இன்றைய முக்கிய நிகழ்வுகள் (ஜனவரி 16)
சரத் சந்திர சட்டோபாத்தியாய நினைவு நாளின்று
புகழ்பெற்ற வங்கப் படைப்பாளிகளுள் ஒருவரும் தலைசிறந்த வங்க மொழி அறிஞர் சரத் சந்திர சட்டோபாத்தியாய (Sarat Chandra Chattopadhyay) * வெஸ்ட் பெங்கால் ஹூக்ளி யில் தேபநந்புரம் என்ற சிறு கிராமத்தில் பிறந்தார் (1876). மிக வும் துணிச்சலான, சாகசத்தை விரும்பும் சிறுவனாக இருந்தார். பல பாடசாலைகளில் பயின்றார். சமஸ்கிருதமும் பயின்றார். ஏராளமாக வாசித்தார். தன்னை ரவீந்திரநாத் தாகூரின் சீடராகவே கருதிக்கொண்டார். குடும்பத்தின் பொருளாதார நிலை காரணமாகப் பள்ளிப் படிப்புக்குப் பின்னர் கல்லூரியில் சேர முடியவில்லை. பின்னர் தன் நண்பர்களுடன் இணைந்து நாடகங்களில் நடித்தார். இந்த சந்தர்ப்பத்தில்தான் இவரது புகழ்பெற்ற பல நாவல்களும் கதைகளும் வெளிவந்தன. 1903-ல் பர்மா சென்றவர், ரங்கூனில் அரசு குமாஸ்தாவாகப் பணியாற்றினார். பின்னர் பர்மா ரயில்வேயில் கணக்கராகத் தற்காலிகமாக வேலை பார்த்தார். அங்கே 13 ஆண்டுகள் வேலை செய்தார். 1916-ல் ஹவுரா திரும்பினார். பல்வேறு இதழ்களில் தொடர்ந்து கதைகள் எழுதினார். அனிலா தேவி, அனுபமா என்னும் பெயர்களிலும் தன் சொந்தப் பெயரி லும் எழுதிவந்தார். 1921, 1936 ஆண்டுகளில் ஹவுரா மாவட்டத்தின் காங்கிரஸ் தலைவராகச் செயல்பட்டார். அப்போது நடைபெற்றுவந்த சுதந்திரப் போராட்ட இயக்கம் குறித்தும் தனது படைப்புகளில் எழுதினார்.. இவரது பெரும்பாலான படைப்புகளில் மக்களின் வாழ்க்கைபாணி, சோகம், கிராம மக்களின் வாழ்க்கைப் போராட்டம், அந்த சந்தர்ப்பத்தில் நிலவிய சமூகப் பழக்க வழக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இருந்தன. எளிய, ஆனால் வலுவான கதாபாத்திரங்கள் மூலம் தனது கருத்துகளை, சிந்தனைகளை வெளிப்படுத்தினார்.
‘பால்ய ஸ்மிருதி’, ‘பிலாஷி’, ‘காஷிநாத்’, ‘ஹரிலக்ஷ்மி’, ‘பரிணீதா’, ‘பிராஜ் பாபு’, ‘ஸ்வாமி’ உள்ளிட்ட சிறுகதைகள், ‘தேவதாஸ்’, ‘நிஷ்க்ரிதி’, ‘பதேர் தபி’, ‘சேஷ் பிரஷ்ன’, ‘பிப்ரதாஸ்’, ‘பிராஜ்போவு’, ‘சந்திரநாத்’, ‘ஸ்ரீகாந்தா’ உள்ளிட்ட நாவல்கள் வங்க இலக்கியத்தை வளம்பெறச் செய்ததோடு இவற்றில் பெரும்பாலானவை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டன. சக இலக்கியவாதிகளால் போற்றப்பட்ட இணையற்ற படைப்பாளியாக விளங்கினார். இந்தியா முழுவதிலும் இருந்த இலக்கியவாதிகள் இவரது படைப்புகளை வங்க மொழியிலும் மொழிபெயர்ப்பிலும் ஆர்வத்துடன் வாசித்தனர். ‘பிஜோயா’, ‘ராமா’, ‘ஷோரோஷி’ ஆகிய மூன்று படைப்புகளை இவரே நாடக வடிவில் மீண்டும் எழுதினார். ‘நாரீர் முல்யா’, ‘ஸ்வதேஷ் ஓ சாஹித்ய’, ‘தருணெர் பித்ரோஹோ’ ஆகியவை இவரது கட்டுரை நூல்கள்.
ஏறக்குறைய 50 படைப்புகள் திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள், நாடகங்களாகத் தயாரிக்கப்பட்டன. ‘தேவதாஸ்’ என்னும் கதை கடந்த 70 ஆண்டுகளில் பல மொழிகளில் பல வடிவங்களில் பலமுறை திரைப்படங்களாக எடுக்கப்பட்டது. இவற்றில் பெரும்பாலான படங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை. காலத்தால் அழியாத இந்தக் காவியக் காதலை எழுதியபோது இவருக்கு வயது 17.
‘மந்திர்’ என்ற நாவலுக்காக 1904-ம் ஆண்டு குண்டலின் புரஸ்கார் விருதைப் வென்றார். டாக்கா பல்கலைக்கழகம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
20-ம் நூற்றாண்டின் மகத்தான படைப்பாளிகளுள் ஒருவராகப் போற்றப்பட்ட சரத் சந்திர சட்டோபாத்தியாய 1938-ம் ஆண்டு, இதே ஜனவரி 15-ம் தேதி மறைந்தார்.
கர்னல் கிட்டு மறைந்த நாள் இன்று
“ஒரு சுதந்திரவீரனுக்குரிய அனைத்துச் சிறப்பியல்புகளும் அவனிடமிருந்தன.. அதனால் அவன் ஒரு அற்புதமான இலட்சியவாதியாக வாழ்ந்தான். போராடினான்” “போர்க்களத்தில் வீரனாகவும், பொதுமக்களின் தோழனாகவும் எங்கும் எல்லாவற்றிலும் எல்லோரிடமும் அவனது ஆளுமையின் வீச்சு நிறைந்திருந்தது” “கிட்டு ஒரு தனிமனித சரித்திரம்.” “நீண்ட ஓய்வில்லாதபுயலாக வீசும் எமது விடுதலை வரலாற்றில் ஒரு காலத்தின் பதிவு அவன்” “நான் கிட்டுவை ஆழமாக நேசித்தேன். தம்பியாக, தளபதியாக நான் அவனை நேசித்தேன்.” “எனது சுமைகளை தாங்கும் இலட்சியதோழனாக நான் அவனை நேசித்தேன். இது சாதாரண மனித பாசத்துக்குஅப்பாற்பட்டது” “அதுவும் ஆன்மாவை உலுப்பிவிடும் ஒரு உணர்வுப்பூகம்பத்தை மனிதமொழியில் விபரிக்கமுடியாது” “அவனது மறைவு எனது ஆன்மாவை பிழிந்தஒரு சோகநிகழ்வு. அதனை சொற்களால் வார்த்துவிட முடியாது” 1993ம் ஆண்டு ஜனவரி 16ம்நாள் வங்கக்கடலில் கிட்டு வீரகாவியமானபோது தேசிய தலைவரால் விடுக்கப்பட்ட செய்தியில் இருந்த மிக முக்கியமான வாக்கியங்கள்தான் மேலே உள்ளவை. தேசிய தலைவர் சொல்லி இருப்பதுபோல கிட்டுவின் வரலாறு என்பது சொற்களால் வார்த்து முழுமையாக வெளிக்காட்டிவிட கூடியது அல்ல.
1761ஆம் ஆண்டு இதே நாளில் தான் பாண்டிச்சேரியை பிரான்சிடம் இருந்து பிரிட்டிஷார் கைப்பற்றிய நாள்
பிரஞ்சு அரசாங்கம் நிர்வாக வசதிக்காக மிகச் சிறிய ராணுவத்தையே பாண்டிச்சேரியில் நிறுத்தியிருந்தது. அதை தெரிந்து கொண்டு நான்கு பக்கமும் சுற்றிலுமிருந்த கிழக்கிந்திய கம்பெனியின் மிகப்பெரிய ஆங்கிலேய படைகள் பிரஞ்சு படையை விரட்டியடித்து பாண்டிச்சேரியை தனது அதிகாரத்துக்குள் கொண்டு வந்தது. எனினும் 1763 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கும் பிரான்சுக்கும் பாரிஸ் நகரில் ஏற்பட்ட ஒரு உடன்படிக்கையை தொடர்ந்து ஆங்கிலேய படைகள் 1763 ஆம் ஆண்டு பாண்டிச்சேரியை விட்டு விலகின. அது மீண்டும் பிரான்சின் ஆதிக்கத்துக்குள் வந்தது
27 – ரோமப் பேரரசின் முதல் பேரரசரான அகஸ்டஸ் சீசர் என்று அறியப்படும், கையஸ் ஆக்டேவியஸ் துரினசுக்கு அகஸ்டஸ் என்ற பட்டம் மூன்றாம் பெயராக, ரோமின் செனட் அவையால் சூட்டப்பட்ட நாள்
இந்த நிகழ்வே, ரோமப் பேரரசின் தொடக்கமாகும். இத்தாலியிலுள்ள தற்காலத்திய ரோம் நகர்ப் பகுதியில் 14 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, மனிதர்கள் வசித்தற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. ரோம் நகர் நிர்மாணிக்கப்பட்ட கி.மு.753, ரோம முடியரசின் தொடக்கமாகக் குறிப்பிடப்படுகிறது. கி.மு.509இல் ஏற்பட்ட அரசியல் புரட்சிக்குப்பின், ரோம் செனட்டால் நிர்வகிக்கப்பட்ட குடியரசாக மாறியதுடன், பேரரசரே இல்லாத பேரரசாக மிகப்பெரிய வளர்ச்சியைக் கண்டது. செனட் என்பது தற்கால அவைகளைப் போன்றதல்ல. ஒவ்வொரு நகரமும் ஓரளவுக்கும் தன்னாட்சிப் பெற்றதாக, படைத் தளபதிகளால் நிர்வகிக்கப்பட்டு, அந்த நகர நிர்வாகங்களின் ஒருங்கிணைப்புக்குழுவாக செனட் செயல்பட்டது. இந்த அரசு, இத்தாலியத் தீபகற்பத்திற்கும் வெளியேயும் பரவிய நிலையில், கி.மு.2ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், பல உள்நாட்டுக் குழப்பங்களைச் சந்தித்தது. கி.மு.59இல் குடியரசின் கான்சலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜூலியஸ் சீசர், இவற்றை திறமையாகக் கட்டுப்படுத்தியதுடன், கி.மு.49இல் சர்வாதிகாரியாகவும் ஆனார். கி.மு.44இல் இவர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்பட்ட உள்நாட்டுப் போர்களில் வென்ற, சீசரால் வாரிசாக அறிவிக்கப்பட்டிருந்த, அவர் உறவினரான கையஸ் ஆக்டேவியஸ், கான்சல் ஆனார். தான் சர்வாதிகாரியாகவோ, முடியரசராகவோ ஆவதாக மற்றவர்கள் உணராதவண்ணம், குடியரசின் நடைமுறைகளின்படியே, படிப்படியாக நாட்டைப் பிரின்சிபேட் என்ற முடியரசாகவும், தன்னை அதன் முதல் பிரின்சிபஸ் என்ற அரசராகவும் அறிவிக்கச் செய்தார். அதற்காக அவர் தேர்ந்தெடுத்த பட்டமே அகஸ்டஸ். இயற்பெயரான ப்ரிநோமென் (முதற்பெயர்), மரபு, குடும்பம் ஆகியவற்றைக் குறிக்கும் நோமென் (இரண்டாம் பெயர்), தகுதி, பட்டம் முதலானவற்றைக் குறிக்கும் காக்னோமென் (மூன்றாம் பெயர்) ஆகியவை இடம்பெறும் ரோமானியர்களின் பெயரிடும் முறையில், இவரது காக்னோமென்-ஆக, அகஸ்டஸ் சேர்க்கப்பட்டு, தொடர்ந்து வந்த அரசர்களின் பெயர்களிலும் இடம்பெற்றது.
போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு அதிகாரபூர்வமாக விலகியது.
போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து இலங்கை அரசு அதிகாரபூர்வமாக விலகியது. இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு தனி நாடு கேட்டு விடுதலைப்புலிகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டன. ராணுவத்தை எதிர்த்து ஆயுதம் தாங்கி போரிட்டதால் மனிதப் பேரழிவு ஏற்பட்டது. இந்த அழிவுகளைத் தடுத்து நிறுத்தி, பிரச்சினைக்கு அமைதி வழியில் தீர்வு காண்பதற்காக 2002ம் ஆண்டு ராணுவத்துக்கும், புலிகளுக்குமிடையே போர் நிறுத்த உடன்படிக்கை ஏற்பட்டது. அதன்பின்னரும் இரு தரப்பு வீரர்களும் அவ்வப்போது மோதலில் ஈடுபட்டனர். இதன் விளைவாக 2008ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி இலங்கை அரசு போர் நிறுத்த உடன்படிக்கையில் இருந்து அதிகாரப்பூர்வமாக விலகியது. இதன் காரணமாக, போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தனது பணிகள் அனைத்தையும் நிறுத்தியது. இலங்கை அரசின் இந்த நடவடிக்கை வன்முறையை அதிகரிக்கச் செய்வதுடன், அமைதி வழியிலான தீர்வு காண்பதை மேலும் கடினமாக்கிவிடும் என்று உலக நாடுகளும், ஐ.நா.வும் கவலை தெரிவித்தன. இந்த கருத்து நிரூபணமும் ஆகிவிட்டது. போர் நிறுத்த உடன்படிக்கையை அதிரடியாக வாபஸ் பெற்றதன் விளைவாக 2009ம் ஆண்டு புலிகளின் மீதான உக்கிரமான தாக்குதலை இலங்கை ராணுவம் மேற்கொண்டது. புலிகளின் போர் முகாம்கள் மட்டுமின்றி, தமிழர்கள் தங்கியிருந்த முகாம்கள் மீதும் குண்டுமழை பொழிந்தது ராணுவம். இதனால், அப்பாவி மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்தனர். அதன்பின்னர் போரை முடிவுக்கு கொண்டு வந்த அரசு, புலிகளை முற்றிலும் அழித்துவிட்டதாக அறிவித்தது.