இன்றைய முக்கிய நிகழ்வுகள் (சனவரி 31)

ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளரான அகிலன் நினைவு தினமின்று.

நவீன தமிழ் இலக்கியத்தில் மாபெரும் பங்களிப்புகளைச் செய்தவர் அகிலன் என்று அழைக்கப்படும் பி.வி.அகிலாண்டம். இவர் 1922 ஜூன் 27-ம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பெருங்காளூரில் பிறந்தார். வனத்துறை அதிகாரியாக இருந்த தந்தை இறந்த பிறகு, அம்மா கடினமான சூழலில் இவரைப் படிக்க வைத்தார். பள்ளிப் பருவத்தில் ‘சக்தி வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பை உருவாக்கி, கள்ளுக்கடை மறியல், அந்நியத் துணி புறக்கணிப்பு போன்ற போராட்டங்களில் ஈடுபட்டார். 1938-ல் பள்ளியின் காலாண்டு சஞ்சிகைக்காக ‘அவன் ஏழை’ என்ற கதையை முதன்முதலாக எழுதினார். கதை நடையைப் பார்த்து சந்தேகம் அடைந்த தமிழ் ஆசிரியர், ‘எங்கு திருடினாய்?’ என்றார். இவர் கோபத்துடன், ‘என் கதையை திருப்பிக் கொடுத்துடுங்க. பிரசுரிக்க வேண்டாம்’ என்றார். உண்மையை அறிந்த ஆசிரியர், அவரைத் தட்டிக்கொடுத்தாராம். நாவல், சிறுகதை, கட்டுரை, பயணக் கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமர்சனம், சிறார் இலக்கியம் என பல்வேறு தளங்களில் அகிலன் எழுதியுள்ளார். இவரது ‘வேங்கையின் மைந்தன்’ நூலுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இந்திய மொழிகள் மட்டுமின்றி, உலகின் பல மொழிகளிலும் இவரது படைப்புகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. மேடை நாடகங்கள், தொலைக்காட்சி, வானொலி நாடகங்கள் என பல வடிவங்களில் உலகின் பல பகுதிகளிலும் இவரது படைப்புகள் வலம் வருகின்றன. இவரது ‘பாவை விளக்கு’ நாவல் அதே பெயரிலும், ‘கயல்விழி’ நாவல் ‘மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்’ என்ற பெயரிலும் திரைப்படங்களாக வந்தன. 1975-ல் ‘சித்திரப் பாவை’ என்ற நாவலுக்கு ஞானபீட விருது பெற்றார். ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அகிலன் என்பது குறிப்பிடத்தக்கது. பின் 1988 ஆம் ஆண்டு இதே ஜனவரி 31-ம் தேதி, தனது 66-வது வயதில் அகிலன் காலமானார்.

பண்பலை வானொலி கண்டுபிடித்த எட்வின் ஹோவர்ட் ஆர்ம்ஸ்ட்ராங் நினைவு தினம் இன்று.

இவர் அமெரிக்காவில் வாழ்ந்த மின்பொறியாளர் மற்றும் கண்டுபிடிப்பாளர் ஆவர். வானொலி பயன்பாட்டின் வரலாற்றில் இவர் ஒலி பண்பேற்றம் மூலம் மறக்க முடியாதவர் ஆவார். இவரே உலகின் முதல் எப்.எம் ஒலிபரப்பிற்காக காப்புரிமை பெற்றார். இவரின் மறுமீட்டாக்க மின்சுற்றுக்காக 1941ஆம் ஆண்டு காப்புரிமை கிடைத்தது. அதன் பின் இரண்டாவது முறை மேம்பட்ட மறுமீட்டாக்க மின்சுற்றுக்காக 1933ஆம் ஆண்டும் காப்புரிமை பெற்றார். 1918ஆம் ஆண்டில் சூப்பர்ஹெடரோடைன்னை (Superheterodyne receiver) மேம்படுத்தினார். இவர் ஒரு வானொலி ஒலிபரப்பில் நவீன அதிர்வெண் பண்பலை பண்பேற்றம் (FM) கொண்டுவந்து புரட்சியை ஏற்படுத்தினார்.

லண்டன் லாக் மருத்துவமனை, வில்லியம் ப்ரோம்ஃபீல்ட் என்ற மருத்துவரால் தொடங்கப்பட்ட நாள்

1747 – பால்வினை நோய்க்கான உலகின் முதல் மருத்துவமனையான, லண்டன் லாக் மருத்துவமனை, வில்லியம் ப்ரோம்ஃபீல்ட் என்ற மருத்துவரால் தொடங்கப்பட்ட நாள் பாலுறவின்மூலம் மட்டுமே பரவக்கூடிய நோய்கள், பால்வினை நோய்கள் என்று வகைப்படுத்தப்படுகின்றன. இந்த நோய்களின் அறிகுறிகள், பைபிளின் பழைய ஏற்பாட்டிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதிலிருந்து, இவை பண்டைய காலத்திலேயே இருந்திருக்கின்றன என்பது உணரப்படுகிறது. ஆனால், அக்காலத்தில், இவை பாதிக்கப்பட்ட தனிமனிதனின் பாவங்களுக்கான தண்டனை என்று கருதப்பட்டன. இந்த நோய்களுக்கும் பாலுறவு செயல்பாடுகளுக்கும் உள்ள தொடர்பு, நடுக் காலத்தில்தான் (ஐரோப்பிய வரலாற்றின் 5-15ஆம் நூற்றாண்டு) அறியப்பட்டது. 1494-98இல் புனித ரோமப் பேரரசின் ஸ்பெயினுக்கு எதிரான இத்தாலியப் போரில், இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரை ஃப்ரென்ச் படைகள் முற்றுகையிட்டபோது, தற்போது கிரந்தி (சிஃபிலிஸ்) என்று அறியப்படும் பால்வினை நோய், படைவீரர்களின்மூலம் கொள்ளை நோயாகப் பரவியது. கொலம்பஸ் அமெரிக்காவுக்குச் சென்றுவந்தபோது, இருபுறமும் பரவிய தாவரங்கள், விலங்கினங்கள், பண்பாடு, தொழில்நுட்பம் ஆகியவை, கொலம்பியப் பரிமாற்றம் என்று அழைக்கப் படுகின்றன. அந்தப் பரிமாற்றத்தின்போது வந்திருக்கலாம் என்று கருதப்பட்ட இந்த நோய், ஐரோப்பா முழுவதும் பரவி, சுமார் 50 லட்சம் பேரைப் பலிகொண்டது. ஏனென்றால், நவீன மருந்துகள் கண்டுபிடிப்பதற்குமுன், பால்வினை நோய்கள் என்பவை குணப்படுத்த முடியாதவை என்றே கருதப்பட்டன. தொழுநோயாளிகளைத் தனிமைப்படுத்தி சிகிச்சையளிக்கும் இடம் லாக் என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டதால், இந்த மருத்துவமனைக்கு அப்பெயர் சூட்டப்பட்டது. 1864இல் இங்கிலாந்தில் இயற்றப்பட்ட தொற்று நோய்கள் தடுப்புச் சட்டம், பாலியல் தொழிலாளர்கள் என்று சந்தேகிக்கப்படும் பெண்களைக் கைது செய்து சோதிக்கவும், பால்வினை நோய்கள் இருந்தால் லாக் மருத்துவமனையில் அடைத்து சிகிச்சையளிக்கவும் காவல்துறைக்கு அதிகாரமளித்தது. பால்வினை நோய்களுக்கான முதல் வெற்றிகரமான மருந்தாக ஆஸ்ஃபெரினமைன் 1910இல்தான் கண்டுபிடிக்கப்பட்டது. 30 மாறுபட்ட பாக்டீரியா, வைரஸ், ஓட்டுண்ணிகள் ஆகியவை பாலுறவின்மூலம் பரவினாலும், ஆண்ட்டிபயாட்டிக்குகளின் வரவு, பெரும்பாலான பால்வினை நோய்களைக் குணப்படுத்தக் கூடியதாக்கிவிட்டதுடன், பின்னாளில் இவைகுறித்த விழிப்புணர்வும் ஏற்பட்டது.

கல்வெட்டறிஞர் கா.ம.வேங்கடராமையா நினைவு தினம்.

சென்னை பூந்தமல்லியை அடுத்த காரம்பாக்கம் என்ற சிற்றூரில் பிறந்தவர் வேங்கடராமையா. இவருடைய தாய்மொழி தெலுங்கு. தமிழ் ஆர்வம் காரணமாக பி.ஓ.எல். தேர்ச்சி பெற்றார். ஆங்கிலத்தில் முதுகலைத் தேர்விலும் வெற்றி பெற்றார். 1981 இல் தஞ்சாவூரில் தமிழ்ப் பல்கலைக்கழகம் தொடங்கப்பட்டபோது அரிய கையெழுத்து சுவடித்துறை முதல் தலைவராக பொறுப்பேற்று 5 ஆண்டுகள் பணியாற்றினார். அதன்பின் திருவனந்தபுரத்தில் உள்ள பன்னாட்டுத் திராவிட மொழியியல் கழகத்தில் பணி புரிந்தார். வைணவக் குடும்பத்தில் பிறந்த இவர், சைவ சமயத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்தார். இலக்கணம், இலக்கியம், கல்வெட்டு, வரலாற்றுப் புலமை, ஆங்கிலம், வடமொழி, தெலுங்கு ஆகியவற்றைக் கற்றுத் தேர்ந்தார்.இவர் பதிப்பித்த அனைத்து நூல்களிலும் நூலாசிரியர் வரலாறு, நூல் பற்றிய செய்திகள், கல்வெட்டில் ஏதேனும் குறிப்புகள் கிடைப்பின் அவற்றையும் குறிப்பிடுவது வழக்கமாகும். 1949 இல் காரைக்கால் அம்மையார் எழுதிய அற்புதத் திருவந்தாதிக்குக் குறிப்புரை எழுதிப் பதிப்பித்தார். இந்நூல்தான் இவர் பதிப்பித்த முதல் நூல். காசித் திருமடத்தின் வெளியீடாக வந்தது. காசி மடத்தின் வெளியீடுகளுள் திருக்குறள் உரைக் கொத்துப் பதிப்புகள் பதிப்பு வரலாற்றில் குறிப்பிடத்தக்கன. திருக்குறள் உரைக்கொத்தைப் பதிப்பிக்கும்போது, எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை, வி.ஆர்.இராமச்சந்திர தீட்சிதர், எம்.ஆர்.இராசகோபால ஐயங்கார், வ.வெ.சு.ஐயர், ரெவரண்ட் லாசரஸ் ஆகியோரின் ஆங்கில மொழிபெயர்ப்புகளை ஒப்பிட்டுத் தகுந்த மொழிபெயர்ப்பைத் தேர்ந்தெடுத்து ஒவ்வொரு குறளுக்கும் கீழே வெளியிட்டார். தஞ்சாவூர் சரஸ்வதி மகால் நூலகத்தின் மூலமாகத் திருக்குறளுக்குச் சைனர் எழுதிய உரையைப் பதிப்பித்தார். இதற்காக இவர் சைன சமயத்தைச் சார்ந்த பலரிடமும் சென்று அச்சமயம் சார்ந்த பல செய்திகளைக் கேட்டு நன்கறிந்தார். பல்வேறு பதிப்புகளையும் ஒப்பு நோக்குதல், மூல ஓலையுடன் கையெழுத்துப் படியை ஒப்பு நோக்குதல் முதலான பலவற்றைத் தேவையான வகையில் செப்பனிட்டு விரிவான முறையில் ஆய்வு முன்னுரை எழுதி, திருத்தமான முறையில் அந்நூலைப் பதிப்பித்தார். பெரும்பாலும் இவர் எழுதிய நூல்களிலும், கட்டுரைகளிலும் முன்பு எவரும் எழுதாத செய்திகள் தரப்பட்டுள்ளன. “தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்” என்ற நூலில், தஞ்சாவூர் மராட்டியர் ஆட்சிக்குட்பட்ட சமுதாயத்துக்கு மராட்டிய மன்னர்கள் செய்த நன்மைகள், கலைச் சிறப்புகள், அக்காலத்திய பழக்க வழக்கங்கள், அரசியல் நிலைமைகள் போன்ற பலவற்றை மோடி ஆவணங்கள், கல்வெட்டுச் சான்றுகள், இலக்கியச் சான்றுகள் போன்றவற்றின் துணையுடன் ஆராய்ந்து எழுதியுள்ளார். மெக்கன்சி சுவடி, போன்ஸ்லே வம்ச சரித்திரம் போன்றவற்றின் துணைகொண்டு இந்நூல் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

டைகர் வரதாச்சாரி நினைவு நாள்

செங்கல்பட்டு மாவட்டம் கொளத்துாரில், 1876 ஆக., 1ம் தேதி பிறந்தவர், வரதாச்சாரியார். தன் இரு சகோதரர்களுடன் சேர்ந்து கர்நாடக இசை பயின்றார். சென்னை வந்த மூவரும் காலடிப்பேட்டையில் குடியேறினர். அதனால், ‘காலடிப்பேட்டை சகோதரர்கள்’ என அழைக்கப்பட்டனர். வறுமை காரணமாக, கேரள மாநிலம் கோழிக்கோட்டில் ‘சர்வே’ துறையில் பணிபுரிந்தார். நேரம் கிடைக்கும் போது கோவில், திருமண விழாக்களில் கச்சேரி செய்வார்.இவரது பாடலை கேட்ட மைசூர் மகாராஜா, அரண்மனை ஆஸ்தான பாடகராக நியமித்தார். ஒரு சமயம், மிக நுட்பமான ஒரு பல்லவியை இவர் தன்னை மறந்து 4 மணி நேரம் பாடியதைக் கேட்டு வியந்த மகாராஜா இவருக்கு ‘டைகர்’ என்ற பட்டத்தை சூட்டினார். ஒருமுறை சீர்காழியில் கச்சேரி நடந்தபோது ரசிகர்கள் விரும்பிய ராகங்களைப் பாடிக்கொண்டிருந்தார். அந்த வழியாக, ‘கத்தரிக்காய்.. கத்தரிக்காய்’ என்று காய்கறிக்காரர் விற்றுக்கொண்டு போக, ‘கத்தரிக்காய் வாங்க வாயேண்டி தோழி’ என்று பல்லவி பாடி சிரிப்பலையை ஏற்படுத்தினாராம். மைசூர் அரண்மனையில் 10 ஆண்டுகள் பணியாற்றிய பின், சென்னை மியூசிக் அகாடமியின் ஆசிரியர்களுக்கான இசை கல்லுாரியில் முதல்வராக பணியாற்றினார். சென்னை பல்கலையில் இசைப் பிரிவு தலைவராக பணியாற்றியபோது, இவரது ஆலோசனையின்படி டிப்ளமா இசைப் படிப்பு துவங்கப்பட்டது. அண்ணாமலை பல்கலை மற்றும் சென்னை அடையாறு கலாஷேத்ராவில் முதல்வராக பணியாற்றினார். எளிமையாக வாழ்ந்தார். மாணவர்கள் உட்பட யாரிடமும் கோபித்துக்கொள்ள மாட்டார். நெற்றியில் நாமம், கையில் குடை, தென்னங்கீற்றால் செய்யப்பட்ட வெற்றிலைப் பெட்டி இல்லாமல் அவரைப் பார்க்கவே முடியாது. 1950 ஜனவரிஇதே 31ம் தேதி தன் 73வது வயதில் காற்றில் கலந்தார்.

தமிழ் இலக்கியத்தின் குறிப்பிடத்தக்க எழுத்தாளர், இலக்கிய விமர்சகர், மொழிபெயர்ப்பாளரான க.நா.சுப்ரமண்யம் (Ka.Na.Subramanyam) பிறந்த தினம்

திருவாரூர் மாவட்டம் வலங்கை மானில் (1912) பிறந்தவர். தந்தை அஞ்சல் துறை அதிகாரி. சிறுவயதிலேயே தாயை இழந்த வர், தந்தையின் பராமரிப்பில் வளர்ந்தார். இளம் வயதிலேயே ஏராளமான ஆங்கிலப் படைப்பு களைப் படித்தார்.

எழுத்தாளராக வேண்டும் என்று இளம் வயதிலேயே தீர்மானித்தார். சென்னைக்கு வந்து சேர்ந்த பிறகு, முதலில் ஆங்கிலப் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். பின்னர் புதுக்கவிதை, நாவல், சிறுகதை, விமர்சன நூல், மொழிபெயர்ப்பு என்று இவரது இலக்கியக் களம் விரிந்தாலும் கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதிவந்தார்.

தமிழ், ஆங்கிலம், சமஸ்கிருதம், இந்தி நன்கு அறிந்திருந்தார். உலக இலக்கியத்துக்கு இணையாகத் தமிழ் இலக்கியம் பேசப்பட வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந்தார். தமிழின் சிறந்த படைப்புகள் சிலவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார். தமிழ் இலக்கியத்துக்கு வளம்சேர்க்கும் விதமாக, உலகப் புகழ்பெற்ற சிறந்த படைப்புகளைத் தமிழில் மொழிபெயர்த்தார்.

மயன் என்ற புனைப்பெயரில் புதுக்கவிதைகள் எழுதினார். ‘சூறாவளி’, ‘சந்திரோதயம்’, ‘எழுத்து’ உள்ளிட்ட இதழ்கள், ‘ராமபாணம்’, ‘இலக்கிய வட்டம்’, ‘முன்றில்’ உள்ளிட்ட சிற்றிதழ்களை நடத்தினார். தினமும் 7 பக்கங்கள் எழுதுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இவர் சுமார் 15,000 கட்டுரைகள் எழுதியிருப்பதாகக் கூறப்படுகிறது.

அன்றைய காலகட்டத்தின் முக்கியத் தேவையான இலக்கிய விமர்சனத்தில் கவனம் செலுத்தினார். ‘சுதேசமித்திரன்’ இதழில் 1955-ல் சிறுகதை வளர்ச்சி குறித்த கட்டுரை எழுதினார். அதன் பிறகு, ஒரு விமர்சகராகவும் தீவிரமாக இயங்கினார்.

தமிழில் அதிக எண்ணிக்கையில் விமர்சனக் கட்டுரைகள் எழுதியவர் என குறிப்பிடப்பட்டார். தமிழின் சிறந்த இலக்கியப் படைப்புகளை மீண்டும் மீண்டும் தன் இதழ்களில் குறிப்பிட்டு, வாசகர்களிடையே அவற்றைக் கொண்டுசேர்த்த பெருமைக்கு உரியவர்.

நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், விமர்சனக் கலை, இலக்கிய விமர்சனம், மொழிபெயர்ப்பு நூல்கள், கவிதைகள் என இவரது படைப்புலகம் விரிகிறது. இவரது ‘பொய்த்தேவு’ நாவல் இலக்கிய உலகில் இவருக்குத் தனி இடத்தைப் பெற்றுத் தந்தது.

தான் வாழ்ந்துவந்த காலத்தின் போக்கு, எழுத்தின் வகைகள், நண்பர்கள், சங்ககால, தற்கால படைப்பாளிகள் முதலானவை குறித்து எழுதினார். சமரசம் செய்துகொள்ளாத விமர்சகரான இவர், உள்ளுணர்வின் உந்துதல்கள் அடிப்படையிலேயே செயல்பட்டார். இரவு, பகல் பாராமல் கடுமையாக உழைக்கக்கூடியவர். சலிக்காத செயல்வேகம் கொண்டவர்.

பல பிரபல இதழ்களில் இவரது கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தன. 1986-ல் இவர் எழுதிய ‘இலக்கியத்துக்கு ஒரு இயக்கம்’ என்ற இலக்கியத் திறனாய்வு நூலுக்கு சாகித்ய அகாடமி விருது கிடைத்தது. இவரைப் பற்றி ‘க.நா.சு.வின் இலக்கிய வட்டம்’ உள்ளிட்ட நூல்கள் வெளிவந்தன. இவரது நூல்களை தமிழக அரசு 2006-ம் ஆண்டு நாட்டுடைமையாக்கியது.

இறுதி மூச்சுவரை முழு நேர எழுத்தாளராகவே செயல்பட்டவர். தற்காலத் தமிழ் இலக்கியத்தின் வளமான பரப்பை வடிவமைத்தவர்களில் முதன்மையானவராக விளங்கினார். வாசகர்களாலும் இலக்கிய வட்டாரத்திலும் ‘க.நா.சு’ என அன்போடு அழைக்கப்பட்ட க.நா.சுப்ரமணியம் 76-வது வயதில் (1988) மறைந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp
FbMessenger
URL has been copied successfully!