தெற்கு வங்கக்கடலில், நாளை புதிதாக காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது’ என, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. அதன் அறிக்கை: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில், பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை வரையிலான, 24 மணி நேரத்தில், கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு பகுதியில், அதிகபட்சமாக, 7 செ.மீ., மழை பதிவானது.
இதற்கு அடுத்தபடியாக, கன்னியாகுமரி மாவட்டம் சுருள்கோடு, 6; கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், விருதுநகர் ஆகிய இடங்களில் தலா, 5 செ.மீ., மழை பெய்துள்ளது.
தமிழக தென் மாவட்டங்களின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல், அதனை ஒட்டிய பகுதிகளில், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இது அடுத்த, 48 மணி நேரத்தில், அதாவது நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும். இதனால், தமிழகத்தில் ஓரிரு இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில், இன்று முதல் ஏப்., 12 வரை, மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில், ஏப்., 10ம் தேதி வரை, அதிகபட்ச வெப்ப நிலை, இயல்பை விட, 3 டிகிரி செல்சியஸ் வரை கூடுதலாக பதிவாகலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். அதிகபட்ச வெப்ப நிலை, 36 டிகிரி செல்ஷியஸ் வரை பதிவாகலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நேற்று மாலை நிலவரப்படி, தமிழகத்தில் அதிகபட்சமாக வேலுாரில், 102 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38.7 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. ஈரோடு, கரூர் பரமத்தி, மதுரை விமான நிலையம், சேலம், திருச்சி ஆகிய இடங்களில், 100 டிகிரி பாரன்ஹீட் அதாவது, 38 டிகிரி செல்சியசுக்கு மேல் வெப்பம் பதிவானது.
காற்றழுத்த தாழ்வு நிலை குறித்து, தனியார் வானிலை ஆய்வாளர் ந.செல்வகுமார் கூறியதாவது: தமிழகத்தில் கிழக்கு காற்று மற்றும் குளிர் நீராவி இணைவு காரணமாக, உள்மாவட்டங்களில், வெப்பச்சலன மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில், அந்தமான் கடலுக்கு வெளியில், தற்போது நிலவும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி, காற்றழுத்த தாழ்வு பகுதியாக நாளை உருவாக வாய்ப்புள்ளது. காற்றழுத்த தாழ்வுப்பகுதி நெருங்கும் நிலையில், கன்னியாகுமரி முதல் சென்னை வரையிலான கடலோர மாவட்டங்களில், நாளை முதல், 10ம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட வடமாவட்டங்களிலும், ஆந்திரா, ஒடிசா வரையும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.