உதவி ஆய்வாளர் மீது தாக்குதல்…
சிக்கிய நபருக்கு மாவுக்கட்டு..!
ராமநாதபுரம் அருகே உதவி ஆய்வாளரை தாக்கிய நபர் போலீசாரிடம் சிக்கினார். அவர் கழிவறையில் வழுக்கி விழுந்ததில் எலும்பு முறிவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மாவு கட்டு போடப்பட்டது.கடந்த 10ஆம் தேதி இரவு ராமநாதபுரம் அடுத்த உச்சிப்புளி பகுதியில் பேக்கரியில் தேநீர் அருந்திக் கொண்டிருந்த உதவி ஆய்வாளர் ஜெயபாண்டியை சிலர் சுற்றிவளைத்து கொலைவெறித் தாக்குதல் நடத்தினர்.
இதில் காயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஜெயபாண்டி தாக்கப்பட்ட சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில், தாக்குதல் நடத்திய நபர்கள் உச்சிபுளியை அடுத்த நாகாச்சியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.அந்த நபர்கள் குறித்து துப்பு கொடுத்தால் ரூபாய் 5 ஆயிரம் சன்மானம் வழங்கப்படும் என்று காவல் துறை அறிவித்தது. இந்நிலையில், போலீசாரின் தேடுதல் வேட்டையில் நாகாச்சியைச் சேர்ந்த கணேசன் என்பவன் கைது செய்யப்பட்டான்.அவன் கழிவறையில் வழுக்கி விழுந்ததில் இரண்டு கால்கள் மற்றும் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து கணேசன் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் மாவுகட்டுப்போட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவத்தில் தொடர்புடைய மற்றவர்களை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.இதற்கிடையே செல்போன் வாட்ஸ் அப்பில் வீர வசனம் பேசி வந்த கணேசன், போலீசில் பிடிபட்டதும், தான் மதுபோதையில் போலீசாரை தாக்கிவிட்டதாகவும், காவல்துறை நமது நண்பர்கள், அவர்களை தாக்கியதற்கு மன்னிப்பு கோருவதாகவும் வீடியோ பதிவிட்டுள்ளார்.