“ஸ்பெக்டாக்யுலர் வெடிப்பு” நிகழ்ந்த நாள் இன்று..!
உலகின் மிக அழகான எரிமலை என்று குறிப்பிடப்படும், கீலவியா எரிமலையின், ‘மிகவும் கண்கவர் ஸ்பெக்டாக்யுலர் வெடிப்பு’ நிகழ்ந்த நாள் நவம்பர் 14!
காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு என்பதைப் போல, அழிவை ஏற்படுத்தக் கூடியவற்றில் காணப்பட்டாலும், அழகு அழகுதானே? மிக அழகான கடற்கரைகளுக்கும், சுற்றுலாவுக்கும் புகழ்பெற்ற ஹவாய் தீவுகளில்தான் இந்த எரிமலையும் உள்ளது. சில ஆண்டுகளுக்கு நிலவரப்படி, உலகின் ‘மோஸ்ட் ஆக்ட்டிவ்’ எரிமலையும் இதுதான். 1959 நவம்பர் 14இல் தொடங்கிய வெடிப்பின்போது, சுமார் 1,900 அடி உயரத்துக்கு எரிமலைக் குழம்பு பீய்ச்சியடித்து, உலகின் மிக அதிக உயரத்திற்கு ஏற்பட்ட ‘லாவா ஃபவுண்ட்டன்’களில் ஒன்றாகவும் இது மாறியது. மிக அதிக எரிமலைக் குழம்பு வெளியேறிய டிசம்பர் 15இல், இதிலிருந்து மணிக்கு 51 கோடி கன அடி எரிமலைக் குழம்பு வெளியேறியதாம்! அவ்வாறு வெளியேறி, எரிலைக் குழம்பு ஏரியாக(லாவா லேக்) உருவாகி, வழிந்தோடிய இடத்தில், சுமார் 50-200 அடி அகலத்திற்கு, 50 அடி உயரத்திற்கு அது இறுகிப் படிந்திருக்கிறது. இந்த எரிமலை, இரண்டே முக்கால் லட்சம் ஆண்டுகளுக்கு முன்பாக முதன்முதலாக வெடித்திருக்கும் என்று ஆய்வாளர்கள் கணித்திருக்கிறார்கள்.
உலகின் இரண்டாவது மிகப்பெரிய எரிமலையான மவ்னா லோவா எரிமலையும் ஹவாயில்தான் உள்ளது. அதிக உயரமின்றி மிகப்பெரிய பரப்பளவிற்கு விரிந்திருக்கும், கேடய(ஷீல்ட்) எரிமலை என்றழைக்கப்படும் வகையைச் சேர்ந்தது இந்த மவுனா லோவா. பசிஃபிக் கடலிலுள்ள, டாமு மாசிஃப் என்ற கடலடி எரிமலை மட்டும்தான் இதைவிடப் பெரியது. இவற்றைத் தவிர இன்னுமிரண்டு, உயிர்ப்பான எரிமலைகளைக்கொண்டுள்ள ஹவாயில் 1912இல் ஏற்படுத்தப்பட்ட, ‘ஹவாய் எரிமலை ஆய்வு மையம்’, உயிர்ப்புள்ள எரிமலைகள் குறித்த ஆய்வில் முன்னணியில் இருப்பதுடன், உலகிலேயே மிகவும் நம்பிக்கைக்குரியதாகவும் உள்ளது.
இந்த எரிமலைப் பகுதிகளை உள்ளடக்கி, ‘ஹவாய் எரிமலைகள் தேசியப் பூங்கா’ 1916இல் உருவாக்கப்பட்டது. எரிமலைகள், அவற்றின் செயல்பாடுகள், அருகாமை பகுதிகளில் வாழும் தாவரங்கள், விலங்குகள் ஆகிவற்றை ஆய்வு செய்ய வருபவர்களுக்கு இந்தப் பூங்கா உதவுகிறது. தொடர்ந்து வெடித்துக்கொண்டிருந்தாலும், எரிமலைக்குழம்பு அதிக ஆபத்தின்றி, கண்கவரும் வகையில் வழிந்தோடும் இந்த கீலவியா எரிமலையின் அருகிலேயே சென்று பார்க்க முடிவதால், ஏராளமான சுற்றுலாப் பயணிகள் இதனைக் காண வருகிறார்கள்.