இன்றைய முக்கிய நிகழ்வுகள் (12.01.2025)

 இன்றைய முக்கிய நிகழ்வுகள் (12.01.2025)

அகதா கிறிஸ்டி காலமான நாளின்று

அகதாவுக்கு அப்போ மூனு வயசு. இங்கிலாந்துலே இருக்கற டேவான் (Devon)-ங்கற சிட்டியிலே 1890, செப்டம்பர் 15-ல் பிறந்தாள். அகதாவின் அப்பா, அமெரிக்கர். அம்மா இங்கிலாந்தைச் சேர்ந்தவர். ரெண்டு பேருமே வேலைக்குச் செல்வதால் குட்டிப் பொண்ணு அகதாவை பக்கத்துத் தெருவில் இருக்கும் பாட்டி வீட்டில் விட்டுட்டு போயிடுவாங்க.அங்கே இந்த குட்டிப் பொண்ணு வந்தது அக்கம் பக்கத்தில் இருக்கும் சிறுவர்கள், தினமும் அகதா பாட்டி வூட்டுக்கு வந்து. அவளைச் சுற்றி உட்கார்ந்து கொள்வார்கள். இந்த விஷயத்தை பாட்டி அம்மா கிளாராகிட்டே சொல்லி சலிச்சிக்கிட்டார் . உடனே ‘வீட்டில் என்ன நடக்கிறது… ஏன் அகதாவைச் சுற்றி இம்மாம் கூட்டம்?’ என்று யோசித்த அம்மா, ஒருநா தன்னோட வேலைக்கு லீவு போட்டுட்டு, நடப்பதை ஒளிந்திருந்து பார்க்க முடிவெடுத்தார். அதன் படி ஒரு நா.. பாட்டி வூட்டுலே அகதா வந்தவுடன் சிறிது நேரத்தில் வீட்டில் கூடிய சிறுவர்கள் கூட்டம், குட்டிப் பெண் அகதாவை தோட்டத்துக்கு அழைத்துச்சென்றது. அங்கே பினாடியே சென்று பார்த்தார் அம்மா.அந்த மரத்தடியில் புத்தர் ரேஞ்சுக்கு அகதா உட்கார்ந்து கதை சொல்லிக்கொண்டிருக்க, எல்லோரும் கண் சிமிட்ட மறந்து, கதையைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அந்தக் கதையக் கேட்ட அம்மா முழுக் கதையையும் கேட்டுட்டு நைசா கிளம்பிட்டார். பாட்டி தவிர யாருமே இல்லாத அந்தப் பெரிய வீட்டில், சந்து பொந்து விடாமல் நுழைந்து பல மர்மங்களைக் கண்டுபிடிப்பாள் அகதா. அது பற்றி பாட்டிக்கு கதை கதையாகச் சொல்வாள். பொதுவாக, பாட்டிகள்தான் பேரன் பேத்திகளுக்கு கதை சொல்வார்கள். ஆனால், அகதா விஷயத்தில் அப்படி அல்ல. பேத்தி அகதாவிடம் பாட்டி ஆவலாகக் கதை கேட்பார். அகதாவுக்கு அப்போது வயது நான்கு. இதுக்கிடையிலே அம்மா கிளாரா, அகதாவுக்கும் உடன் பிறந்தவர்கள் மூவருக்கும் வீட்டிலேயே கல்வி அளிக்கத் தீர்மானித்தார். புனித பைபிளை வாசிக்கவும், அது தொடர்பாக எழுதிப் பழகுவதுமே 1890-களில் ஆரம்பக் கல்வி. கணக்குப் போடவும் வீட்டிலேயே கற்பார்கள். அகதா, இவை அனைத்தையும் கதையாகவே புரிந்து கொள்வாள். பைபிள் கதைகளைத் தனது பாணியில் மாற்றி, புதிய கதைகளைச் சொல்லி, அனைவரையும் ஆச்சர்யப் பட வைப்பாள்.அத்தோட பாட்டி வீட்டில் இருந்த புத்தகங்கள் அவளை மிகவும் ஈர்த்தன. ஆறு வயதில், அந்தக் காலத்தின் தலைசிறந்த சிறுவர் கதைகளை வாசித்தாள். மணிக்கணக்கில் புத்தகங்களுடன் காணாமல்போவாள். சாகசக் கதைகள், புதையல் கதைகள், ரயில் சாகசங்கள் எனப் பாட்டி வீட்டில் இருக்கும் புத்தகங்கள் அகதாவுக்குள் நுழைந்தன. படிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், அந்தக் கதைகளில் வருவது போல நாய்கள், பேசும் கிளி, பூனைகளை செல்லப் பிராணிகளாக வளர்த்து, கதையாகவே வாழ்வாள். கதை சொல்றதோட நிக்காம ‘தி வுமன் ஆஃப் கார்டு’ என்கிற கில்பர்ட் மற்றும் சுல்லிகான் எழுதிய கதையை, நண்பர்களோடு நாடகமாக அரங்கேற்றினாள் அகதா. கதாநாயகன் ஃபேர்பாக்ஸ் வேடத்தில் நடித்து, பலரையும் வியப்பில் ஆழ்த்தியபோது அவளது வயது ஜஸ்ட் ஏழுதான். அப்பாலே அகதாவை ஒரு பெண்கள் பள்ளியில் சேர்த்தனர். பள்ளிக்கூடத்தின் கெடுபிடிகள் அகதாவுக்குப் பிடிக்கவில்லை. நோட்டுப் புத்தகங்களில் எழுதுவது பெரிய போராட்டமாக இருந்தது. உடனே அகதாவை ஒரு டிஸ்லெக்ஸியா வகைக் குழந்தை என்று அறிவித்த பள்ளி நிர்வாகம், அவளை வெளியேறச் சொன்னபோது அகதாவின் அம்மா துடித்துப்போனார். அம்மாவை திருப்திப் படுத்த எழுதுவதில் உள்ள பிரச்னையில் இருந்து மூன்று ஆண்டுகள் போராடித் தன்னை மீட்டுக்கொண்ட அகதா, பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரீஸ் நகரின் ‘பேஸ் ஸ்கிரிட்’ பள்ளியில் சேர்ந்து, தனது கல்வியை முடித்தாள். அதற்கு ஒரு வருடத்துக்கு முன்பாகவே, அவளது கதை ஒன்று புத்தமாக வெளிவந்து, சிறுவர் மத்தியில் சக்கைப் போடு போட்டது.ஆனாலும் அகதா கதை சொல்லச் சொல்ல, அதைச் சகோதரி மார்கரெட் எழுதினார். அந்த மர்மக் கதை அச்சேறியபோது அகதாவுக்கு 11 வயது. ‘அகதா கிறிஸ்டி’ என்று பின்னாட்களில் மிகப் பிரபலமானார். ஒவ்வொரு கதையிலும் ஒரு குற்றத்தைத் தோற்றுவிக்கிறார். அந்தக் குற்றத்தை யார் செய்தது என்று நாம் அறிவதற்குப் பல இடங்களில் பல குறிப்புகளைக் கொடுத்துச் செல்வார். ‘இவர்தான் குற்றவாளி’ என்று வாசகர்கள் ஒரு கதாபாத்திரத்தைக் கட்டம்கட்டும்போது, வாசகர்கள் எதிர்பார்க்கவே செய்யாத ஒரு கதாபாத்திரத்தை ‘இவரே குற்றவாளி’ என்று சொல்லி நம் முன் நிறுத்துவார். அந்த ஆச்சரியத்துடன் நாம் மீண்டும் அந்தக் கதையைப் படிக்கும்போது, அவர் தந்து சென்ற குறிப்புகள் எல்லாம் உண்மையில், அந்த உண்மையான குற்றவாளியை நோக்கியே இருப்பது நமக்குப் புரியும். இன்னும் சில கதைகளில் குற்றவாளி இவர்தான் என்று நேரடியாகவே சொல்லிவிடுவார். ஆனால் அவர் அந்தக் குற்றத்தை எப்படிச் செய்தார் எனும் புதிரை அவரே அவிழ்க்கும் வரை நாம் காத்திருக்க வேண்டும். இந்தச் சிறப்புகள் எல்லாம் ஒரு புறமிருக்க, இன்னொரு முக்கியச் சிறப்பம்சம், ஒரு குற்றத்தைச் செய்வதற்கு அவர் படைத்த‌ கதாபாத்திரங்கள் என்ன மாதிரியான ஆயுதத்தைத் தேர்வு செய்கின்றன என்பது. இவரின் பெரும்பாலான கதாபாத்திரங்கள் தேர்வுசெய்தது விஷம்! விஷம் தோய்ந்த அந்தக் கதைகள் மற்றும் அந்தக் கதைகளில் பயன்படுத்தப்பட்டிருக்கும் விஷம் குறித்து நமக்கு அறிமுகம் செய்கிறது ‘ஏ இஸ் ஃபார் ஆர்செனிக்’ எனும் புத்தகம். அகதா கிறிஸ்டியின் ரசிகரும் வேதியியலாளருமான காத்ரின் ஹர்குப் இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார். ப்ளூம்ஸ்பெர்ரி பதிப்பகம் வெளியிட்ட இந்தப் புத்தகம் கடந்த ஆண்டின் இறுதியில் வெளியானது. அகதா தன் கதைகளில் 14 விதமான விஷங்களைப் பயன்படுத்துகிறார். அவர் காலத்தில் சமூகத்தில் புழக்கத்திலிருந்த பெருமளவு விஷ வகைகள், மருத்துவப் பயன்பாட்டுக்கு உதவின. அப்படியான விஷ வகைகள் மற்றும் மருத்துவப் பயன்பாடிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்ட விஷ வகைகள் ஆகியவற்றைக் கொண்டு அவர் தன் நாவல்களைப் படைத்திருந்தார். தன் கதாபாத்திரங்கள் பயன்படுத்தும் விஷம், அது மனித உடலில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து அறிவியல்பூர்வமான விவரங்களைத் தன் கதைகளில் விளக்கமாகச் சொல்லியிருப்பார் அகதா. இந்த அம்சம், அவரின் நாவல் ஒன்று ‘பார்மாசூட்டிக்கல் ஜர்னல் அண்ட் பார்மாசிஸ்ட்’ எனும் மருந்தியல் இதழ் ஒன்றால் மதிப்பீடு செய்யப்படும் அளவுக்கு அகதாவை உயர்த்தியது. ஆச்சரியப்படும் வகையில் அந்த நாவல், ‘தி மிஸ்டீரியஸ் அஃபயர்ஸ் அட் ஸ்டைல்ஸ்’ எனும் அவரின் முதல் நாவலாகும். அவரால் எப்படி இதைச் சாதிக்க முடிந்தது? ஏனென்றால், அவர் அடிப்படையில் ஒரு செவிலியர். முதலாம் உலகப் போரில் செவிலித் தொண்டு புரிந்தவர். அப்போது அவர் மருந்துகளைக் கையாள வேண்டியிருந்தது. அந்த ஆர்வம், மருந்தியல் நிபுணர் ஒருவரிடம் தனிப்பட்ட முறையில் அவரை மாணவியாகச் சேர உந்தித் தள்ளியது. அந்த நாட்களில் அவர் பல விதமான விஷ மருந்துகளைப் பற்றி அறிந்துகொள்கிறார். அந்த அனுபவங்கள்தான் அவர் கதைகள் எழுதுவதற்குக் கைகொடுத்தன. இவரின் நாவல்களைப் படித்துவிட்டு, பலர் அந்த நாவல்களில் சொல்லப்பட்டிருக்கும் விஷத்தை வாங்கிக் குற்றங்களைப் புரிந்தனர் என்பது இவர் மீது வைக்கப்படும் பொதுவான குற்றச்சாட்டு. ஆனால் அது உண்மையல்ல. மாறாக இவரின் ‘தி பேல் ஹார்ஸ்’ என்ற நாவலைப் படித்ததன் காரணமாக, மருத்துவமனை செவிலியர்கள் சிலர் ‘தாலியம்’ எனும் விஷத்தின் தாக்கத்தை உணர்ந்து, அந்த விஷத்தை உட்கொண்டவர்கள் பலரின் உயிரைக் காப்பாற்றியுள்ளனர். இப்படி தன் வாழ்நாளில் மொத்தம் 66 நாவல்கள், 14 சிறுகதைத் தொகுப்புகள் எழுதி மர்ம நாவல் உலகின் முடிசூடா ராணி என்று அழைக்கப்பட்ட அகதா இதே நாளில்தான் காலமானார்.

தமிழக அரசியலில் நம்பர் டூ என்ற சொல்லாடலுக்கு உள்ளான இரா.நெடுஞ்செழியன் காலமான தினமின்று

(2000) மாணவர்களின் எழுச்சிதான் திராவிட இயக்கம் ஆட்சிக்கட்டிலில் அமர்வதற்குக் காரணமாயிற்று. அந்த எழுச்சிக்குத் தம் மாணவர் பருவத்திலேயே வித்திட்ட முன்னவர்கள் முறையே பேராசிரியர், நாவலர் என்று சிறப்பிக்கப்படும் க.அன்பழகனும், இரா.நெடுஞ்செழியனும். நாற்பதுகளின் தொடக்கத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பேரவையில் சிறுபான்மையினராக ஒலித்த அவர்கள் இருவரது குரல்தான் பல்கிப் பெருகி அறுபதுகளின் மத்தியில் தமிழ்நாட்டையே ஆட்டுவித்தது. திராவிட இயக்கம் அதன் அரசாட்சிக் களத்தில் அண்ணாவுக்கும் கருணாநிதிக்கும் அவர்களுக்குப் பின் வந்தோருக்கும் எவ்வளவு கடமைப்பட்டதோ அதே அளவுக்கு அதன் அறிவார்ந்த தளத்தில் அன்பழகனுக்கும் நெடுஞ்செழியனுக்கும் கடமைப்பட்டிருக்கிறது. நெடுஞ்செழியனின் தலைமையில், 1944-ல் கும்பகோணத்தில் நடந்த திராவிடர் மாணவர் மாநாடுதான் நீதிக் கட்சிக்குத் திராவிடர் கழகம் என்ற பெயர் மாற்றத்தை விரைவுபடுத்தியது. அக்கூட்டத்துக்குக் கிடைத்த இளைஞர்களின் வரவேற்பை அறிந்த பிறகே, பெரியார் நீதிக் கட்சியைச் சீர்திருத்தவும் பெயர் மாற்றவும் முடிவெடுத்தார். திமுகவில் அன்பழகனுக்கும் திமுக, அதிமுகவில் நெடுஞ்செழியனுக்கும் கிடைத்த இரண்டாவது இடம் என்பது திராவிட இயக்க வரலாற்றில் அவர்கள் வகித்த முதலிடத்துக்காகத்தான். திமுகவின் அதிகாரபூர்வ நாளேடான ‘நம் நாடு’ இதழின் முதலாவது வெளியீட்டாளராகப் பொறுப்புவகித்தார் நெடுஞ்செழியன். அண்ணாவை அடுத்தும் சி.பி.சிற்றரசுவை அடுத்தும் அவ்விதழுக்கு இரண்டு முறை ஆசிரியராகவும் இருந்தார் அவர். ‘மன்றம்’ என்ற பெயரில் தனி இதழ் ஒன்றையும் நடத்தினார். 1953-ல் அன்றைய முதல்வர் ராஜாஜி அறிமுகப்படுத்திய புதிய கல்வித்திட்டத்தை எதிர்த்து சென்னையில் நடந்த போராட்டத்தில் கைதான ‘ஐவர் வழக்கில்’ அண்ணாவுடன் அவரும் ஒருவர். திமுககட்சி ஆட்சிக்கு வந்ததாலேயே நெடுஞ்செழியன் கல்வித் துறை அமைச்சராகிவிட்டார் என்றும் சொல்லிவிட முடியாது. அவரது அரசியல் செயல்பாடுகளே கல்வி நிறுவனங்களை மையமாகக் கொண்டுதான் அமைந்திருந்தன. அது, அமைச்சரான பிறகும் தொடர்ந்தது. கல்வியமைச்சராகக் கலந்துகொண்ட பட்டமளிப்பு விழாக்களில், தேர்வு முறைகளின் போதாமைகளைத் தொடர்ந்து சுட்டிக்காட்டியவர் அவர். எழுத்துத் தேர்வுக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்காமல், அகமதிப்பீட்டுக்கும் இடங்கொடுக்க வேண்டும் என்று எழுபதுகளின் தொடக்கத்திலேயே வலியுறுத்தியவர். ‘மாணவர்களின் நினைவு சக்திக்குப் பயிற்சியளிப்பதைக் காட்டிலும் அவர்களது அறிவியல் ஆவலைத் தூண்டுவதே கல்வியின் நோக்கமாக இருக்க வேண்டும்’ என்று ஓயாது வேண்டியவர். பள்ளிகளில் சத்துணவு வழங்குவதைப் பற்றி இப்போதும் கூட சில விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. 1971 நவம்பரில் சென்னையில் கல்லூரிகளில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு இலவச உணவுத் திட்டத்தை ரோட்டரி சங்கங்களுடன் இணைந்து தொடங்கிவைத்தவர் நெடுஞ்செழியன். அத்திட்டத்தைத் தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்ற தமது விருப்பத்தையும்கூட அவர் தெரிவித்தார். ஆனால், அத்தகைய முயற்சிகள் ஏனோ பின்பு தொடரவில்லை. பள்ளி, கல்லூரிகளிலும் அரசியல் மேடைகளிலும் அவர் ஆற்றிய ஆயிரக்கணக்கான உரைகளும் கட்டுரைகளும் இன்னமும்கூட நூல்வடிவம் பெறவில்லை. வெளிவந்த நூல்களும் தற்போது பார்வைக்குக் கிடைக்கவில்லை. அவர் எழுதி திருச்சி திராவிடப் பண்ணை வெளியிட்ட ‘கலித்தொகை தரும் காதற்காட்சிகள்’, ‘மதமும் மூடநம்பிக்கையும்’, ‘பண்டைக் கிரேக்கம்’, ‘மொழிப் போராட்டம்’, ‘கண்ணீரும் செந்நீரும் வளர்த்த கழகம்’ உள்ளிட்ட புத்தகங்கள் அந்நாட்களில் மிகவும் பிரபலமானவை. தனது இறுதிக் காலத்தில் திராவிட இயக்கத்தின் வரலாற்றை எழுதத் தொடங்கினார். அதன் முதல் பகுதி மட்டும் வெளியானது. திராவிட இயக்கத்தின் தோற்றத்தில் தனித்தமிழ் இயக்கம் வகித்த பங்கையும் அதற்கு சைவ சமய இலக்கியங்கள் ஒரு காரணமாக இருந்ததையும் சுட்டிக்காட்ட அவர் தவறவில்லை. சங்க இலக்கியங்கள் இளைஞர்களிடம் ஊட்டிய மொழியுணர்வைக் குறிப்பிட்டபோது அதற்கு உவேசா ஒரு காரணமாக அமைந்ததையும் நினைவுபடுத்தினார். 1971 முதல் 1975 வரை மு. கருணாநிதி அமைத்த அமைச்சரவையில் கல்வி அமைச்சராக இருந்தார்.1977 முதல் 1980 வரை எம்.ஜி.ஆர் அமைத்த அமைச்சரவையில் உணவு அமைச்சராக இருந்தார்.1980ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோர் அமைச்சரவை அமைக்கும் பொழுதெல்லாம் நிதி அமைச்சராகப் பதவி வகித்தார். முன்னர் அண்ணா இறந்த பொழுது பிப்ரவரி 3, 1969 முதல் பிப்ரவரி 10, 1969 காலமும் எம்.ஜி.ஆர் இறந்த பொழுது டிசம்பர் 24, 1987 முதல் ஜனவரி 7, 1988 வரை இடைக்கால முதலமைச்சராகப் பதவி வகித்தார். சங்க இலக்கியங்களிலும் சமய இலக்கியங்களிலும் தோய்ந்தவர் நெடுஞ்செழியன். வள்ளுவரையும் வள்ளலாரையும் மேற்கோள் காட்டுவது அப்போதைய திராவிட இயக்கப் பேச்சாளர்களின் வழக்கமாக இருந்த நாட்களில் அவரது பேச்சின் இடையிடையே பட்டினத்தாரும் தாயுமானவரும்கூட எட்டிப் பார்ப்பார்கள். அமைச்சரவையில் அண்ணாவுக்கு அடுத்த இடத்தில் இருந்த நெடுஞ்செழியனை அவரது சகாக்கள் அடுத்த முதல்வராக ஏற்றுக் கொள்ளவில்லை. தற்காலிக அமைச்சரவையின் தலைமைப் பொறுப்போடு அவர் முதலிடம் முடிவுக்கு வந்தது. முன்னையோரை முந்திக்கொண்டார் என்பது கருணாநிதி தன் காலம் முழுவதும் சுமந்து நின்ற பழிகளில் ஒன்று. தனது ‘நெஞ்சுக்கு நீதி’யில் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு தான் முதல்வர் பொறுப்பேற்க நேர்ந்தது தன் விருப்பத்தால் நிகழ்ந்தது அல்ல என்பதை ஒவ்வொரு வார்த்தையிலும் அவர் வெளிப்படுத்தியிருப்பார். கருணாநிதியின் அசாத்திய அரசியல் வியூகங்கள் அவரின் வார்த்தைகளின் மீது முழு நம்பிக்கையைக் கொடுக்காமலும்கூடப் போகலாம். ஆனால், கருணாநிதி, நெடுஞ்செழியன் இருவரோடும் பழகிய ஏனைய தலைவர்கள் எழுதிவைத்த குறிப்புகளிலிருந்து வெற்றி – தோல்விகளுக்கான காரணங்களை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.

ச. வே. சுப்பிரமணியன் காலமான தினம்

பைந்தமிழ் மொழிக்கு பாங்குற தொண்டாற்றி வரும் முதுபெரும் தமிழறிஞர் ச. வே. சுப்பிரமணியன் இறந்த தினம் இன்று (ஜனவரி 12). l நெல்லை மாவட்டம் வீரகேரளம் புதூரில் பிறந்தவர் (1929). விக்ரம சிங்கபுரம் புனித இருதய மேல்நிலைப் பள்ளியில் ஆரம்பக் கல்வி பயின்றார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இளங்கலைப் பட்டமும் கேரளப் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டமும் பெற்றார். தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் 1953 முதல் மூன்றாண்டுகள் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றினார். பின்னர் பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியிலும் திருவனந்தபுரம் பல்கலைக்கழகக் கல்லூரியிலும் விரிவுரையாளராகப் பணியாற்றினார். கேரளப் பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவராக வழிநடத்தினார். l சென்னை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இயக்குநராகப் பணியாற்றி அரிய ஆய்வு நூல்களை வெளியிட்டார். சிலப்பதி காரத்தில் விசேஷ ஈடுபாடு கொண்ட இவர், சிலப்பதிகாரத்தை இசையுடன் பாடியே பாடம் நடத்துவார். இவரது மாணவர்களில் பலர் இன்று புகழ்பெற்ற தமிழறிஞர்களாக உள்ளனர். படைப்பாற்றல் மிக்க இவர், தமிழ், ஆங்கிலம், மலையாளம் ஆகிய மொழிகளில் எழுதும் திறன் பெற்றவர். l இலக்கிய நினைவுகள், மாந்தர் சிறப்பு, ஒன்று நன்று, கம்பன் கற்பனை, இளங்கோவின் இலக்கிய உத்திகள், தமிழ் இலக்கிய வரலாறு, சிலப்பதிகாரம் மூலம், சிலம்பும் சிந்தாமணியும், பாரதியார் வாழ்க்கைக் கொள்கைகள், தமிழ் நிகண்டுகள் உள்ளிட்ட ஏராளமான நூல்களை எழுதியுள்ளார். நாட்டுப்புறக் கலை, தத்துவம், தாவரவியல், மண் அமைப்பு ஆகியவை குறித்தும் எழுதியுள்ளார். சிலப்பதிகாரத்தின் சில பகுதிகள் உள்ளிட்ட தமிழின் தொன்மையான பல படைப்புகளை ஆங்கிலத்தில் பல தொகுதிகளாக மொழிபெயர்த்து வெளியிட்டார். சாகித்திய அகாடமி கமிட்டியின் உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார். பேச்சாற்றல் மிக்கவர். l 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வழங்கியுள்ளார். வானொலியில் 100-க்கும் மேற்பட்ட உரைகளை நிகழ்த்தியுள்ளார். இலங்கை, மொரீசியஸ், ஜெர்மனி, போலந்து, செக்கோஸ்லவேகியா, ஜப்பான், பாரீஸ், லண்டன், கெய்ரோ உள்ளிட்ட பல நாடுகளுக்கும் பயணம் சென்று கருத்தரங்குகளில் கலந்து கொண்டுள்ளார். l 1969-ல் நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் திருவள்ளுவர் கல்லூரியை தொடங்கினார். இவரது மேற்பார்வையில் 44 பேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர். 1985-ல் நெல்லை மாவட்டத் தில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் ‘தமிழூர்’ என்ற ஊரை உருவாக்கி அங்கு வாழ்ந்து வருகிறார். இவரது வீட்டின் பெயரே ‘தமிழகம்’. l ராஜா சர் முத்தையா செட்டியார் நினைவுப் பரிசு உள்ளிட்ட பல பரிசுகளை வென்றுள்ளார். இந்திய சாகித்திய அகாடமியின் ‘பாஷா சம்மான்’ விருது பெற்ற முதல் தமிழறிஞர் என்ற பெருமைக்குரியவர், ராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி விருது, நல் அறிஞர் விருது, அவ்வைத் தமிழ் அருளாளர் விருது உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார். l ‘Tholkappiyam is the first Universal grammar in the Universe’ என்ற தலைப்பில் ஒரு ஆய்வு நூலை 2015 ஜுன் மாதம் வெளியிட்டுள்ளார். ‘தமிழ் ஞாயிறு’, ‘சாதனைச் செம்மல் ச.வே.சு.’ ஆகிய தலைப்புகளில் இவருடைய வாழ்க்கை வரலாறு நூல்கள் வெளிவந்துள்ளன.

எம்.ஜி.ஆரை எம். ஆர். ராதா துப்பாக்கியால் சுட்ட தினம்!

1967 தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன், எம்.ஜி.ஆர். சுடப்பட்ட சம்பவம், தமிழ் நாட்டில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது.எம்.ஜி.ஆர். அப்போதும் புகழேணியின் உச்சியில் இருந்தார். 1967 தேர்தலில் பரங்கிமலை தொகுதியில் தி.மு.க. சார்பில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். அக்காலக்கட்டத்தில் எம்.ஜி. ஆரும், எம்.ஆர்.ராதாவும் நடித்திருந்த ‘பெற்றால்தான் பிள்ளையா’ படம் வெளிவந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருந்தது. இந் நிலையில் 1967 ஜனவரி 12-ந்தேதி மாலை 5 மணிக்கு எம்.ஜி. ஆரின் ராமாவரம் தோட்டத்துக்கு, எம்.ஆர். ராதா போனார். அவருடன், ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தை தயாரித்த முத்துக் குமரன் பிக்சர்ஸ் அதிபர் வாசுவும் சென்றார். ‘பெற்றால்தான் பிள்ளையா’ படத்தை தயாரிப்பதற்கு, எம். ஆர்.ராதா ரூ.1 லட்சம் பண உதவி செய்திருந்ததாகக் கூறப்பட்டது.படம் வெளியான பிறகு, அந்தப் பணத்தை வாங்கித் தருவதாக, எம்.ஜி.ஆர். உறுதி கூறியிருந்தார் என்றும், அதன் படி பணம் வராததால், வாசுவையும் அழைத்துக்கொண்டு, எம்.ஜி.ஆர். வீட்டுக்கு ராதா சென்றதாகவும் சொல்லப்பட்டது. எம்.ஜி.ஆரை ராதாவும், வாசுவும் சந்தித்தார்கள். முன்பு ஒப்புக் கொண்டது போல், தனக்கு ஒரு லட்சத்தை தரவேண்டும் என்று எம்.ஆர். ராதா கேட்டதாகவும், அதைத் தொடர்ந்து எம்.ஜி.ஆருக்கும், எம்.ஆர்.ராதாவுக்கும் தகராறு ஏற்பட்டதாம் .அப்போது உன்னால் எனக்கு நிறைய நஷ்டம். பல படங்களில் இருந்து என்னை நீக்கிவிட்டார்கள் என்று ராதா ஆத்திரத்தோடு கூறினார். இதனால் தகராறு முற்றியது. எம்.ஆர்.ராதா கோபத்தோடு வெளியே செல்வதுபோல எழுந்தார். பிறகு, ‘சட்’டென்று மடியில் வைத்திருந்த கைத் துப்பாக்கியை எடுத்து, எம்.ஜி.ஆரை நோக்கி சுட்டார். எம்.ஜி.ஆர். உடனே கீழே குனிந்தார். குண்டு, அவர் இடதுபுற காது அருகே கன்னத்தில் பாய்ந்தது. இந்த எதிர்பாராத சம்பவத்தால் திகைப்படைந்த படத் தயாரிப்பாளர் வாசு, பாய்ந்து சென்று எம்.ஆர்.ராதாவை பிடித்தார். மேற்கொண்டு சுடாதபடி தடுத்தார். உடனே ராதா, துப்பாக்கியை தன் தலையில் வைத்து விசையை அழுத்தினார். குண்டு அவர் நெற்றியில் பாய்ந்தது. இதற்குள் எம்.ஜி.ஆர். வீட்டு ஆட்கள் ஓடிவந்து ராதாவை பிடித்துக்கொண்டனர். துப்பாக்கியைப் பிடுங்கிக் கொண்டார்கள். எம்.ஜி.ஆரை ஒரு காரில் ஏற்றி ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போனார்கள். எம்.ஆர்.ராதா, இன்னொரு காரில் அதே ராயப்பேட்டை ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டார். ராயப்பேட்டை ஆஸ்பத்திரியில், அவர்களுக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது. எம்.ஆர்.ராதாவின் தலையில் குண்டு இருந்தது. மேற்கொண்டு சிகிச்சை அளிப்பதற்காக, அவர்கள் இருவரும் பெரிய (ஜெனரல்) ஆஸ்பத்திரிக்கு கொண்டு போகப்பட்டனர். இருவருக்கும் தலையில் பெரிய கட்டு போடப்பட்டிருந்தது. (ஆந்தை ரிப்போர்ட்டர்) எம்.ஜி.ஆருக்கு இரவு 10.45 மணி முதல் நள்ளிரவு 2.45 வரை ஆபரேஷன் நடந்தது. காது அருகே பாய்ந்து இருந்த சிறிய இரும்புத்துண்டை (குண்டின் ஒரு பகுதி) வெளியே எடுக்க முடியவில்லை. அதை எடுக்க, ஆபரேஷன் செய்யச் செய்ய ரத்தப்பெருக்கு ஏற்பட்டது. எனவே, அதை உள்ளேயே வைத்து தையல் போட்டு விட்டார்கள்.இதனால் ஆபத்து இல்லை என்று டாக்டர்கள் தெரிவித்தனர். எம்.ஜி.ஆர். உணர்வு இல்லாமல் இருந்தார். குண்டு பாய்ந்த இடத்தை டாக்டர்கள் பலமுறை ‘எக்ஸ்ரே’ எடுத்தனர். காயம்பட்ட இடத்தில் இருந்து நிறைய ரத்தம் வெளியேறியதால் ஆஸ்பத்திரியில் அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது. எம்.ஆர்.ராதாவுக்கு இரவு 11 மணி வரை ஆபரேஷன் நடந்தது. அவர் தலையில் இருந்து ஒரு குண்டும், கழுத்தில் இருந்து ஒரு குண்டும் அகற்றப்பட்டன.இதற்கிடையில் நடிகர் எம். ஆர்.ராதா கைது செய்யப்பட்டு இருப்பதாக, தமிழ்நாடு தலைமை போலீஸ் அதிகாரி (ஐ.ஜி.) அருள் அறிவித்தார். எம்.ஜி.ஆரை கொல்ல முயன்றதாகவும், தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும் ராதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. தி.மு.கழகத் தலைவர் அண்ணா, மு.கருணாநிதி, என்.வி.நடராசன் ஆகியோர் ஆஸ்பத்திரிக்குச் சென்று எம்.ஜி.ஆரை பார்த்தனர். படுகாயத்துடன் படுக்கையில் படுத்திருந்த எம்.ஜி.ஆரைப் பார்த்து, அண்ணாவும், மற்ற இரு தலைவர்களும் கண் கலங்கினர். பிறகு அண்ணாவும், மற்றவர்களும் ராமாவரம் தோட்டத்துக்குச் சென்று, அங்கு நடந்ததை விசாரித்தனர். எம்.ஜி.ஆர். சுடப்பட்ட செய்தி, காட்டுத்தீபோல் பரவியது. மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டது. பல இடங்களில் கடைகள் மூடப்பட்டன. சென்னை நகரில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் எம்.ஜி.ஆர். சிகிச்சை பெற்று வரும்போதே, தமிழக சட்டசபை தேர்தல் நடந்தது. எம்.ஜி.ஆர். கழுத்தில் பெரிய கட்டுடன் இருக்கும் படங்கள், தி.மு.க. பிரசார சுவரொட்டிகளாக ஒட்டப்பட்டன.தேர்தல் பிரசாரத்துக்கு போகாமல், ஆஸ்பத்திரியில் இருந்தபடி பரங்கிமலை தொகுதியில் வெற்றி பெற்றார். எம்.ஜி.ஆர். தி.மு.கழகம் ஆட்சியைக் கைப்பற்றியது. அண்ணா முதலமைச்சர் ஆனார். பின்னர் எம்.ஜி.ஆரும், எம்.ஆர்.ராதாவும் குணம் அடைந்தார்கள். எம்.ஜி.ஆர். மார்ச் 10-ந்தேதி வீடு திரும்பினார். எம்.ஜி.ஆரை சுட்டுக்கொல்ல முயன்றதாகவும், தன்னைத் தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றதாகவும், எம்.ஆர்.ராதா மீது வழக்கு தொடரப்பட்டது தனி ரிப்போர்ட்.

விவேகானந்தர்🙏 பிறந்த நாள் இன்று!🎈🎈🎈

🙏1. வாழ்க்கை ஒரு சவால்

அதனை சந்தியுங்கள்.

🙏2. வாழ்க்கை ஒரு பரிசு

அதனை ஏற்றுக்கொள்ளுங்கள்.

🙏3. வாழ்க்கை ஒரு சாகசப் பயணம்

அதனை மேற்கொள்ளுங்கள்.

🙏4. வாழ்க்கை ஒரு சோகம்

அதனை கடந்து வாருங்கள்.

🙏5. வாழ்க்கை ஒரு துயரம்

அதனை தாங்கிக் கொள்ளுங்கள்.

🙏6. வாழ்க்கை ஒரு கடமை

அதனை நிறைவேற்றுகள்.

🙏7. வாழ்க்கை ஒரு விளையாட்டு

அதனை விளையாடுங்கள்.

🙏8. வாழ்க்கை ஒரு வினோதம்

அதனை கண்டறியுங்கள்.

🙏9. வாழ்க்கை ஒரு பாடல்

அதனை பாடுங்கள்.

🙏10. வாழ்க்கை ஒரு சந்தர்ப்பம்

அதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.

🙏11. வாழ்க்கை ஒரு பயணம்

அதனை புகழுடன் முடித்துவிடுங்கள்.

🙏12. வாழ்க்கை ஒரு உறுதிமொழி

அதனை நிறைவேற்றுங்கள்.

🙏13. வாழ்க்கை ஒரு காதல்

அதனை அனுபவியுங்கள்.

🙏14. வாழ்க்கை ஒரு அழகு

அதனை ஆராதியுங்கள்.

🙏15. வாழ்க்கை ஒரு உணர்வு

அதனை உணர்ந்து கொள்ளுங்கள்.

🙏16. வாழ்க்கை ஒரு போராட்டம்

அதனை எதிர்கொள்ளுங்கள்.

🙏17. வாழ்க்கை ஒரு குழப்பம்

அதனை விடைகாணுங்கள்.

🙏18. வாழ்க்கை ஒரு இலக்கு

அதனை எட்டிப் பிடியுங்கள்.>>>

-✍️ வீரத்துறவி சுவாமி விவேகானந்தர்.

பகவான் தாஸ் பிறந்த நாள் இன்று.

சுதந்திர போராட்ட வீரர், தத்துவமேதை ஆன்மீக நேயர் டாக்டர் பகவான் தாஸ் பிறந்த நாள் இன்று. இவர் 1869ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி உத்திரப்பிரதேச மாநிலம், வாரணாசியில் பிறந்தார். இவர் கல்வியிலும், எழுத்துப் பணிகளிலுமே அதிக ஈடுபாடு கொண்டிருந்தார். பல்வேறு மதங்கள், தத்துவங்கள் குறித்து ஏராளமான நூல்களைப் படித்தார். இவரும் பல நூல்களை எழுதியுள்ளார் மேலும் காங்கிரஸ் கட்சியில் இணைந்து தேச விடுதலைக்காகப் பாடுபட்டார். இவர் ஒரு மிதவாத அரசியல்வாதி. காந்தி அடிகளின் ஒத்துழையாமை இயக்கத்தின்போது அதில் தீவிரமாக பங்கேற்று பிரச்சார கூட்டங்களில் பேசினார் கைதாகி 11 மாதங்கள் சிறை சென்றுள்ளார். இந்திய விடுதலைக்குப் பின்னர் இவர் இந்திய மொழிகள், கலாச்சாரம், பண்பாட்டைக் காக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தார். 1955ஆம் ஆண்டில் இவரது சிறந்த தேசியப் பணிக்காக பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது . டாக்டர் பகவான் தாஸ் 89-வது வயதில் (1958) மறைந்தார்.

அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் பிறந்த தினம் இன்று

வாடகை வீட்டில் துவங்கி இன்று 18,000 கோடி டாலருக்கு அதிபதி, அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸின் பிறந்த தினம் இன்று. ஜெப் பெசோஸ் (Jeff Bezos 12 சனவரி 1964) என்பவர் அமெரிக்க பெரும் பணக்காரர், தொழிலதிபர் மற்றும் கொடையாளர் ஆவார். இவருடைய சொத்தின் நிகர மதிப்பு 200 பில்லியன் டாலர்கள் என்று புளூம்பர்க் மதிப்பீட்டு நிறுவனம் கணித்துள்ளது. தற்போதைய கணக்குப்படி இவர் உலகிலேயே பெரும்பணக்காரர்களில் டாப் 5இல் ஆவார். இவர் அமேசான் டாட் காம் என்னும் நிறுவனத்தைத் தொடங்கியவர். இந்தக் குழுமத்தில் 71 விழுக்காடு பங்குகளை ஜெப் பெஸோஸ் கொண்டிருக்கிறார். 1994 இல் நியூயார்க்கில் ஒரு நிதி குழுமத்திலிருந்து விலகி நூல்களை இணைய வழி விற்கும் தொழிலில் இறங்கினார். அமேசான் டாட் காம் என்னும் இவர் தொடங்கிய குழுமம் இணைய அங்காடியாகச் செயல்படுகிறது. மின்னணுப் பொருள்கள் பயன்பாட்டுப் பொருள்கள் அனைத்தையும் சில்லறை வணிக முறையில் இக்குழுமம் விற்கிறது. மைக்ரோசாப்ட் தலைவர் பில் கேட்ஸ் மற்றும் அமெரிக்கப் பெரும் முதலீட்டாளர் வாரன் பபெட் ஆகிய தொழிலதிபர்களுக்கு அடுத்தபடியாக வைத்து மதிக்கப் படுகிறார். இணைய வழி சில்லறை வணிகம் அல்லாமல் வான்வெளி, செய்தித்தாள் ஆகிய துறைகளிலும் இவர் ஈடுபடுகிறார். வாஷிங்டன் போஸ்ட் என்ற பிரபல செய்தித்தாள் நிறுவனத்தை 2013 இல் விலைக்கு வாங்கினார். புளூ ஆரிஜின் என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். புளூ ஆரிஜின் குழுமம் வான்வெளி மற்றும் விண்வெளிகளில் வணிக நோக்கத்திலும் சுற்றுலாப் பயணம் செல்வதற்கும் விண்கலங்களை உருவாக்கிச் செலுத்துகிறது. ஜெப் பெசோஸ் கூகுள் நிறுவனத்திலும் தொடக்க முதலீட்டாளர்களில் ஒருவர். 1998 இல் 250000 அமெரிக்க டாலர்களை முதலீடூ செய்தார். #கொடைகள்_அளித்தல் ஜெப் பெஸோஸ் தம் மனைவியுடன் இணைந்து ஒரு பாலினர் திருமணத்தை ஆதரித்து 2.5 மில்லியன் டாலர்கள் நன்கொடையாக வழங்கினார். கல்வி வளர்ச்சிக்காகக் குடும்ப அறக்கட்டளை தொடங்கினார். இந்த அறக்கட்டளை பிரெட் ஹட்சின்சன் புற்று நோய் ஆராய்ச்சி மையத்திற்கு 2009 ஆம் ஆண்டில் 10 மில்லியன் டாலர்களும், 2010 ஆம் ஆண்டில் 20 மில்லியன் டாலர்களும் வழங்கியது. சியாட்டிலில் உள்ள வரலாறு மற்றும் தொழில்கள் அருங்காட்சியகத்திற்கு 10 மில்லியன் டாலர்கள் கொடை அளித்தார்.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...