மறக்க முடியுமா!!! (முள்ளிவாய்க்கால் நினைவு நாள்) மே 18

இலங்கையில் இடம்பெற்ற இறுதி யுத்தத்தின் போது கொத்துக் கொத்தாக மக்கள் கொல்லப்பட்ட தமிழினப் படுகொலையை நினைவுகூரும் 16ஆவது ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் இன்றாகும்.

இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தழுவியும் புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் தேசங்களிலும் இந்த நினைவு நாளை அனுஷ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில் பிரதான நினைவேந்தல் நிகழ்வு முல்லைத்தீவு – முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெறவுள்ளது.

அதன்படி, முற்பகல் 10.15 மணிக்கு கொள்கைப் பிரகடனம் வாசிக்கப்படும். 10.29 மணிக்கு மணி ஒலி எழுப்பப்பட்டு 10.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்படும்.

இதைத் தொடர்ந்து பொதுச் சுடர் ஏற்றப்படும். பொதுச் சுடர் ஏற்றப்படும் சமநேரத்தில் நினைவேந்தலில் பங்கேற்பவர்கள் தீபங்களை ஏற்றுவர். தொடர்ந்து மலர் அஞ்சலி செலுத்தப்படும்.

பிரதான நினைவேந்தல் நிகழ்வுக்கு முன்னதாக காலை 6.30மணி முதல் முள்ளிவாய்க்கால் கப்பலடி கடற்கரையில் போரில் கொல்லப்பட்டவர்களின் ஆத்ம சாந்திக்காகப் பிதிர்க்கடன் கிரியைகள் நடைபெறவுள்ளன.

அத்துடன், “தமிழினப் படுகொலை நாளான மே 18 தினத்தில் (இன்று) நாம் அனைவரும் திரளாகக் ஒன்றுகூடி எமக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராகக் குரல் கொடுக்கவும் அநீதிக்கு நீதி வேண்டியும் ஒன்றுபடுவோம். கொத்துக் கொத்தாகக் கொல்லப்பட்ட மக்களை நினைவு கூருவோம். நாம் அழிக்கப்பட்டோம் என்ற விடயத்தை உரத்துச் சொல்ல இணைவோம்” என்று முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் குழுவின் வடக்கு, கிழக்கு பொதுக் கட்டமைப்பின் இணைத் தலைவர் அருட்பணி சின்னத்துரை லியோ ஆமஸ்ரோங் அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை வடக்கு, கிழக்கில் பல்வேறு இடங்களிலும் நிகழ்த்துவதற்கு அரசியல் கட்சிகள், பொதுக் கட்டமைப்புகள், பொது நிறுவனங்கள் ஏற்பாடுகளைச் செய்துள்ளன.

தமிழ் மக்களின் உரிமைக்காக ஆரம்பிக்கப்பட்ட ஆயுதப் போராட்டம் 4 கட்ட ஈழப் போர்களாக நடைபெற்றன. இறுதிப் போர் கட்டம் 2006 – 2009 மே வரை நீடித்தது.

மோதலில் ஈடுபட்ட இலங்கை இராணுவத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையே 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் அகப்பட்டனர்.

இறுதியாக முள்ளிவாய்க்கால் என்ற சிறு நிலப்பரப்புக்குள் மக்கள் முடக்கப்பட்டபோது மனித குலத்துக்கு எதிரான விரோத செயல்கள் முன்னெடுக்கப்பட்டன.

தமிழ் மக்கள் சொல்லொணாத் துன்பங்கள் – துயரங்களை – அழிவுகளைச் சந்தித்தனர். இறுதிக்கட்டத்தில் மட்டும் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்தது.

இந்தப் போர் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட மே 18ஆம் திகதி தமிழின அழிப்பின் அடையாள நாளாக தமிழ் மக்கள் நினைவேந்தி வருகின்றனர்.

கொல்லப்பட்ட தமது உறவுகளின் ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்திக்கும் அதேநேரம், படுகொலை செய்யப்பட்ட தமது இன மக்களுக்காக நீதி கோரும் நாளாகவும் இந்த நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!