இஸ்லாமியர்களின் புனித பயணமான ஹஜ் யாத்திரை ஜூன் மாதம் வருகிறது. இதற்கிடையே திடீரென இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. திடீரென 14 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா நிறுத்தி வைக்க என்ன காரணம். இதன் பின்னணி என்ன என்பது குறித்து நாம் பார்க்கலாம்.
முஸ்லீம்கள் அனைவரும் தங்கள் வாழ்நாளில் ஒரு முறையாவது ஹஜ் புனித யாத்திரைக்குச் செல்ல வேண்டும் என விரும்புவார்கள். அது இஸ்லாமியர்களின் கடைமையாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு வரும் ஜூன் முதல் வாரத்தில் ஹஜ் காலகட்டம் தொடங்கும். இந்த காலத்தில் மெக்கா, மதீனா ஆகிய இரு இடங்களுக்கும் செல்வதை இஸ்லாமியர்கள் வழக்கமாக வைத்துள்ளனர்.
14 நாடுகளுக்கு விசா நிறுத்தி வைப்பு
இதற்கிடையே மெக்கா, மதீனா அமைந்துள்ள சவுதி அரேபியா அரசு திடீரென இந்தியா, வங்கதேசம் உள்ளிட்ட 14 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. உம்ரா, பிஸ்னஸ் மற்றும் குடும்ப விசா ஆகியவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஹஜ் காலம் முடிவடையும் வரை, அதாவது ஜூன் இரண்டாவது வாரம் வரை இந்த தடை அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், எகிப்து, இந்தோனேசியா, ஈராக், நைஜீரியா, ஜோர்டான், அல்ஜீரியா, சூடான், எத்தியோப்பியா, துனிசியா, ஏமன் மற்றும் மொராக்கோ ஆகிய 14 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஹஜ் புனித பயணம்
ஹஜ் சமயத்தில் அனைத்து தரப்பினரும் ஒரே நேரத்தில் சவுதிக்குப் படையெடுப்பார்கள். இதனால் கூட்டம் அதிகரிக்கும். இதனால் மோசமான சம்பவங்களும் கூட நிகழ்ந்துள்ளன. அதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்கவே ஒவ்வொரு நாட்டிற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே விசாவை சவுதி வழங்கும். இருப்பினும், அதுபோல முறையான பதிவு இல்லாமல் பலரும் ஹஜ் புனித யாத்திரை செல்கிறார்கள். இதனால் மோசமான சம்பவங்கள் நிகழ்வதால் அதைத் தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
உம்ரா விசா
அதேநேரம் ஏற்கனவே உம்ரா விசாக்களை வைத்திருப்போர் வரும் ஏப்ரல் 13 வரை சவுதி அரேபியாவிற்குள் நுழையலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். ஹஜ் என்பது குறிப்பிட்ட நாட்களில் மெக்கா மற்றும் மதீனா என இரு இடங்களுக்கும் புனித பயணம். அதேநேரம் உம்ரா என்பது மெக்காவிற்கு மட்டும் செல்லும் புனித யாத்திரை. ஹஜ் போல இல்லாமல் உம்ரா புனித பயணத்தை எப்போது வேண்டுமானாலும் மேற்கொள்ளலாம். அந்த உம்ரா விசா வைத்திருப்போர் ஏப்ரல் 13 வரை சவுதிக்கு வந்து செல்லலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் உம்ரா அல்லது வேற விசா மூலம் ஹஜ் பயணம் மேற்கொண்டதால் கூட்ட நெரிசல் மற்றும் வெப்ப அலையால் உயிரிழப்புகள் ஏற்பட்டது. கடந்தாண்டு கூட ஹஜ்ஜின் போது இதுபோன்ற சம்பவத்தில், சுமார் 1,200 பேர் உயிரிழந்தனர். மீண்டும் அதுபோன்ற ஒரு சம்பவம் நடக்கக்கூடாது என்பதாலேயே சவுதி விசாவுக்கள் வழங்குவதைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
அதிகாரிகள் தகவல்
இது தொடர்பாகச் சவுதி அதிகாரிகள் சர்வதேச ஊடகத்திடம் கூறுகையில், “முறையாகப் பதிவு செய்யாமல் ஹஜ் பயணம் மேற்கொள்வதைத் தடுக்கவே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளோம். உம்ரா விசா வைத்திருப்போர் ஏப்ரல் 13 வரை சவுதிக்கு வரலாம். அதற்கு எந்தவொரு கட்டுப்பாடும் இல்லை.
ஹஜ் பயணத்தில் ஒவ்வொரு நாட்டினருக்கும் குறிப்பிட்ட கோட்டா இருக்கிறது. இதன் மூலம் சட்டவிரோதமாக ஹஜ் பயணத்தை மேற்கொள்வதைத் தடுக்க முடியும். அதேபோல சட்டவிரோத வேலைவாய்ப்பைத் தடுக்கவும் இது பயன்படும். பலரும் பிஸ்னஸ் அல்லது குடும்ப விசாக்களைப் பயன்படுத்தி சவுதி அரேபியாவில் வேலை செய்கிறார்கள். விசா விதிமுறைகளை மீறி இவர்கள் இதுபோல செய்வதால் அது பல்வேறு தரப்பிருக்கும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.
இதனால் எங்களுக்கும் இந்த குறிப்பிட்ட நாடுகளுக்கும் பிரச்சினை எனக் கருதத் தேவையில்லை. பாதுகாப்பு மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட புனித யாத்திரையை உறுதி செய்யவே இந்த நடவடிக்கையை எடுக்கிறோம். இந்த உத்தரவை மீறும் நபர்கள் அடுத்த 5 ஆண்டுகள் சவுதிக்குள் நுழையத் தடை விதிக்கப்படும். எனவே, பயணிகள் புதிய விதிகளைப் பின்பற்ற வேண்டும்” என்றார்.
அதேநேரம் தூதரக விசாக்கள், ரெசிடென்சி பெர்மிட் மற்றும் ஹஜ் விசாக்கள் இதனால் பாதிக்கப்படாது. அதாவது ஹஜ் விசா வைத்திருப்போர் ஏப்ரல் 13ம் தேதிக்கு பிறகும் சவுதி செல்லலாம். அவர்களுக்கு எந்தவொரு பாதிப்பும் இருக்காது என்பதைச் சவுதி அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர்.