இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜனவரி 17)
புனித வனத்து அந்தோனியார் நாள்
எகிப்து நாட்டைச் சார்ந்த இத் தவமுனிவரே கிறிஸ்தவ துறவு வாழ்வுக்கு வித்திட்டவர். பேற்றோரை இழந்த நிலையில் இவர் 18 வயதில் தேவ அழைத்தலை உணர்ந்தார். இவருக்கு உரிமைச் சொத்தாக இருந்த ஒரு தோட்டத்தையும் துறந்து விட்டு இயேசுவைப் பின் செல்ல உதவியாக இருந்தது என்ன தெரியுமா? இயேசுவின் திருத்தூதர்கள் அனைத்தையும் துறந்தபின், அவரைப் பின் சென்றார்கள் என்ற சொற்களே (மத் 19, 21). தம் சகோதரிக்கு மட்டும் ஒரு சிறு தொகையைக் கொடுத்து விட்டு எஞ்சியதை ஏழைகளுக்கு ஈந்தார். பின் துறவற வாழ்வை மேற்கொண்டார். தம் ஊருக்கு அருகிலேயே கடும் உழைப்பு, மறைநூலை ஊன்றிப்படித்தல், செபம் ஆகியவற்றில் நாள் தோறும் நேரத்தைச் செலவிட்டார். நாளடைவில் ஊரைவிட்டு மிகத் தொலைவில் உள்ள இடத்தைச் தேடிச் சென்றார். அங்கு புனித அத்தனாசியாரின் நண்பரானார். நாளடைவில் பலரும் இவரை அணுகவே ஆங்காங்கே குழுக்களாக துறவு வாழ்வு மேற்கொண்டனர். அவ்வவ்ப்போது அலெக்சாண்டிரியா நகருக்குச் சென்று அங்கு வேதகலகத்தில் சாவை எதிர்நோக்கி வாழ்ந்த மறைசாட்சிகளை விசுவாச சத்தியத்தில் உறுதிப்படுத்தினார். புனித அத்தனாசியார் இவரது துறவு வாழ்வைப் பற்றி விரிவாக எழுதியுள்ளார். இந்த குறிப்புக்களின் பயனாகப் பலரும் பாலை நிலத்திற்கும் காடுகளுக்கும் சென்று வாழ்நாளெல்லாம் தப செப வாழ்வு வாழ்ந்து இறைவனடி சென்றனர். இவ்வுலக வாழ்வு எத்துணை மின்னல் வேகத்தில் தோன்றி மறைகிறது. ஆனால் நித்தியம் நிலையான பேரின்பம் என்பது எத்துணை மேலானது என்று தியானிப்பது நிறையப் பலன் தருகிறது என்று இவர் கொடுத்து வந்த மறையுரை புனித அகுஸ்தீனாரை மிகவும் கவர்த்திழுத்தது. இதை அகஸ்டின் தமது சரிதையில் குறிப்பிடுகிறார். இவர் தமது 105வது வயதில் செங்கடலுக்கருகில் கி.பி 356 ஆம் ஆண்டு கோல்சீம் குன்றில் இறைவனடி சேர்ந்தார்.
நீதியரசர் மு.மு.இஸ்மாயில் காலமான நாளின்று!
மு.மு. இஸ்மாயில் அவர்கள் மத ஒற்றுமைக்கு சான்றாக விளங்கி சமூக நீதியை நிலைநாட்டியுள்ளார். பல்வேறு வழக்குகளில் நடுநிலைமை உடன் தீர்ப்பளித்தார் இந்த மாமனிதர். 8.2.1921 அன்று நாகூரில் பிறந்த இஸ்மாயில்.சென்னை மாநில கல்லூரியில் கணிதம் பயின்ற பின்பு சென்னை சட்டக் கல்லூரியில் சட்டக் கல்வியை 1945 ஆம் ஆண்டு முடித்தார். வழக்கறிஞராக தம் சேவையை தொடர்ந்தவர் 1967 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் டெல்லி ஐகோர்ட்கூடுதல் நீதிபதியாக (additional judge) நியமிக்கப்பட்டார்.1967 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சென்னைக்கு மாற்றப்பட்டார். இவரது நேர்மை மற்றும் நடுநிலைமை ஆகிய பண்புகளால் பல வழக்குகளில் சிறந்த தீர்ப்பை வழங்கி உள்ளார். 6.11.1979 ஆம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார். தேங்கி இருந்த பல வழக்குகளை விரைந்து முடித்தார். கூடவே”தாமதிக்கப்படும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமம்’ என்பதை உணர்ந்த இவர் வழக்குகளை விரைவில் முடிக்குமாறு வழக்குரைஞர்களுக்கு உத்தரவிட்டார். 1980 ஆம் ஆண்டு தமிழகத்தின் கவர்னராக இருந்த பிரபுதாஸ் பட்வாரி பதவி விலகினார். எனவே 22.10.1980 முதல் 4.11.1980 வரை திரு.இஸ்மாயில் தமிழகத்தின் பொறுப்பு கவர்னராக நியமிக்கப்பட்டார். ஒரு தீவிர இஸ்லாமியராக இருந்த போதும் பிற மதங்களை நேசித்தார். அனைவரையும் சமமாக நடத்தினார். சட்டம் தவிர தமிழ் இலக்கியத்தின் மீது ஆழ்ந்த பற்று உடையவராக விளங்கினார். அதிலும் கம்ப இராமாயணத்தை முழுவதும் கற்று அறிந்தார். இந்துக்கள் கூட இந்த இலக்கியத்தை இவர் அளவு ஆழ்ந்து வாசித்திருப்பார்களா என்றால் அது சந்தேகமே! இஸ்லாமியராய் இருந்து கொண்டு கம்ப ராமாயணத்தை வாசிப்பது முறையா? என்ற கேள்வி எழுந்த போது “கம்ப இராமாயணத்தின் இலக்கிய நறுஞ்சுவைக்காக படித்தேன்!எல்லா மதத்தை சேர்ந்த மக்களும் கம்ப ராமாயணத்தை படிக்க வேண்டும்!’ என்று கூறினார்.கம்பன் கண்ட ராமன், கம்பன் கண்ட சமரசம், செவிநுகர் கனிகள், வள்ளலின் வள்ளல், மும்மடங்கு பொலிந்தன, பழைய மன்றாடி என அடுத்தடுத்து பழந்தமிழ் ஆய்வு நூல்களை எழுதினார் இஸ்மாயில். வாலிவதை பற்றிய இவரது “மூன்று வினாக்கள்’ என்ற நூலுக்காக பொன்னாடை அணிவித்து, பாராட்டினார் காஞ்சி மகாபெரியவர் பரமாச்சாரியார். இயல் செல்வம், சேவா ரத்தினம், இராம ரத்தினம் முதலிய பட்டங்களை பெற்ற இஸ்மாயில், கம்பன் கழக நிறுவனர்களுள் ஒருவர். கம்பராமாயண மூல நூலை, முழுமையான கையடக்க ஆராய்ச்சிப் பதிப்பாகப் பதிப்பித்தார் இஸ்மாயில். 1981 ஆம் ஆண்டு இவர் கேரளா ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆக மாற்றம் செய்யப்பட்டார். பல்வேறு வழக்குகள் தீர்ப்பு வேண்டி நிலுவையில் இருந்த சமயத்தில்,இந்த பணிமாற்றம் அவருக்கு மிகுந்த வேதனையை அளித்தது. எனவே 8.7.1981 அன்று தனது பதவியை ராஜிநாமா செய்தார். தமிழகத்தில் பல்வேறு முக்கிய தீர்ப்புகளில் இவரது பங்களிப்பு இருந்து உள்ளது. இம்மாமனிதர் தனது 84 ஆவது வயதில் உடல்நலக் குறைவால் இதே17.1.(2005) அன்று சென்னையில் காலமானார்.
தமிழகத்தின் முதல் பெண் நாகஸ்வர வித்வான் மதுரை எம்.எஸ்.பொன்னுத்தாயி காலமான நாள்
மதுரை சித்திரைத் திருவிழா தசாவதார நிகழ்ச்சியில் 9 வயதில் பொன்னுத்தாயின் அரங்கேற்றம். ‘நாத கான அரசி’ பட்டம் பெற்றவர் இந்த பொன்னுத்தாயி, எண்ண முடியாத பட்டங்கள். 23 தங்கப் பதக்கங்களை வாங்கிக் குவித்தவர். ஜனாதிபதி, பிரதமர், தமிழக முதலமைச்சர்கள் உள்ளிட்ட பெருந்தலைகளால் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டவர். மதுரை காந்தி மியூஸியம் திறப்பு விழாவுக்கு பிரதமர் நேரு வந்தபோதும் இவரது கச்சேரிதான். அப்போதெல்லாம் மதுரைக்குச் சினிமா இசைக் கலைஞர்கள் யார் வந்தாலும் இவர் வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிடுவது வழக்கம். காங்கிரஸ் கட்சியின் ஜில்லா போர்டு தலைவராகவும் எம்.எல்.சி-யாகவும் இருந்தவர். மதுரை முனிசிபாலிட்டி சேர்மன், மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் பதவிகளையும் அலங்கரித்தவர். எம்.எஸ்.விஸ்வநாதன் கல்யாணத்துல நாகஸ்வரம் வாசித்தவரிவர். நாகஸ்வரக் கலைஞர்கள் சங்கத் தலைவராக இருந்த போது, சக கலைஞர்களுக்கு எல்லாம் வீட்டுமனை வாங்கிக் கொடுத்தார், தனக்கு வந்த மனையை வேண்டாம் என்று திருப்பிக் கொடுத்து விட்டார். கடைசியா, அரசாங்கம் குடுத்த 1,000 ரூபாய் பென்ஷனைத் தவிர, எந்தச் சலுகையையும் அவங்க அனுபவிக்கலை” மொத்தத்தில் சாகும் தருவாயில் தனக்கென சொந்தமாக வைத்திருந்தது ஒரே ஒரு பொடி டப்பா மட்டுமே… அதுவும் வெற்று டப்பாக இருந்தது என்பதுதான் சோகம். அப்பேர்பட்ட நாகஸ்வர அம்மணி பொன்னுத்தாயிக்கு அஞ்சலி.
மேற்கு வங்கத்தின் முன்னாள் முதல்வர் ஜோதி பாசு நினைவு நாள்
இளம் வயதிலேயே கம்யூனிசத்தை தழுவிக் கொண்டவர் ஜோதிபாசு. இறுதி வரை தூய்மையான மார்க்சிஸ்ட்டாக விளங்கியவர். லண்டனில் பாரிஸ்டர் பட்டம் பெற்ற பின்னர் இந்தியாவுக்கு வந்து கம்யூனிஸ்ட் இயக்கத்தில் புகுந்தவர் ஜோதிபாசு. அன்று முதல் மேற்கு வங்க முதல்வர் பதவியிலிருந்து விலகும் வரை அசைக்க முடியாத தலைவராக, இரும்பு மனிதராக கோலோச்சியவர் பாசு. இந்தியாவின் வலிமை வாய்ந்த, கவர்ச்சிகரமான ஒரு அரசியல் தலைவராக திகழ்ந்த பெருமைக்குரியவர் ஜோதிபாசு. கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகள் இந்திய அரசியல் அரங்கை வியாபித்திருந்த மாபெரும் தலைவர் ஜோதிபாசு. அரசியல் கரைகளையும் தாண்டி அனைத்துத் தரப்பினராலும் மதிக்கப்பட்டவர் ஜோதிபாசு என்பது அவருக்கு மிகப் பெரிய பெருமையாகும். மேற்கு வங்கத்தின் முதல்வராக முதல் முறையாக 1977ம் ஆண்டு பதவியேற்ற ஜோதிபாசு, 23 ஆண்டுகள் தொடர்ந்து அந்தப் பதவியில் நீடித்து பெரும் சாதனை படைத்தவர். தூய்மையான கம்யூனிஸவாதியாக இருந்தாலும் கூட மக்களுக்கேற்ற படி திட்டங்களை அமைப்பதிலும், தொழில் வளர்ச்சிக்காகவும், மாநில வளர்ச்சிக்காகவும் வெளிநாட்டு முதலீடுகளையும் ஈர்க்கத் தயங்காதவர். முதல்வர் பதவியில் இருந்தபோது, தனது பதவிக்காலத்தின் கடைசிக் கட்டங்களில் மேற்கு வங்கத்தை நோக்கி பல வெளிநாட்டு நிறுவனங்களை கொண்டு வந்தார். 1996ம் ஆண்டு மத்தியில் இவரைத் தேடி பிரதமர் பதவி வந்தது. ஆனால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கையால் அந்தப் பதவியை ஏற்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார் ஜோதிபாசு. ஜோதிபாசு பிரதமராகப் பதவியேற்றிருந்தால் இந்தியாவின் நிலை வெகுவாக மாறியிருக்கும். பிரதமர் என்பவர் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்திருப்பார் என்று இப்போதும் கூறுவோர் உண்டு.
படைப்பிலக்கியவாதி கரிச்சான் குஞ்சு நினைவு தினம்.
ஆர். நாராயணசாமி என்ற இயற்பெயர் கொண்ட கரிச்சான் குஞ்சு (சூலை 10, 1919 -ஜனவரி 17,1992) ஒரு தமிழ் எழுத்தாளர். தமிழ் மரபுக்கேற்ப புனைகதைகளை எழுதாமல் வடமொழி சார்ந்த தத்துவ விசாரணையில் ஈடுபடும் எழுத்துத் திறனைக் கொண்டிருந்தவர் கரிச்சான் குஞ்சு. இவர் சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களில் தம் திறனை வெளிப்படுத்தியவர். 1919-ஆம் ஆண்டு ஜூலை 10-ஆம் தேதி, தஞ்சை மாவட்டம் நன்னிலம் வட்டத்தைச் சேர்ந்த சேதனீபுரத்தில் பிறந்தவர். இவருடைய தந்தை இராமாமிருத சாஸ்திரி, தாய் ஈஸ்வரியம்மாள். கரிச்சான் குஞ்சு இளமையிலேயே தந்தையை இழந்தவர். வறுமை நிறைந்த குடும்பம். இராஜலட்சுமி, ருக்மணி, நாகராஜன், சுந்தரராமன் ஆகியோர் இவருடன் பிறந்தவர்கள். இராஜலட்சுமி மட்டும் இவருக்கு மூத்தவர். 8 வயது முதல் 15 வயதுவரை இவர் (பெங்களுரில்) வடமொழியும் வேதமும் பயின்றார். பின்னர் மதுரை, ராமேஸ்வரம் தேவஸ்தான பாடசாலையில் 17 வயது முதல் 22 வயதுவரை தமிழும் வடமொழியும் கற்று “வித்வான் சிரோமணி’ ஆனார். கு.ப.ரா., புதுமைப்பித்தன், மெüனி, நா.பிச்சமூர்த்தி போன்றோரின் எழுத்துகளை மணிக்கொடியில் பார்த்த கரிச்சான் குஞ்சு, அவர்களைப் போலத் தாமும் எழுத வேண்டுமென ஆசைப்பட்டார். 1940-இல் “ஏகாந்தி’ என்ற புனைபெயரில் இவரது முதல் சிறுகதையான “மலர்ச்சி’ கலைமகள் இதழில் வெளிவந்தது. கரிச்சான் குஞ்சு, கு.ப.ரா.வோடு நெருங்கிப் பழகியவர். அவரது புனைவுகளால் ஈர்க்கப்பட்டவர். கு.ப.ரா., “கரிச்சான்’ என்ற புனைபெயரில் கட்டுரைகள் எழுதினார். கு.ப.ரா., மீது கொண்ட அன்பினால், தம் பெயரை “கரிச்சான் குஞ்சு’ என்று மாற்றிக்கொண்டார். கரிச்சான் குஞ்சு, 1940-43 வரை சென்னை இராமகிருஷ்ணா பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். 1943-45 வரை கும்பகோணம் நேட்டிவ் பள்ளியிலும் 1945-47 வரை தஞ்சை மாவட்டம் விஷ்ணுபுரம் உயர்நிலைப் பள்ளியிலும் பணியாற்றியுள்ளார். இறுதியாக, 1948-77 வரை மன்னார்குடி தேசிய உயர்நிலைப் பள்ளியில் பணியாற்றி ஓய்வுபெற்றார். சென்னையில் இருக்கும்போது தி.ஜா.வும் இவரும் ஒன்றாகத் தங்கியிருந்தனர். தி.ஜா. இவருக்கு தூரத்து உறவினர். கரிச்சான் குஞ்சுவுக்கு 19-வது வயதில் திருமணம் நடைபெற்றது. மனைவி பெயர் வாலாம்பாள். தீராத நோயின் காரணமாக மனைவி இறந்துவிட, தி.ஜா.வின் வற்புறுத்தல் காரணமாக சாரதா என்பவரை மறுமணம் செய்து கொண்டார். அப்போது இவருக்கு 28 வயது; சாரதாவுக்கு 17 வயது. இவர்களுக்கு நான்கு பெண் குழந்தைகள். கரிச்சான் குஞ்சு அடிப்படையில் ஆங்கிலக் கல்வியைக் கற்கவில்லை என்றாலும், ஆங்கிலம், இந்தி, வடமொழி, தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் புலமை பெற்றவர். இசையில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். கரிச்சான் குஞ்சு, எம்.வி.வெங்கட்ராம், தி.ஜா., தஞ்சாவூரைச் சேர்ந்த சுவாமிநாத ஆத்ரேயன் ஆகிய நால்வரும் கு.ப.ரா.வின் எழுத்துகளால் கவரப்பட்டு கதை எழுதத் தொடங்கியவர்கள். எப்பொழுதும் கு.ப.ரா.வுடனேயே இருப்பார்கள். திருச்சியில் கவிஞர் திருலோகசீதாராம் நடத்திய “சிவாஜி’ இதழில் கரிச்சான் குஞ்சு தொடர்ந்து கதை, கவிதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றை எழுதினார். தவிர, “கலாமோகினி’ இதழிலும் இவரது படைப்புகள் பிரசுரமாயின. காதல் கல்பம், குபேர தரிசனம், வம்ச ரத்தினம், தெய்வீகம், அன்றிரவே, கரிச்சான் குஞ்சு கதைகள், சுகவாசிகள், தெளிவு, கழுகு, ஒரு மாதிரியான கூட்டம், அம்மா இட்ட கட்டளை ஆகியவை இவரின் சிறுகதைத் தொகுப்புகள். இவைதவிர, “பசித்த மானிடம்’ என்ற நாவலையும் எழுதியுள்ளார். இந் நாவல்தான் இவரை புகழின் உச்சிக்குக் கொண்டு சென்றது. “சங்கரர்’, “கு.ப.ரா.’, “பாரதி தேடியதும் கண்டதும்’ என்னும் மூன்று வரலாற்று நூல்களையும் படைத்துள்ளார். ஆனந்த வர்த்தனன் மற்றும் தேவி பிரசாத் சட்டோபாத்யாவின் நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். 160க்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளார். “சுகவாசிகள்’ என்னும் இவரது குறுநாவல் “மனிதர்கள்’ என்ற பெயரில் தொலைக்காட்சித் தொடராக வெளிவந்தது. சாகித்திய அகாதெமி, “இந்திய இலக்கியச் சிற்பிகள்’ வரிசையில் இவருக்கும் இடமளித்து பெருமை சேர்த்துள்ளது. “தன்னையே அழித்துக்கொள்ளும் அடக்கம் மிகுந்தவர்’ என்று நண்பர்களால் பாராட்டப்பட்ட கரிச்சான் குஞ்சு, 1992-ஆம் ஆண்டு, இதே ஜனவரி 17-ஆம் தேதி காலமானார்.
இந்தியாவில் அப்போதைய மொரார்ஜி தேசாய் தலைமையிலான ஜனதா கட்சி கூட்டணி அரசு, ஜனவரி 16-ல் அவசரச் சட்டம் மூலம் அதற்கு மறுநாள் முதல் ஆயிரம், ஐந்தாயிரம் மற்றும் பத்தாயிரம் ரூபாய் நோட்டுக்களை விலக்கிக் கொள்ளும் முடிவை அறிவித்தது. அவ்வாறு அறிவுக்கு முன்னர் ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெற்றது. முறைப்படி ரிசர்வ் வங்கி மூலமே இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. கறுப்புப் பணத்தை ஒழிப்பதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கம் என்று கூறப்பட்டது. என்றாலும் அந்த நோக்கத்தில் குறிப்பிடும்படியான வெற்றி எதுவும் எட்டப்படவில்லை. அதே சமயம் அப்போதைய கால கட்டத்தில் அந்த உயர் மதிப்பு நோட்டுக்கள் பாமர மக்கள் பயன்பாட்டில் இல்லாதிருந்தவை என்பதால் மோடி ஆட்சியில் உண்டானது போல பொது மக்கள் யாரும் எந்தவித அவஸ்தைக்கும் உள்ளாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
எம்_ஜி_ஆர் பிறந்த தினமின்று
இலங்கையில் உள்ள கண்டியில் பிறந்தாலும் எம்.ஜி.ஆர், இலங்கையைச் சேர்ந்தவர் அல்ல; அவரது தந்தை கோபாலமேனனின் (மேனன் அல்ல; மேன்மைக்குரியவர் என்ற அர்த்தத்தில் அழைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.) பூர்வீகம் கோவை அடுத்த காங்கேயம் எனச் சொல்லப்படுகிறது. அங்கு மன்றாடியார் வகுப்பைச் சேர்ந்தவர் என பின்னாளில் எம்.ஜி.ஆர் பிறப்பு குறித்து ஆய்ந்து எழுதப்பட்ட ’செந்தமிழ்வேளிர் எம்.ஜி.ஆர்’ என்ற நூலில் கூறப்பட்டுள்ளது. நீதித்துறையில் மாஜிஸ்திரேட்டாக பணியாற்றிய கோபாலன் கேரளாவைச் சேர்ந்த வடவனுரில் பணிநிமித்தமாக நீண்ட காலம் வசித்தார். அப்போதுதான் மருதூரைச் சேர்ந்த சத்யபாமாவைச் சந்தித்திருக்கிறார். இருவருக்குள்ளும் காதல் உருவாகி திருமணம் செய்துகொண்டதாகச் சொல்லப்படுகிறது. அந்தத் திருமணத்தில் சத்யபாமா குடும்பத்தினருக்கு விருப்பம் இல்லாத நிலையில், தனியே வசித்தார்கள் தம்பதியினர். தொடர்ந்து பணி நிமித்தமாக சத்யபாமா குடும்பம் அரூர் கரூர், திருச்சூர் மற்றும் கேரளாவின் பாலக்காடு உள்ளிட்ட இடங்களில் வசித்திருக்கிறது. எம்.ஜி.ஆர் கோபாலன் நேர்மையான மனிதர்; மனிதநேயம் கொண்டவர்; எதற்காகவும் தன் பணியில் சமரசம் செய்துகொள்ளாதவர் என பெயரெடுத்தவர். இறைநம்பிக்கையில் அதீத பற்றுக் கொண்ட அவர், தீவிர விஷ்ணு பக்தர். பக்தர் என்றால் சாதாரண பக்தர் அல்ல; புராண காலத்தைப்போன்று இறைவன் மேல் தீராத காதல்கொண்டவர். வைணவத்தின் மீது வெறித்தனமாக பக்தி கொண்டிருந்தவர். தன் பிள்ளைகளில் ஒருவர் சக்கரபாணி பிறந்தபோது அவர் கேரளாவில் உள்ள நீதிமன்றத்தில் பணியாற்றிவந்தார். அவர் வசித்த இடத்தின் அருகே சிவன் கோயில்தான் புகழ்பெற்றிருந்தது. அதனால் சத்யபாமா, குழந்தைக்கு அந்தக் கோயிலில் முறையான வழிபாடு நடத்தி, நீலகண்டன் என பெயர் சூட்டி மகிழ்ந்தார்; கொதித்துப்போனார் கோபால மேனன். சில மாதங்கள்வரை மனைவி பிள்ளைகளுடன் அவர் பேசவில்லை. அடுத்த சில மாதங்களில் மற்றோர் இடத்துக்கு மாற்றலாகிய போது முதல்வேலையாக அங்குள்ள விஷ்ணு கோயில் ஒன்றுக்கு பிள்ளையை அழைத்துச்சென்று நீலகண்டன் என்ற பெயரை சக்கரபாணி என மாற்றினாராம். கூடவே,’’ இனி அந்தப் பெயரில்தான் யாரும் அழைக்கவேண்டும்’’ என கறார் உத்தரவும் போட்டாராம். அப்படி ஒரு விந்தை மனிதர் அவர். 1914-ல், தான் தீர்ப்பு வழங்கிய ஒரு வழக்கில்… அவரது தன்மானத்தை உரசிப்பார்க்கும் ஒரு சம்பவம் நடந்தது. தன்னை விட்டுக்கொடுக்க விரும்பாத கோபால மேனன், தன் பணியை விட்டுக்கொடுத்தார். பணியை ராஜினாமா செய்தார். மாத வருவாயில் இருந்தவரை குடும்பம் வசதியான வாழ்க்கை வாழ முடிந்தது. இப்போது வறுமை, குடும்பத்தைச் சூழ்ந்து கொண்டது. கோபால மேனனுக்கு அப்போது 4 பிள்ளைகள். இவர்களில் கோபாலனின் முதல் தாரத்து பிள்ளைகளும் அடக்கம். குடும்ப வறுமையைப் போக்க வேலை தேடி இலங்கை அடுத்த கண்டிக்கு இடம்பெயர்ந்தது கோபால மேனன் குடும்பம். அங்கு கல்லூரி ஒன்றில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். அப்படி கண்டியில் வசித்தபோது 1917-ம் ஆண்டு ஜனவரி 17-ம் தேதி வானத்தை எந்தக் கருமேகங்களும் சூழவில்லை; தேவதூதன் பிறக்கப்போவதாக எந்த அசரீரி குரலும் மக்களுக்குக் கேட்கவில்லை; அசாதாரண சூழல் அங்கு எங்கும் தென்படவில்லை. ஆனால் அப்துல்கலாம் குறிப்பிட்ட அந்தச் ‘சம்பவம்’ நிகழ்ந்தது. ஆம்…அன்றிரவு அந்தக் குடும்பத்தின் 5-வது குழந்தையை சத்யபாமா பெற்றெடுத்தார். குழந்தைக்கு ராம்சந்தர் என பெயர் சூட்டப்பட்டது. அவர்தான் எம் ஜி ஆர்.