இன்றைய முக்கிய நிகழ்வுகள் (30.11.2024)
ஒத்த_ரூபாய்_நோட்டு வெளியிடப்பட்ட நாள்
ஆம்.. முதல் ஒரு ரூபாய் தாள், 1917 ஆம் ஆண்டு இதே நவம்பர் 30 அன்று வெளியானது. இப்போது ஒரு நூற்றாண்டுக்கும் அதிக ஆண்டுகள் கழிந்து விட்ட சூழலில் பல விஷயங்கள் மாறிவிட்டன. தொடர்ந்து அச்சிடப்பட்டு வந்த ஒரு ரூபாய் தாள்கள் அந்த மாற்றங்களை பிரதிபலிக்கின்றன. முதன்முதலாக அச்சிடப்பட்ட ஒரு ரூபாய் தாள்கள், அதன் தனித்தன்மையை இன்னமும் பராமரித்துக் கொண்டிருக்கிறது. இந்த நோட்டுகள் இங்கிலாந்தில் அச்சிடப்பட்டவை. அதன் முன்புறத்தில் இடப்பக்க ஓரத்தில், இங்கிலாந்து அரசர் ஐந்தாம் ஜார்ஜ் உள்ள வெள்ளி நாணயத்தின் படத்தை இந்த தாள்கள் கொண்டிருக்கும்.. அதன் பின்புறத்தில் இந்தியாவின் எட்டு மொழிகளில் ‘ஒரு ரூபாய்’ என்று எழுதியிருக்கும். 1917 முதல் 2017 வரை, வெவ்வேறு வரிசை எண்கள் மற்றும் கையொப்பங்களுடன் 125 வெவ்வேறு ஒரு ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்காக வெளியிடப்பட்டுள்ளன . மேலும் கடந்த 100 ஆண்டுகளில் ஒரு ரூபாய் நோட்டின் வடிவமைப்பு 28 முறை மாற்றப்பட்டுள்ளது.எனினும், இந்தியாவில் அப்போதிருந்த சில சுதேச மாநிலங்கள், தங்கள் சொந்த நாணயத்தையே வைத்திருந்தனர். அவற்றில், ஹைத்திராபாத் மற்றும் காஷ்மீர் மாநிலங்கள் சொந்தமாக தங்களின் ஒரு ரூபாய் தாள்களை அச்சடிக்க அனுமதி பெற்றிருந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, சிறப்பு ஒரு ரூபாய் நோட்டுகள் இந்தியாவால் பர்மா நாட்டு பயன்பாட்டிற்கு வழங்கப்பட்டது. மத்திய கிழக்கு நாடுகளான துபாய், பஹ்ரைன், ஒமான் உள்ளிட்ட நாடுகளிலும் இந்தியப் பணம் பயன்படுத்தப்பட்டது. ‘பெர்ஷியன் ஒரு ரூபாய்’ நோட்டுகளையும் சிறப்பு தொடராக இந்திய அரசு வெளியிட்டது. இந்தியா பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகும், பாகிஸ்தானில் சில காலம் இந்த ஒரு ரூபாய்தாள்கள் பயன்படுத்தப்பட்டன என்பது கூடுதல் சுவாரஸ்யம். சிறிய காகித மதிப்பின் பயணம் பற்றிய சில சுவாரஸ்யமான உண்மைகள் இங்கே: இந்திய பணங்களில், ஒரு ரூபாய் தான் மிகவும் குறைவானது, ஆனால் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது. அனைத்து ரூபாய் நோட்டுகளையும் ரிசர்வ் வங்கி வெளியிட, ஒரு ரூபாய் தாள்களை மட்டும் இந்திய அரசு நேரடியாக வெளியிடுகிறது. அதனால் தான், இந்த ஒரு ரூபாய் நோட்டுகளில், ‘இந்திய அரசு’ என்று அச்சிடப்பட்டிருக்கும். இதில் நிதித்துறை செயலாளரின் கையெழுத்திருக்க, மற்ற நோட்டுகளில் ரிசர்வ் வங்கி ஆளுநர் கையெழுத்திட்டிருப்பார். இதன் மதிப்பு ஒரு ரூபாய்தான் என்றாலும், இதனை அச்சிடும் செலவு மிக அதிகமாகும். அதனால் தான் கடந்த 1995-ஆம் ஆண்டு ஒரு ரூபாய் தாள்களை அச்சடிப்பதை இந்திய அரசு நிறுத்திவிட்டது.ஆனால், 2015 ஆம் ஆண்டு மீண்டும் இந்த நோட்டுகள் அறிமுகமாக, 2017இல் புது மாதிரியான தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.எனினும், இதன் புழக்கம் குறைந்த அளவிலேயே உள்ளது. அதனால் பழைய பணம் அல்லது நாணயங்கள் சேகரிப்போர், இதனை தேடுகிறார்கள். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நிதித்துறை செயலாளராக இருந்த போது, அவர் கையெழுத்திட்ட ஒரு ரூபாய் தாள்களை கண்டுபிடிப்பது என்பதுகூட கடினமான ஒன்றாக உள்ளது. இது போன்ற அரிதான ஒரு ரூபாய் தாள்கள், அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஆயிரம் ரூபாய் கொடுத்து இதனை வாங்குபவர்களும் உள்ளனர். ஒரு சூழலில், பாரம்பரிய நாணயவியல் காட்சி கூடத்தில், 1985 ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட ஒரு ரூபாய் தாள் ஒன்று 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும், டாடிவாலா ஏலத்தில், 1944 ஆம் ஆண்டு அச்சடிக்கப்பட்ட 100 ஒரு ரூபாய் தாள்கள், 1 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் போனது.
புனித அந்திரேயா விழா
கத்தோலிக்கர் மற்றும் கிழக்கு மரபுவழி திருச்சபை) இயேசுவின் அப்பேஸ்தலர்களில் ஒருவர். சீமோன் பேதுருவின் சகோதரர். கலிலேயக் கடலில் பிடித்து வாழ்ந்தவர். சமுகத்தில் திறமைசாலியாக நற்சான்றுடன் வாழ்ந்தவர். திருமுழுக்கு யோவானின் சீடராக இருந்தவர். மீட்பராகி இயேசு கிறிஸ்துவின் போதனையால் அப்போஸ்தலராக மாறியவரே புனித அந்திரேயா. இவர் கலிலேயாவில் பெத்சாய்தவில் பிறந்தவர். இவர் மீன் பிடிக்கும் தொழில் செய்தவர். இயேசு திருமுழுக்குப் பெற்ற தருணத்தில் திருமுழுக்கு யோவான் தம்முடன் இருந்த சீடர்களிடம், இதோ கடவுளின் ஆட்டுக்குட்டி என்று கூறினார். இதைக்கேட்ட அந்திரேயா இயேசுவை பின் தொடர்ந்தார். இயேசு தங்கியிருக்கும் இடம் கேட்டு அவருடன் சென்று தங்கி இயேசுவின் அப்போஸ்தலராக மாறி நெருக்கமான சீடர்களில் ஒருவரானார். கிரேக்கர்களுக்கு கிறிஸ்துவை அறிமுகம் செய்தார். பின்னாளில் இயேசு இறந்து உயிர்த்த பிறகு, யார் யார் எந்தெந்த நாட்டிற்கு நற்செய்தி அறிவிக்கப்போவது என்று சீட்டுப்போட்டத் தருணத்தில் சித்தியா நாடு அந்திரேயாவுக்கு கிடைத்தது. தூய ஆவியைப் பெற்ற பின் கப்பதோசியா, கலாசியா, பிதீனியா, திராஸ், அக்காயா, பிளாக் கடல் மற்றும் கிரீஸ், துருக்கி ஆகிய இடங்களில் கிறிஸ்துவின் நற்செய்தி அறிவித்தார். அச்சமயம் அந்திரேயா நோயுற்றோரை நலமாக்கினார். பார்வையற்றவருக்கு பார்வை அளித்தார். பேய்களை ஒட்டினார். பத்தாரஸ் பட்டணத்தில் நற்செய்தி அறிவித்தபோது ஆளுநர் ஏஜெடிஸ் மனைவி மாக்ஸிமில்லாவை இறப்பின் பிடியலிலிருந்து காப்பாற்றினார். மாக்ஸிமில்லா கிறிஸ்துவை அரசராக ஏற்றுக்கொண்டார். ஆத்திரம் அடைந்த ஏஜெடிஸ் அந்திரேயாவை கைது செய்து சிறையில் அடைத்தான். கிறிஸ்துவை மறுதலிக்க பலவாறு துன்புறுத்தினான், ஏழு கசையடிகள் கொடுத்தான். அந்திரேயா கிறிஸ்துவின்மீது கொண்ட நம்பிக்கையில் உறுதியாக இருந்தார். இதனால ஆளுநர் ஏஜெடிஸ், அந்திரேயாவை சிலுவையில் அறைய தீர்மானித்தான். அந்திரேயா சிலுவை கண்டதும், “ஒ விலையேறப் பெற்ற சிலுவையே வாழ்க! என் ஆண்டவரது உறுப்புகள் உன்னை ஆபரணங்கள்போல் அலங்கரித்தன. மகிழ்ச்சியுடன் நான் உன்னிடம் வருகிறேன். உன்னை நான் உருக்கமாக அன்பு செய்கிறேன். வாஞ்சையுடன் உன்னை தேடினேன். என்னை உனது கரங்களில் ஏற்றுக்கொள். மனிதரிடையிலிருந்து என்னை எடுத்து என் தலைவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிடம் ஒப்படைப்பாயாக. உன்னில் தொங்கி என்னை மீட்டவர் உன் வழியாய் என்னை ஏற்றுக்கொள்வாராக” என்று கூறினார். இதைக்கேட்ட ஆளுநர் கோபம் கொண்டு எக்ஸ் வடிவில் சிலுவையில் அறைந்து கொன்றான். இதே, நவம்பர் 30 அன்று இறந்தார்.
அன்னை மீனாம்பாள் காலமான தினம் இன்று!
ஈ.வெ.ரா-வுக்கு `பெரியார்’ பட்டம் வழங்கிய பெண் போராளி அன்னை மீனாம்பாள் காலமான தினம் இன்று! சென்னை நகரின் முதல் பட்டியலினப் பெண் துணை மேயர்; மதராஸ் பல்கலைக்கழகத்தின் முதல் பட்டியலினப் பெண் செனட் உறுப்பினர்; தந்தை பெரியாருக்கு `பெரியார்’ பட்டம் சூட்டியவர் பெண் விடுதலைக்காகவும், பட்டியலின மக்களின் முன்னேற்றத்துக்காகவும் தன் வாழ்நாள் முழுவதும் போராடிய போராளி, மீனாம்பாள் சிவராஜ் பிறந்த தினம் இன்று. வாசுதேவப்பிள்ளை – மீனாட்சி தம்பதியருக்கு 1904 – ம் ஆண்டு மகளாகப் பிறந்த இவர், அன்னை மீனாம்பாள் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். இந்தி எதிர்ப்புப் போராட்டங்களின் முதன்மை படைத் தளபதியாக விளங்கினார். இந்தியாவில், ஆங்கிலேயர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட அரசியல் சீர்திருத்தச் சட்டம் எவ்வாறு செயல்படுகின்றன, அடுத்த கட்டமாக என்ன மாதிரியான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்பதைக் கண்டறிவதற்காக, சைமன் குழு இந்தியா வரவிருந்தது. பெரும்பாலான தலைவர்கள், சைமன் குழு இந்தியா வருவதை விரும்பவில்லை. குழு வருகையை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர். ஆனால், சைமன் குழு வருகையை ஆதரித்துப் பேசி வரவேற்றவர், அன்னை மீனாம்பாள். தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என நான்கு மொழிகளில் புலமைபெற்றிருந்தார். தன் 16-வது வயதில் பட்டியலின இயக்கத் தலைவர் சிவராஜ் என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். சென்னை மாநகராட்சியின் முதல் பட்டியலினப் பெண் துணை மேயராகப் பொறுப்பு வகித்த இவர், சென்னை மாகாண கௌரவ நீதிபதி (16 ஆண்டுகள்), திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் (6 ஆண்டுகள்) சென்னை பல்கலைக்கழக செனட் உறுப்பினர் (13 ஆண்டுகள்), சென்னை அரசு மருத்துவமனைகளின் ஆலோசனைக் குழு உறுப்பினர், லேடி வெலிங்டன் கல்லூரி தேர்வுக்குழு தலைவர் என எண்ணற்ற பதவிகளை வகித்துவந்தார். சுயமரியாதை இயக்கத் தலைவர் ஈ.வெ.ராமசாமிக்கு, 1938 -ம் ஆண்டு நவம்பர் 13-ம் தேதி, காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பெண்கள் மாநாட்டில் ’பெரியார்’ என்ற பட்டத்தை அளித்தவர், அன்னை மீனாம்பாள். பட்டியலின மக்கள் மட்டுமல்ல, ஒவ்வொரு தமிழரும் அறிந்துகொள்ளவேண்டிய, போற்றப்படவேண்டிய ஒரு பெண் போராளி, அன்னை மீனாம்பாள்.
ஐ.கே. குஜ்ரால் நினைவு தினம்
இந்தியாவின் 15-வது பிரதமர் ஐ.கே. குஜ்ரால் 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் இதே தேதியில் காலமானார் இந்தியாவின் 15-வது பிரதமரான ஐ.கே.குஜ்ரால் பஞ்சாபிலுள்ள ஜீலம் நகரில் 1919-ம் ஆண்டு பிறந்தார். இது இப்போது பாகிஸ்தானில் உள்ளது. இந்திய சுதந்திர போராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற இவர் 1942-ல் நடைபெற்ற வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்திராகாந்தியின் அமைச்சரவையில் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சராக பதவியேற்றார். பின்னர் சில காரணங்களுக்காக அந்த பதவியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டார். சோவியத் ஒன்றியத்துக்கான இந்திய தூதுவராகவும் நியமிக்கப்பட்டார். 1980-களின் நடுவில் காங்கிரஸ் கட்சியை விட்டு ஜனதா தளத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். வி.பி.சிங் அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக பணிபுரிந்தார். ஈராக் அதிபர் சதாம் உசேனை நேராக சந்தித்து பேசியவர். 1992-ம் ஆண்டு இந்தியாவின் மேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1997-ல் தேவகௌடா தலைமையிலான ஐக்கிய முன்னணிக்கு வழங்கி வந்த ஆதரவை காங்கிரஸ் விலக்கிக் கொண்டதால் அரசு கவிழும் நிலை உருவானது. பின்னர் உடன்பாடு ஏற்பட்டு, வெளியிலிருந்து ஐக்கிய முன்னணியை ஆதரிக்க காங்கிரஸ் முன்வந்தது. ஐக்கிய முன்னணி குஜ்ராலை புதிய தலைவராக தேர்ந்தெடுத்து அவரை பிரதமராக ஆக்கியது. 2012-ம் ஆண்டு நவம்பர் மாதம் இதே தேதியில் மறைந்தார்.
கணினி பாதுகாப்பு தினம்..!
கணினி பாதுகாப்பு தினம் 1988ஆம் ஆண்டில் தொடங்கியது. கணினிகள் அந்நாட்களில் வீடுகளில் காணப்படாவிட்டாலும் கூட, அவை பொதுவானதாகிவிட்டன. 1980களில் கணினிகளின் பயன்பாடு குறிப்பாக வணிகத்திலும், அரசாங்கத்திலும் தான் அதிகரித்து இருந்தது. அதோடு இணையம் பயன்படுத்த ஆரம்பித்த காலமாக இருந்தது.
இந்த நாட்களில், ஸ்மார்ட் போன்கள், டேப்லெட்டுகள் மற்றும் கணினிகள் போன்ற மின்னணு சாதனங்கள் நம் அன்றாட வாழ்க்கையின் ஒரு முக்கிய அங்கமாக அமைந்தது. முன்பை விட தகவல்தொடர்பு எளிதாகவும், திறமையாகவும் மாறிவிட்டாலும், இந்த தொழில்நுட்ப முன்னேற்றங்கள் தனியுரிமை மற்றும் பாதுகாப்பு குறித்த புதிய பிரச்சனைகளையும் கொண்டு வந்துள்ளன. நம் ஆன்லைன் தரவைப் பாதுகாக்கவும், பாதுகாப்பாக வைத்திருக்கவும் ஒரு விடுமுறை கூட அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அதையொட்டி கணினி பாதுகாப்பு தினம் ஆண்டுதோறும் நவம்பர் 30ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
பழசி ராஜா மரணித்த நாளின்று!
கேரளமண்ணிலே பதினெட்டாம் நூற்றாண்டிலே பிரிட்டிஷ் ஆதிக்கத்தை எதுத்து போராடின ஒரு மன்னரிவர். வீர கேரள வர்மா பழசி ராஜாங்கிறது அவரோட முழுப்பேரு. ‘வயநாட்டுச்சிங்கம்’ நு அவருக்கு பட்டப்பேருண்டு. இப்ப உள்ள கோட்டயம் பகுதியிலே மன்னரா இருந்தார். ஆரம்பத்திலே அவர் பிரிட்டிஷ்காரங்களுக்கு ஆதரவாத்தான் இருந்தார். திப்புசுல்தானை எதுத்து பிரிட்டிஷ் படைகள் போர்செய்தப்போ அவர் அதுக்கு ஆதரவு தெரிவிச்சார். ஆனா போர் முடிஞ்சதுமே பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் மத்த ராஜாக்கள் மேலே கடுமையான வரிகளைச் சுமத்த ஆரம்பிச்சாங்க. அதுக்கு எதிரா போராடின பழசி ராஜாவுக்கு மத்த ராஜாக்களோட உதவிகள் கிடைக்கல்லை. ஆனாலும் அவர் தன்னந்தனியா நின்னு போராடினார். கட்டாய வரிவசூலை அவர் எதிர்த்தார். அதனால அவரை பிரிட்டிஷ்காரங்க எதிரியா நினைக்க ஆரம்பிச்சாங்க. லெப்டினெண்ட் கோர்டான் தலைமையிலே அவரது அரண்மனையை தாக்கி அதை சூறையாடினாங்க. அதுக்கு முன்னாடியே அவர் ஊரைவிட்டு போயிருந்தார். தன் படையோட மலைப்பகுதியான வயநாட்டுக்குப்போய் இன்னைக்குள்ள மானந்தவாடி பக்கம் மலைகளுக்குள்ள முகாமிட்டு அங்க உள்ள ஆதிவாசிகளான குறிச்சியரை ஒண்ணாச் சேத்து ஒரு நல்ல படையை உண்டு பண்ணினார். பிரிட்டிஷார் அவரை பிடிக்க பலதடவை முய்ற்சிசெய்ஞ்சாங்க. முடியலை. அதனாலே அவர்கிட்ட சமாதானம் பேசினாங்க. ஆனா சமாதானம்கிற பேரிலே அவங்க போட்ட நிபந்தனைகளை பழசிராஜா ஏத்துக்கலை. அவர் மலைக்குப்போய் கொரில்லா முறையிலே போராட ஆரம்பிச்சார். அவரோட ஆதரவாளர்களான சுழலி நம்பியார், பெருவயல்நம்பியார், கண்ணவத்து நம்பியார் முதலிய நிலப்பிரபுக்களையெல்லாம் பிரிட்டிஷ்காரங்க பிடிச்சு ஜெயிலிலே போட்டாங்க. 1802லே அவரோட முக்கிய தளபதியான எடச்சேன குங்கன் நாயரும் இன்னொரு தளபதியான தலைக்கல் சந்துவும் சேந்து பனமரம் கோட்டையை கைப்பற்றி 70 பிரிட்டிஷ் துருப்புகளைக் கொன்னாங்க. அது பிரிட்டிஷ்காரங்களை பதற வைச்சுது. மும்பையிலே இருந்து இன்னும் படைகளை வரவழைச்சு அந்த எதிர்ப்பை அழிக்க திட்டம்போட்டாங்க. 1804லே கர்னல் மாக் லியோட் பழசிராஜாவை பிரிட்டிஷ் எதிரியா அறிவிச்சு தலைக்கு விலை வைச்சார். அவரைப்பற்றி தகவல்களை மறைக்கிரவங்களுக்கும் தூக்குத்தண்டனைன்னு அறிவிச்சார். 1804ல் தலைச்சேரிக்கு சப்கலக்டரா வந்த தாமஸ் ஹார்வி பாபர் பழசிராஜா விஷயத்தை கொஞ்சம் மென்மையா கையாளனும்னு நெனைச்சவர். ஆனால் பிரிட்டிஷ் படைகள் ரொம வெறியோட இருந்தாங்க. 1805 அக்டோபரிலே தலைக்கல் சந்து பிடிபட்டார். 1805 நவம்பர் 30 ஆம்தேதி பாபரின் படைகள் வயநாடு மலைகளில்கே பழசி ராஜாவைச் சூழ்ந்து தாக்கினாங்க. கடுமையான துப்பாக்கிச்சண்டைக்கு முன்னாடி பழசிராஜாவோட அம்புகளால பெரிசா ஒண்ணும் செய்ய முடியல்லை. சுட்டுக்கொன்னுட்டாங்க. அதோட அந்த கலகம் முடிவுக்கு வந்தது பழசிராஜாவோட உடலை பாபர் தலைசேரிக்குக் கொண்டுட்டுபோய் உரிய மரியாதையோட அடக்கம்செய்தார். ‘நம்ம எதிரியா இருந்தாலும் அவர் ஒரு பெரிய வீரன்’ அப்டீன்னு தன் மேலிடத்துக்கு அவர் எழுதியிருக்கார். இந்த பழசிராஜாதான் கேரள சரித்திரத்திலே முதல் முதலா பிரிட்டிஷ் படைகள் கூட போராடினவர். இவர் கதையை கோகுலம் சிட்பண்ட் ஓனர் படமாகக் கூட எடுத்தார்.
இந்தியாவின் முதல் விண்ணலை அறிவியலாளர் ஜெகதீஷ் சந்திர போஸ் பிறந்த நாள் இன்று!
ஒரு சராசரி இந்தியக் குடும்பத்தில் பிறந்த ‘போஸ்’ விஞ்ஞானி .போஸ் ஆக உதவியது பெரும்பாலும் பிரிட்டிஷார்கள். படிப்பில் இவருக்குள்ள அக்கறையைப் பார்த்து வியந்து அவரை இங்கிலாந்து அனுப்பி அங்கு நாலைந்து பட்ட படிப்புகளை படிக்க உதவி செய்தார்கள் அப்படி அங்குப் படித்துக் கொண்டிருக்கும் போதே கண்டுப் பிடித்த அரிய டெக்னாலஜிதான் இன்றைய இந்திய ஊழலுக்கு அச்சாரமாகும்! என்ன புரிய வில்லையா? உலகம் முழுவதுமுள்ள விஞ்ஞானிகள் பலர் மனித இனத்திற்கு நன்மை பயக்கக் கூடிய வகையில் கண்டு பிடித்த வானொலி,தொலைக்காட்சி, தொலைக் காட்சிக்குத் தேவையான அலைவாங்கி(Antenna), தொலைபேசி, கம்பியில்லாமல் தந்தி அனுப்பும் முறை, விமான நிலையக் கட்டுப்பாடு அறையில் செயற் படுத்தப்படும் ‘ராடார்’ தொழில் நுட்பங்கள் போன்ற அனைத்திற்கும் தேவையான அடிப்படை மின்னோட்ட, ‘மின்னியல்’கண்டுபிடிப்புகளை நம்ம .போஸ் தான் கண்டு பிடித்தார். ஆனால் அந்தோ பரிதாபம், இவர் தனது கண்டு பிடிப்புகளை ‘ஏனைய விஞ்ஞானிகள்’ போல் இரகசியமாக வைத்துக் கொள்ளாமல், இங்கிலாந்திலும், பிரிட்டிஷ் இந்தியாவிலும் தன்னோடு உடன் படித்த மாணவர்கள், மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பகிரங்கமாக வெளியிட்டார். இவரது கண்டுபிடிப்புகளை அடிப்படையாக வைத்தே விஞ்ஞானி ‘மார்க்கோனி’ வானொலிப் பெட்டியையும்’, கிரஹாம் பெல் தொலைபேசியையும் கண்டுபிடிக்க முடிந்தது. சாதாரணமாக எமது வீடுகளில் ஒலிக்கும் ‘அழைப்பு மணி’கூட(Calling bell) யாரால் கண்டு பிடிக்கப் பட்டது? என்று வரலாற்றின் பக்கங்களில் தேடினால் ‘ஜோசப் ஹென்றி’ என்ற பெயரே நமக்கு விடையாகக் கிடைக்கும் அவர்தான் இதைக் கண்டு பிடித்தார் என்பது உண்மையே, ஆனால் மிகவும் கடினமான செயற் பாடுகளின் மூலம் இயக்கக் கூடிய அந்தத் தொழில் நுட்பத்தை இலகுபடுத்திய/நவீனப் படுத்திய பெருமை போஸ்ஸையே சாரும். இந்த போஸ் கண்டு பிடித்த டெக்னாலஜிபடிதான் இப்போது அலைபேசி கூட சாத்தியமாகி இருக்கிறது. அதாவது இந்த 2ஜி – 3 ஜி- 4ஜி க்கெல்லாம் வித்திட்டவர் போஸ்தானாம்! இதற்கிடையில் போஸ் தனது கண்டு பிடிப்புகள் எவற்றிற்குமே காப்புரிமை வாங்காமல் இருந்துவிட்டார். இது வரலாற்றில் அவர் விட்ட மாபெரும் தவறு என்று பல அறிவியல் நிபுணர்களாலும் இன்றும் கருதப் படுகிறது. இத்தகைய விமர்சனங்களுக்கு .போஸ் பதில்தான் என்ன? “நான் எனது கண்டுபிடிப்புகளை மனித இனத்திற்கு நன்மை பயப்பதற்காகவே கண்டுபிடித்தேன், இதன்மூலம் ‘கோடி ரூபாய்கள்’ கிடைக்கும் என எதிர்பார்த்து நான் ஆராய்ச்சிகளில் இறங்கியதில்லை.இந்த மனித இனத்திற்கு எனது கண்டுபிடிப்புகளால் நன்மை கிடைக்குமானால் அதுவே நான் இம்மண்ணில் பிறப்பெடுத்தமைக்கான பயனாகும்” எனக் கூறினாராம். ஹும். இப்படியும் சில மனிதர்.
வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchil) பிறந்த தினம் இன்று
(நவம்பர் 30). இங்கிலாந்து முன்னாள் பிரதமரும், உலகத் தலைவர்களில் ஒருவராக போற்றப்பட்டவருமான வின்ஸ்டன் சர்ச்சில் (Winston Churchil) பிறந்த தினம் இன்று (நவம்பர் 30). இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டுஷயர் பகுதியில் (1874) பிறந்தார். தந்தை இங்கிலாந்து நாடாளுமன்ற உறுப்பினர். விளையாட்டு,, குறும்பு என்று இருந்த சிறுவனுக்கு படிப்பில் நாட்டம் செல்லவில்லை. 8-ம் வகுப்பில் 3 முறை தோல்வியடைந்தார். பின்னர், பொறுப்பை உணர்ந்து படித்து பட்டம் பெற்றார். ராணுவத்தில் சேர்ந்தார். போர்த் தந்திரங்கள், வெற்றிக்கான வியூக நடவடிக்கைகளால் புகழ்பெற்றார். ஒரு கட்டத்தில் தென்ஆப்பிரிக்காவில் இருந்து வெளிவந்த மார்னிங் போஸ்ட் பத்திரிகையில் சேர்ந்தார். போர்முனைச் செய்திகளை சேகரித்து வெளியிட்டதால், சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து தப்பி நாடு திரும்பியவர், அரசியலில் இறங்கினார். 1900-ல் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வென்றார். அப்போது வயது 26. பேச்சாற்றலில் வல்லவர். பல இடங்களில் உரை நிகழ்த்தி பெருமளவில் வருமானம் ஈட்டினார். இவரது செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்தது. முதல் உலகப் போரின்போது, அறிவு, ஆற்றல், போர்த் தந்திரம் நிறைந்த இவரிடம் பாதுகாப்பு அமைச்சர் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இங்கிலாந்து பிரதமராக 1940 முதல் 1945 வரை பணியாற்றினார். அரசியலில் வெற்றி, தோல்வி என பல ஏற்றத்தாழ்வுகளை சந்தித்தவர். எழுத்தாற்றல் படைத்தவர். அவ்வப்போது அரசியலில் இருந்து விலகி எழுத்துப் பணியை மேற்கொண்டார். 4 பாகங்கள் கொண்ட ‘வேர்ல்டு கிரைசிஸ்’ என்ற நூல், ‘மால்பரோ: ஹிஸ் லைஃப் அண்ட் டைம்ஸ்’ என்ற வரலாற்று நூல் ஆகியவை இவருக்குப் பெரும் புகழ் பெற்றுத் தந்தன. பல கட்டுரைகள் எழுதினார். நன்கு ஓவியமும் வரையக்கூடியவர். மீண்டும் அரசியல் களத்தில் இறங்கியவர், அடுத்து வந்த தேர்தலில் போட்டியிட்டு வென்றார். பெரும்பாலான நாடுகளை வென்று முன்னேறிக் கொண்டிருந்த ஹிட்லரின் படை இங்கிலாந்தையும் கைப்பற்ற முயன்றது. இந்த சோதனையான கட்டத்தில் பாதுகாப்புத் துறையின் பொறுப்பு மீண்டும் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. கடுமையாக உழைத்து, கச்சிதமாகத் திட்டம் தீட்டி, வியூகம் அமைத்து எதிரிப் படைகளைத் தடுப்பதிலும் தாக்குவதிலும் கவனமாக செயல்பட்டார். ஹிட்லர்-முஸோலினி என்ற ஆற்றல் வாய்ந்த சக்திகளுக்கு எதிராக உலக நாடுகளைத் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டார். அமெரிக்கா உட்பட பல நாட்டுத் தலைவர்களின் ஒத்துழைப்பும் சேர்ந்து நேச நாடுகளின் கூட்டுப்படை உருவானது. ஜெர்மனி வீழ்ந்தது. போர்க்கள நெருக்கடிகளுக்கு இடையே எழுதுவதையும் தொடர்ந்தார். ‘தி செகண்ட் வேர்ல்டு வார்’ என்ற 6 தொகுதிகள் கொண்ட நூலை எழுதினார். 1953-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். இவர் எழுதிய ‘எ ஹிஸ்டரி ஆஃப் தி இங்கிலீஷ் ஸ்பீக்கிங் பீப்பிள்ஸ்’ என்ற நூல் 4 தொகுதிகளாக வந்தன. இங்கிலாந்தின் எழுச்சி நாயகனாகக் கொண்டாடப்பட்டார். இவர் ஆற்றிய போட் உரைகள் தொகுக்கப்பட்டு பல நூல்களாக வெளிவந்தன. ஆனால் இந்தியாவைப் பற்றியும் இந்தியத் தலைவர்கள் குறித்தும் இவர் நல்ல கருத்து கூறியவரில்லை. அரசியல்வாதி, தலைசிறந்த பேச்சாளர், எழுத்தாளர், வரலாற்றியலாளர் என்ற பன்முகப் பரிமாணம் கொண்ட வின்ஸ்டன் சர்ச்சில் 91-வது வயதில் (1965) மறைந்தார்.
ஆஸ்கார் வைல்ட் நினைவு நாளின்று
ஐரிஷ் எழுத்தாளரான ஆஸ்கார் வைல்டு. எழுத்துப்பணியில் மட்டுமின்றி நாடக ஆசிரியராகவும், கவிஞராகவும் புகழ் பெற்றவர்.பல சிறுகதைகளையும் ஒரு புதினத்தையும் எழுதியுள்ள ஆஸ்கார் வைல்டு, தனது நகைச்சுவை வாய்ந்த படைப்புகளின் மூலம் பிரபலமானவர். இங்கிலாந்தின் மிகச்சிறந்த நாடக ஆசிரியராகவும், புகழ்பெற்ற மனிதர்களில் ஒருவராகவும் விளங்கினார். இவரால் உருவாக்கப்பட்ட சில நாடகங்கள் இன்றும் அரங்கேற்றம் கண்டு வருவது இவரது பெருமையை நமக்கு உணர்த்துகின்றது. இவரின் பொன்மொழிகளில் சில $ வாழ்க்கையில் இரண்டே துயரங்கள்தான்; ஒன்று, ஒருவருக்கு என்ன தேவைப்படுகிறதோ அது அவர்களுக்குக் கிடைப்பதில்லை மற்றொன்று ஒருவருக்கு எது தேவையில்லையோ அது அவர்களுக்குக் கிடைக்கின்றது. $ வானிலை பற்றிய உரையாடல் என்பது கற்பனை செய்யமுடியாத நிலையின் கடைசிப் புகலிடம். $ எந்த மனிதனும் தனது கடந்த காலத்தை திரும்ப வாங்கும் அளவிற்கு பணக்காரனாக இல்லை. $ நாம் அனைவருமே பள்ளத்தில்தான் இருக்கிறோம், ஆனால் நம்மில் சிலரே நட்சத்திரங்களைப் பார்க்கிறார்கள். $ வெற்றி என்பது ஒரு அறிவியல்; அதற்கான நிபந்தனைகள் உங்களிடம் இருந்தால் உங்களுக்கு வெற்றி கிடைக்கும். $ உங்கள் இதயத்தில் அன்பை வைத்துக்கொள்ளுங்கள்; அன்பு இல்லாத வாழ்க்கை, சூரிய ஒளியற்ற, இறந்த மலர்களைக் கொண்ட தோட்டத்தைப் போன்றது. $ நமது செயல்களில் நாம் செய்யும் தவறுகளுக்கு நாம் கொடுத்துள்ள பெயரே அனுபவம் என்பதாகும். $ ஒரு மனிதன் தனது எதிரிகளைத் தேர்வு செய்யும்போது மிகவும் கவனமாக இருக்க முடியாது. $ பெண்களைப் படைத்ததன் நோக்கம், அவர்களின் மீது அன்பு செலுத்துவதற்காகவே தவிர அவர்களை புரிந்துகொள்வதற்காக அல்ல. $ சிறிய அளவிலான நேர்மை ஒரு ஆபத்தான விஷயம் பெரிய அளவிலான நேர்மை முற்றிலும் ஆபத்தான விஷயம்.
பெரியம்மைத் தடுப்பூசி போடும் (அம்மைக் குத்தும்) பயணத்தை, டாக்டர் ஃபிரான்சிஸ்கோ சேவியர் டி பால்மிஸ் துவங்கிய நாள்.
1803 – பால்மிஸ் சுற்றுப்பயணம் என்றழைக்கப்படும், பெரியம்மைத் தடுப்பூசி போடும் (அம்மைக் குத்தும்) பயணத்தை, டாக்டர் ஃபிரான்சிஸ்கோ சேவியர் டி பால்மிஸ் துவங்கிய நாள் நவம்பர் 30. அமெரிக்காவில் ஏற்படுத்தப்பட்ட ஸ்பானிய குடியேற்றங்களில் பெரியம்மையின் பாதிப்பு கடுமையாக இருந்ததால், அதனைக் களைய இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. ஸ்பெயினின் ஆறாம் சார்லஸ் அரசரின் மகள், இளவரசி மரியா தெரசா இந்நோயினால் பலியானார். அதனால், அரசவை மருத்துவரான பால்மிஸ் இப்பயணத்தை மேற்கொள்ள அரசர் ஆதரவளித்தார். தற்காலத்தில், தடுப்பு மருந்துகள் குளிர்பதனப் பெட்டிகளில் பாதுகாக்கப்பட்டு, மருந்து எடுத்துச் செல்வதற்கெனத் தயாரிக்கப்பட்ட, குளிர்ச்சியான கலன்களில் கொண்டு செல்லப் படுகின்றன. ஆனால், அக்காலத்தில் இத்தகைய வசதிகள் இல்லை. உண்மையில், வெற்றிகரமான தடுப்பூசி முறை என்பதே 1798இல் எட்வர்ட் ஜென்னரின் பெரியம்மைத் தடுப்பு மருந்துக்குப் பின்னர்தான் உருவானது. அதனால்தான் அவர் தடுப்பூசியின் தந்தை என்றழைக்கப்படுகிறார். பெரியம்மைக்கு பசுஅம்மை (Cowpox) நோய்த்தொற்றிலிருந்தே மருந்து அளிக்கப்பட்டதால், இப்பயணத்தில் 8 – 10 வயதுடைய 22 அனாதைச் சிறுவர்கள், மருந்தை எடுத்துச் செல்லும் கலனாகப் பயன்படுத்தப்பட்டார்கள். ஆம்! இந்தச் சிறுவர்களில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு நோய்த்தொற்று ஏற்படுத்தப்படுவதன்மூலமே மருந்து எடுத்துச் செல்லப்பட்டது. மூன்றாண்டுகள் நீடித்த இப்பயணம் கானரி தீவுகள், கொலம்பியா, ஈக்வடார், பெரு, மெக்சிகோ, ஃபிலிப்பைன்ஸ், சீனா ஆகிய நாடுகளில் அம்மைக் குத்தி, 1806இல் மீண்டும் ஸ்பெயினை வந்தடைந்தது. இப்பயணத்தில் அம்மை குத்தப்படாத பகுதிகளுக்கு இன்னும் சில பயணங்களும் 1810 வரை வேறு மருத்துவர்களுடன் மேற்கொள்ளப்பட்டன. உலக வரலாற்றில் முதன்முதலில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய அளவிலான நோய்த்தடுப்பு முயற்சி என்பதுடன், (1946இல்) உலக சுகாதார நிறுவனம் உருவாவதற்கு சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன்பே இந்தச் சாதனை நிகழ்த்தப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. பெரியம்மையை ஒழிப்பதிலும், நோய்த்தடுப்புமுறைகளின் வளர்ச்சியிலும் இந்தப் பயணம் செலுத்தியிருக்கும் பங்கு மிகப் பெரியது.