முழு கொள்ளளவை எட்டிய ஏரிகள் | சென்னை மக்களுக்கு எச்சரிக்கை..!
காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் புழல் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. எனவே இதிலிருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதால் சென்னை மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்திருக்கிறது. குறிப்பாக வட மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்திருக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மயிலாடுதுறை மாவட்டம் மணல் மேடு பகுதியில் 25 செ.மீக்கும் அதிகமாக மழை பெய்திருக்கிறது. 20 செ.மீ பெய்தால் ரெட் அலர்ட் விடுக்கப்படும். சென்னையை பொறுத்தவரை அதன் சுற்றுவட்டார மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்திருக்கிறது.
திருவள்ளூரில் வழக்கமாக இந்த காலத்தில் 57 செ.மீதான் மழை பெய்திருக்க வேண்டும். ஆனால் 68.9 செ.மீ அளவுக்கு மழை பதிவாகியுள்ளது. இது வழக்கமான மழையை விட 21% அதிகமாகும். அனால் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை இயல்பை விட சற்று குறைவாகவே பெய்திருக்கிறது. இருப்பினும் குறைந்த நாட்களில் அதிக அளவு பெய்த கனமழை காரணமாக நீர் நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் செம்பரம்பாக்கம், பூண்டி மற்றும் புழல் ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளன. எனவே இங்கிருந்து உபரி நீர் திறக்கப்பட்டிருக்கிறது. தற்போது செம்பரம்பாக்கத்திலிருந்து விநாடிக்கு 500 கனஅடி வீதம் நீர் திறக்கப்படுகிறது. இது காலை 8 மணி அளவில் 1000 கனஅடியாக அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல புழல் ஏரியிலிருந்தும் காலை 9 மணிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பூண்டி ஏரியை பொறுத்தவரை தற்போது வரை விநாடிக்கு 12,760 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. இப்படியாக ஏரியிலிருந்து நீர் திறக்கப்படுவதால் கொசஸ்தலை உள்ளிட்ட பகுதிகளில் ஆற்றின் கரையோரம் உள்ள கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.
மறுபுறம் கனமழை காரணமாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.