இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஏப்ரல் 25)

பன்னாட்டு பெங்குவின் தினம் (International Penguin Day) ஏன் கொண்டாடப்படுகிறது? பெங்குவின்களின் அழிவு மற்றும் அவற்றின் சூழலியல் முக்கியத்துவம் பற்றி விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த நாள் கொண்டாடப்படுகிறது. பெங்குவின்கள் அண்டார்க்டிகா, தென் அமெரிக்கா, ஆஸ்திரேலியா போன்ற பகுதிகளில் வாழ்கின்றன. காலநிலை மாற்றம், மீன்பிடி மற்றும் கடல் மாசுபாடு போன்ற காரணங்களால் அவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பெங்குவின்கள் பற்றி சுவாரஸ்யமான தகவல்கள்: 17 வகையான பெங்குவின்கள் உள்ளன (எ.கா: Emperor Penguin, King Penguin, Adelie Penguin). அவை பறக்க முடியாத பறவைகள், ஆனால் சிறந்த நீச்சல் வீரர்கள் (மணிக்கு 15-20 கிமீ வேகம்!). Emperor Penguin ஆண்கள் முட்டைகளை குளிரில் இருந்து பாதுகாக்க 2 மாதங்கள் வரை உணவின்றி உட்கார்ந்திருக்கும்! இந்த நாளின் நோக்கம்: பெங்குவின்களின் பாதுகாப்பு மற்றும் அவற்றின் வாழ்விடங்களை காப்பாற்றுதல். காலநிலை மாற்றத்தின் தாக்கம் பற்றி பொது விழிப்புணர்வை ஏற்படுத்துதல். கடல் சூழலை பாதுகாப்பதன் மூலம் பெங்குவின்களின் எதிர்காலத்தை உறுதி செய்தல். எப்படி பங்களிப்பு செய்வது? பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்கவும் (கடல் மாசுபாட்டைத் தடுக்க). பெங்குவின் பாதுகாப்பு நிறுவனங்களுக்கு நன்கொடை அளிக்கவும். #InternationalPenguinDay என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களில் விழிப்புணர்வை பரப்பவும். பெங்குவின்கள் இயற்கையின் அருமையான படைப்புகள்! அவற்றை காப்போம், அவற்றின் வாழ்விடத்தை காப்போம்!

கில்லட்டின் கருவியால் முதல் மனிதர் கொல்லப்பட்ட தினம் இன்று. ஏப்ரல் 25.1792 ல் ‪#‎Nicolas_Jacques_Pelletier என்ற பிரான்சு நாட்டுகாரர் முதல் மனிதனாக இந்த கருவியால் கொல்லப்பட்டார். . ஜோசப்-இக்னேஸ் கில்லட்டின் எனும் மருத்துவரின் பெயரால் இவ்வியந்திரங்கள் “கில்லட்டின்” என்று அழைக்கப்பட்டன. மரண தண்டனையை நிறைவேற்றுவதில், மனிதர்கள் விதவிதமான பரிசோதனைகளை நிகழ்த்தியிருக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் கில்லட்டின். பிரெஞ்சுப் புரட்சியின்போது மரண தண்டனை அளிப்பதில் இது பரவலாகப் பயன்படுத்தப்பட்டது. அயர்லாந்து மற்றும் பிரிட்டனில் ஏற்கெனவே இதுபோன்ற தலை வெட்டும் கருவிகள் பயன்பாட்டில் இருந்தன. எனவே, இதுபோன்ற கருவியைப் பயன்படுத்தினால் விரைவாக வேலை முடிந்துவிடும் என்று ஜோசப் இக்னேஸ் கில்லட்டின் என்ற பிரெஞ்சு மருத்துவரும் அவரது ஆதரவாளர்களும் கருதினார்கள். ஆன்டனி லூயி என்ற பிரெஞ்சு மருத்துவர் இந்தக் கருவியை உருவாக்கினார். எனினும் இதைப் பரிந்துரைத்த ஜோசப் இக்னேஸ் கில்லட்டினின் பெயரே இந்தக் கொலைக் கருவிக்கு நிலைத்துவிட்டது. முதலில் பிணங்களை வைத்து இதன் செயல்படும் திறன் சோதிக்கப்பட்டது. 1792 முதல் இது பயன்பாட்டுக்கு வந்தது. ஏப்ரல் 25.1792 ல் ‪#‎Nicolas_Jacques_Pelletier என்ற பிரான்சு நாட்டுகாரர் முதல் மனிதனாக இந்த கருவியால் கொல்லப்பட்டார். பிரெஞ்சுப் புரட்சியின்போது, ஆயிரக் கணக்கானோர் இந்தக் கருவி மூலம் கொல்லப்பட்டனர். பிரெஞ்சு மன்னர் பதினாறாம் லூயியும் அவரது மனைவியும் இந்தக் கருவி மூலம்தான் கொல்லப்பட்டனர். அதன் பிறகும் இந்தக் கருவி தொடர்ந்து பயன்படுத்தப்பட்டது. யூதர்கள் உள்ளிட்ட பலரைக் கொல்ல நாஜிப் படைகளும் இந்தக் கருவியைப் பயன்படுத்தின. பிரான்ஸின் மர்சேய் நகரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹமிதா ஜான்தோபி என்ற துனிஷியா நாட்டைச் சேர்ந்த கொலைக் குற்றவாளிதான் கில்லட்டின் மூலம் கொல்லப்பட்ட கடைசி நபர். 1977-ல் இதே நாளில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.”கில்லட்டின் கருவி” கடைசியாக பயன்படுத்தப்பட்ட தினம் 1981-ல் மரண தண்டனையை பிரான்ஸ் முற்றிலும் தடைசெய்தது. எனவே, இந்தக் கருவியும் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டது.

ஸ்பெயின்மீது அமெரிக்கா முறைப்படியான போர் அறிவிப்பை வெளியிட்ட நாள் கியூபாவுக்கு ஸ்பெயின் விடுதலையளிக்கவேண்டும் என்று ஏப்ரல் 19இல் அமெரிக்கா தீர்மானம் நிறைவேற்றியதைத் தொடர்ந்து, அமெரிக்காவுடனான உறவுகளை முறித்துக்கொள்வதாக ஏப்ரல் 20இல் ஸ்பெயின் அறிவிக்க, ஏப்ரல் 21 அன்றே அமெரிக்கக் கடற்படை முற்றுகையிட்டுவிட்டதால், உண்மையில் போர் ஏற்கெனவே தொடங்கிவிட்டிருந்தது. 1492இல் வந்திறங்கிய ஸ்பானியர்களின் கட்டுப்பாட்டில் நான்கு நூற்றாண்டுகளாக இருந்த கியூபாவின் விடுதலைப் போராட்டங்கள், 1868இல் தொடங்கிய பத்தாண்டுப் போரிலிருந்தே நிகழ்ந்துகொண்டிருந்தன. அமெரிக்கக் கண்டத்திலிருந்த பெரும்பாலான குடியேற்றங்களை 19ஆம் நூற்றாண்டில் இழந்ததன்மூலம், ஒரு காலத்தில் மிகப்பெரிய குடியேற்ற நாடாக இருந்த ஸ்பெயினின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகள் வெகுவாகச் சுருங்கிவிட்டிருந்தன. அதனாலும், 400 ஆண்டுகளாகக் கட்டுப்பாட்டிலிருந்த கியூபாவை ஒரு குடியேற்றம் என்பதைவிட, ஸ்பெயினின் மாநிலம் என்ற நிலையில் வைத்திருந்ததாலும், ஸ்பெயினுக்கு கியூபா முக்கியமானதாக இருந்தது. ஆனால், கியூபாவின் கட்டுப்பாட்டை வைத்திருந்த ஸ்பெயினுக்குச் செல்வதைப் போல, 12 மடங்கு ஏற்றுமதி கியூபாவிலிருந்து அமெரிக்காவுக்குச் சென்றுகொண்டிருந்தது. அதாவது கியூபாவின் ஏற்றுமதியில் 90 சதவீதமும், இறக்குமதியில் 40 சதவீதமும் அமெரிக்காவுடனாக இருந்தன. விடுதலைப் போராட்டங்களால் நெருக்கடியிலிருந்த கியூபாவின் சர்க்கரைச் சந்தையை அமெரிக்க முதலாளிகள் கிட்டத்தட்ட முழுமையாகவே கைப்பற்றியிருந்தனர். உண்மையில், ஸ்பெயினுக்கு எதிரான போருக்கு ஆயுதங்கள் வாங்க நிதி உதவிகளை அமெரிக்காதான் செய்துகொண்டிருந்தாலும், அமெரிக்க மண்ணில் ஐரோப்பியர்களின் புதிய குடியேற்றங்களை அனுமதிப்பதில்லை, இருக்கிறவற்றிற்கு இடையூறு செய்வதில்லை என்ற மன்றோ கோட்பாட்டைக் கடைப்பிடிப்பதாகக் காட்டிக்கொள்வதற்காக வெளிப்படையாகப் போர் தொடுப்பதை அமெரிக்கா தவிர்த்து வந்தது. ஏற்கெனவே, கியூப விடுதலைப் போராட்டத்திற்கு உதவியதாக, வர்ஜினியஸ் என்ற கப்பலிலிருந்த 53 அமெரிக்கர்களும், ஆங்கிலேயர்களும் கொல்லப்பட்டபோதுகூட, ஸ்பெயினை மிரட்டி 80 ஆயிரம் டாலர் இழப்பீடு வாங்கியதே தவிர, அமெரிக்கா போர் தொடுக்கவில்லை. ஹவானா துறைமுகத்திலிருந்த அமெரிக்கக் கடற்படைக் கப்பல் மெய்ன், மர்மமான முறையில் வெடித்து மூழ்கியதைத் தொடர்ந்தே இந்தப் போர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அப்போதும்கூட, அமெரிக்க அரசு போரைத் தவிர்க்க விரும்பினாலும், கியூபாவில் ஆதிக்கம் செலுத்திய அமெரிக்க வணிகர்களின் வற்புறுத்தலாலேயே தொடுக்கப்பட்ட இப்போரின் முடிவில், ஸ்பெயினுக்கு பதிலாக அமெரிக்காவின் ஆதிக்கத்தில் சிக்கிய கியூபாவால், 1959இல் புரட்சி வெற்றியடையும்வரை மீளமுடியவில்லை.

அழகும் நடிப்பும் ஒருங்கே அமைந்த நடிகை தேவிகா பிறந்த தினமின்று கிளாஸிக் கால ரசிகர்களை தன் நடிப்பால் மகிழ்வித்தவர்.பெண்மைக்கே உரித்தான அச்சம்,நாணம்,பயிர்ப்பு போன்ற குணங்களை தன் கண்களினாலேயே வெளிப்படுத்தியவர். அன்றைய முன்னணி கதாநாயகர்களான எம். ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன் ஆகியோருடனும் மற்றும் பல கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார். அவர் நடித்த முதல் திரைப்படமான முதலாளியில் எஸ். எஸ். ராஜேந்திரனுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். எம். ஜி. ஆருடன் அவர் நடித்த ஆனந்த ஜோதி திரைப்படத்தில் தேவிகாவின் நடிப்பு சிறப்பாக இருந்ததாக அப்போவே பலரால் குறிப்பிடப்பட்டிருக்குது. சிவாஜியுடன் வரலாற்றுப் படமான கர்ணன் திரைப்படத்தில் நடித்துள்ளார். மற்றும், குலமகள் ராதை, பலே பாண்டியா ஆகிய படங்களிலும் நடிச்சிருக்கார். ஜெமினி கணேசனுடன் அவர் நடித்த சுமைதாங்கி ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த ஒரு வெற்றிப்படமாகும். ஸ்ரீதரின் நெஞ்சில் ஓர் ஆலயம், நெஞ்சம் மறப்பதில்லை ஆகியவையும், மற்றும் வாழ்க்கைப் படகு, வானம்பாடி என்பனவும் அவரது குறிப்பிடத்தக்க திரைப்படங்களாகும்.

குழந்தைக் குரல் பாடகி எம். எஸ். ராஜேஸ்வரி மறைந்த தினமின்று 80களுக்கு பின்பு வந்த பெரும்பாலான படங்களில் குழந்தையின் குரலுக்கு ஜானகியின் குரலே பாடலில் பின்னணியாக ஒலிக்கும் அது ஆண்குழந்தையானாலும் பெண்குழந்தையானாலும் அதற்கேற்றவாறு மாற்றிப்பாடும் லாவகம் ஜானகிக்கு மட்டுமே உண்டு. ஆனால் அதற்க்கு முன்பே 60,70களில் பல குழந்தை நட்சத்திரங்கள் மட்டுமல்லாமல் பெரிய நட்சத்திரங்களுக்கும் குழந்தைக்குரலில் பாட்டு பாடியவர்தான் இந்த எம்.எஸ் ராஜேஸ்வரி. எம்.எஸ் என்றால் மதுரை சடகோபன் ராஜேஸ்வரி. மதுரை சடகோபன் – ராஜசுந்தரி தம்பதியிருக்கு சென்னை மயிலாப்பூரில் பிப்ரவரி 24, 1932ல் இவர் பிறந்ததாக விக்கிபீடியா தகவல் கூறுகிறது. சிறுவயதிலிருந்தே பாடுவதில் விருப்பமுள்ளவராக இருந்திருக்கிறார். குடும்ப நண்பர் பி.ஆர்.பந்துலு வழியாக திரைப்பட வாய்ப்பு 1946ல் கிடைக்கிறது. விஜயலட்சுமி திரைப்படத்தில் ”மையல் மிகவும் மீறுதே” என்ற பாடலை ஜி.கோவிந்தராஜுலு நாயுடு இசையமைப்பில் பாடினார். அந்தக் காலத்தில் உலகப்போரினால் ஏவிஎம் நிறுவனம் சிலகாலம் காரைக்குடியிலிருந்து இயங்கியது. இசையமைப்பாளர் ஆர்.சுதர்சனம் வழியாக ஏவிஎம்மின் அறிமுகம் கிடைத்து மாதச் சம்பளப் பாடகியாக வேலையில் சேர்கிறார். அதற்குப் பிறகு எம்.எஸ்.ராஜேஸ்வரியின் இசைவாழ்க்கையில் சிறப்பான ஏறுமுகம். டவுன் பஸ் படத்தில் இடம்பெற்ற சிட்டுக்குருவி சிட்டுக்குருவி சேதி தெரியுமா பாடலை பலமுறை கேட்டிருப்பீர்கள். குழந்தையும் தெய்வமும் படத்தில் இடம்பெற்ற கோழி ஒரு கூட்டிலே சேவல் ஒரு கூட்டிலே கோழிக்குஞ்சு ரெண்டுமிப்போ அன்பில்லாத காட்டிலே பாடல் யாருடைய கண்களையும் ஒரு கை பார்த்து கண்ணீரை வரவைத்து விடும். கைதி கண்ணாயிரம் படத்தில் இடம்பெற்ற கொஞ்சி கொஞ்சி பேசி மதி மயக்கும் வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும் என்ற பாடலில் இடையில் குழந்தை டெய்சி ராணிக்காக சுசீலாவுடன் ஓங்கி ஒலிக்கும் இவரது குரல். இவர் பாடலில் மிக மிக கொள்ளையடித்த பாடல் என்றால் மாப்பிள்ளை மாப்பிள்ளை வந்தான் மாப்பிள்ளை வந்தான் மாட்டு வண்டியிலே மிக அருமையான பாடல். சுண்டெலிக்கும் சுண்டெலிக்கும் திருமணமாம் அதில் சோளத்தட்டை பல்லாக்கிலே ஊர்வலமாம் என்று அனைத்து பாடல்களுமே குழந்தை குரலில் அற்புதமாக ஒலிக்கும். மாஸ்டர் கமலஹாசனுக்காக அம்மாவும் நீயே அப்பாவும் நீயே என்ற பாடல் இன்றளவும் நிலைத்திருக்கும் இனிய பாடல் . பராசக்தி படத்தில் இடம்பெற்ற ஓ ரசிக்கும் சீமானே வா பாடல் அன்றைய இளசுகள் இன்றைய இளசுகள் வரை துள்ளாட்டம் போடவைக்கும் பாடல். இப்படியாபட்ட எம்.எஸ்.ராஜேஸ்வரியின் முதுமை குரலை நாம் யாரும் கேட்கவேயில்லை. என்றும் அவருடைய குரலாக இளம்பெண்ணின் குரலையோ அல்லது ஒரு மழலையின் குரலையோ நம்மிடையே விட்டுச் சென்றிருக்கிறார். நுரையீரல் பிரச்சனை காரணமாக ஓராண்டாக உடல் நலிவுற்றிருந்த அவர் தன் 85வது வயதில் இதே ஏப்ரல் 25(2018) இல் மறைந்திருக்கிறார்.

டிஎன்ஏ நாள் டிஎன்ஏ நாள் (DNA நாள்) என்பது மனிதரின் மரபணு குறியீடான டிஎன்ஏ (DNA)யின் கட்டமைப்பைக் கண்டுபிடித்ததை நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படும் ஒரு சிறப்பு நாள். முக்கிய தகவல்கள்: நாள்: ஏப்ரல் 25 காரணம்: 1953ஆம் ஆண்டு ஜேம்ஸ் வாட்சன் (James Watson) மற்றும் பிரான்சிஸ் கிரிக் (Francis Crick) ஆகியோர் டிஎன்ஏயின் இரட்டை நாணல் கட்டமைப்பை (Double Helix) கண்டுபிடித்ததைக் கௌரவிக்கும் வகையில் இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. முதல் கொண்டாட்டம்: 2003ஆம் ஆண்டு, மனித டிஎன்ஏ வரைபடத் திட்டம் (Human Genome Project) முடிக்கப்பட்டதை ஒட்டி இந்த நாள் அறிவிக்கப்பட்டது. டிஎன்ஏ நாளின் நோக்கம்: மரபணு ஆராய்ச்சி மற்றும் உயிரியல் துறையின் முன்னேற்றங்களைப் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல். மருத்துவம், வேளாண்மை மற்றும் உயிரிதொழில்நுட்பத்தில் டிஎன்ஏ ஆராய்ச்சியின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தல். மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களை ஈர்க்கும் வகையில் அறிவியல் நிகழ்வுகள் நடத்துதல். எப்படி கொண்டாடப்படுகிறது? பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் டிஎன்ஏ மாதிரிகள் தயாரித்தல். விஞ்ஞானக் கருத்தரங்குகள் மற்றும் விரிவுரைகள் நடத்துதல். சமூக ஊடகங்களில் #DNADay போன்ற ஹேஷ்டேக்குகள் மூலம் விழிப்புணர்வு பரப்புதல். இந்த நாள், உயிரியல் மற்றும் மரபணு அறிவியலின் அருமையை உலகிற்கு நினைவூட்டுகிறது! நீங்களும் உங்கள் சுற்றத்தாருடன் டிஎன்ஏ பற்றி பேசி, இந்த நாளைக் கௌரவிக்கலாம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!