மதுரை சித்திரைத் திருவிழாவை முன்னிட்டு அடிப்படை கட்டமைப்பு பணிகள் தொடங்கப்பட்டு உள்ளது. மதுரை மீனாட்சி – சுந்தரேசுவரர் கோயில் சித்திரை திருவிழா வரும் எப்ரல் 28 ம் தேதி முதல் மே 10 வரையும், அழகர்கோயில் கள்ளழகர் கோயில் சித்திரை திருவிழா மே 8 முதல் மே 17ஆம் தேதி வரை கோலாகலமாக நடைபெற உள்ளது. சித்திரை திருவிழாவில் சுவாமி வீதி உலா வந்து செல்வதற்கும், பக்தர்களின் வசதிக்காகவும் பல்வேறு அடிப்படை கட்டமைப்பு பணிகள் செய்யப்பட உள்ளன.
இந்த நிலையில் முதல் கட்டமாக வைகை ஆற்றில் தண்ணீர் கொண்டு செல்வதற்க்கு ஏதுவாக தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மதுரை வைகை ஆற்றில் உள்ள ஆகாய தாமரை அகற்றும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது.
கல்பாலம் பகுதியில் உள்ள ஆகாய தாமரைகளை 2 இயந்திரங்கள் கொண்டு அகற்றப்பட்டது. மேலும், இயந்திரங்களுடன் தன்னார்வலர்களும் இணைந்து 10 நாட்களுக்கு தூய்மை பணியை செய்ய திட்டமிட்டப்பட்டு உள்ளது. கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் போது இப்பகுதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குழுமியிருப்பார்கள். ஆகவே, பக்தர்களின் வசதிக்காகவும், வைகை அணையில் இருந்து திறந்து விடப்பட உள்ள தண்ணீர் சீராக செல்வதற்காகவும் ஆகாய தாமரைகள் அகற்றப்படுகிறது.