தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை சார்பில் இப்போட்டிகள் நடைபெறுகின்றன.
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டசபையில் 13.4.2022 அன்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்”வடக்கே உதித்த சமத்துவச் சூரியன், பலர் வாழ்வில் கிழக்காய் இருந்த பகலவன்” நமது அரசியலமைப்புச் சட்டத்தை வகுத்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்த நாளான வருகிற 14-ம் தேதி, “சமத்துவ நாளாக” கொண்டாடுவது என்று தமிழ்நாடு அரசு முடிவெடுத்துள்ளது எனச் சட்டமன்ற விதி எண்.110-ன் கீழ் அறிவித்தார்.
அதன் அடிப்படையில், தமிழ்நாட்டில் அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14-ம் தேதி ஆண்டுதோறும் சமத்துவ நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடும் விதமாக, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் ஊடக மையம் வாயிலாக “சமத்துவம் காண்போம்” என்ற தலைப்பில் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பங்கு பெறும் வகையில் சமூக ஊடகங்களான எக்ஸ் தளம், இன்ஸ்டாகிராம், பேஸ்புக், வாட்ஸ்-அப், யூடியூப் வாயிலாக 10-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன.
“சமத்துவம் காண்போம்” என்கிற முழக்கம் சமூகநீதி என்ற கருத்தாக்கத்தை அடிப்படையாகக் கொண்டது. தனிமனிதருக்கும், சமூகத்திற்கும் இடையேயுள்ள சமமான, நியாயமான உறவைக் குறிக்கிறது. தனிமனிதரின் சமூகச் செயல்பாடுகளுக்குத் தேவையானவற்றை நிறைவுசெய்து, பாகுபாடற்ற நீதியையும், நியாயத்தையும் நிலைநிறுத்துவதற்கான சூழலை உருவாக்குவதற்காகக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதன்மூலம் மக்கள் அனைவருக்கும் சமமான நீதி, வேலை வாய்ப்புகள், பாதுகாப்பான வாழ்க்கை ஆகியவை அமைவதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது.
தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் இப்போட்டிகளில் வெற்றிபெறும் வெற்றியாளர்களை நேரில் சந்தித்து, அவர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கிச் சிறப்பிக்கவுள்ளார். எனவே, பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் அனைவரும் அதிக அளவில் இப்போட்டிகளில் பங்கேற்குமாறும், தங்களது படைப்புகளை அனுப்பிவைக்குமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
மேற்கண்ட இப்போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் tndiprmhsamathuvamkanbom @gmail.com என்ற மின்னஞ்சல் மற்றும் கீழ்க்கண்ட விரைவு கியூஆர் குறியீடு வாயிலாகத் தங்கள் படைப்புகளை 30.04.2025-க்குள் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
போட்டிகளும், அதன் விதிமுறைகளும் பின்வருமாறு :-
போட்டி 1 :- ஒரு கதை சொல்லட்டுமா?
தலைப்பு: சமூகநீதி அல்லது கல்வியின் முக்கியத்துவம் அல்லது உங்களுக்குப் பிடித்த இந்திய அரசியலமைப்புச் சட்டம் எது? என்பது குறித்துக் கதைகளைப் பதிவிட வேண்டும்.
வடிவங்கள் : ரீல்ஸ் (1 நிமிடம்) அல்லது ஒரு பக்கக் கதை.
போட்டி 2: ஓவியம் வரைதல் போட்டி
தலைப்பு : சமத்துவம் காண்போம்
அளவு : 1 எம்.பி.
போட்டி 3: வினாடி – வினாப் போட்டி
தலைப்பு: அடிப்படை உரிமைகள் அல்லது இந்திய அரசியலமைப்பு – அடிப்படைகள்
போட்டி 4: மீம்ஸ் போட்டி
போட்டியாளர்கள் பெண் கல்வி, சமத்துவம் அடிப்படையில் மீம்ஸ்களை உருவாக்கி அனுப்ப வேண்டும்.
அளவு : 1 எம்.பி.
போட்டி 5: வலையொலி (Podcast)
தலைப்பு: “நான் அண்ணல் அம்பேத்கராக இருந்தால்” – நீங்கள் அண்ணல் அம்பேத்கராக மாறினால், தற்போதைய உலகில் எந்தெந்த மாற்றங்களைக் கொண்டு வருவீர்கள்?… அண்ணல் அம்பேத்கரின் கொள்கைகள் – இன்றைய காலத்திற்கேற்ற அதன் பங்கு.
அளவு : 1 முதல் 3 நிமிடங்கள் வரை (2 எம்.பி.)
படைப்பாளிகள் தங்களது படைப்பினை ஒலி வடிவில் (தமிழில்) பகிர்ந்து கொள்ள வேண்டும்.
போட்டி 6: உரிமைகளுக்கான ராப் பாடல் (Rap Singing)
அனைவரும் சமம் என்ற தலைப்பில் ப்ரீ ஸ்டைல் ராப் செய்து ஒலி வடிவில் அனுப்ப வேண்டும்.
அளவு : 1 முதல் 3 நிமிடங்கள் வரை (2 எம்.பி.)
போட்டி 7: செல்பி மற்றும் ஹேஷ்டேக் போட்டி
அண்ணல் அம்பேத்கர் சிலை அல்லது போஸ்டர்களுடன் செல்பி அல்லது “இந்திய அரசியலமைப்பு” புத்தகத்துடன் செல்பி, அரசியலமைப்பின் முன்னுரையுடன் செல்பி #RiseforEquality என்ற ஹேஷ்டேக்குடன் பதிவுகளை உங்கள் சமூக ஊடகக் கணக்குகளில் பதிவிட்டு, tndipr சமூக ஊடகக் கணக்கை டேக் செய்ய வேண்டும். உங்கள் நண்பர்கள் மற்றும் பின் தொடர்பவர்களும் #RiseforEquality என்ற ஹேஷ்டேக்குடன் இப்பதிவுகளைப் பகிர்ந்து கொள்ளலாம். (அளவு: 1எம்.பி.)
போட்டி 8: சமூக ஊடகங்களின் மூலம் விழிப்புணர்வு
பங்கேற்பாளர்கள் தங்கள் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அண்ணல் அம்பேத்கரின் மேற்கோள்கள் அல்லது அரசியலமைப்பின் முன்னுரையைப் பதிவிட வேண்டும். அதைத் தங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரையும் பகிர்ந்து கொள்ளச் செய்யவேண்டும். அதிக எண்ணிக்கையிலான ஸ்டேட்டஸ் ஸ்கிரீன்ஷாட் பகிரப்பட்டதன் அடிப்படையில் வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.