பிரதமரின் வெளிநாட்டுப் பயணங்கள் : 2 ஆண்டுகளில் ரூ. 259 கோடி செலவு..!

பிரதமர் மோடியின் மே 2022 முதல் டிசம்பர் 2024 வரையிலான 38 வெளிநாட்டுப் பயணங்களுக்கு மொத்தம் ரூ.259 கோடி செலவாகியுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் இருதரப்பு சந்திப்புகள் மற்றும் உலக நிகழ்வுகளுக்காக மே 2022 முதல் டிசம்பர் 2024 வரையிலான 38 வெளிநாட்டுப் பயணங்களுக்கு மொத்தம் ரூ.259 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

மாநிலங்களவையில் காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே எழுப்பிய கேள்விக்கு, எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் வெளியுறவுத் துறை இணையமைச்சர் பபித்ரா மார்கெரிட்டா இந்த தகவலைத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி 38 பயணங்களில் 34 நாடுகளுக்கு சென்றார். 2022இல் எட்டு நாடுகளுக்கும், 2023 இல் 10 நாடுகளுக்கும், 2024 இல் 16 நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார்.

2022 ஆம் ஆண்டில் பிரதமர் பயணம் மேற்கொண்ட நாடுகளில் ஜெர்மனி, டென்மார்க், பிரான்ஸ், நேபாளம், ஜப்பான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யுஏஇ), உஸ்பெகிஸ்தான் மற்றும் இந்தோனேசியா ஆகியவை அடங்கும். 2023 ஆம் ஆண்டில் பப்புவா நியூ கினியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, எகிப்து, பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், தென்னாப்பிரிக்கா, கிரீஸ் மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்குச் சென்றார்.

2024ஆம் ஆண்டில், பிரதமர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கத்தார், பூட்டான், இத்தாலி, ஆஸ்திரியா, ரஷ்யா, போலந்து, உக்ரைன், புருனே தாருஸ்ஸலாம், அமெரிக்கா, சிங்கப்பூர், லாவோஸ், நைஜீரியா, பிரேசில், கயானா மற்றும் குவைத் ஆகிய நாடுகளுக்குச் சென்றார்.

2016 ஆம் ஆண்டு வாங்கப்பட்ட இரண்டு போயிங் 777-300ER களைப் பயன்படுத்தி இந்திய விமானப்படையின் சிறப்புப் படைப்பிரிவால் இயக்கப்படும் ஏர் இந்தியா ஒன் என பெயரிடப்பட்ட சிறப்பு விமானத்தில் பிரதமர் வெளிநாடு பயணம் செய்கிறார். பிரதமருடன் வழக்கமாக பிரதமர் அலுவலகம் மற்றும் வெளியுறவு அமைச்சகம் உட்பட பல அமைச்சகங்களின் மூத்த அதிகாரிகள் மற்றும் சிறப்பு பாதுகாப்புக் குழுவின் பாதுகாப்புப் பிரிவினர் செல்வர்.

தங்குமிடம், பாதுகாப்பு, போக்குவரத்து மற்றும் இதர செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் செலவுகள் கணக்கிடப்பட்டுள்ளன. தங்குமிடத்திற்கு ரூ.104 கோடி, இதர செலவுகள் ரூ.75.7 கோடி மற்றும் போக்குவரத்து ரூ.71.1 கோடி என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!