ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியை ஆரம்பித்துவிட்டார் தோனி: பயிற்சியாளர் தகவல்….
மூத்த வீரரான தோனி கடந்த 2019 ஒருநாள் உலகக் கோப்பை போட்டி அரையிறுதியில் இருந்து எந்த ஆட்டத்திலும் பங்கேற்கவில்லை. டெஸ்ட்டில் இருந்து ஏற்கெனவே ஓய்வு பெற்றுவிட்ட அவா், ஒருநாள், டி20 ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு முடிவை அறிவிப்பாரா என எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. வரும் ஐபிஎல் தொடரில் தோனி சிறப்பாக ஆடினால், டி20 உலகக் கோப்பை அணியில் இடம் பெற வாய்ப்புள்ளது என பயிற்சியாளா் சாஸ்திரி கூறியிருந்தாா். இந்நிலையில் 2019-20 ஆண்டுக்கான 27 வீரா்கள் பெயா்கள் கொண்ட ஒப்பந்தப் பட்டியலை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதில் தோனியின் பெயா் நீக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தற்போது ஜார்கண்ட் கிரிக்கெட் அணியினருடன் பயிற்சியில் இணைந்துள்ளார் தோனி. அவர் பயிற்சியில் ஈடுபடும் விதம் குறித்து ஜார்கண்ட் பயிற்சியாளர் ராஜிவ் குமார் கூறியதாவது:
பல மாதங்களாக பயிற்சியில் ஈடுபடாவிட்டாலும் அவருடைய பேட்டிங்கில் துளி தடுமாற்றமும் தென்படவில்லை. கடைசியாக நாங்கள் பேசியபோது, ஜனவரியில் பயிற்சியை ஆரம்பிப்பேன் என்றார். சொன்னதுபோலவே ஆரம்பித்துவிட்டார். ஒரு ஜார்கண்ட் கிரிக்கெட் வீரர் எப்படிப் பயிற்சியில் ஈடுபடுவாரோ அதேபோல முனைப்புடன் செயல்பட்டார் தோனி. பேட்டிங் பயிற்சி அருமையாக அமைந்தது. பந்துகள் அழகாக அவருடைய பேட்டின் நடுப்பகுதியில் பட்டுப் பறந்தன. எப்போது மீண்டும் இந்திய அணிக்காக விளையாடுவார் என்பது குறித்து நான் அவரிடம் பேசவில்லை.
ஆனால் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சியை ஆரம்பித்துவிட்டார் தோனி. ஞாயிறு முதல் ஜார்கண்ட் அணி ரஞ்சிப் போட்டியில் விளையாடினாலும் தோனி தன்னுடைய பயிற்சியைத் தொடர்வார். பந்துவீச்சாளர்களிடம் நிறைய பேசி அவர்களுக்குத் தகுந்த ஆலோசனைகளை வழங்கியுள்ளார் என்று கூறினார்.