‘ரெட்ரோ’ படத்தின் வெற்றி – நடிகர் சூர்யா செய்த நெகிழ்ச்சி செயல்..!

நடிகர் சூர்யா ரெட்ரோ திரைப்படத்தின் வசூலில் இருந்து ரூ.10 கோடி அகரம் பவுண்டேசனுக்கு வழங்கியுள்ளார். கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ரெட்ரோ’. இதில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தை 2டி மற்றும் ஸ்டோன் பெஞ்ச் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் ரூ.100 கோடியை தாண்டி வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், நடிகர் சூர்யா ரெட்ரோ படத்தின் வசூலில் இருந்து ரூ.10 கோடியை அகரம் அறக்கட்டளைக்கு வழங்கியுள்ளார்.

இதுகுறித்து நடிகர் சூர்யா கூறியிருப்பதாவது,

“அனைவருக்கும் அன்பு நிறைந்த வணக்கம்..

பகிர்தலே மிகச் சிறந்த மகிழ்ச்சி. நடிகனாக எனக்கு அடையாளம் கொடுத்து, என் முயற்சிகளை அங்கீகரித்து உயர்த்திய இந்த சமூகத்திடம், வெற்றியைப் பகிர்ந்து கொள்வது எப்போதும் மனநிறைவை தருகிறது. ‘ரெட்ரோ’ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த பேராதரவு, மகிழ்ச்சியான வெற்றியைப் பரிசளித்து இருக்கிறது. கடினமான சூழல் வரும்போதெல்லாம் உங்கள் அன்பும், ஆதரவுமே என்னை மீண்டெழ துணை நிற்கிறது. அதற்காக பொதுமக்களுக்கும், அன்பான தம்பி தங்கைகளுக்கும் என் உளப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் எனக்கு அளித்திருக்கும் அடையாளத்தை, அர்த்தமுள்ளதாக, அழகானதாக மாற்றவே அகரம் ஃபவுண்டேஷன் தொடங்கப்பட்டது. அற உணர்வுள்ள தன்னார்வலர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், நன்கொடையாளர்கள், கல்லூரி நிறுவனங்கள் என அனைவரும் இணைந்த கூட்டு இயக்கமாக அகரம் செயல்பட்டு வருகிறது. அனைவரின் பங்களிப்போடு பல ஆயிரம் மாணவர்களின் வாழ்வில் கல்வி மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கி இருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும், நம்பிக்கையோடு அகரம் ஃபவுண்டேஷனுக்கு விண்ணப்பிக்கிற பல ஆயிரக்கணக்கான மாணவர்களில், மிகக் குறைவானவர்களுக்கே உதவ முடிகிறது. அந்த எண்ணிக்கையை உயர்த்த வேண்டுமெனில், பங்களிப்பும் உயர வேண்டும். அதன் முதல் படியாக, ரெட்ரோ திரைப்படத்திற்கு நீங்கள் அளித்த பேராதரவின் மூலமாக கிடைத்த அன்பு தொகையில், பத்து கோடி ரூபாய்-ஐ இந்த கல்வியாண்டில் அகரம் ஃபவுண்டேஷனுக்கு, பகிர்ந்தளிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

விரைவில் தேர்வு முடிவுகள் வந்துவிடும். கடும் நெருக்கடிகளுக்கு மத்தியில், உயர்கல்வி கனவோடு படிக்கிற மாணவர்களை அன்பினால் அரவணைத்துக் கொள்வோம். ஒவ்வொருவரும் நம்மால் இயன்ற கல்வி உதவியை சுற்றி இருப்பவர்களுக்கு வழங்குவோம். கல்வியே ஆயுதம்.. கல்வியே கேடயம்”

இவ்வாறு நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!