சுடுசொற்கள் மூலமாகவோ, ஒரு விலகல் பார்வை மூலமாகவோ அழ வைப்பதும் மனதை வருத்துவதும் சுலபம். ஆனால், சிரிக்க வைப்பது அத்தனை இலகுவானது அல்ல. ஒரு குறிப்பிட்ட கால மாற்றத்திற்குப் பிறகு பிறரை துன்புறுத்துவதும் உருவகேலி செய்வதுமே நகைச்சுவை என்று அறியப்பட்டு வருகிறது. வயது வித்தியாசமின்றி, சும்மா தமாஷூக்கு சொன்னேன் என்ற சொல்வதும் உண்டு.
திரு. மடிப்பாக்கம் வெங்கட் அவர்களின் “அறுசுவை” புத்தகம் அலாதியான சுவையுடன் ருசித்தது என்று தான் சொல்லவேண்டும். இயல்பான உரையாடல்களில், ரசனையான மென் சீண்டல்களில் இலகுவான மொழியில் “அறுசுவை” நகைச்சுவை நளபாகம் தான். இவருடைய முகநூல் பதிவுகள் அனைத்திலும் உணவுகள் பற்றிய பதிவும் அதிகம் இருக்கும். இத்துணை சிரமமும் இந்த எண்ஜான் வயிற்றுக்குத்தானே. அப்படி வயிற்றுக்குள் வஞ்சணையில்லாமல் சிக்கும் உணவுகளைப் பற்றி சுவாரஸ்யமாய் ஒரு புத்தகம் வருகிறதென்றால்…
பிள்ளையார் சுழியோட தான் ஆரம்பிச்சி இருக்கார். நயன்தாரா போண்டா, அந்தக் கடை ஊழியர், கல்லாவில் உறங்கியவர் முக்கியமாக உணவின் ருசி, வாசிக்கும் போது நாமே சுவைத்ததைப் போன்ற வர்ணணை.
ரெசிபியோட, உடல்ல எத்தனை கலோரி ஏறுதுங்கிற தகவல்கள் வேற, ராகவன் எழுதின இ-புக், சிறுகதை ஒரு ரகம் என்றால், தப்பிச்சேன்டா சாமி மற்றொரு ரகம்…! ஆடிவெள்ளியும் அரிசி பாயசம், தோசை திருப்பிய மாற்றிய கதை அந்த எதிர்போர்ஷன் நண்பர் ரணகளம். ஹிந்தி கத்துக்கணும் Just Comedy தான் ! 50 ரூவா அண்டா, நல்லவேளை பாத்திரக்கடையில் போய் நிற்கலைன்னு நினைக்கத் தோணுச்சி ! இந்த மாத கோட்டா இத்தோடு மாதம் முழுவதும் கேட்கமாட்டேன் என்று சரியாக 30-ம் தேதியான மாதக்கடைசி சத்தியங்களும், அதற்கு மாமியின் புத்திசாலித்தனமான சமாளிப்புகளும் அருமை.
நான் ரசித்த மனிதர் கிரேஸி மோகன் அவர்களின் நாடகங்கள் பலது பார்க்கும் வாய்ப்பு இருந்திருக்கிறது. அவருடனான பேட்டி, படு பிஸியா ? கேள்விக்கு அவரின் பதில் அலாதி சுவைதான் !
கரும்பு பக்கோடா அத்தியாயம் வயிறு வலிக்க சிரிக்க வைத்தது. ஒரு பக்கம் சிரிப்பு, சமையல் கலை, தம்பதியரின் கிண்டல் வசனங்கள், ஞானப்பூனையின் அறிவியல், ஞாபகங்கள் தொகுப்பு, சாவியில் பேட்டிகள் பற்றிய விவரம், குருவிகளின் குதூகலம் என்று நெகிழ்வுக் கட்டுரைகளும் அறுசுவையில் அடக்கம். காரம், மணம், சுவை, திடம்னு கலந்து கட்டிய கல்யாண சமையலாய் ருசித்தது. எனக்கு இங்க் பேனா மிகவும் பிடிக்கும். நேற்று வாங்கிய புதிய பேனாவில், வெங்கட் அவர்களுக்கு கையெழுத்து பிரதியாக புத்தகம் பற்றி எழுதி அனுப்பியிருந்தேன்.
வாழ்த்துகள் மடிப்பாக்கம் வெங்கட் அவர்களுக்கு….
விரைவில் வெளிவரப்போகும் உங்களின் அடுத்த புத்தகத்திற்கும் சேர்த்து.
திருமதி.லதா சரவணன்
(எழுத்தாளர் )