சீனாவில் இருக்கும் இந்தியர்களை மீட்க தில்லியில் இருந்து 12 மணிக்கு புறப்படுகிறது சிறப்பு விமானம்
புதுதில்லி: சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ள வூஹான் நகரத்தில் இருக்கும் இந்தியா்களை அங்கிருந்து அழைத்து வருவதற்காக இன்று வெள்ளிக்கிழமை (ஜன.31) மதியம் 12 மணிக்கு தில்லியில் இருந்து சிறப்பு விமான புறப்படுகிறது.
சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ள வூஹான் நகரம் உள்ளிட்ட ஹுபே மாகாணத்தில் சுமாா் 600 இந்தியா்கள் தங்கியிருப்பதாகத் தெரியவந்துள்ளது. இதையடுத்து அங்கு இருக்கும் இந்தியா்களை அங்கிருந்து அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளை இந்திய அரசு மேற்கொண்டுள்ளது.
வூஹானில் இருந்து 2 ஏா் இந்தியா விமானங்கள் வெள்ளிக்கிழமை மாலை அடுத்தடுத்து புறப்படும் என்றும், அதில் முதல் விமானத்தில் வூஹான் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருக்கும் இந்தியா்களும், அடுத்த விமானத்தில் ஹுபே மாகாணத்தின் இதர பகுதிகளில் உள்ள இந்தியா்களும் அழைத்துச் செல்லப்படவுள்ளதாக சீனாவிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்திருந்தது.
அவா்களது பயண நடைமுறைகளுக்கான ஆவண நடவடிக்கைகளை இந்திய அரசும், இந்தியத் தூதரகமும் இணைந்து சீன வெளியுறவு அமைச்சகத்துடன் மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், சீனாவில் கரோனா வைரஸ் பாதிப்பு தீவிரமாக உள்ள வூஹான் இந்தியா்களை அங்கிருந்து அழைத்து வருவதற்காக இன்று வெள்ளிக்கிழமை (ஜன.31) மதியம் 12 மணிக்கு தில்லியில் இருந்து சிறப்பு விமான புறப்படுகிறது.
இன்று குறைந்தது 400 இந்தியர்கள் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும், விமானம் மதியம் 12 மணிக்கு புறப்பட்டு நாளை சனிக்கிழமை அதிகாலை 2 மணிக்கு (பிப்.1) தில்லி திரும்பும் என ஏர் இந்தியா சிஎம்டி அஸ்வானி லோகானி தெரிவித்துள்ளார்.
இதனிடையே கரோனா வைரஸ் தொடர்பாக உலக சுகாதார அமைப்பு உலகளாவிய அவசரநிலையை இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது. மேலும் சீனாவுக்கான சர்வதேசப் போக்குவரத்தைக் கட்டுப்படுத்த எந்தக் காரணமும் இல்லை என்றும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்த வைரஸ் நோய் தொற்று பாதிப்பு சீனாவை அடுத்து உலக நாடுகளிலும் பரவி அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் உலகளவிலான சுகாதார அவசரநிலை ஏற்பட்டிருப்பதாக உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. மேலும் ஐக்கிய நாடுகள் சபையில் இடம்பெற்றுள்ள அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் அவசரநிலை சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது.
இதையடுத்து ஒவ்வொரு நாடும் தனது எல்லைகளை மூடுவது, விமானங்களை ரத்து செய்வது, விமான நிலையங்களுக்கு வரும் நபர்களைத் தீவிரமாக கண்காணிப்பது அல்லது பிற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பாக தீர்மானிக்க முடியும் என தெரிய வந்துள்ளது.