மு.வரதராசனார் (1912-1974)

அறிமுகம்

மு.வ எனச் சுருக்கமாக அழைக்கப்பட்ட மு. வரதராசன்  (ஏப்ரல் 25, 1912 – அக்டோபர் 10, 1974)  20ஆம் நூற்றாண்டின்  புகழ் பெற்ற தமிழ் அறிஞர்களுள் ஒருவர். இலக்கியக் கட்டுரைகள், ஆராய்ச்சி நூல்கள் போன்றவை மட்டுமன்றிப் பல சிறுகதைகள், புதினங்கள் போன்றவற்றையும் எழுதியுள்ளார்.

இவர் சென்னை பச்சையப்பன் கல்லூரி, சென்னைப் பல்கலைக் கழகம் ஆகியவற்றில் தமிழ்த்துறைத் தலைமைப் பொறுப்பில் இருந்ததுடன், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகவும் பணியாற்றினார்.   பன்முக ஆற்றல்கள் கொண்ட இவர் நல்லாசிரியராகவும், பண்பாளராகவும் விளங்கினார்.

வாழ்க்கைச் சுருக்கம்

மு.வரதராசனார், தமிழ்நாடு, வட ஆற்காடு மாவட்டம், திருப்பத்தூரில் முனுசாமி முதலியார் – அம்மாக்கண்ணு தம்பதிக்குப் பிறந்தார். திருவேங்கடம் என்று பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டாலும் தாத்தாவின் பெயரான வரதராசன் என்ற பெயரே அவருக்கு நிலைத்துவிட்டது.

மு.வ. வின் கல்வி,வேலூர் மாவட்டம், வாலாஜாப்பேட்டை அருகிலுள்ள வேலம் என்னும் சிறிய கிராமத்துடன் இயைந்து வளர்ந்தது. உயர்நிலைக் கல்வியைத் திருப்பத்தூரில் கற்றுத் தேர்ந்தார். பதினாறு வயதில் பள்ளி இறுதித் தேர்வில் வெற்றி பெற்றார். 1928-ஆம் ஆண்டில் திருப்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் சில காலம் எழுத்தராகப் பணியாற்றினார்.

எழுத்தராகப் பணியாற்றிய போது உடல் நலம் குன்றியதால் அந்தப் பணியிலிருந்து விடுபட்டு ஓய்வுக்காகக் கிராமத்துக்குச் சென்று, அங்குத் திருப்பத்தூர் முருகைய முதலியார் என்பவரிடம் தமிழ் கற்கத் தொடங்கினார்.

1931-இல் வித்வான் முதல் நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றார். பின்னர்த் தாமே பயின்று 1935-இல் வித்வான் தேர்வு எழுதி, அதில் மாநிலத்திலேயே முதல் மாணாக்கராகத் தேர்ச்சி பெற்றார்.

1935-ஆம் ஆண்டு தம் மாமன் மகளான ராதா அம்மையாரை மணந்தார். இவர்களுக்குத் திருநாவுக்கரசு, நம்பி, பாரி ஆகிய ஆண் மக்கள் பிறந்தனர். 1935 முதல் 1938 வரை திருப்பத்தூர் பள்ளியில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். 1939-இல் பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார்.

பேராசிரியராகப் பணி

1939-ஆம் ஆண்டில் பச்சையப்பன் கல்லூரி விரிவுரையாளர் பணி நிமித்தம் சென்னை சென்ற மு.வ. அக் கல்லூரியின் “கீழ்த்திசை மொழிகளில் விரிவுரையாளர்” என்ற பொறுப்பை ஏற்றார். 1944-இல் “தமிழ் வினைச் சொற்களின் தோற்றமும் வளர்ச்சியும்” என்ற தலைப்பில் ஆராய்ந்து எம்.ஓ.எல். பட்டம் பெற்றார்.

1948-இல் சென்னை பல்கலைக்கழகத்தின் மூலம் “சங்க இலக்கியத்தில் இயற்கை” என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றார். சென்னைப் பல்கலைக்கழகத்தின் மூலம் முதல் முதலாகத் தமிழில் முனைவர் பட்டம் பெற்ற பெருமைக்குரியவர் மு.வ. என்பது குறிப்பிடத்தக்கது.

1939-இல் பச்சையப்பன் கல்லூரியில் சேர்ந்த மு.வ. 1961 வரை அங்குப் பணியாற்றினார். 1945-இல் அக்கல்லூரியின் தமிழ்த் துறைத் தலைவர் ஆனார். இடையே 1948-ஆம் ஆண்டில் மட்டும், தனது முனைவர் பட்டப் படிப்பின் ஒரு பகுதியாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் துணைப் பேராசிரியராகப் பணியாற்றினார். 1961 முதல் 1971 வரை சென்னைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராகப் பணியாற்றினார்.

பின்னர் 1971-இல் மதுரைப் பல்கலைக்கழகத் துணைவேந்தராகப் பொறுப்பேற்று 1974 வரை சிறப்புறப் பணியாற்றினார்.

மு.வ., சென்னை, திருப்பதி, அண்ணாமலைப் பல்கலைக் கழகங்களின் செனட் உறுப்பினர் பதவி வகித்துள்ளார். கேரள, மைசூர், உஸ்மானியா, பெங்களூர், ஆந்திர, தில்லி, மதுரை, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களின் கல்வி வாரிய உறுப்பினர் பதவிகளையும் வகித்துள்ளார். 1972 ஆம் ஆண்டில் அமெரிக்காவின் ஊஸ்டர் கல்லூரி இவருக்கு இலக்கியப் பேரறிஞர் (டி.லிட்) என்ற சிறப்புப் பட்டத்தை நல்கிப் பெருமைப்படுத்தியது. அமெரிக்கப் பல்கலைக்கழகம் ஒன்றில் டி.லிட். என்னும் சிறப்புப் பட்டம் பெற்ற முதல் தமிழறிஞர் மு.வ. அவர்களே.

 சாகித்ய அகாதெமி,பாரதிய ஞானபீடம், தேசியப் புத்தகக் குழு, இந்திய மொழிக் குழு, சென்னைப் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலம்-தமிழ் அகராதிக் குழு, நாட்டுப்புறப்பாடல்களும் நடனங்களும் பற்றிய குழு, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணைக்குழு, ஆந்திரப்பிரதேச அரசுப்பணியாளர் தேர்வாணைக்குழு, மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைக்குழு, தமிழ்நாடு புத்தக வெளியீட்டுக் கழகம், ஆட்சிமொழிக்குழு, ஆட்சி மொழி சட்டக்குழு, தமிழ் வளர்ச்சிக் கழகம், தமிழ்க்கலை மன்றம், தமிழிசைச் சங்கம், மாநில வரலாற்றுக் கழகம், தமிழ் கலைக் களஞ்சியம், உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றில் அங்கம் வகித்ததோடு அனைத்திலும் தன்னுடைய பணி முத்திரைகளைப் பதித்த தனிச் சிறப்புகளுக்குச் சொந்தக்காரர் மு.வ. அவர்கள்.

தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தேர்ச்சி பெற்றிருந்தார்.

நாவல்கள், சிறுகதைகள், சிறுவர் இலக்கியம், நாடகங்கள், இலக்கணம், கட்டுரைகள், தமிழ் இலக்கிய நூல்கள், பயணக் கட்டுரை, முன்னுரைகள், மொழிபெயர்ப்பு, மேற்கோள்கள் என 91 நூல்களை தமிழுக்குத் தந்துள்ளார்.

இவரது திருக்குறள் தெளிவுரையை சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் நூற்றுக்கும் மேற்பட்ட பதிப்புகள் வெளியிட்டுள்ளது.

மு.வ. தான் எழுதிய நூல்களுள் பெரும்பாலானவற்றை தனது சொந்த நிறுவனமான தாயக வெளியீட்டின் வழியாக வெளியிட்டார்.அவற்றின் விற்பனை உரிமையை பாரி நிலையத்திற்கு வழங்கினார்.

மு.வ.எழுதிய நூல்களில் கி.பி. 2000 (சிந்தனைக் கதை) ஒரு தனிச் சிறப்புடையது. இதில் மு.வ.வின் இன்றைய நினைவும்,நாளைய கனவும் உள்ளன. சிந்தனையும் கற்பனையும் இயைந்து இந்நூலை நடத்திச் செல்வதால் இதனைச் சிந்தனைக்கதை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

திரைப்படமான மு.வரதராசனின் கதைகள்

பெற்ற மனம் 1960 அக்டோபர் 19

விருதுகள்

மு.வ.வின் அகல் விளக்கு எனும் புதினத்திற்கு சாகித்ய அகாதெமி விருது கிடைத்தது.

கள்ளோ காவியமோ, அரசியல் அலைகள், மொழியியல் கட்டுரைகள் ஆகிய மூன்று நூல்களுக்குத் தமிழக அரசின் விருது கிடைத்தது.

திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம், மொழிநூல், கள்ளோ காவியமோ. அரசியல் அலைகள், விடுதலையா, ஓவச் செய்தி ஆகிய ஆறு நூல்கள் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பாராட்டுப் பத்திரங்களைப் பெற்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!