்
கடுமையாக உழைக்க வேண்டும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைத்து கையிருப்பு பெருகும். உறவினர்கள் பக்க துணையாக இருந்து பாதுகாப்பார்கள். நீண்ட நாள் நண்பர் வீடு தேடி வந்து உறவை புதுப்பித்துக் கொள்வார். மனைவி கணவனின் மனம் நோகாமல் நடந்து கொள்வார். வாராமல் இருந்த பணம் கைக்கு வந்து மன நிம்மதி ஏற்படும். உங்களைப் பார்த்து மற்ற குடும்பத்தினர் பொறாமைப் படுவார்கள். ஆளுக்கு ஒரு பக்கம் முகத்தை திருப்பிக் கொண்டு போகின்ற நிலை மாறும். பிள்ளைகளால் எந்த பிரச்சனையும் வராது. விலை மதிக்க முடியாத பாசம் வீட்டில் விளையாடும். சிக்கல் சிங்கார வடிவேலனே வழிபடுங்கள். குடும்ப சிக்கல் தீரும்.
தனுசு ராசி அன்பர்களே!
அலுவலகத்தில் அலுப்பில்லாமல் வேலை பார்க்க வேண்டும். ஆத்திரமும் அவசரமும் அறிவுக்கு சத்ரு என்பதை மறந்து விட வேண்டாம். சோம்பேறித்தனமாக நடந்து கெட்ட பெயர் எடுக்க வேண்டாம். உங்களுக்கு வரவேண்டிய நல்ல வாய்ப்புகள் கைநழுவி போகக்கூடிய சந்தர்ப்பம் உருவாகும். நெருங்கிய உறவினருக்கு உதவி செய்வீர்கள். பஸ்ஸில் உள்ள பின் சீட்டும் சொந்தக்காரர்களும் ஒன்று. எந்த நேரத்தில் தூக்கி எறிவார்கள் என்று தெரியாது. மனைவி சிக்கனமாக குடும்ப நடத்தி உங்கள் சிரமத்தை குறைப்பார். வருகின்ற வருமானத்தை மனைவிகையில் கொடுத்துப் பாருங்கள். அது இரண்டு மடங்காகும்.பிள்ளைகள் தெளிவாக நடந்து உறுதுணையாக இருப்பார்கள். பக்கத்து வீட்டு பிள்ளைகளை திட்டாதீர்கள். தட்சிணாமூர்த்தியை வழிபடுங்கள். உங்கள் மதிப்பு உயரும்.
மகரராசி அன்பர்களே!
எந்த காரியத்திலும் எச்சரிக்கையாக இறங்க வேண்டும். வாய்ப்பு தேடி செல்லும் இடங்களில் உதவிகள் கிடைக்க தாமதமாகும். அடுத்தவர் பேச்சைக் கேட்டு அகலக்கால் வைக்க வேண்டாம். போனில் உங்களுக்கு பரிசு கிடைத்திருக்கிறது என்றால் நம்ப வேண்டாம். இணையதள மோசடி இருப்பதை இழக்க வைக்கும். உறவுகளால் வம்பு வழக்கு உண்டாகும். எதிர்பார்த்த கடனுதவி இழுபறியாக இருக்கும். மனைவியின் ஆசைக்காக கடன் படுவீர்கள். வாகன கடனை செலுத்துவதில் தடுமாற்றம் ஏற்படும். பிள்ளைகளின் செயலால் மனப்பாரம் அதிகரிக்கும். வேலை இடத்தில் மேலதிகாரிகளின் குறைகளுக்கு ஆளாகாதீர்கள். கால பைரவரை வழிபடுங்கள். கை மேல் பலன் கிடைக்கும்.
கும்பராசி அன்பர்களே!
கையில் தாராளமாக காசு புரளும். அதை சிக்கனப்படுத்த வேண்டும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து தட்டாமல் பணம் கிடைக்கும். ஆன்லைன் சூதாட்டங்களில் ஈடுபட வேண்டாம். கமிஷன் வியாபாரத்தில் கணிசமான லாபம் பெறுவீர்கள். நிலம் வாங்கி விற்பதில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். எல்லா வகையிலும் உறவினர்கள் ஒத்துழைப்பாக இருப்பார்கள். வீட்டிற்கு புதிய பொருட்கள் வாங்குவதில் முனைப்பு காட்டுவீர்கள். குடும்பத்தில் ஒற்றுமை நிலவி மகிழ்ச்சி மலரும். பிள்ளைகள் குதூகலமாக வீட்டில் வலம் வருவார்கள். இரும்பு வியாபாரத்தில் ஏற்றமுண்டாகும். ஆஞ்சநேயரை வழிபடுங்கள். ஆசைகள் நிறைவேறும்.
மீனராசி அன்பர்களே!
தொழில்துறைகளில் தேவையான பணத்தை முதலீடு செய்ய வேண்டும். வியாபாரத்தை விரிவுபடுத்த தேவையான அளவு செலவு செய்வீர்கள்.காரியம் கைகூடும் நேரத்தை கை நழுவ விட வேண்டாம். தேடிவரும் ஸ்ரீதேவியை ஓடும்படி செய்து விடாதீர்கள்.லாபம் கருதாமல் உறவினர்கள் உதவுவார்கள். அரசு வேலை பார்ப்பவர்கள் பாராட்டும் பதவி உயர்வும் பெறுவார்கள். மனைவியின் முயற்சியால் கணவரின் கடன் தீரும். நண்பர்களின் உதவி நல்ல நேரத்தில் கை கொடுக்கும். பிள்ளைகளின் படிப்பும் விளையாட்டுத் திறனும் அதிகரிக்கும். மலை போல் வந்த துன்பம் பனி போல் விலகும். மதுரை மீனாட்சி அம்மனை வழிபடுங்கள். மாங்கல்ய பலம் அதிகரிக்கும்.