இனி ஆர்.ஆர்.பி. மூலம் அனைத்து தேர்வுகளும் நடத்தப்படும்’ – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு..!!

வினாத்தாள் கசிவு எதிரொலியாக அணைத்து பதவி உயர்வுக்கான தேர்வுகளும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் மூலம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேசத்தின் முகல்சராய் பகுதியில், கிழக்கு மத்திய ரயில்வே மண்டலத்தில், தலைமை லோகோ பைலட் பதவிக்கு, துறை ரீதியான தேர்வு கடந்த மார்ச் 4 ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வுக்கான வினாத்தாளை கசியவிடும் முயற்சிகளில் சிலர் ஈடுபடுவதாக சி.பி.ஐ. போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் முகல்சராய் பகுதியில் 3 இடங்களில் அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது 17 பேர், கையால் எழுதப்பட்ட ரயில்வே தேர்வு வினாத்தாள் நகல்களுடன் பிடிபட்டனர். அவர்கள் அனைவரும் ரெயில்வேயில் இளநிலை லோகோ பைலட்டாக (என்ஜின் டிரைவர்) பணிபுரிபவர்கள் என்று தெரியவந்தது. அவர்கள் பணம் கட்டி வினாத்தாள் நகல்களை மோசடியாக பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 17 பேரையும் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

மேலும் இவர்களுக்கு வினாத்தாள்களை வினியோகித்ததாக 9 ரெயில்வே அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். இந்த தேர்வை நடத்தும் பொறுப்பு அதிகாரியான, மண்டல முதுநிலை மின் பொறியாளர் (ஆபரேஷன்) மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இவர் தான் வினாத்தாளை தயாரிக்கும் அதிகாரி ஆவார். அவர் கைப்பட ஆங்கிலத்தில் வினாக்களை எழுதி ஒரு என்ஜின் டிரைவரிடம் கொடுத்துள்ளார். அந்த நபர் இந்தி மற்றும் வேறு சில மொழிகளிலும் வினாத்தாள்களை தயாரித்து மற்றவர்களுக்கு வினியோகம் செய்துள்ளார். இதனால் மண்டல முதுநிலை பொறியாளரும் கைது செய்யப்பட்டார்.

இதையடுத்து 8 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு ரூ.1 கோடியே 17 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டு உள்ளது. இந்த தொகை வினாத்தாள் விற்பனைக்காக வசூலிக்கப்பட்ட தொகை என்று தெரியவந்துள்ளது. தொடர்ந்து பிடிபட்டவர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட கையெழுத்தில் தயாரிக்கப்பட்ட வினாத்தாளும், அசல் தேர்வு வினாத்தாள் கேள்விகளும் பொருத்தமாக இருப்பது ஒப்பிடப்பட்டு கண்டறியப்பட்டு உள்ளது. இதை புகாரில் முக்கிய சான்றாக இணைத்து உள்ளனர். இந்த மோசடி சம்பவம், நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் அனைத்து பதவி உயர்வு தேர்வுகளையும் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (ஆர்.ஆர்.பி.) மூலம் நடத்தவும், பொதுவான முறையில் கணினி அடிப்படையில் நடத்தவும் ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ரயில்வே வாரியம் நேற்று (மார்ச்5) நடத்திய உயர்மட்டக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக ரயில்வே அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுகள் ஒரு காலண்டர் அடிப்படையில் நடத்தப்படும் என்றும், இதற்காக அனைத்து ரயில்வே மண்டலங்களும் ஒரு காலண்டரை உருவாக்கும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையாக தேர்வுகள் நடத்துவதில் உள்ள அனுபவம் காரணமாக ஆர்.ஆர்.பி.யிடம் இந்த பொறுப்பு ஒப்படைக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!