சின்னச் சின்ன சந்தோஷங்களால் அலங்கரிக்கப்பட்ட வாழ்க்கையே எல்லோருக்கும் கிடைத்திருக்கிறது. இலகுவான மனம் படைத்தவர்களால் மட்டுமே அதைக் கண்டடையவும் கொண்டாடவும் முடிகிறது. இன்னொரு உயிரை காயப் படுத்தாத சந்தோஷங்கள் பேரழகானவை
மகிழ்ச்சி என்பது எப்போதும் நம்மிலிருந்து தான் உருவாகிறது. மகிழும் கலை எண்களுக்கு அப்பால் பட்டது. உணர்வுகளுடன் பின்னிப் பிணைந்தது. //ஓர் அன்பளிப்பின் பெறுமதியை அன்பினால் அளவிடுபவர்களையே மகிழ்ச்சி அரவணைத்துக் கொள்கிறது.
மகிழ்ந்திருக்க ஒவ்வொரு நாளும் பெரும் ஆச்சரியங்கள் நிகழ வேண்டியதில்லை. ஒரு கப் தேநீரில்
, கால் தொடும் கடலலையில்
.. இனிக்க இனிக்க சிறு சாக்லேட்டில்
.., எப்போதேனும் எட்டிப்பார்க்கும் குட்டிக்குட்டிப் பரிசுகளில்
. அவ்வப்போது வரும் விடுமுறை நாட்களில்..
பெரு வேலையின் முடிவுகளில்..
சின்னஞ்சிறுசுகளுடன் சிறு அரட்டையில்
.. நாம் நட்ட செடி முதன் முதலாய் துளிர்க்கையில்.
. உயிர் நனைக்கும் மெல்லிசையில்
.. உள்ளம் தொடும் புத்தகத்தில்
.. கவிதையுடனான தனிமையில்
மௌனம் சுமந்த பயணம் ஒன்றில்..
ஆத்மார்த்தமான ஆசீர்வாதம் ஒன்றில்
கொஞ்சம் குறு நகையில்..
கொஞ்சும் வார்த்தைகளில்..
புதிய நபர்களின் அறிமுகத்தில்
.. பழைய உறவுகளின் நினைவுகளில்
.. அற்ப கவனிப்பிற்காய் அன்பைப் பொழியும் பூனைக்குட்டியின் கரிசனத்தில்.
. எப்போதும் பார்க்கும் கார்டூன் எபிசோடில்.
. மகிழ்வித்து மகிழ்தலில்..
பகிர்ந்து கவனித்தலில்..
ஏற்கப்பட்ட பிரார்த்தனையில்.
. ஆறுதலாய் ஒரு தலை கோதலில்
, நமக்கும் யாரேனும் முக்கியத்துவம் கொடுக்கையில்
நாம் பேசுவதில் , அருகிருத்தலில் மகிழும் ஜீவன்களிடத்தில்..
என நீள்கிறது பட்டியல்.
நம்மை நாமே மகிழ்விக்கத் தொடங்கும் ஒரு நாளில் மகிழ்ச்சியின் தேவதை நெருங்கி வருகிறாள்.
அன்றிலிருந்து புத்தம் புது அதிசயங்கள் உதயமாகத் தொடங்குகின்றன.புதிதாய் பிறக்கிறோம். மகிழ்ச்சி பிரசவிக்கிறது

