உ.வே.சாமிநாதையர் (பிப்ரவரி 19, 1855 – ஏப்ரல் 28, 1942) உ.வே.சாமிநாத ஐயர். உத்தமதானபுரம் வேங்கடசுப்பையர் சாமிநாத ஐயர். சுருக்கமாக உ.வே.சா. தமிழ் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர். தமிழ் ஆய்வாளர், உரையாசிரியர். வாழ்க்கை வரலாற்றெழுத்திலும் முன்னோடியாகக் கருதப்படுபவர்.
ஏடுகளில் இருந்து பழந்தமிழ் நூல்களை கண்டெடுத்து ஒப்பிட்டு ஆராய்ந்து உரையெழுதி அச்சில் பதிப்பிக்கும் பதிப்பியக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டில் தொடங்கியது. பேரறிஞர்களின் முயற்சியால் தமிழிலக்கியத்தின் பெரும்பகுதி அச்சேறினாலும் ஒருபகுதி எப்போதைக்குமாக அழிந்தும் போயிற்று. அந்தப் பதிப்பியக்கத்தின் முன்னோடிகளாக உ.வே.சாமிநாதையர், சி.வை. தாமோதரம் பிள்ளை, சௌரிப்பெருமாள் அரங்கன் போன்றவர்கள் கருதப்படுகிறார்கள். உ.வே.சாமிநாதையர் தன் வாழ்நாளின் இறுதியில் தன் வாழ்க்கையையும் தன் ஆசிரியர் வாழ்க்கையையும் ஏடுதேடி அலைந்த கதைகளையும் எளிய நவீன உரைநடையில் எழுதினார். அதன்வழியாக தமிழ் நவீன உரைநடை இலக்கியத்திலும் முன்னோடியின் இடத்தை அடைந்தார்.
சாமிநாதையர் பிப்ரவரி 19, 1855-அன்று தமிழ் நாட்டில் திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் வட்டம் உத்தமதானபுரம் எனும் சிற்றூரில் வேங்கட சுப்பையர் – சரசுவதி அம்மாள் இணையருக்குப் பிறந்தார். பெற்றோர் இட்ட பெயர் வெங்கடராமன். வேங்கடசுப்பையர் இசையுடன் கதைசொல்லும் ஹரிகதா கலாட்சேபம் என்னும் கலையை நிகழ்த்துபவர். உ.வே.சாமிநாதையர் தனது தொடக்கத் தமிழ்க் கல்வியையும், இசைக் கல்வியையும் தந்தையிடமும் சொந்த ஊரில் உள்ள ஆசிரியர்களிடமும் கற்றார். மேற்கொண்டு கற்க ஆவலிருந்தும் உத்தமதானபுரத்தில் அதற்கான வாய்ப்பின்றி இருந்தார். தமிழறிஞர் என எவர் வந்தாலும் ஏதேனும் கற்பிக்கும்படி கோரினார். அவ்வண்ணம் திருமணத்திற்கு வந்த ஒரு பண்டிதரிடம் கோர அவர் மறுத்துவிட்டார். துயருற்று நின்ற சாமிநாதையரிடம் ஒருவர் திருவாவடுதுறை ஆதீனவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் சென்று கற்கும்படி ஆலோசனை சொன்னார்.
கல்விகற்பதற்காக வெளியே தங்குவதற்குரிய பொருளியல் புலம் இல்லாத காரணத்தால் கும்பகோணத்திலேயே கல்வி கற்க உ.வே.சாமிநாதையரின் தந்தை ஏற்பாடு செய்தார். அரியலூர் சடகோப ஐயங்கார், திருவிளையாடற் புராண அறிஞர் குன்னம் சிதம்பரம் பிள்ளை, கம்ப ராமாயாணத்தில் தேர்ந்த கஸ்தூரி ஐயங்கார் போன்ற அறிஞர்களிடம் உ.வே.சாமிநாதையர் தமிழ் பயின்றார். சின்னப்பண்ணை விருத்தாசலம் ரெட்டியார் என்ற தமிழறிஞரிடம் இலக்கணங்களை கற்றார். இக்காலகட்டத்தில் நந்தனார் கீர்த்தனை எழுதிய கோபாலகிருஷ்ண பாரதியார் அவர்களிடம் உ.வே.சாமிநாதையர் சிலகாலம் இசையும் பயின்றார்.
விருத்தாசலம் ரெட்டியார் சிபாரிசின் பேரில் தன் 17-ம் வயதில் 1870-ல் தந்தையுடன் நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருவாவடுதுறை சைவஆதீனத்திற்குச் சென்றார். அங்கே மீனாட்சிசுந்தரம் பிள்ளையிடம் தன்னை அறிமுகம் செய்யும்போது அவர் சைவராகையால் தன் வைணவப்பெயரைக்கொண்டு தன்னை நிராகரித்துவிடக்கூடாது என எண்ணி சாமிநாதன் என்னும்பெயரை தன் பெயராகச் சொன்னார். அதன்பின் சாமிநாதையர் என்ற பெயரையே தன் பெயராகக் கொண்டிருந்தார்.
திருவாவடுதுறை ஆதீனத்தின் பொருளுதவியைக் கொண்டு ஐந்து ஆண்டுகள் ஆசிரியருடனேயே குருகுல முறைப்படி தங்கி தமிழ்கற்றார். திருநாகைக்காரோண புராணம், நைடதம், திருக்குடந்தைத் திரிபந்தாதி, பழமலை திரிபந்தாதி, மறைசையந்தாதி, மீனாட்சி அம்மன் பிள்ளைத்தமிழ், முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ், செங்கழுநீர் வினாயகர் பிள்ளைத்தமிழ், அமுதாம்பிகை பிள்ளைத்தமிழ், அஷ்டப்பபிரந்தங்கள், சீர்காழிக்கோவை, கண்ணப்பநாயனார் புராணம் போன்ற நூல்களை அவரிடம் கற்றார். அக்கால முறைப்படி நன்னூல், பாட்டியல் இலக்கணம், சிற்றிலக்கியங்கள் ஆகியவற்றையே அவர் கற்றார்.
ஆதீனச்சூழலில் அங்கு வந்த பல அறிஞர்களுடன் விவாதித்துக் கற்கும் வாய்ப்பு உ.வே.சாமிநாதையருக்கு அமைந்தது. மாயூரம் வேதநாயகம் பிள்ளை, சந்திரசேகர கவிராஜபண்டிதா், திரிசிரபுரம் கோவிந்தபிள்ளை, ராவ்பகதூர் திரு.பட்டாபிராம் பிள்ளை போன்றவர்கள் அவர்களில் முக்கியமானவர்கள் என அவர் தன் வாழ்க்கைவரலாற்றில் குறிப்பிடுகிறார்.
உ.வே.சாமிநாதையர் தன் பதிமூன்றாவது வயதில் 1868-ல் மதுராம்பாளை மணந்தார். மகன் கல்யாணசுந்தர ஐயர்.
மீனாட்சிசுந்தரம் பிள்ளை பிப்ரவரி 1, 1876-ல் மறைந்தார். உ.வே.சாமிநாதையர் குடும்பம் அப்போது பொருளியல் இடரில் இருந்தது. அவர் தந்தை வெவ்வேறு ஊர்களுக்குச் சென்று கதைசொல்லியும், செல்வந்தர்களிடம் கொடைபெற்றும் வாழ்ந்தார். உ.வே.சாமிநாதையரும் அவருடன் கதைசொல்லச் சென்றார். பணம்கேட்டு நிலப்பிரபுக்களுக்கு சீட்டுகவிகளும் எழுதினார். திருவாவடுதுறை ஆதீனம் கோரியதற்கு ஏற்ப உ.வே.சாமிநாதையர் தன் மனைவியுடன் ஆதீனத்திற்கே வந்து தங்கியிருந்தார். ஆதீனகர்த்தராகிய சுப்பிரமணிய தேசிகரிடம் பாடம் கேட்டும் அங்கிருந்த மாணவர்களுக்கு பாடம் சொல்லியும் வாழ்ந்தார்.
மீனாட்சிசுந்தரம் பிள்ளைக்கு நெருக்கமானவரும் கும்பகோணம் கல்லூரியில் தலைமைத் தமிழாசிரியருமான தியாகராஜ செட்டியார் அடிக்கடி ஆதீனத்திற்கு வருகையில் அவருடன் சாமிநாதையருக்கு பழக்கம் ஏற்பட்டிருந்தது. மீனாட்சிசுந்தரம் பிள்ளை இருந்தகாலத்தில் சாமிநாதையர் ஆசிரியர் வேலைக்குச் செல்லலாம் என தியாகராஜ செட்டியார் பரிந்துரை செய்ய, சாமிநாதையரை பிரியமனமில்லாத மீனாட்சிசுந்தரம் பிள்ளை அதை மறுத்துவிட்டார். பிப்ரவரி 12, 1880-ல் தியாகராஜச் செட்டியார் கும்பகோணம் கல்லூரியில் தமது வேலையைத் விட்டுவிட முடிவுசெய்து அந்த வேலைக்கு உ.வே.சாமிநாதையரைப் பரிந்துரைத்த செய்தியை சுப்பிரமணிய தேசிகரிடம் கூறினார். தேசிகருக்கு சாமிநாதையரை அனுப்பும் எண்ணம் இருக்கவில்லை, உ.வே.சாமிநாதையரும் ஆதீனத்தை விட்டுச்செல்ல நினைக்கவில்லை. தியாகராஜ செட்டியார் வலியுறுத்தி தேசிகரிடம் அனுமதி பெற்றார். உ.வே.சாமிநாதையர் பிப்ரவரி 16, 1880 முதல் கும்பகோணம் கல்லூரி தமிழாசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். 1880 முதல் 1903 வரை 23 ஆண்டுகள் உ.வே.சாமிநாதையர் கும்பகோணம் கல்லூரி தமிழாசிரியராகப் பணியாற்றினார்.
சென்னை மாகாணக் கல்லூரியில் பேராசிரியராக இருந்த பூண்டி அரங்கநாத முதலியார் அழைப்பின் பேரில் 1903 முதல் 1919 வரை சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக பணியாற்றினார். சென்னையில் மாநிலக் கல்லூரிக்கு அருகே திருவல்லிக்கேணி திருவேட்டீசுவரன் பேட்டையில் மாதம் 20 ரூபாய்க்கு ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். 1909-ம் ஆண்டு வாடகைக்குக் குடியிருந்த அந்த வீட்டையே விலைக்கு வாங்கினார். வீட்டின் அப்போதைய விலை ரூ. 4,400/-.தமக்குக் கும்பகோணம் கல்லூரியில் ஆசிரியர் பணி கிடைக்கக் காரணமாகயிருந்த தியாகராச செட்டியாரின் நினைவாக அந்த வீட்டிற்குத் ‘தியாகராச விலாசம்’ என்று பெயரிட்டார்.
சென்னையில் தொழுவூர் வேலாயுத முதலியார் புரசபாக்கம் அஷ்டாவதானம் சபாபதி முதலியார், சோடசாவதானம் சுப்பராய செட்டியார், கதிர்வேற் கவிராயர், காஞ்சீபுரம் இராமசுவாமி நாயுடு, கோமளீசுவரன் பேட்டை இராசகோபாலபிள்ளை, சூளை அப்பன் செட்டியார், சூளை சோமசுந்தர நாயகர், திருமயிலை சண்முகம் பிள்ளை போன்றவர்கள் உ.வே.சாமிநாதையரின் தோழமையில் இருந்தனர்.
ராஜா அண்ணாமலை செட்டியார் சிதம்பரத்தில் தாம் தொடங்கிய மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் (இன்றைய அண்ணாமலைப் பல்கலைக்கழகம்) முதல்வராகப் பொறுப்பேற்க உ. வே. சாமிநாதையரை அணுகினார். சென்னை மாநிலக் கல்லூரியின் ஆசிரியராகப் பணியாற்றி பணி ஓய்வு பெற்றிருந்த உ. வே. சாமிநாதையர் மீனாட்சி தமிழ்க் கல்லூரியின் முதல்வராக 1924-ம் ஆண்டு ஜூலை மாதம் பொறுப்பேற்றார். சென்னை, அண்ணாமலைநகர், மைசூர், ஆந்திரா, காசி, திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலுள்ள பல்கலைத் தமிழ்க் குழுக்களில் உறுப்பினராயிருந்த உ.வே.சாமிநாதையர் சென்னைப் பல்கலைக்கழகப் புலவர் தேர்வுக்குழுத் தலைவர் பதவியிலும் பலஆண்டுகள் பணியாற்றியுள்ளார்.
பாண்டி நாட்டில் செவந்திபுரத்தில் வேணுவனளிங்கத்தம்பிரான் கட்டிய மடாலயத்திற்குச் சுப்பிரமணிய தேசிக விலாசம் என்னும் மடாலயத்தைச் சிறப்பித்துப் புலவர்கள் பாடிய 86 பாடல்கள் இருந்தன. உ.வே.சா. எட்டு பாடல்கள் இயற்றி வேறு சில பாடல்களும் சேர்த்து திருநெல்வேலி முத்தமிழாகரமென்னும் அச்சுக்கூடத்தில் அப்பாடல் திரட்டை பதிப்பித்தார். அது முதன்முதலாக உ.வே.சாமிநாதையர் பதிப்பித்த நூல்.
உ.வே.சாமிநாதையரின் முதல் படைப்பு. உ.வே.சாமிநாதையர் பழைய செய்யுள் மரபைச் சேர்ந்த பிரபந்தங்களையும் தனிப்பாடல்களையும் இயற்றியிருக்கிறார். பதிப்பியக்கத்தின் தொடக்கத்தில் மிகக்கடுமையான சொற்றொடர்கள் கொண்ட மொழிநடை அவரிடமிருந்தது. மணிமேகலை உரை முதல் நடை எளிதாகத் தொடங்கியது. இறுதிக்காலத்தில் எழுதிய தன்வரலாறு, ஏடுதேடிய அனுபவங்கள் போன்றவை நவீன உரைநடையில் அமைந்திருந்தன. அன்றைய முதன்மையான புனைவெழுத்தாளர்களின் நடைக்கு நிகரான சொற்சிக்கனமும், புதிய சொற்றொடரமைப்பும் கொண்டிருந்தன. அதற்கு உ.வெ.சாமிநாதையர் தொடர்ந்து ஆங்கிலத்தில் வாசித்துக்கொண்டிருந்தது முதன்மைக் காரணம் என குறிப்பிடப்படுகிறது.
உ.வே.சாமிநாதையரின் உரைநடைநூல்கள் இரண்டுவகையில் முதன்மையான இலக்கியப்படைப்புகளாக கருதப்படுகின்றன. உ.வே.சாமிநாதையர் தனது வரலாற்றை என் சரித்திரம் எனும் தலைப்பில் ஆனந்த விகடன் வார இதழில் 1940 முதல் 1942 வரை தொடராக எழுதி வந்தார். இது 1950-ம் ஆண்டில் தனிப் புத்தக வடிவம் பெற்றது. இந்நூல் பத்தொன்பதாம் நூற்றாண்டு தஞ்சாவூர் பகுதி கிராமத்து வாழ்க்கையை, குடும்ப அமைப்பை, அக்காலத்து கல்விமுறையை மிகநுட்பமாக விவரிக்கிறது. பலபகுதிகள் பெரும்புனைவுக்கு நிகரான நுட்பம் கொண்டவை. தன் ஆசிரியர் மீனாட்சிசுந்தரம் பிள்ளை பற்றி உ.வே.சாமிநாதையர் எழுதிய வாழ்க்கைவரலாறு ஓர் ஆளுமையை சித்தரிப்பதில் மிகப்பெரிய வெற்றிபெற்ற படைப்பு. இலக்கிய விமர்சகரான க.நா.சுப்ரமணியம் தமிழில் நிகழ்ந்த இலக்கியச் சாதனை என அவ்விரு நூல்களையும் குறிப்பிடுகிறார். உ.வே.சாமிநாதையர் அவர் ஏடுதேடி அலைந்த அனுபவங்களை எழுதிய நினைவுமஞ்சரி என்னும் நூல் தமிழின் தலைசிறந்த சிறுகதைகளுக்கு நிகரான நிகழ்வுக்குறிப்புகள் அடங்கியது. தமிழில் எழுதப்பட்ட மிகச்சிறந்த நடைச்சித்திரங்கள் அவை என விமர்சகர் வெங்கட் சாமிநாதன் கருதுகிறார்.
நவீன இலக்கியத்திலும் ஆழமான ரசனை கொண்டிருந்த உ.வே.சாமிநாதையர் பல நவீன நூல்களுக்கு அணிந்துரை வழங்கியிருக்கிறார். சித்தி ஜுனைதா பேகம் எழுதிய நாவலுக்கு அவர் அளித்த முன்னுரை அவர் புதிய எழுத்துக்களையும் கவனித்தார் என்பதற்கான சான்று.
உ.வே.சாமிநாதையர் நகைச்சுவையுடனும் செறிவாகவும் மேடையில் பேசுபவர் என அறியப்பட்டிருந்தார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் உ.வே.சா. ஆற்றிய சொற்பொழிவே ’சங்ககாலத் தமிழும் பிற்காலத்தமிழும்’ எனும் நூலாக வெளியிடப்பட்டது. உ.வே.சாமிநாதையர் ஏப்ரல் 28, 1942-ல் மறைந்தார்.