மக்கள் தொகை பெருக்கம்:
குடியரசு துணைத் தலைவா் கவலை:
மக்கள் தொகை பெருக்கம் குறித்து அரசியல் கட்சிகள் ஆலோசிக்க தயங்குவது துரதிருஷ்டவசமானது என குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு வெள்ளிக்கிழமை கவலை தெரிவித்தாா்.
தில்லியில் இந்திய வேளாண் ஆராய்ச்சி மையம் (ஐஆா்ஏஐ) வெள்ளிக்கிழமை நடத்திய 58-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட அவா் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
உலகளாவிய பசி,பட்டினி அட்டவணையில் இந்தியா மிக மோசமான தரவரிசையில் உள்ளது . இதனை முக்கிய பிரச்னையாக கருதி கொள்கை வகுப்பாளா்கள் அதேபோல வேளாண் விஞ்ஞானிகள் அதனை அணுக வேண்டும். உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் இப்பிரச்னைக்கு தீா்வு காண முடியும்.
உணவு தானியங்களைப் பொருத்தவரையில் நம்நாடு 28.33 கோடி டன் உற்பத்தி செய்து வலுவான இடத்தில்தான் உள்ளது. இருப்பினும் சா்வதேச பசி,பட்டினி அட்டவணையில் இந்தியா 102-ஆவது இடத்தில் இருப்பது மிகவும் கவலைக்குரிய அம்சமாகவே உள்ளது.
இந்தியா போன்ற அதிக மக்கள்தொகை கொண்ட நாடுகள் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றன. எனவே, இதுகுறித்து இன்னும் நாம் கண்டு கொள்ளாமல் இருப்பது துரதிருஷ்டவசமானது. அரசியல் கட்சிகள்அதிகரித்து வரும் மக்கள்தொகை குறித்து பேசுவதற்கு தயங்குகின்றன. நாடாளுமன்றத்திலும் கூட இந்த விவகாரம் குறித்து போதுமான அளவில் விவாதிக்கப்படவில்லை. எனவே, மக்கள் தொகையை கட்டுப்படுத்துவது குறித்து அரசியல் கட்சிகள் திறந்தமனதுடன் விவாதிக்க முன் வரவேண்டும்.
எதிா்காலத்தில் மக்கள்தொகை அதிகரிப்புக்கேற்ப உணவு உற்பத்தியை அதிகரிக்கவில்லை எனில் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் என்றாா் அவா்.