இன்றைய முக்கிய நிகழ்வுகள் (பிப்ரவரி 01)
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் பிறந்த தினம்
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் (Omandur Ramasamy Reddiyar) (1 பிப்ரவரி, 1895 – 25 ஆகத்து 1970) இந்திய தேசிய காங்கிரசு கட்சியை சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார். சென்னை மாகாணம் மற்றும் சென்னை மாநிலத்தின் முதல்வராகப் பணியாற்றியவர். அவரது ஆட்சியின் போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை சிலர் மட்டுமே சுரண்டி வருவதைத் தடுக்க சட்டம் கொண்டுவந்தார். ஜமீன்தார் இனாம் முறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார்.
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார், சென்னை மாகாணத்தின், தென் ஆற்காடு மாவட்டத்தில் உள்ள திண்டிவனத்துக்கு அருகில் அமைந்துள்ள ஓமந்தூர் கிராமத்தில் 1895 ஆம் ஆண்டு பிறந்தார். அவர் வால்டர் சுடர் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை பயின்றார். தன் இளவயதிலேயே இந்திய விடுதலை இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார்.
இராமசாமி ரெட்டியார், சென்னை மாகாணத்தின் முதலமைச்சராக மார்ச் 23, 1947 முதல் ஏப்ரல் 6, 1949 வரை பதவியில் இருந்தார். சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராவர். இவரது பதவிக் காலத்தில், சென்னை கோயில் நுழைவு அதிகாரமளிப்புச் சட்டம் 1947 இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தின் மூலம் தலித்துகள், தாழ்த்தப்பட்டோர் இந்து கோயில்களுக்குள் செல்ல உரிமையளிக்கப்பட்டது. அவரது ஆட்சியின் போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை சிலர் மட்டுமே சுரண்டி வருவதைத் தடுக்க சட்டம் கொண்டுவந்தார். ஜமீன்தார் இனாம் முறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார். பூரண மதுவிலக்கை செயல்படுத்தினார். இந்து சமய அறநிலையத்துறைச் சட்டம் மற்றும் தேவதாசி முறை ஒழிப்பு சட்டம் ஆகியவற்றை இயற்றினார்
முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியபின், ஒமந்தூராரின் மனம் முழுமையாக ஆன்மீகத்தின் பக்கம் சென்றது. அரசியலில் இருந்து விலகி வடலூரில் விவசாயப் பணியை மேற்கொண்டார். வடலூரில் சுத்த சன்மார்க்க நிலையத்தை நிறுவினார். இவர் வள்ளலார் குருகுலப் பள்ளி, அப்பர் அநாதைகள் மற்றும் ஏழை மாணவர் இல்லம், அப்பர் சான்றோர் இல்லம், இராமலிங்க தொண்டர் இல்லம் என பலநிறுவனங்களை தொடங்கினார். இவர் ஆகத்து 25, 1970 இல் உடல்நலக் குறைவால் மறைந்தார்.
இந்திய கடலோர காவல்படை தினமின்று
சுருக்கமாக ஐசிஜி எனப்படும் இந்திய கடலோர காவல் படையானது, இந்திய கடல் எல்லைகளில் ஆண்டு முழுவதிலும் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் அரசு அமைப்பாகும். ரோந்து மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை தடுப்பதற்கான பிரத்யேக அமைப்பாக உருவாக்கப்பட்டதிது. முன்னதாக இந்திய கடற்படையுடன், இந்திய கடலோரக் காவல் படை இணைந்து செயல்பட்டு வந்தது. பின்னர், கடந்த 1977 ஆம் ஆண்டு பிப்ரவரி 1 ஆம் தேதி இந்திய கடலோர காவல்படை தொடங்கப்பட்டது. கடல் வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்படுவதை தடுக்க இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. ரோந்து மற்றும் போதைப்பொருள் கடத்தல்களை தடுப்பதற்கான பிரத்யேக அமைப்பாக இது உருவாக்கப்பட்டது. 1978 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி, இந்திய நாடாளுமன்றம் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 1 ஆம் தேதியை இந்திய கடலோர காவல்படை தினமாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. நோக்கம் இந்திய கடலோர காவல் படையின் எல்லை, இந்திய கடல் பகுதிக்கு மட்டும் உட்பட்டதாகும். நாட்டின் கடல்சார் நலன்களைப் பாதுகாப்பதிலும் தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதிலும் கடலோர காவல்படை அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது. தொடக்கத்தில் இந்திய கடல் பகுதிகளில் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றுவதற்கும், குற்றவாளிகளை கைது செய்வதற்கும் இந்திய கடலோர காவல்படை பயன்படுத்தப்பட்டு வந்தது. பின்னர், போதைப்பொருள் கடத்தல்களை கண்காணிப்பது, கடத்தல் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களை தடுப்பது, கடலில் தத்தளிக்கும் மீனவர்களை மீட்பது, வணிக கப்பல்களுக்கு தேவையான பாதுகாப்புகளை அளிப்பது உள்ளிட்டவற்றை இப்படை பிரிவு தற்போது செய்து வருகிறது.
மீனாட்சிசுந்தரம் பிள்ளை நினைவு தினம்
மீனாட்சிசுந்தரம் பிள்ளை (ஏப்ரல் 6, 1815 – ஜனவரி 2, 1876; திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு) சிறந்த தமிழறிஞர். உ. வே. சாமிநாதையரின் ஆசிரியர். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு ‘மகாவித்வான்’ என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகத் திகழ்ந்தார். சீர்காழியில் முன்சீப்பாக பணியாற்றிய தமிழில் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளையுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். அவர் மீது வைத்திருந்த பெருமதிப்பின் காரணமாக, அவரைப் பாராட்டி ‘குளத்துக்கோவை’ என்னும் நூலை இயற்றினார். சிற்றிலக்கியக் காலம் என்று கூறப்பட்ட இவரது காலத்தில் திருத்தலங்களின் வரலாற்றை விவரித்து ஏராளமான தல புராணங்கள் பாடினார். 19-ம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்களை இயற்றியவர் இவர்தான். புராணங்கள், காப்பியங்கள், பிள்ளைத் தமிழ் நூல்கள், அந்தாதி, கலம்பகங்கள், கோவைகள், எண்ணற்ற தனிப் புராணங்களை இயற்றியுள்ளார். பிள்ளைத் தமிழ் நூல்களைப் பாடியதால் ‘பிள்ளைத் தமிழ் மீனாட்சி சுந்தரம் . தமிழ் மொழிக்கு ஒப்பற்ற தொண்டாற்றிய தமிழ் அறிஞர் மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளை1876இல் தமது 61வது வயதில் இதே நாளில் மறைந்தார்.
தமிழ் வளர்த்த ஞானியார் அடிகள் நினைவு நாள்
1.2.1942 மதுரை தமிழ்ச்சங்கம் தோற்றுவிக்க காரணமாக அமைந்தவர் ஆம்..திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள், தாய் மொழியாம் தமிழைத் தமிழர்களே தாழ்வாகக் கருதியதை நினைத்து, நெஞ்சம் உருகினார்கள். ‘எனக்குத் தமிழில் பேச வராது’ என மேடைகளில் உரையாற்றிய தமிழர்களின் அவலத்தை அறிந்து, மன வேதனை கொண்டார்கள். வெட்கமும், தன்மானமும், தாய் மொழி உணர்வும் அற்ற தமிழர்களின், ஆங்கில மோகத்தைக் கண்டு உள்ளம் குமுறினார்கள். வயிற்றுக்கும் வாழ்விற்கும் தமிழ் துணையாக நிற்காது என்ற எண்ணம், படித்த தமிழர்களிடம் பரவி வரும் நிலையைக் கண்டு கண் கலங்கினார்கள். இந்த இழிநிலை தமிழ் மொழியை மட்டுமல்லாது தமிழர்களின் பண்பாட்டையும், தமிழ் மொழி மீதான நம்பிக்கையையும் சீரழித்துத் தமிழர்களைத் தலைகுனியச் செய்துவிடும் என ஆழ்ந்து சிந்தித்த ஞானியார் அடிகள், தமிழுணர்வூட்டும் அமைப்புகளை ஏற்படுத்தி உரையாற்றினார்கள். திருப்பாதிரிப்புலியூர் திருமடாலயத்திற்கு 1900 ஆம் ஆண்டு ஞானியார் அடிகளைத் தரிசிக்க வருகை புரிந்த பாலவநத்தம் குறுநில மன்னரும் பாவலரும் நாவலருமான பாண்டித்துரைத் தேவரிடம், “தமிழைத் தழைக்கச் செய்திட தாங்கள் முயற்சி செய்ய வேண்டும். தமிழின் வளர்ச்சிக்கு ஓர் அமைப்பை, சங்கம் கண்ட மதுரையில் உருவாக்க வேண்டும்” என வேண்டுகோள் வைத்தார் ஞானியார் அடிகள்! பாண்டித்துரைத் தேவர், “வெகு விரைவில் மதுரை மாநகரில், தமிழ்ச் சங்கம் ஒன்றை அமைப்போம்!” – என உறுதியளித்தார். பின்னர் இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, திருமடாலயத்திற்கு வருகைபுரிந்தபோதும் ஞானியார் அடிகள் தமது விருப்பத்தைத் தெரிவித்தார். ஞானியார் அடிகளின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், “தமிழை முறையாகப் பயிற்றுவிக்கவும், தமிழின் சிறப்பைத் தமிழர் உணரச் செய்யவும் மதுரையில் ஓர் தமிழ் அமைப்பை கண்டிப்பாக உருவாக்குவோம்” – என மன்னர் பாஸ்கர சேதுபதியும் உறுதியளித்தார். மதுரை மாநகரில் 24.5.1901 ஆம் நாள் ‘தமிழ்ச் சங்கம்’ நிறுவப்பெற்றது என்னும் செய்தி ஞானியார் அடிகளுக்கு பெரும் மகிழ்ச்சியைத் தந்தது. மன்னர் சேதுபதிக்கும், பாண்டித்துரைத் தேவருக்கும் பாராட்டுத் தெரிவித்து மடல் எழுதினார் அடிகள். திருப்பாதிரிப்புலியூரில், ‘வாணி விலாச சபை’ எனும் ஓர் அமைப்பு பாண்டித்துரைத் தேவர் தலைமையில் தொடங்கினார் ஞானியார் அடிகள். வாணி விலாச சபையில் வாரந்தோறும் சமய நெறியையும், தமிழ் உணர்வையும் ஊட்டும் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பெற்றதோடு, தமிழைக் கற்பிக்கும் முயற்சியும் நடைபெற்றது. திருப்பாதிரிப்புலியூரில் ‘ஞானியார் மாணவர் கழகம்’ என்ற அமைப்பு தோற்றுவிக்கப்பட்டது. அதன்மூலம் நாள்தோறும், மாலையில், தமிழ் இலக்கிய, இதிகாச, புராணங்கள் சொல்லித்தரப்பட்டதுடன்; தமிழ் இலக்கணமும் சுவைபடக் கற்பிக்கப்பட்டது. “எத்தனையோ திருமடங்கள் தமிழகத்தில் உள்ளன என்றாலும் அடியேனை ஈர்த்த ஓரே திருமடம் ஞானியார் சுவாமிகள் குருமூர்த்தியாய் வீற்றிருக்கும் திருப்பாதிரிப்புலியூர் திருமடமே! ஏனெனில், தமிழ் மக்களுக்குத் தமிழின் மேன்மையைத் தமது கலையொளிரும் சொற்பொழிவுகளால் ஊட்டியும், உணர்த்தியும் வருபவர்கள் ஞானியார் சுவாமிகள். சுவாமிகளைத் தமிழாகவே யான்கண்டு மகிழ்கிறேன்“ – எனக் குறிப்பிட்டு மகிழ்ந்தார் ‘தமிழ்த் தென்றல்’ திரு.வி.க!
இந்தியாவின் முதல் இரயில்வே அருங்காட்சியகம் சாணக்கியபுரி, புதுடில்லியில் திறக்கப்பட்ட நாள்
10 ஏக்கர் பரப்பளவுடன் 1977-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தேதியில் இந்த அருங்காட்சியகம் ஏற்படுத்தப்பட்டது. இந்தியாவில் ரயில்வே துறையின் பாரம்பர்யம், ரயில்வே அடைந்துள்ள பரிணாம வளர்ச்சி, வெவ்வேறு காலங்களில் ரயில் பெட்டிகளின் வடிவமைப்பு உள்ளிட்ட பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த அருங்காட்சியகத்தில் இடம்பெற்றுள்ளன.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது நிலக்கரி மற்றும் நீராவியால் இயக்கப்பட்ட இன்ஜின் முதல் தற்போதைய நவீன யுகத்தில் ரயில்வே தொழிற்சாலைகளிலும், லோகோமோட்டிவ் தொழிற்சாலைகளிலும் வடிவமைக்கப்பட்டு வரும் இன்ஜின்கள் வரை பல்வேறு வகையான இன்ஜின்கள் இந்த அருங்காட்சியகத்தில் உள்அரங்கம் மற்றும் வெளி அரங்கில் பொதுமக்களின் பார்வைக்கு பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. இந்திய ரயில்வேத் துறை தொடர்பான முழுமையான தகவல்களுடன் கூடிய கணினி தகவல்களும் இருப்பது கூடுதல் சிறப்பாகும். இந்த அருங்காட்சியகத்தை பார்வையாளர்கள் கண்டுகளிக்கும்வகையில், அந்தப் பகுதிக்குள் ஓடும் வகையில் பிரத்யேக ரயிலும் இயக்கப்படுகிறது. தினமும் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை பார்வையாளர்கள் ரயில் அருங்காட்சியகத்தைக் கண்டு ரசிக்கலாம். திங்கட்கிழமை மற்றும் தேசிய விடுமுறை தினங்களில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. டீசல் இன்ஜின், மின்சாரம் மூலம் இயக்கப்படும் இன்ஜின் என அனைத்து வகையான இன்ஜின்களும் இங்கு இடம்பெற்றிருப்பது இதன் கூடுதல் சிறப்பு. இந்தியாவில் மீட்டர்கேஜ் ரயில்பாதை, அகல ரயில்பாதை, புதிய ரயில்வே திட்டங்கள் போன்ற தகவல்களையும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ள கணினியில் அறிந்து கொள்ள முடியும்.
வெர்னர் ஹைசன்பர்க் நினைவு தினம்
குவாண்டம் இயக்கவியலை உருவாக்கும், ஹைசன்பர்க் நிலையில்லா (Uncertainty) கோட்பாட்டைக் கண்டறிந்த, நோபல் பரிசு பெற்ற வெர்னர் ஹைசன்பர்க் நினைவு தினம் இன்று (பிப்ரவரி 1, 1976)
குவாண்டம் மெக்கானிசத்தை தோற்றுவித்தவர்களில் ஒருவராகப் போற்றப்படுகிறார். இக்கோட்பாட்டை பயன்படுத்தி ஹைட்ரஜன் உருவ மாற்று வடிவங்களைக் கண்டறிய முடிந்தது. குவாண்டம் புலக்கொள்கை குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார். அணுக்கரு கோட்பாடு குறித்தும் ஆராய்ந்தார். நவீன இயற்பியலின் பிரதான கொள்கைகளில் ஒன்றான ஹைசன்பர்க் நிலையில்லா (Uncertainty) கோட்பாட்டைக் கண்டறிந்தார். அணிகள் (Matrix’s) அடிப்படையில் குவாண்டம் இயக்கவியலை உருவாக்கும் வழிமுறையைக் கண்டறிந்தார். இதற்காக 1932ல் இயற்பியலுக்கான நோபல் பரிசைப் பெற்றார். அப்போது இவருக்கு 31 வயது. கொந்தளிப்பான ஓட்டம் (Turbulent Flows), இணை அணுவியல் துகள்கள், அணு உட்கரு, காந்தவியல், காஸ்மிக் கதிர்கள் உள்ளிட்டவற்றின் நீர்இயக்கவியல் கோட்பாடுகளுக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளார். நுண்அலகு இயந்திரவியலின் வடிவமைப்பாளர்களில் ஒருவராக குறிப்பிடப்படுகிறார். ஜீமன் விளைவு குறித்தும் விரிவாக ஆராய்ந்தார். 1925ல் மாகசு பார்னுடன் இணைந்து சத்திச்சொட்டு நிலையியக்கவியலுக்கான அணி சூத்திரமாக்கலை இயற்றினார். சிறந்த தத்துவவாதி யாகவும் திகழ்ந்தார். இவர் நல்ல எழுத்தாளரும்கூட. ஆராய்ச்சிக் கட்டுரைகள், தத்துவம் சார்ந்த கட்டுரைகள், பிற பொதுவான விஷயங்கள் என 600-க் கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். இவை அனைத்தும் தொகுக்கப்பட்டு, 9 தொகுதிகளாக வெளியிடப் பட்டன. கோட்பாட்டு இயற்பியல் உட்பட பல்வேறு துறைகள் குறித்தும் ஏராளமான விரிவுரைகள் நிகழ்த்தியுள்ளார்.
எமிலியோ ஜி.சேக்ரே பிறந்த தினம்
எதிர் புரோட்டானைக் (Anti-proton) கண்டறிந்ததற்காக நோபல் பரிசினைப் பெற்ற எமிலியோ ஜி.சேக்ரே பிறந்த தினம் . செக்ரே ஒரு புகைப்படக் கலைஞராகவும் தீவிரமாக இருந்தார். மேலும் நவீன அறிவியல் வரலாற்றில் நிகழ்வுகள் மற்றும் நபர்களை ஆவணப்படுத்தும் பல புகைப்படங்களை எடுத்தார். அவை அவரது மரணத்திற்குப் பிறகு அமெரிக்க இயற்பியல் நிறுவனத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டன. அமெரிக்க இயற்பியல் நிறுவனம் அவர் நினைவாக இயற்பியல் வரலாற்றின் புகைப்படக் காப்பகத்திற்கு இவர் பெயரிட்டது.
சென்னையின் புகழ்பெற்ற புஹாரி ஹோட்டல் நிறுவனர் மற்றும் சென்னை மாநகர முன்னாள் Sheriff of Madras A.M.புஹாரி பிறந்த தினம். மெட்ராஸ் மாநகரின் அரசியல் சாராத நிர்வாகத்திற்காக மெட்ராஸ் ஷெரிஃப் என்ற பதவி 1727ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டு 1998ஆம் ஆண்டு முடக்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த இவர் சுமார் பத்து வயதில் குடும்பத்தினருடன் இலங்கை கொழும்பு சென்று பட்டப்படிப்பிற்கு பின்னர் உணவு மற்றும் மளிகைப்பொருட்களின் வர்த்தகத்தில் ஈடுபட்டார். 1951 ல் இந்தியா திரும்பி சென்னை மவுண்ட்ரோடில் (தற்கால அண்ணா சாலை) புஹாரி ஹோட்டலை துவக்கினார். மேலும் 60’ களில் சென்னை மெரீனா பீச் நீச்சல்குளம் அருகில் ஒரு ஹோட்டல் துவங்கப்பட்டது, மெரீனா பீச் ஹோட்டலை பல பழைய திரைப்படங்களில் காணலாம், தற்போது இவரது வாரிசுகளால் சென்னையில் சுமார் 10ற்கும் மேற்பட்ட புஹாரி ஹோட்டல்கள் செயல்படுகிறது. தென்னிந்திய மற்றும் வட இந்திய ஆட்சியாளர்கள், அரசியல் பிரபலங்கள், அரசு அதிகாரிகள், திரைப்பட நட்சத்திரங்கள் பொதுமக்கள் உள்ளிட்ட பலராலும் இங்குள்ள உணவு வகைகள் சுவைக்கப்பட்டு புஹாரி ஹோட்டலின் ரசிகர்களாக அனைவரும் மாறினர். வெளிநாடுகளில் புகழ் பெற்றிருந்த ஜூக்பாக்ஸ் எனப்படும் காயின் செலுத்தி பாட்டுகேட்கும் இசைக்கருவியை முதன்முதலாக 1956 ல் தனது ஹோட்டலில் நிறுவினார். புஹாரி ஹோட்டல் நிறுவனர் A.M.புஹாரி பல வகையான உணவுவகைகளை அறிமுகம் செய்துள்ளார்