வெற்றிகரமாக நடைபெற்ற உடல் உறுப்பு தானம்….
தஞ்சையில் இருந்து மதுரைக்கு 140 கி.மீ. வேகத்தில் 1 மணி நேரம் 50 நிமிடங்களில் கடந்து இறந்தவரின் கல்லீரல் உடல் உறுப்பு தானம் மூலம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
தஞ்சையில் சாலை விபத்தில் சிக்கிய 25 வயது இளம்பெண் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது உடல் உறுப்புகளை தானம் வழங்க பெற்றோர் முன்வந்தனர்.
இந்த நிலையில், மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 45 வயது நோயாளிக்கு இளம்பெண்ணின் கல்லீரல் பொருத்தமாக இருந்தது. எனவே காலம் தாழ்த்தாமல் அதனை கொண்டு வரும் நடவடிக்கைகளில் போக்குவரத்துப் போலீஸார் துரிதமாக செயல்பட்டனர்.
ஆம்புலன்ஸ் மூலமாக 190 கி.மீ. தூரத்தை 1 மணிநேரம் 50 நிமிடங்களில் கடந்து கல்லீரல் பத்திரமாகக் கொண்டு வரப்பட்டு வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
ஒரு உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் 140 கி.மீ. வேகத்தில் ஆம்புலன்ஸை கவனத்துடன் இயக்கினேன். அவசர நிலையை கருத்தில் கொண்டு பொதுமக்களும் ஒத்துழைப்பு கொடுத்தனர். போலீஸார் போக்குவரத்தை திறம்பட சரிசெய்தனர். இதுபோன்று பல நேரங்களில் சவால் நிறைந்த பணிகளை செய்திருக்கிறேன் என்று ஆம்புலன்ஸ் ஓட்டுநர் சுப்ரமணியன் தெரிவித்தார். அவருக்கு அனைரிடமும் பாராட்டு குவிந்து வருகிறது.