கோவில்கள் மூலம் கிடைக்கும் வருவாயை கோவில்களுக்கே செலவு செய்கிறோம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கோவில் உண்டியல் பணம் ரூ.445 கோடியை தேவாலயம், மசூதி கட்டுவதற்கு தமிழக அரசு செலவழித்துள்ளதாக ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், “இது முற்றிலும் பொய்யான தகவல். பதிவிட்டவர் பகிர்ந்த புகைப்படத்தில் இடம்பெற்ற செய்திக்கும், தமிழ்நாட்டுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை.
கர்நாடகாவில் உள்ள கோவில்களின் உண்டியலில் வசூலான நிதி தொடர்பாகவே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு என்று திரித்து வதந்தி பரப்பி வருகிறார்கள். தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை கோவில்கள் மூலம் கிடைக்கும் வருவாயை கோவில்களுக்கும், இந்து சமயம் சார்ந்த விவகாரங்களுக்காக மட்டுமே அரசு செலவு செய்கிறது” என்று கூறப்பட்டுள்ளது.