கிரிகோரியன் காலண்டர் உருவான தினமின்று (1582). கணக்கு கூட்டுவது எனும் பொருள் தரும் ‘கலண்டே’ எனும் இலத்தீன் உச்சரிப்பிலிருந்து உருவானதுதான் காலண்டர் (Calender) எனும் ஆங்கிலச் சொல். புவியியல் மற்றும் கால நிலைகளில் ஏற்பட்ட பெரும் மாற்றங்களே துவக்க கால காலண்டர்களுக்கு அடிப்படையாக அமைந்தன. நைல் நதியில் ஆண்டுதோறும் ஏற்படும் வெள்ளப்பெருக்கை அடிப்படையாகக் கொண்டு புராதன எகிப்தியர் உருவாக்கிய காலண்டர் இதற்குச் சான்று. இன்று நம் முன்னே இருக்கும் காலண்டரின் அடிப்படை கி.மு.45 இல் ஜூலியஸ் சீசரால் உருவாக்கப்பட்ட ஜூலியன் காலண்டரே. இன்று உலகெங்கும் பரவலாகப் பயன்படுத்தப்படும் காலண்டரே முறையே கிரிகோரியன் காலண்டர். பதிமூன்றாம் போப் ஆண்டவராக இருந்த போப் கிரிகோரியின் ஆணைப்படி, அலோயி ஷியஸ் ல்லியஸ் என்னும் மருத்துவரே 1582 பிப்ரவரி 24 இல் ஜீலியன் காலண்டரில் காணப்பட்ட குறைபாடுகளைத் திருத்தியமைத்து கிரிகோரியன் காலண்டரை உருவாக்கினார். ஏசு கிருஸ்துவின் பிறந்த தினத்தை அடிப்படையாக கொண்ட இக்காலண்டரின் வருடங்கள் ஒழுங்கமைப்பட்டது. ஸ்பெயின், போர்ச்சுக்கல்,போலிஷ்லிதுவேனியன் காமன்வெல்த், இத்தாலியின் பெரும்பாலான பகுதிகள் போன்றவையே கிரிகோரியன் காலண்டரை முதன் முதலில் ஏற்றுக்கொண்டன. 1582 அக்டோபர் முதல் இவை கிரிகோரியன் காலண்டரைப் பயன்படுத்தத் துவங்கின. இங்கிலாந்தும் அமெரிக்காவும் 1752 ஆண்டிற்கு பின்பே கிரிகோரியன் காலண்டரை அங்கீகரித்தன. 1923 பிப்ரவரி 15 ல் கிரிகோரியன் காலண்டரை அங்கீகரித்த கிரீஸே இப்பட்டியலின் கடைசி நாடு.
இதே பிப்ரவரி 24 (1914) பாம்பன் பாலத்தில் ரயில் போக்குவரத்து தொடங்கிச்சு.. ஆக இன்னியோட பாம்பன் பாலம் சர்வீஸூக்கு 110 வயசு நிறைவடைகிறது. இது ஆங்கிலேயர்கள் நமக்கு விட்டுச் சென்ற வரலாற்று பொக்கிஷம் என்றால் மிகையாகாது. 2,340 மீட்டர் நீளம் கொண்ட இந்த பாலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள மண்டபத்தையும் கடலுக்குள் அமைந்து இருக்கும் பாம்பன் தீவையும் இணைக்கிறது பாம்பன் ரயில் பாலம் நூறு ஆண்டுகளை கடந்தும் இப்போதும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இந்த புதிய ரயில்வே தூக்குப்பாலத்தை கட்டுவதற்கான முதற்கட்டப் பணிகள் 1902-ம் ஆண்டு தொடங்கப்பட்டன. பல்வேறு இயற்கை சீற்றங்கள், தடைகளை கடந்து 11 ஆண்டுகளாக ரயில்வே தூக்குப்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. அந்த பாம்பன் பாலத்தில் 1914-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 24-ந்தேதி முதன் முதலாக ரெயில் போக்குவரத்து தொடங்கிச்சு.பாம்பன் ரெயில் பாதை அமைக்கப்பட்ட நாள் முதல் மீட்டர்கேஜ் பாதையாகவே இருந்தது. 2007 ஆகஸ்டு மாதம் முதல் அகலப்பாதையில் ரயில் போக்குவரத்து தொடங்கியது.
இதே பிப்ரவரி 24 2009ஆம் ஆண்டு தான் “வாட்ஸ் ஆப் (Whatsapp) சேவை துவங்கப்பட்டது. அலைபேசியில் அனுப்பும் குறுந்தகவலுக்குப் பதில் காணொலி, கேட்பொலி மற்றும் உருப்படிமங்களை எளிமையாகத் தடையின்றி அனுப்புவதை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது ‘வாட்ஸ் ஆப்’ செயலி. அமெரிக்காவைச் சார்ந்த ஜேன் கோம் மற்றும் பிரையன் ஆக்டன் ஆகியோரின் முயற்சியால் 2009 பிப்., 24ம் தேதி சிலிகான் பள்ளத்தாக்கில் 55 பணியாளர்களைக் கொண்டு ‘வாட்ஸ் ஆப்’ நிறுவனம் துவங்கப்பட்டது. அதன் மூலம் ‘வாட்ஸ் ஆப்’ செயலி உருவாக்கப்பட்டது.
கம்பராமாயண சாயபு, நாச்சியார்கோவில் தாவூத் ஷா என்று பல பெயர்களால் அழைக்கப்பட்ட பன்முகத் தோற்றம் கொண்டவர் இலக்கியவாதி அறிஞர் பா. தாவூத் ஷா காலமான நாளின்று’ தாவூத் ஷா தனது இறுதிக் காலத்துக்குள் திருக்குர் ஆன் முழுவதையும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டுவிட வேண்டும் என்ற ஆர்வம் அவரது நெஞ்சில் முள் போல் உறுத்திக்கொண்டிருந்தது. அவருக்கு 70 வயதானபோது தாருல் இஸ்லாமி இதழை நிறுத்திவிட்டு முழுமையாக குர் ஆன் மொழிபெயர்ப்பில் இறங்கினார். You May Also Like “திருப்பூரில் மகனுடன் சாப்பிட்ட மாலா.. அடுத்த நொடி நடந்த சம்பவம்.. அதிர்ந்து போன அக்கம் பக்கம் ” இதற்கு அன்றைய உலமாக்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். இதையும் மீறி அவர் அச்சேற்றினார். இது காதியானி மொழிபெயர்ப்பு, காபிர் மொழிபெயர்ப்பு, இதனை முஸ்லிம்கள் வாங்கக்கூடாது என்று அன்றைய உலமாக்கள் பிரச்சாரம் செய்தார்கள். இதனால் தொடர்ந்து தொகுதிகளை வெளியிட முட்டுக்கட்டை விழுந்தது. நான்காம் தொகுதிக்கு தைக்கா சுஐபு ஆலிம் 13,000 கொடுத்தார்கள். 1967 இல் ஐந்தாம் தொகுதி வெளிவந்தது. இதற்குள் உலமாக்களின் தாக்குதல் அதிகமாயிற்று. தாவூத் ஷாவும் நோயில் படுத்துவிட்டார். பள்ளிவாசல்களில் குத்பா சொற்பொழிவுகள் தமிழில் நடத்தப்பட வேண்டும் என்றார் தாவூத் ஷா. தர்காக்களில் வணக்கம் கூடாது. முஸ்லிம்கள் வேப்பிலை அடிக்கக்கூடாது. கறுப்புக் கயிறு கட்டக்கூடாது. நாள், நட்சத்திரம் பார்க்கக் கூடாது. முஸ்லிம் பெண்களை படிக்க வைக்க வேண்டும் என்றார். பெண் கல்வி கூடாது என்று தீர்ப்பளிக்கப்பட்டிருந்த காலத்தில், சென்னை ஐகோர்ட் நீதிபதி பஷீர் அகமது, பெண்களுக்காக எஸ்.ஐ.இ.டி கல்லூரியை ஆரம்பித்தபோது, அவருக்கு உறு துணையாக இருந்தார். திரைப்படங்கள் மத விரோதமான ஒன்று (இன்றளவும் அது நீடிக்கிறது) எனக் கருதப்பட்ட காலத்தில் திரைப்படங்களுக்கு ஆதரவாக இருந்தார் தாவூத் ஷா. எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்களில் முஸ்லிம் வாழ்வியல் சார்ந்த காட்சிப் பதிவுகளுக்கு இயக்குநர்கள் இவரைப் பயன்படுத்திக் கொண்டனர். இதழியலாளர்: சமுதாயப் பணிக்கு ஓர் இதழ் தேவை என்று 1919 ஆம் ஆண்டு நாச்சியார்கோயிலில் தாருல் இஸ்லாம் பத்திரிகையைத் தொடங்கினார். 1923ல் அந்த இதழ் சென்னைக்கு வந்தது. 1957 ஆம் ஆண்டு வரை 38 ஆண்டு காலம் அந்தப் பத்திரிகையை அவர் நடத்தி இருக்கிறார். இதழ் நடத்துவது என்பது நெருப்பு ஆற்றை நீந்திக் கடப்பது போல’ என்று ஆதித்தனார் கூறுவார். 38 ஆண்டுகாலம் அவர் நெருப்பாற்றில் நீந்தினார். கலைஞரைக் கவர்ந்த தாருல் இஸ்லாம்: தாருல் இஸ்லாம் குறித்து முதல்வர் கருணாநிதி கூறுகையில், அந்தக் காலத்தில் நான் பள்ளியில் பயிலும் போது ஒரு கையிலே குடி அரசு ஏடு, இன்னொரு கையிலே தாருல் இஸ்லாம் என்கிற முஸ்லிம் லீக்கிற்காகப் பிரசாரம் செய்கிற நாளேடு. இவைதான் எங்கள் கைகளை அலங்கரிக்கும் என்று கூறியுள்ளார்.
ருக்மிணி தேவி அருண்டேல் காலமான நாள் இந்தியாவின் முதல் பெண் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஆனால், அதற்குப் பல ஆண்டுகளுக்கு முன்னரே தமிழகத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவருக்கு அந்த வாய்ப்பு கிட்டியது தெரியுமோ? அது 1977-ஆம் ஆண்டு. அந்நாளைய குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமது திடீரென்று காலமானார். அந்நாளைய பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் தமிழகத்தைச் சேர்ந்த இவரை குடியரசுத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ளும்படி வேண்டினார். ஆனால் நாட்டியத்தின் மீதுள்ள தீவிரப் பற்றால் அவர் குடியரசுத் தலைவர் பதவியை ஏற்க மறுத்துவிட்டார். அவர்தான் ருக்மிணி தேவி அருண்டேல் ஆவார். ருக்மிணி தேவி அருண்டேல் (Rukmini Devi Arundale) (பெப்ரவரி 29, 1904 – பெப்ரவரி 24, 1986) மதுரையில் பிறந்தவர். இவர் ஒரு புகழ்பெற்ற நடனக் கலைஞர். கலாசேத்திரா என்ற நடனப் பள்ளியினை நிறுவியவர். சமூகத்தில் ஒரு சாரார் மட்டும் பயின்ற சதிர் என்ற நடனத்திற்கு, பரதநாட்டியம் என்ற பெயரிட்டு பலரும் பரவலாக பயில முனைப்புடன் செயல்பட்டவர். 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலகட்டங்களில் நாம் இன்று “பரதநாட்டியம்’ என்று அழைக்கும் நடனக்கலை “சதிராட்டம்’ என்று அழைக்கப்பட்டது. மேலும் அக்கலையை தேவதாசிகள் என்ற தனிப்பிரிவினர் மட்டுமே பயில்வர். சாமானிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் ஒருவருக்கும் இக்கலையைப் பயில அனுமதி இல்லை. அவர்களுக்கு ஆர்வம் இருந்தாலும் சமூக அளவில் இக்கலையைப் பயில்வதையும், ஆடுவதையும் அவமானமாகக் கருதினர்.இந்நிலையை முற்றிலுமாக மாற்றியவர் ருக்மிணி தேவி அருண்டேல் ஆவார். அதாவது ருக்மிணி ஆஸ்திரேலியாவிற்கு ஒரு கப்பலில் பயணம் செய்யும்பொழுது “அன்னா பாவ்லோவா’ (Anna Pavlova) என்ற பாலே நடனக் கலைஞரைக் கண்டு அவரது நடனத்தால் பெரிதும் கவரப்பட்டார். அவரிடம் பாலே நடனம் கற்றுக்கொள்ள முயற்சி செய்தார். அன்னா உங்கள் நாட்டு பாரம்பரிய நடனத்தைக் கற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இந்தியா திரும்பிய ருக்மிணி அவரது அறிவுரைப்படி பரத நாட்டியத்தைக் கற்றுக்கொள்ள முடிவு செய்தார்.சாமானிய குடும்பத்தைச் சேர்ந்த பல பெண்களும் பரதம் கற்றுக்கொள்ள விரும்புகின்றனர். ஆனால், சமூகக் கட்டுப்பாடுகள் அவர்களைத் தடுக்கின்றன என்பதை உணர்ந்த ருக்மிணி இந்நிலையை மாற்ற முடிவு செய்தார். அதன்படி “பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை’ என்ற ஆசிரியரிடம் பரதம் பயின்றார். 1935-ஆம் ஆண்டு தியோஸôபிக்கல் சொûஸட்டியில் நடைபெற்ற விழா ஒன்றில் தனது முதல் நடனத்தை அரங்கேற்றினார். இவரது முயற்சியால் குடும்பப் பெண்கள் பலரும் நடனம் கற்க முன் வந்தனர். ஆனால் ஆண் ஒருவரிடம் நடனம் கற்கத் தயங்கினர். இத்தகைய பெண்களுக்குப் பாதுகாப்பான முறையில் பயிற்சி அளிக்கவும், இசைக் கலையை வளர்க்கவும் சென்னை திருவான்மியூரில் “கலாúக்ஷத்திரா’ என்ற குருகுலப் பள்ளி ஒன்றைத் துவக்கினார். தானே அவர்களுக்கு ஆசிரியராகவும் திகழ்ந்தார். பெண்களுக்குக் கல்வி அவசியம் என்பதை உணர்ந்த அவர் பள்ளி ஒன்றையும் அங்கு நிறுவினார். நடனத்தில் மட்டுமல்லாது நடனக் கலைஞர்கள் அணியும் ஆடை அணிகலன்களிலும் புதுமையைப் புகுத்தினார். இந்தியாவின் பாரம்பரியப் பருத்தி புடவைகளை நெய்ய மற்றும் இயற்கை வண்ணமேற்றப் பயிற்சி மையம் ஒன்றை உருவாக்கினார்.தற்பொழுது மிகச் சிறந்த நடனக் கலைஞர்களாக விளங்கி வரும் பலரும் ருக்மிணி தேவியிடம் பயிற்சி பெறும் பாக்கியம் பெற்றவர்கள் ஆவர். அழியும் நிலையில் இருந்த கலைக்குப் புத்துயிர் ஊட்டியமைக்காக இவருக்கு 1956-ஆம் ஆண்டு “பத்ம பூஷண்’ விருது வழங்கப்பட்டது. 1967-ஆம் ஆண்டு “சங்கீத நாடக அகாடெமி விருது’ வழங்கப்பட்டது. ருக்மிணி விலங்குகளை மிகவும் நேசித்தார். மனிதர்களின் தொந்தரவு இல்லையெனில் காட்டு விலங்குகளும் சாதுவானவையே என்றார். விலங்குகள் நல வாரியத்தின் முதன்மைச் செயலராகப் பணி புரிந்தார். 1952-ஆம் ஆண்டு இவரது பெரு முயற்சியால் “விலங்குகள் வன்கொடுமைச் சட்டம்’ (Prevention of cruelty to Animals act 1952) இயற்றப்பட்டது. 2013-ஆம் ஆண்டு ருக்மிணி தேவி நினைவு விழா நடைபெற்றது. முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். துவக்க விழாவில் சொற்பொழிவாற்றிய அவர் நாட்டியத்தின் மீதுள்ள பற்றால் ருக்மிணி தேவி குடியரசுத் தலைவர் பதவியை ஏற்றுக்கொள்ள மறுத்த நிகழ்வை மனநெகிழ்வுடன் குறிப்பிட்டார். ருக்மிணி தேவி பல வெளிநாடுகளுக்கும் சென்று பரதக் கலையின் பெருமையை உலகுக்கு உணர்த்தினார். இதன் காரணமாக வெளிநாட்டினர் பலர் இக்கலையைக் கற்க ஆர்வம் காட்டி வருகின்றனர். இன்றும்கூட கலாúக்ஷத்திராவில் வெளிநாட்டினர் பலரை நாம் காணலாம். இம் மாபெரும் நடன மேதை இதே 24.2.1986 அன்று காலமானார்.
அனந்த் பை நினைவு நாள்: பிப். 24 வாலை நீளமாக்கி நண்பர்களைக் காப்பாற்றும் கபீஷ், புத்திசாலி காக்கா ‘காக்கை காளி’, செய்யும் வேலையால் சிரிக்க வைக்கும் சுப்பாண்டி, அதிர்ஷ்டத்தால் காட்டுக்குள் விலங்குகளைப் பிடிக்கும் ஷிகாரி சாம்பு… இவங்களுக்கு உயிர் கொடுத்தவர் யார்னு தெரியுமா? ‘பை மாமா’ன்னு (அங்கிள் பை) செல்லமா அழைக்கப்பட்ட அனந்த் பைதான். அவர்தான் பலரும் ஜாலியா விரும்பிப் படிக்கிற அமர் சித்திரக் கதை, டிங்கிள்-குழந்தை காமிக்ஸ் பத்திரிகைகளை ஆரம்பிச்சவரு. இந்திய காமிக்ஸ் உலகின் தந்தை’னு பாராட்டப்படுறவரு.1980-ல அவர் தொடங்கினதுதான் டிங்கிள். அந்தப் பத்திரிகைக்கு ஏன் அப்படிப் பெயர் வந்துச்சுன்னா, ஒவ்வொரு முறை அந்தப் பத்திரிகைக்குப் பெயர் வைக்கக் கூட்டம் நடந்தப்பவும், ஃபோன் டிங்கிள் (டிரிங் டிரிங்தான்) என்று கத்துச்சாம். அதனால, அதையே பெயரா வச்சுட்டாங்க. டிங்கிள் பத்திப் புதுசா சொல்ல வேண்டியதில்ல. அதுல வர்ற சுப்பாண்டி, அன்வர், நஸ்ஸீருத்தின் ஹோட்ஜா, ஷிகாரி ஷாம்பு, காக்கை காளி, கபீஷ், மந்திரி தந்திரி போன்ற கதாபாத்திரங்கள் எல்லாமே நிறைய புத்திசாலித்தனத்தையும், நகைச்சுவை உணர்வையும் கொண்டிருக்கும்.
சுதந்திரப் போராட்ட வீரர் ஐ. மாயாண்டி பாரதி காலமான நாளின்று பள்ளித் தேர்வில் தொடர்ச்சியாக இரண்டு வருடங்கள் தோல்வியுற்றதால் குளத்தில் குதித்துத் தற்கொலை செய்துகொள்ளச் சென்ற அந்தச் சிறுவனை அவனது வீட்டாரும் நண்பர்களும் தடுத்து வீட்டுக்கு அழைத்துவந்தார்கள். வீட்டுக்கு வந்தவுடன் அனைவரும் அந்தச் சிறுவனைப் பார்த்துக் கதறி அழ ஆரம்பித்தார்கள். அப்பா இருளப்பர் காங்கிரஸுக்கு எதிரானவர், நீதிக்கட்சி ஆதரவாளர். “கவலைப்படாதே, உனக்கு பி.டி. ராஜனிடம் சொல்லி சர்க்கார் வேலை வாங்கித்தருகிறேன்” என்றார். மகனோ, அதற்கு முன்பே விடுதலை இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு, அதனோடு நடக்கத் தொடங்கியிருந்தார். 10-வது படிக்கும்போதே வாலிபர் சங்கத்தை அமைக்கும் பணியில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டவர் அவர். சௌராஷ்டிரா பள்ளிக்கு அருகில் உள்ள மீனாட்சிபுரத்தில் ‘இந்திய சுதந்திர வாலிபர் சங்கம்’ அமைப்பதில் தீவிரமாகப் பங்கெடுத்தார். விடுதலைப் பாடல்கள், பேச்சுக்கள் என்று முழுக்க முழுக்க நாட்டுப்பற்றே அவரை ஆக்கிரமித்திருந்தது. தற்கொலையிலிருந்து தடுக்கப்பட்ட மாயாண்டிதான், 24.2.2015 அன்று மரணமடைந்த முதுபெரும் இந்தியர் ‘ஐ.மா.பா.’ என்றும் ‘அப்பா’ என்றும் அன்போடு எல்லோராலும் அழைக்கப்பட்ட ஐ. மாயாண்டி பாரதி. தன் எழுத்துக்காக இவரளவுக்குச் சிறை சென்ற எழுத்தாளர்கள் அரிது. பாரதியார் சொல்வதுபோல ‘இம் என்றால் சிறைவாசம் ஏன் என்றால் வனவாசம்’ என்கிற வாசகத்தை முழுப் பொருளோடு அனுபவித்தவர் ஐ. மாயாண்டி பாரதி. “ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில்” என்று அவர் சொல்வது வெறும் சந்தத்துக்கான வெற்றுப் பேச்சல்ல. அவரது வாழ்வின் துடிப்பான பக்கங்களின் சாரம்.
பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமின்று 1992-ம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அறிமுகப்படுத்தியது பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம், அவரது மறைவுக்குப் பின்னர், அவர் பிறந்த தினமான பிப்.24 இனி பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக கொண்டாடப்படுகிறது. சமகாலத்தின் ஒரு சகாப்தம் ஜெயலலிதா. லட்சக்கணக்கான மக்களால் நேசிக்கப்பட்ட, கொண்டாடப்பட்டவர். ஒரு முதலமைச்சராக மக்கள் நலனுக்காக அவர் அறிமுகப்படுத்திய பல்வேறு திட்டங்களில் பெரும்பாலானவை பெண்களின் நலனுக்கான திட்டங்கள். பெண் சிசுக் கொலையைப் பெருமளவு குறைத்ததில் பெரும் பங்கு வகித்தது 1992 ஆம் ஆண்டின் பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டம் மற்றும் தொட்டில் குழந்தை திட்டம். முதல் திட்டம், பெண் குழந்தைகளின் பெயரில் வைப்பு நிதி வழங்கியது, இரண்டாவது பிறந்த பெண் குழந்தையை வளர்க்க முடியாத சூழலில் உள்ள பெற்றோர் அதை அரசின் பாதுகாப்பில் ஒப்படைக்க வழிசெய்யப்பட்டது. இதன்மூலமாக பெண் குழந்தைகளை வளர்ப்பது சிரமம் என்ற எண்ணத்தினால் இன்னலைச் சந்திக்கும் குழந்தைகள் பாதுகாக்கப்பட்டனர். இந்நிலையில், மறைந்த ஜெயலலிதாவின் மனதிற்கு நெருக்கமான ஒரு நற்காரியத்தை யொட்டி, அவரது பிறந்த தினத்தை மாநிலப் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினமாக அறிவித்திருந்தது . சட்டசபையில் பேரவை விதி எண் 110-ன் கீழ் அறிவிக்கப் பின்னர் இந்த அறிவிப்பு சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை மூலம் அரசாணையாக வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வந்ததை அடுத்து தமிழகம் முழுவதும் பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினம் பிப் 24 அன்று கொண்டாடப்பட்டது. மேலும், அரசு அலுவலகங்களிலும் பள்ளிகளிலும் பெண் குழந்தைகள் பாதுகாப்பிற்கான உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது. பெண் குழந்தைகள் தினம் பெண் குழந்தைகள் தின உறுதிமொழி `இந்தியக் குடிமகனாகிய நான் சாதி, மதம், இனம், மொழி, சமூக பொருளாதார பாகுபாடு இல்லாமல் அனைத்துக் குழந்தைகளையும் சமமாக நடத்துவேன். எனது செயல்பாடுகளால் எந்த ஒரு குழந்தையும் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்காத வகையில் கவனமுடன் நடந்து கொள்வேன். எனது கவனத்திற்கு வரும் குழந்தைகளுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், வன்முறைகள் மற்றும் எந்த ஒரு பாதிப்பையும் தடுப்பதற்கான முழு முயற்சியில் ஈடுபடுவேன். மேலும், இதை உரிய அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்வேன். இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள் என உணர்ந்து அவர்களின் வளர்ச்சி மற்றும் பாதுகாப்பிற்கு என்னால் இயன்ற பங்களிப்பை அளிப்பேன். குழந்தை திருமணம் பற்றித் தெரிய வந்தால் அதைத் தடுத்து நிறுத்துவதற்கான எல்லா முயற்சிகளிலும் ஈடுபடுவேன். நான், குழந்தை தொழிலாளர்கள் இல்லாத சமூகத்தை உருவாக்கிட உறுதுணையாக இருப்பேன். இந்திய அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஐக்கிய நாடுகளின் குழந்தைகள் உரிமைகள் உடன்படிக்கையில் வழங்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கான உரிமைகளை அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுவேன் என உளமார உறுதி கூறுகிறேன்’
ஸ்டீவ் ஜொப்ஸ் எனப்படும் ஸ்டீவ் ஜாப்ஸ் பர்த் டே டுடே – ஸ்டீவ் ஜாப்ஸ் கொஞ்சம் தகவல்: ஆப்பிள்’ என்னும் ஐ-கனியை விதைத்தவர். மாற்று சிந்தனையின் பிதாமகன். ஐ-போன், ஐ-பாட் என ஜாப்ஸின் சிந்தனைகள் வரைந்தது எல்லாமே, டெக்னாலஜியின் மாஸ்டர் பீஸ்கள். நல்ல டெக்கீயாக மட்டுமில்லாமல், ஆப்பிள் நிறுவனத்தை உலகெங்கும் கொண்டு சென்ற ஒரு சிறந்த பிசினஸ் மேன். டீ- ஷர்ட்டில் சே குவேரா என்றால், செல்போன் வால்பேப்பரில் ஸ்டீவ் ஜாப்ஸ்தான் யூத்துகளின் இன்ஸ்பிரேஷன். 56 வயதில் அவர் இறந்தபோது அவர் சொத்துமதிப்பு 2,12,000 கோடி ரூபாய். இப்படி உலகையே வாய்பிளக்க வைத்த, பல வெற்றிகளுக்கு சொந்தக் காரரான ஸ்டீவ் ஜாப்ஸ் சந்தித்த சறுக்கல்கள் எத்தனை தெரியுமா? பிறந்தவுடனேயே தன் பெற்றோரால் தத்துக் கொடுக்கப்பட்டவர். ஏழ்மையின் காரணமாக கல்லூரிப் படிப்பை பாதியிலேயே கைவிட்டவர். இந்தியாவுக்கு வந்து இமயமலைக்கு சென்று, இறைவனைத் தேடிய ஃபிளாஷ்பேக் எல்லாம் கூட ஸ்டீவ் ஜாப்ஸ்க்கு உண்டு. முதன்முதலில் ஸ்டீவ் ஆப்பிளைத் தொடங்கியது சிலிக்கான் வேலியின் பிரம்மாண்ட தொழிற்சாலையில் அல்ல. அவர் வீட்டு கார் ஷெட்டில்தான். ஆப்பிள் கணினிகளை வெற்றிகரமாக விற்பனை செய்த வரலாறு மட்டுமல்ல. அதே ஆப்பிள் நிறுவனத்தில் இருந்து, தோல்விகளுக்கு குற்றம் சாட்டப்பட்டு துரத்தப்பட்ட வரலாறும் இவருக்கு உண்டு. அசரவில்லை மனிதர். உடனே நெக்ஸ்ட் என்னும் கணினி நிறுவனத்தை துவங்கினார். பிக்சர் என்னும் கிராபிக்ஸ் நிறுவனத்தின் பங்குகளை வாங்கினார். இரண்டுமே வெற்றிகரமாக அமைந்தது. ஜாப்ஸை வெளியேற்றிய ஆப்பிள், அவரின் நெக்ஸ்ட் நிறுவனத்தை விலைக்கு வாங்கியது. மீண்டும் தனது தாய்க் கழகத்துக்குள் வந்து சேர்ந்தார் ஜாப்ஸ். அதன் பின் நடந்தது அனைத்தும் வரலாறு. “நீங்கள் எத்தனை விஷயங்களை செய்கிறீர்கள் என்பது முக்கியமல்ல. அதனை எப்படி செய்கிறீர்கள் என்பதே முக்கியம்” என்பது ஜாப்ஸ் உதிர்த்த வார்த்தைகள்
இ.எஸ்.ஐ.சி. நிறுவன தினம் (Employee’s State Insurance Corporation Day) – பிப் 24: தொழிலாளர்களுக்கு நோய் வந்தால் உற்ற தோழனாக இருந்து காப்பது இ.எஸ்.ஐ.சி. (ESIC) என்ற தொழிலாளர் அரசு ஈட்டுறுதிக் கழகம்தான். இது 1952ஆம் ஆண்டு பிப்ரவரி 24 இல் ஆரம்பிக்கப்பட்ட நாள் பிப்ரவரி 24. அந்த தொடக்கத்தினமே இந்தியாவில் ஆண்டுதோறும் பிப்ரவரி 24ஆம் தேதி இ.எஸ்.ஐ.சி. நிறுவன தினமாக கொண்டாடப்பட்டுவருகிறது. இந்த அமைப்பு நாடு முழுவதும் உள்ள குறைந்த வருவாய்ப் பிரிவு பணியாளர்களுக்கு தேவையின் அடிப்படையில் சமூகக் காப்பீடு அளிக்கும் நோக்கோடு ஆரம்பிக்கப்பட்டது. இது ஆரம்பிக்கப்பட்ட பின்னர் லட்சக்கணக்கான பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு எதிர்பாராத விதமாக ஏற்படும் பாதிப்புகளின்போது கை கொடுத்து அவர்களை கவுரவமாக வாழவைத்து வருகிறது. மருத்துவப் பராமரிப்பு மற்றும் உடல் நலமில்லாத நாட்களுக்கு பாதி சம்பளம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது.
அமெரிக்க கண்டுபிடிப்பாளர், பொறியியல் வல்லுநர், ஓவியர் என்று பன்முகப் பரிமாணம் கொண்ட ராபர்ட் ஃபுல்டன் நினைவு தினம் இன்று. நீராவிக் கப்பலை சோதனை நிலையில் இருந்து வர்த்தக ரீதியில் வெற்றிகரமாக ஓடும் நிலைக்கு கொண்டுவந்தவரிவரே. உள்நாட்டுக் கடல் வழிகளைக் கண்டுபிடித்தவர். நீர் மூழ்கிக் கப்பல், நீராவி போர்க் கப்பல் ஆகியவற்றையும் வடிவமைத்துள்ளார்.
அமெரிக்காவின் பல இடங்களில் இவரது பளிங்குச் சிலை, வெண்கலச் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன. அமெரிக்காவில் 30-க்கும் மேற்பட்ட இடங்களுக்கு இவரது பெயர் சூட்டப்பட்டுள்ளது.
அமெரிக்கக் கடற்படையின் 5 கப்பல்களுக்கு ‘யு.எஸ்.எஸ். ஃபுல்டன்’ என்று பெயரிடப்பட்டது.
அமெரிக்காவின் பென்சில் வேனியா மாநிலம் லிட்டில் பிரிட்டனில் பிறந்தவர். விவசாயம் செய்ய முடியாத தால் லான்காஸ்டருக்கு குடியேறியது இவரது குடும்பம். சிறு வயதிலேயே தந்தை இறந்ததால், பிலடெல்பியா வில் நகைக் கடையில் உதவி யாளராக வேலை செய்தார்.
அங்கு தந்தத்தால் செய்யப்படும் லாக்கெட், மோதிரங்களில் அழகான ஓவியங்களை வரைந்தார். அதைப் பார்த்து உள்ளூர் பிரமுகர்கள், வியாபாரிகள் வியந்தனர். அவர்களது ஆதரவுடன், முறைப்படி ஓவியம் கற்க லண்டன் சென்றார்.
ஓவியக் கலையில் பெரிதாக சாதிக்க முடியவில்லை. கால்வாய் வடிமைப்பு பணிகளில் ஈடுபட்டார். அதுவும் தோல்வியில் முடிந்தது. நீராவி இன்ஜின்களில் ஆர்வம் பிறந்ததால் அதை படகுகளில் பயன்படுத்தும் முயற்சியில் இறங்கினார். 1800-ல் நெப்போலியன் போனபார்ட் அழைப்பை ஏற்று பாரிஸுக்குச் சென்று நீர்மூழ்கிக் கப்பலை வடிவமைத்தார். உலகில் இதுதான் நடைமுறைக்கு வந்த முதல் நீர்மூழ்கிக் கப்பல்.
இவர் உருவாக்கிய முதல் கப்பல் ‘கிளர்மன்ட்’, ஹட்சன் நதியில் வெள்ளோட்டம் விடப்பட்டது. முதலில் அது சரிவர இயங்கவில்லை. ஃபுல்டன் சில மாற்றங்களைச் செய்ததும் கப்பல் புறப்பட்டது. நதியின் நீரோட்டத்தை எதிர்த்து மணிக்கு 5 மைல் வேகத்தில் வெற்றிகரமாகப் பயணித்தது.
அமெரிக்காவின் சுதந்திரப் பிரகடன ஆவணத்தை உருவாக்கிய குழு உறுப்பினரான ராபர்ட் லிவிங்ஸ்டனுடன் இணைந்து இவருடைய வடிவமைப்பைப் பயன்படுத்தி பாரிஸில் நீராவிக் கப்பலை உருவாக்க முடிவு செய்தனர்.
‘நார்த் ரிவர் ஸ்ட்ரீம்போட் கிளர்மன்ட்’ என்று பெயரிடப்பட்ட இந்த கப்பல் 1807-ல் கட்டி முடிக்கப்பட்டது. அதே ஆண்டில் இதன் வர்த்தகப் போக்குவரத்து தொடங்கியது. நீராவியில் இயங்கும் போர்க் கப்பலை அமெரிக்க கடற்படைக்காக வடிவமைத்தார். இவர் இறந்த பிறகு, முழுமை பெற்ற அந்த கப்பலுக்கு இவரது பெயரே வைக்கப்பட்டது.
1810-ம் ஆண்டுக்குள் ஹட்சன், ராரிடன் நதிகளில் ஃபுல்டனின் 3 படகுகள் ஓடத் தொடங்கின. கப்பல் வடிவமைப்பு நுட்பங்கள் திருட்டு தொடர்பாக வழக்கு தொடுப்பதிலும், முழுமையாக வெற்றிபெறாத நீர்மூழ்கிக் கப்பல் திட்டங்களிலும் தனது செல்வத்தை செலவிட்டார்.
1960 – கடலுக்கடியில் உலகைச் சுற்றிய முதல் பயணமான, ‘ஆப்பரேஷன் சாண்ட்ப்ளாஸ்ட்’ தொடங்கிய நாள் பிப்ரவரி 24. நீண்ட பயணங்களுக்கு உகந்த கப்பல்களின் உருவாக்கமும், புவியின் வடிவம் கோளம்தான் என்ற (தாமதமான!) புரிதலும், 1519இல் உலகைச் சுற்றிய முதல் பயணத்தை ஃபெர்டினாண்ட் மெகல்லனை மேற்கொள்ளச் செய்தன. 5 கப்பல்களில் 270 பேருடன் தொடங்கிய அப்பயணத்தில், மெகல்லன் உட்பட 252 பேர் பலியாகிவிட, 18 பேரும், ஒரு கப்பலும் மட்டும் 1085 நாட்களில் (மூன்றாண்டுகளுக்கு 10 நாட்கள் முன்னதாக) உலகைச் சுற்றி முடித்தனர். 1950களில் அறிமுகமான அணுச்சக்தியால் இயங்கும் நீர்மூழ்கிக் கப்பல்கள், நீருக்கடியில் நீண்டகாலம் இருப்பதையும், பயணிப்பதையும் சாத்தியமாக்கியிருந்த நிலையில், கடலுக்கடியிலேயே உலகைச் சுற்றிய பயணத்தை, அமெரிக்கக் கடற்படை மேற்கொண்டது. உண்மையில், விண்வெளியில் சோவியத் செய்துகாட்டியிருந்த சாதனைகள், தாங்கள் தொழில்நுட்ப அடிப்படையில் பின்தங்கியிருப்பதாக அமெரிக்காவை எண்ணச் செய்திருந்தன. ஸ்புட்னிக் போன்ற ஓர் ‘அவமானம்’ மீண்டும் அமெரிக்காவுக்கு ஏற்படாமலிருக்க, அணுச்சக்தி நீர்மூழ்கித் தொழில்நுட்பத்தில் அமெரிக்கா பெற்றிருக்கிற வளர்ச்சியையாவது நிரூபிக்க வேண்டும், சோவியத் அப்படியான சாதனையைச் செய்வதற்கு முன்பாக ‘ப்ராஜெக்ட் மெகல்லன்’ என்ற கடலுக்கடியில் உலகைச் சுற்றும் பயணத்தை முடித்துக்காட்டி, அமெரிக்காவின் அணுச்சக்தி நீர்மூழ்கித் திறனை நிரூபிக்க வேண்டும் என்று அமெரிக்க கடற்படைத் தளபதி இவான் ஆரண்ட், 1960 ஜனவரி 6இல் தலைமைத் தளபதிக்கு எழுதியிருந்தார். 1960 மேயில் நடக்கவிருந்த, நான்கு பெரும் சக்திகளின்(அமெரிக்கா, சோவியத், இங்கிலாந்து, ஃப்ரான்ஸ்) அல்லது, கிழக்கு-மேற்கு உச்சி மாநாடு என்பதில், சோவியத் அரசுத்தலைவர் நிகிட்டா குருஷ்ச்சேவை, அமெரிக்கக் குடியரசுத்தலைவர் ட்வைட் ஐசனோவர் சந்திக்கும்போது, அமெரிக்காவுக்குக் கவுரவமாக இருக்க, அதற்கு முன்பாக இந்தப் பயணம் நிறைவுற வேண்டுமென்ற அவரது வேண்டுகோளை, கடற்படைத் தலைமைத் தளபதி ஆர்லீ பர்க் ஏற்றுக்கொண்டார். அமெரிக்கா அதுவரை உருவாக்கியதிலேயே மிகப்பெரியதும், அதிகச் சக்திவாய்ந்ததும், அதிகச் செலவுபிடித்ததுமான, ட்ரைட்டன் கப்பல் இதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டது. ராடார் பொருத்தப்பட்ட இந்த நீர்மூழ்கி, மெகல்லன் பயணித்த பாதையிலேயே பெரும்பாலும் பயணித்து, 60 நாட்கள் 21 மணி நேரப் பயணத்திற்குப்பின், 1960 ஏப்ரல் 25 அன்று உலகைச் சுற்றிய கடலடிப் பயணத்தை நிறைவு செய்தது.
தட்டச்சுப் பொறியின் தந்தை ஆர்.முத்தையா பிறந்த தினம் தமிழ் தட்டச்சுப் பொறியையும், தமிழில் தட்டச்சு செய்வதற்கான தொழில்நுட்பங்களையும் உருவாக்கியவரான ஆர்.முத்தையா 1886-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் இதே நாளில் யாழ்ப்பாணத்திலுள்ள சுண்டிக்குளியில் பிறந்தார். முத்தையா அவர்கள் தாம் கண்டுபிடித்த தட்டச்சை “ஸ்டாண்டர்ட்” பெரிய தட்டச்சு என்று குறிப்பிட்டார். அது சிறப்பான பல அம்சங்களை உடையது. தமிழில் 247 எழுத்துக்கள் இருப்பதால் அவை எல்லாவற்றையும் நான்கு வரிசைகளில் உள்ள 46 விசைகளில் அமைக்க முடியாது. எனவே, பல எழுத்துக்களுக்குப் பொதுவான உள்ள சில குறியீடுகளைத் தனித்தனி விசைகளில் அமைத்து அவைகளைத் தேவையான எழுத்துக்களுடன் சேர்த்து அச்சடிக்கக் கூடிய விசைப்பலகையை அமைக்க வேண்டும். அப்படியானால், இரண்டு விசைகளை அழுத்திய பின்பே அச்சை நகரச் செய்ய வேண்டும். பல பரீட்சைகள் செய்து கடைசியாக நகரா விசையைக் கண்டுபிடித்தார். அதாவது “வி” என்ற எழுத்திலுள்ள விசிறியை அடிக்கும் பொழுது அச்சு நகராது. எஞ்சியுள்ள “வ” வை அடித்த பின் தான் அச்சு நகரும். மெய்யெழுத்துக்களும் இப்படியே அச்சாகின்றன. இவர் உண்டாக்கிய நகரா விசையையே இன்றும் தட்டச்சு உற்பத்தியாளர்கள் உபயோகிக்கிறார்கள். இந்த மூன்று நகரா விசைகளும் விசைப்பலகையின் வலப் பக்கம் இருக்கின்றன. முறையான விசைப்பலகைப் பயிற்சி பெற்றவர்கள் இந்த மூன்று விசைகளையும் வலக்கையின் சிறு விரலால் இயக்குவர். முத்தையா அவர்களின் விசைப்பலகை அமைப்பில் க’, த’ போன்ற எழுத்துக்களுக்கு ஒரு விசிறியும், ண’, ன’ போன்ற எழுத்துக்களுக்கு வேறு ஒரு விசிறியும் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்க சிறப்பாகும். இவர் தமிழ் தட்டச்சுப்பொறியின் தந்தை என அழைக்கப்படுகிறார்.
அன்னா மிகயிலோவ்னா லாறினா நினைவு தினம் (Anna Mikhailovna 27 சனவரி 1914 – 24 பிப்ரவரி 1996) போல்செவிக் புரட்சியாளரும் ரஷ்ய அரசியல்வாதியுமான நிக்கொலாய் புகாரினின் இரண்டாவது மனைவி ஆவார். 1938ல் ஸ்டாலின் ஆட்சியில் கணவர் புகாரினுக்கு மரண தண்டனை அறிவித்து கொல்லப்பட்டபோது, அந்தத் தீர்ப்பைத் திரும்பிப் பெற பல ஆண்டுகள் போராடியவர். இதை நான் மறக்கமுடியாது, This I Cannot Forget) என்ற பிரபலமான நூலின் ஆசிரியர். தமிழ் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதியுள்ள ‘பின்தொடரும் நிழலின் குரல்’ எனும் புதினத்தில் புகாரின், அன்னா லாறினா இருவரும் முக்கிய கதாப்பாத்திரங்களாக வருகின்றனர். அதில் அன்னா பரவலாக உருசிய முறைப்படி புகாரினினா என்றும் அழைக்கப்படுகிறார். 750 பக்கங்கள் கொண்ட அந்த நாவலே அன்னா மிகயிலோவ்னா லாறினாவுக்கு சமர்பிக்கப்பட்டுள்ளது.
1739 – கர்னால் போரில் முகலாய மன்னர் முகமதுஷாவை, பாரசீக(இரான்) மன்னர் நாதிர்ஷா வெற்றிகொண்ட நாள் பிப்ரவரி 24. சுமார் 3 லட்சம் வீரர்களைக் கொண்டிருந்த முகலாயப் படையை சுமார் வெறும் 55 ஆயிரம் பேரைக்கொண்டிருந்த பாரசீகப் படைகள் 3 மணிநேரத்துக்கும் குறைவான நேரத்தில் தோற்கடித்தன. வீரர்களின் எண்ணிக்கையில் பல்வேறு வரலாற்றாசிரியர்களும் மாறுபட்ட எண்களைக் குறிப்பிட்டாலும், முகலாயப் படையைவிட பாரசீகப் படை மிகச்சிறியது என்பதை அனைவரும் குறிப்பிட்டிருக்கிறார்கள். போர்த் தந்திரத்தில் மேதையான நாதிர்ஷா இதில் மட்டுமின்றி வேறுபல போர்களிலும் பெற்ற வெற்றிகளால், பாரசீகத்தின் நெப்போலியன், இரண்டாம் அலெக்சாண்டர் என்றெல்லாம் வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகிறார். அவுரங்கசீபின் மறைவுக்குப்பின், அதிகாரப் போட்டிகளால் முகலாயப் பேரரசு பலவீனமடைந்திருந்தது. நாதிர்ஷாவின் தூதுவர் முகமதுஷாவின் அவையில் அவமானப்படுத்தப்பட்டதால் கோபம் கொண்டிருந்த நாதிர்ஷா இந்த பலவீனமான தருணத்தைப் பயன்படுத்திக்கொண்டார். முகலாயப் பேரரசின் மேற்கு எல்லைப் பகுதிகளான காபூல், காஸ்னி ஆகிய பகுதிகளை 1738இல் கைப்பற்றிய நாதிர்ஷாவின் படைகள் கைபர் கணவாயைக் கடந்தபோது படைகளை பலப்படுத்துமாறு முகமதுஷாவிடம் பஞ்சாபின் ஆளுநர் கேட்டதை முகமதுஷா பொருட்படுத்தவில்லை. லாகூரைக் கைப்பற்றி முன்னேறிய பெர்சியப் படைகளை டெல்லிக்கு 110 கி.மீ. தொலைவில் உள்ள கர்னாலில் முகலாயப் படைகள் எதிர்கொண்டன. போரில் வென்றாலும், டெல்லியின் அதிகாரத்தை நாதிர்ஷா கைப்பற்றியதைத் தொடர்ந்து டெல்லியில் நடைபெற்ற கலவரங்களில் பாரசீக வீரர்கள் கொல்லப்பட்டனர். தெருவில் தன் வீரர்களின் உடல்கள் கிடப்பதைக் கண்டு வேதனையுற்ற நாதிர்ஷா டெல்லி மக்களைத் தாக்க படைகளுக்கு உத்தரவிட, முஸ்லிம்களும் இந்துக்களுமாக பல்லாயிரக் கணக்கான டெல்லி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதுடன், டெல்லியின் செல்வம் முழுவதும் கொள்ளையடிக்கப்பட்டது. மயிலாசனம், கோஹினூர் வைரம் உள்ளிட்ட முகலாயப் பேரரசின் செல்வங்களனைத்தையும் எடுத்துச்சென்றார் நாதிர்ஷா. முகலாயப் பேரரசை மிக மோசமாகப் பலவீனப் படுத்திய இந்தத் தோல்வி ஏற்படவில்லையென்றால் இந்தியாவிற்கு ஆங்கிலேயர்கள் வருகையே நடந்திருக்காது, அல்லது தாமதமாகியிருக்கும்
1839 – கந்தகம் கொண்டு ரப்பருக்கு வலுவூட்டும் வல்கனைசேஷன் முறையைக் கண்டுபிடித்த சார்லஸ் குட்இயர், நேதனியேல் ஹேயார்ட் ஆகியோருக்குக் காப்புரிமை வழங்கப்பட்ட நாள் பிப்ரவரி 24 . கந்தகத்துடன் சேரும்போது ஒட்டும் தன்மையை ரப்பர் இழப்பதை 1834இல் நேதனியேல் ஹேயார்ட், ஃப்ரடரிக் லூடர்ஸ்டார்ஃப் ஆகியோர் ஒரு ரப்பர் தொழிற்சாலையில் எதிர்பாராதவிதமாகக் கண்டுபிடித்தனர். மீசோஅமெரிக்கா என்றழைக்கப்பட்ட வடஅமெரிக்காவின் தென்பகுதியில், ஆல்மெக்ஸ் நாகரிக மக்கள், கி.மு.1600இலேயே, ரப்பரை வலுவூட்டித் தயாரிக்கப்பட்ட பந்துகளை விளையாடப் பயன்படுத்தியுள்ளனர். அவர்களின் நாவாட்ல் மொழியில் ரப்பரைக் குறிக்கும் ஆல்லி, மக்களைக் குறிக்கும் மெக்காட்ல் ஆகிய சொற்களிலிருந்து உருவான ஆல்மெக்ஸ் என்பதற்கு ரப்பர் மக்கள் என்றுதான் பொருள். தென்னமெரிக்காவைச் சேர்ந்த ரப்பர் மரம் கொலம்பஸ் காலத்தில் ஐரோப்பாவுக்கு எடுத்துச்செல்லப்பட்டது. பென்சிலால் எழுதப்பட்டவை, ரப்பர் துண்டால் தேய்த்தால் அழிந்துவிடுவதை, 1770இல் கண்டுபிடித்த ஜோசஃப் ப்ரீஸ்ட்லி, ரப்(தேய்த்தல்) என்பதிலிருந்து தேய்க்கக்கூடியது என்ற பொருளில் ரப்பர் என்று குறிப்பிட்டதே அதன் பெயராக நிலைத்துவிட்டது. ரப்பரைக்கொண்டு எலாஸ்டிக் பட்டைகளை 1820இல் தாமஸ் ஹேங்க்காக் உருவாக்கினார். இவரது நண்பரான வில்லியம் ப்ராக்கெடான் என்பவர்தான், நெருப்புக்கான ரோமானியக் கடவுளான வல்கன் என்பதிலிருந்து வல்கனைசேஷன் என்ற பெயரை உருவாக்கினார். வல்கனைசேஷனும், அதில் குட்இயர் உருவாக்கிய மேம்பாடுகளுமே ரப்பரின் தற்போதைய பயன்பாடுகளுக்கு வழிவகுத்தன. 1850களில் தொடர்வண்டிகளில் அதிர்வுகளைத் தாங்கும் ஸ்ப்ரிங்குகளுக்குப் பதிலாக ரப்பர் துண்டுகள் பயன்படுத்தப்பட்டன. டயர்களில் காற்றடைக்கும் முறையை ராபர்ட் வில்லியம் தாம்சன் 1847இலேயே கண்டுபிடித்துக் காப்புரிமை பெற்றாலும், உற்பத்தி செய்யப்படவில்லை. காற்றடைக்கும் முறையை 1888இல் ஜான் பாய்ட் டன்லப் உருவாக்கும்வரை, முழுவதும் ரப்பராலான டயர்களே பயன்படுத்தப்பட்டன. தொடக்ககால டயர்கள், ரப்பரின் இயல்பான நிறமான, வெள்ளை நிறத்தில்தான் இருந்தன. பெட்ரோலியப் பொருட்களிலிருந்து கிடைக்கும் கார்பன் ப்ளாக் என்பதைச் சேர்ப்பதன்மூலம் ரப்பரின் உறுதித்தன்மை அதிகரிப்பது 1912ல்தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து அம்முறை பரவி, டயர்கள் கருப்பு நிறத்திற்கு மாறின.
1942 – லாஸ் ஏஞ்சல்ஸ் யுத்தம் என்று அழைக்கப்படுகிற, நடக்காத தாக்குதலுக்கு நடத்தப்பட்ட எதிர்த்தாக்குதல் நிகழ்ந்த நாள் பிப்ரவரி 24. அப்போது, முத்துத் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதைத் தொடர்ந்து, அமெரிக்கா இரண்டாம் உலகப்போரில் நேரடியாக இறங்கி சற்றேறக்குறைய மூன்று மாதங்கள்தான் ஆகியிருந்தன. அமெரிக்காவின் உள்நாட்டு நிலப்பரப்பின்மீது ஜப்பான் தாக்குதல் நடத்தப்போகிறது என்ற எதிர்பார்ப்பு(சரியாகச் சொன்னால் அச்சம்! அமெரிக்காவுக்கு!!) படைகளிடம் நிலவியது. 1942 ஃபிப்ரவரி 23 இரவு 7 மணிக்கு, ஜப்பானின் 365 அடி நீளமுள்ள ஐ-17 நீர்மூழ்கி, கலிஃபோர்னியாவின் சாண்ட்டா பார்பாரா கடற்கரைப் பகுதியிலுள்ள எல்வுட் எண்ணெய்க் கிணற்றை பீரங்கிகளால் தாக்கியது. இதில் சேதம் அதிகமில்லையென்றாலும், வடஅமெரிக்க முதன்மை நிலப்பரப்பின்மீது நடத்தப்பட்ட முதல் தாக்குதல் என்பதால், ஏற்கெனவே நிலவிய, ஜப்பான் தாக்கும் என்று அச்சத்தை அதிகரித்தது. அமெரிக்காவின் மேற்குக் கரையோர மக்கள், எந்த நேரமும் ஜப்பானியப் படைகள் தங்கள்மீது குண்டு மழை பொழியலாம் என்று அஞ்சி நடுங்கத் தொடங்கினர். ஜப்பான் தாக்கலாம் என்று அமெரிக்கக் கடற்படையின் உளவுப் பிரிவும் தகவல் தெரிவித்ததையடுத்து, ஆயுதங்களும், விமானங்களும், வீரர்களும் தயார் நிலையிலிருக்க உத்தரவிடப்பட்டது. லாஸ் ஏஞ்சல்ஸ் கவுண்ட்டியின் அபாய சங்கு ஒலிக்க, அனைத்து விளக்குகளையும், ரேடியோ கருவிகளையும் அணைக்க உத்தரவிடப்பட்டு, எதிர்த் தாக்குதல் தொடங்கப்பட்டது. எந்திரத்து துப்பாக்கிகள் குண்டு மழை பொழிய, விமான எதிர்ப்புப் பீரங்கிகள் 5.8 கி.கி. எடையுள்ள 1,400 விமான எதிர்ப்பு குண்டுகளைச் சுட்டன. மறுநாள் காலையில் அனைத்தும் சரியானதாக(ஆல் க்ளியர்) அறிவிக்கப்பட்டபோது, விமான எதிர்ப்பு குண்டுகளின் சிதறல்களால் தாக்கப்பட்டு, ஏராளமான கட்டிடங்கள் சிதைந்திருந்தன. அச்சத்தால் மாரடைப்பிலும், விபத்துகளிலும் 5 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. ஒரு காலநிலை பலூன் காணாமல் போனதைத் தொடர்ந்து ‘போர் நரம்புகளில்’ ஏற்பட்ட பதற்றத்தால் தவறான எச்சரிக்கை உருவாக்கப்பட்டு, இந்நிகழ்வு நடந்ததாக விளக்கமளிக்கப்பட்டது. இதுகுறித்து ஆய்வுசெய்து 1949இல் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை, முதலில் சுடத் தொடங்கியதும், அந்த ஒளியையே எதிரிகள் என்று எண்ணி தொடர்ந்து சுட்டதாகக் கூறியது. இந்நிகழ்வின் படத்தை ஆய்வுசெய்து, வேற்றுலகினரின் தாக்குதல் என்று ஓர் இதழ் செய்தி வெளியிட, அதையொட்டி, வேற்றுலகத் தாக்குதலாகச் சித்தரித்து, ‘பேட்டில்: லாஸ் ஏஞ்சல்ஸ்’ என்ற திரைப்படமும் 2011இல் வெளியாகி, வசூலைக் குவித்தது தனிக்கதை! அச்சத்தையும் அமெரிக்கர்கள் காசாக்கி விடுவார்கள்!!