இன்றைய முக்கிய நிகழ்வுகள் (05.01.2025)

 இன்றைய முக்கிய நிகழ்வுகள் (05.01.2025)

ஐரோப்பாவில் ‘பெரும் உறைபனி’ தொடங்கிய நாள்

‘பெரும் உறைபனி’ என்றும், ‘பெரும் குளிர்காலம்’ என்றும் குறிப்பிடப்படும், ஐரோப்பாவில் 500 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் குளிர்காலம் இந்நாளின் இரவில் தொடங்கிய நாள். ஐரோப்பாவில் நிலவிய ஸ்வீடியப் பேரரசின் செல்வாக்கிற்கெதிராக, ரஷ்யா தலைமையில் 1700-21இல் நடைபெற்ற பெரும் வடபகுதிப் போரின் ஒரு பகுதியாக, ரஷ்யாவின்மீது ஸ்வீடனின் படையெடுப்பு 1708-09இல் நடைபெற்றது. கிட்டத்தட்ட இரண்டு லட்சம் வீரர்கள் கொண்ட ஸ்வீடியப் படையில், இந்தக் குளிரால் பல்லாயிரம் வீரர்கள் உறைந்து உயிரிழக்க, 24 ஆயிரம் வீரர்களாகச் சுருங்கிப் போனதாம். ரஷ்யர்களுக்குக் குளிர் மட்டுமின்றி, அப்பகுதியின் காலநிலையும் பழக்கமானதாக இருந்ததால், அதற்கேற்ற பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இருந்ததுடன், கூடாரங்களைவிட்டு வெளியில் நடமாடாமல் தவிர்த்த இந்த ஒரே இரவில் மட்டும், இரண்டாயிரத்துக்கும் அதிமான ஸ்வீடிய வீரர்கள் உறைந்தே இறந்தனர். ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகள் உறைந்துபோயின. லண்டனின் தேம்ஸ் நதி, மிகப்பெரிய ஒற்றைப் பனிப்பாறையாக உறைந்து போனதாம். தேம்ஸ் உறைவதும், அப்படியான காலங்களில் பனிச்சறுக்கு உள்ளிட்ட கேளிக்கைகளில் மக்கள் ஈடுபடுவதும், ‘தேம்ஸ் நதி உறைந்த விழா’ என்று குறிப்பிடுமளவுக்கு சில பத்தாண்டுகளுக்கு ஒருமுறை என்று பலமுறை நிகழ்ந்திருந்தாலும், அம்முறை, மிகமோசமான குளிர், மிக நீண்டகாலம் காணப்பட்டிருக்கிறது. பறவைகள் கூட்டமாக வானில் பறந்துகொண்டிருக்கும்போதே உறைந்து, உயிரிழந்து விழுந்ததாக வாய்மொழி தகவல்கள் கூறுகின்றன. உயிரிழந்த மனிதர்கள் படுக்கையோடு உறைந்துபோனதால், இறுதிச் சடங்குகள்கூட செய்யமுடியவில்லை. இந்த உறைபனி முடியும்போது பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கடுமையான சேதத்தை ஏற்படுத்தியது. பனியில் கருகிய பயிர்கள், அடுத்து ஏற்பட்ட வெள்ளம் என்று விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டு, ஐரோப்பா முழுவதும் ஏற்பட்ட பஞ்சம், அடுத்த பத்தாண்டுகளுக்கு பொருளாதாரம் மீண்டெழ விடவில்லை. அவ்வாண்டில் லண்டனின் ஜிடிபி 23 சதவீதம் சரிந்ததாகப் பதிவுகள் கூறுகின்றன. கொரோனா பெருந்தொற்றின்போது ஏற்பட்ட இங்கிலாந்தின் பொருளாதார வீழ்ச்சியைவிட இதுதான் அதிகம்! தற்காலத்தில் ஏற்படும், புரிந்துகொள்ள முடியாத காலநிலை மாற்றங்களுக்காக இன்றும் ஆய்வு செய்யப்படும் இந்த நிகழ்வினை, மனிதனுக்கு நினைவு தெரிந்த காலத்திலிருந்து ஏற்பட்டவற்றிலேயே மிகமோசமான உறைபனி’ என்று லண்டன் அரச கழகத்தின் ஆய்விதழ் பதிவு செய்திருக்கிறது. அதன்பின்னும், அத்தகையதோர் உறைபனிக் காலத்தை உலகம் இன்றுவரை காணவில்லை

மாக்ஸ் போர்ன் நினைவு தினம்

திடநிலை இயற்பியல், மற்றும் ஒளியியல் போன்றவற்றிலும் இவர் பெரும் பங்காற்றி நோபல் பரிசு பெற்ற மாக்ஸ் போர்ன் நினைவு தினம் இன்று (ஜனவரி 5, 1970). மாக்ஸ் போர்ன் (Max Born) டிசம்பர் 11, 1882ல் ஜெர்மனியில் பிறந்தார். 1904 ஆம் ஆண்டில் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் மூன்று புகழ்பெற்ற கணிதவியலாளர்களான பெலிக்ஸ் க்ளீன், டேவிட் ஹில்பர்ட் மற்றும் ஹெர்மன் மின்கோவ்ஸ்கி ஆகியோரைக் கண்டார். அவரின் பி.எச்.டி. “ஒரு விமானம் மற்றும் விண்வெளியில் எலாஸ்டிகாவின் ஸ்திரத்தன்மை” என்ற தலைப்பில் ஆய்வறிக்கை, பல்கலைக்கழகத்தின் தத்துவ ஆசிரிய பரிசை வென்றது. 1905 ஆம் ஆண்டில், அவர் மின்கோவ்ஸ்கியுடன் சிறப்பு சார்பியல் குறித்து ஆராய்ச்சி செய்யத் தொடங்கினார். பின்னர் அணுவின் தாம்சன் மாதிரியில் தனது வசிப்பிட ஆய்வறிக்கையை எழுதினார். 1918ல் பேர்லினில் ஃபிரிட்ஸ் ஹேபருடனான ஒரு சந்திப்பு ஒரு உலோகம் ஒரு ஆலசன் மூலம் வினைபுரியும் போது அயனி கலவை உருவாகும் விதம் குறித்து விவாதிக்க வழிவகுத்தது. இது இன்று பார்ன்-ஹேபர் சுழற்சி என்று அழைக்கப்படுகிறது.

உலகின் முதல் ஒரு நாள் போட்டி நடைபெற்ற நாள் :

5-1-1971 கிரிக்கெட் தொடர்பான பல திருப்புமுனைகள் ஆஸ்தி ரேலிய மண்ணில் நடந்திருக்கின்றன.

ஐந்து நாள் நடக்கும் டெஸ்ட் பந்தயங்கள் மட்டுமே நடைபெற்றுக் கொண்டிருந்தபோது ஒருநாள் போட்டி என்பது அறிமுகமானது ஆஸ்திரேலியாவில்தான்.

ஆனால் இந்தத் திருப்புமுனை தற்செயலாக நடைபெற்ற ஒன்று என்றால் வியப்பு ஏற்படலாம்.

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகள் 1971-ல் ஆஸ்திரேலியாவிலுள்ள மெல்போர்ன் மைதானத்தில் போட்டியிட ஏற்பாடு செய்யப்பட்டி ருந்தது. டெஸ்ட் மேட்ச்தான்.

ஆனால் அடுத்தடுத்து மூன்று நாட்களுக்கு போட்டி நடைபெற வில்லை. காரணம் மழை கொட் டித் தீர்த்தது. ‘‘இனி இந்தப் போட்டி நடக்காது’’ என்று அமைப்பாளர்கள் அறிவித்தனர். ஆனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ரசிகர்களின் ஏமாற்றம் அளவு கடந்ததாக இருந்தது. சும்மா பேருக்கு ஒரே நாளில் ஒரு கிரிக்கெட் போட்டி நடத்தலாமா என்று யோசித்தார்கள். நாலாவது நாள் நல்லவேளையாக வருண பகவான் பார்வையாளராக வரவில்லை.

1971 ஜனவரி 5 அன்று நடந்தது அந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டி!

ஒவ்வொரு அணி யும் 40 ஓவர்கள் பந்து வீசின. முதலில் பேட்டிங் செய்த இல்லிங்க்ஸ் வொர்த் தலைமையிலான இங்கிலாந்து அணி 39.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 190 ரன்கள் எடுத்தது. இரண்டாவதாக பேட்டிங் செய்த பில் லாரி தலைமயிலான ஆஸ்திரேலிய அணி 35 ஓவர்களில் 5 விக்கெட்களை மட்டுமே இழந்து 191 ரன்களெடுத்தது விளையாட்டை வென்றது. பார்வையாளர்களுக்குப் பேரானந்தம். அதன் பிறகு இந்த ஒரு நாள் விளையாட்டு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ICC யால் நெறிப்படுத்தப்பட்டு எல்லா நாடுகளுக்கிடையிலும் விளையாடப்பட்டது. எனினும் இந்த விளையாட்டுதான் உலகின் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி என்று குறிப்பிடப்படுகிறது.

எழுத்தாளர் ஆ. மாதவன் நினைவு நாள்

கேரளாவின் திருவனந்தபுரத்தில் பிறந்து வசித்த தமிழ் எழுத்தாளர் ஆவார். 1955 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து சிறுகதைகள், நாவல்கள் எழுதிவந்த முக்கிய படைப்பாளி ஆவார். இவரது பல சிறுகதைகள் நூல்களாக வெளியிடப்பட்டுள்ளன. திராவிட எழுத்துக்களால் ஈர்க்கப்பட்டு எழுத்தாளராக ஆனவர். கிருஷ்ண பருந்து உட்பட 3 புதினங்களை எழுதியுள்ளார். செல்வி ஸ்டோர்ஸ் என்ற கடையை நடத்திவந்த மாதவன் திருவனந்தபுரத்திலுள்ள சாலைத்தெருவைப் பின்னணியாகக் கொண்டு பல சிறுகதைகளை எழுதியுள்ளார்.அவர் வாழ்ந்த கடைவீதியையே களமாகக் கொண்டு, எழுதிய கதைகளின் தொகுப்பு ‘கடைத்தெருக் கதைகள். மாதவன் நாவலாசிரியராகவும் சிறுகதையாளராகவும் இயங்கியவர். எனினும் அவரை முதன்மையாகச் சிறுகதையாளர் என்றே குறிப்பிட வேண்டும். அவரது சிறுகதைகள் யதார்த்தவாதப் பிரிவைச் சார்ந்தவை. அன்றாட வாழ்வில் நமது பார்வைக்குத் தட்டுப்படும் மனிதர்களும் நிகழ்ச்சிகளுமே அவரது புனைவுலகிலும் இடம்பெறுகின்றன. அவை நமக்குச் சாதாரண மனித நடவடிக்கைகளாக மட்டுமே பார்வையில் பட்டுக் கலைந்துபோகின்றன. இவருக்கு 2015 ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாடமி விருது ‘இலக்கிய சுவடுகள்’ என்ற திறனாய்வு நூலுக்காக வழங்கப்பட்டது.

அ. சீனிவாச ராகவன் நினைவு தினம்

இன்று ஜனவரி 5 அ. சீ. ரா என அழைக்கப்பட்ட அ. சீனிவாசராகவன் ( அக்டோபர் 23 1905 – ஜனவரி 5 1975) பன்முகத் திறமை கொண்ட தமிழ் எழுத்தாளர். இவர் ஆங்கிலத்தில் சிறந்த புலமை பெற்ற ஆங்கிலப் பேராசிரியராகவும் விளங்கினார். சிறந்த தமிழ்க் கவிஞர், பேச்சாளர், ஆய்வாளர், இலக்கியவாதி, மொழிபெயர்ப்பாளர் எனப் பன்முகத் திறமை கொண்டிருந்தார். சாகித்ய அகாடமி விருது முதன் முதலாக தமிழ்க்கவிதைக்காக வழங்கப்பட்டது. அ. சீ. ராவின் கவிதைக்குத்தான். ” நாணல்’ என்பது அவரது புனைபெயர். இவர் தன் பெயரை அ.சீநிவாச ராகவன் என்றே எழுதிவந்தார். மிகச்சிறந்த தமிழ் இலக்கியப் பத்திரிகை என்று அந்நாளில் கருதப்பட்ட ’சிந்தனை’ மாத இதழின் ஆசிரியராக இருந்து 1947 முதல் 1949 வரை நடத்தினார். இராஜாஜி, பேராசிரியர் வையாபுரிப்பிள்ளை, பிஸ்ரீ, கே. ஏ. நீலகண்ட சாஸ்திரி, ந. பிச்சமூர்த்தி, நீதிபதி மகாராஜன், பெ. ந. அப்புசாமி எனப்பல அறிஞர்கள் அந்தப்பத்திரிகையில் எழுதியிருக்கிறார்கள். உமர்கய்யாம் பாடல்கள், காளிதாசனின் மேக சந்தேசம், ஆதிசங்கரரின் மநீஷா பஞ்சகம், பஜகோவிந்தம் ஆகியவற்றைத் தமிழில் மொழியாக்கம் செய்திருக்கிறார். கம்பனின் பல பாடல்களை ”Leaves from kamban” பெயரில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்துள்ளார். பாரதியின் பாடல்கள் பலவற்றை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்திருக்கும் இவர் இராஜாஜி போன்ற அறிஞர்கள் மொழியாக்கம் செய்த பாரதி பாடல்களையும் தொகுத்துக் கல்கத்தா தமிழ்ச்சங்கம் சார்பாக ” voice of a poet” என்னும் பெயரில் வெளியிட்டிருக்கிறார்.

ரா. கி . அன்று அழைக்கப்பட்ட தியாகி ஆர்.. கிருஷ்ணசாமி நாயுடு பிறந்த நாள்

ஜனவரி 5, 1902. தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்களில் மூன்றுமுறை போட்டியிட்டு பெரும் வெற்றி பெற்றார். 1952 முதல் 1967 வரை சட்டமன்ற உறுப்பினராகவும், 1968முதல் 1973 வரை சட்ட மேலவை உறுப்பினராகவும் இருந்தார். 1924 ஆம் ஆண்டிலிருந்து அன்றைய காங்கிரஸ் இயக்கத்தில் பல பொறுப்புகளை வகித்து இறுதியில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராகவும் உயர்ந்தார். 15 ஆண்டுகள் சட்டப் பேரவையில் ஆளும்கட்சி உறுப்பினராக இருந்த அவருக்கென்று ஒரு சைக்கிளைத் தவிர வேறு சொந்த வாகனம் ஏதுமில்லை .மக்களுடன் சாதாரணமாகப் பேருந்தில் பயணம் செய்வார். பொது வாழ்வில் ஈடுபடுவோர் பொதுப்பணத்தை எவ்வாறு செலவிடவேண்டும் என்பது குறித்து ரா.கி பின்பற்றிய வழிதான் அவரது வாழ்க்கையின் முக்கியமானசெய்தி. மகாத்மா காந்தியின் ஆணைப்படி சிக்கனமாக செலவிடுவதில் காந்தியடிகளின் வாரிசாகவே விளங்கினார் என கிருஷ்ணசாமி நாயுடுவின் நண்பர் காமராஜர் அவரைப்பற்றி புகழாரம் சூட்டினார். சேவையில் தொண்டராகி தியாகத்தால் தலைவராகி பார்வையில் எளியராகி பண்பில் உயர்ந்தோராகி நாவையும் காப்போராகி நாவண்மை மிக்கோராகி தேவையை குறைத்த காந்தி சீடராம் எங்கள் ராகி -புலவர் விவேகானந்தன்-

ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை செலுத்திய தினம் இன்று

முற்றிலும் இந்திய உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டை செலுத்திய தினம் இன்று (2014). சென்னையை அடுத்த ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்திலிருந்து முழுவதுமாக இந்தியாவிலேயே உருவாக்கப்பட்டுள்ள அதி நவீன க்ரையோஜினிக் என்ஜின் பொருத்தப்பட்ட GSLV-D5 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் செலுத்தப்பட்டு 17 நிமிடங்களுக்குப் பின்னர் இந்த ராக்கெட் ஜி-சாட்-14 தொலைத்தொடர்பு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோவின் தலைவர் கே இராதாகிருஷ்ணன், தங்கள் குழுவின் அர்ப்பணிப்பிற்கு மேலுமொரு வெற்றி இது என்றார். இஸ்ரோவின் வெற்றி பயணத்தில் இது ஒரு முக்கியமான மைல் கல் என்று கருதப்படுகிறது.

முகலாய மன்னர் ஷாஜகான் பிறந்த நாள் இன்று.

இந்தியாவில் முகலாய சாம்ராஜ்யத்தின் மன்னராக திகழ்ந்த ஷாஜகான் 1592 ஆம் ஆண்டு இதே ஜனவரி 5 ஆம் தேதி லாகூரில் பிறந்தார். இவருடைய முழுப்பெயர் ஷஹமணி புதீன் முகம்மது ஷாஜகான். இவர் 1627 ஆம் ஆண்டில் தன்னுடைய தந்தை ஜஹாங்கிர் இறந்ததை தொடர்ந்து அவர் அரியணை ஏறினார். மேலும் இவருடைய ஆட்சி முகலாயர்களின் பொற்காலம் என அழைக்கப்படுகிறது.. ஷாஜகான் எழுப்பியுள்ள நினைவுச் சின்னங்களில் ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால் உலக அதிசயங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. . இது அவருடைய மனைவி மும்தாஜின் நினைவாக கட்டப்பட்டது என்று சொல்லப்படுகிறது. . ஆக்ராவிலுள்ள பேர்ல் மசூதி, டெல்லியில் உள்ள அரண்மனை மற்றும் பெரிய மசூதி அவரின் நினைவாக அமைந்திருக்கிறது. பு கழ்வாய்ந்த மயில் சிம்மாசனம் கூட அவருடைய அரசாட்சியின் காலத்துக்குரியது, இது இன்றைய மதிப்பீட்டில் பல மில்லியன் டாலர்கள் மதிப்புடையது. ஷாஜகானாபாத்தின் உருவாக்கியவர் அவரே, அது இப்போது ‘பழைய டெல்லி’ என்று அழைக்கப்படுகிறது.

சதீஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share to...