“அபிநய சரஸ்வதி” சரோஜா தேவி – சௌந்தரம் சீனிவாசன்
07-01-2020
——————–
இன்று “அபிநய சரஸ்வதி”, ” கன்னடத்துப் பைங்கிளி”, “அபிநய காஞ்சன மாலா”, ” சல்லாப சுந்தரி”, “அபிநய பாரதி” என்றெல்லாம் திரையுலகில் புகழ் பெற்ற நடிகை #சரோஜா_தேவி அவர்களின் 82 ஆம் ஆண்டு பிறந்தநாள்.
பிறப்பு
சரோஜாதேவி அவர்கள், 1938 ஆம் ஆண்டு ஜனவரி 07 ஆம் நாள் இந்தியாவின் கர்நாடக மாநிலத்திலுள்ள பெங்களூரில் பைரப்பா என்பவருக்கும், ருத்ரம்மாவிற்கும் நான்காவது மகளாகப் பிறந்தார். இவருடைய தந்தை பெங்களூரில் ஒரு காவல்துறை துறை அதிகாரியாக பணியாற்றி வந்தார்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி:
சரோஜாதேவி அவர்கள், பெங்களூரில் உள்ள ‘புனித தெரசா’ பள்ளிக்கூடத்தில் தன்னுடைய பள்ளிப்படிப்பைத் தொடங்கினார். அப்பொழுது, பள்ளிகளுக்கிடையே நடந்த, ஒரு இசைப்போட்டியில் இந்திப் பாடல் ஒன்றைப் பாடினார். அந்த நிகழ்ச்சிக்கு கன்னடத் திரை உலகின் பிரபல நடிகரும், பட அதிபருமான ஹொன்னப்ப பாகவதர் வந்திருந்தார். சரோஜாதேவி பாடலைக் கேட்ட அவர், ‘இந்தப் பெண் நன்றாக பாடுகிறாள், இவரை சினிமாவில் பின்னணிப் பாட வைக்கலாம்’ என நினைத்து, அவரை ஸ்டூடியோவுக்கு அழைத்துச் சென்று குரல் வளத்திற்கான சோதனை செய்தார். அப்பொழுது அவருக்கு, ‘சரோஜாதேவியை நடிகையாக்கினால் என்ன?’ என்ற எண்ணம் தோன்றியது. அதனால், ஹொன்னப்ப பாகவதர் தான் தயாரித்த ‘மகாகவி காளிதாஸ்’ என்ற கன்னடப் படத்தில், கதாநாயகியாக சரோஜாதேவியை சினிமாத் துறையில் அறிமுகம் செய்தார்.
1955 ஆம் ஆண்டு ஹன்னப்ப பாகவதர் தயாரிப்பில் வெளியிடப்பட்ட ‘மகாகவி காளிதாஸ்’ திரைப்படம் சினிமா ரசிகர்களுக்கிடையே பெரும் வரவேற்பை பெற்றது. விருதும் பெற்றது. அவருடைய முதல் படமே அவருக்கு மாபெரும் வெற்றிப் படமாக அமைந்ததால், தொடர்ந்து பட வாய்ப்புகள் வரத் தொடங்கின. குறுகிய காலத்திற்குள் தமிழ், தெலுங்கு போன்ற பிற மொழித் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கிய அவர், சுமார் 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து ‘அபிநய சரஸ்வதி’ என அழைக்கப்பட்டார்.
திரைக்கதாசிரியர், எழுத்தாளர் திரு.சின்ன அண்ணாமலை அவர்கள் ஒருநாள் சென்னை மெரீனா பீட்சில் காத்தாட நடந்து கொண்டிருந்தபோது அங்கே தற்செயலாக பத்மா தனது தோழியுடன் வருவதைக் கண்டார். சின்ன அண்ணாமலை அவர்கள் பத்மா அவர்களிடம் நலம் விசாரித்து விட்டு இவர் யார்? என்று கேட்டார். எனது தோழி. பெயர் ராதா தேவி. பெங்களூரில் வசிக்கிறார். ஒரு கன்னடப் படத்துல பிரபல நடிகர் ஹொன்னப்ப பாகவதருடன் நடித்ததிருக்கிறார். என்று தனது தோழியை அறிமுகம் செய்து வைத்தார்.
சின்ன அண்ணாமலை அவர்கள் தான் எழுதிய “தங்கமலை ரகசியம்” கதை திரைப்படமாகிக் கொண்டிருப்பது நினைவுக்கு வர உடனே இயக்கநர் பந்துலுவைத் தொடர்பு கொண்டு பேசி அப்படத்தில் சரோஜா தேவியை நடனமாது ரோலில் நடிக்க வைத்தார்.
“தங்கமலை ரகசியம்” (1957) படத்தில் 19 வயதில் பருவப் பெண்ணாக அழகான தோற்றத்தோடு “மோகினி” என்ற நடனமாது கதாபாத்திரத்தில் கவிஞர் கு.மா.பாலசுப்பிரமணியம் அவர்கள் எழுதி பின்னணிப் பாடகி ஏ.பி.கோமளா, கே.ராணி இருவர் குரல்களில் “யவ்வனமே என் யவ்வனமே” என்று குழுவினருடன் ஆடிப்பாடும் பாடலில் நடித்தார். இதுவே அபிநய சரஸ்வதி சரோஜா தேவி அவர்களின் தமிழ்த் திரைப்பட பிரவேசம்.
(பத்மா என்பவர் பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர்களில் முன்னோடியான திரு.சுப்பிரமணியம் அவர்களின் புதல்வி. பின்னாளில் பரதநாட்டியத்தில் சிறந்து விளங்கியவர்).
“யவ்வனமே என் யவ்வனமே” பாடல்
இந்த நேரத்தில், மக்கள் திலகம் தன்னுடன் பானுமதியை கதாநாயகியாக வைத்து “நாடோடி மன்னன்” திரைப்படத்தை வெகு நாட்களாக முடிக்க முடியாமல் உருவாக்கிக் கொண்டிருந்தார். மேலும் திரைக்கதாசிரியர் மா.லெட்சுமணன் மற்றும் ஏ.எல்.எஸ் திரைப்பட அதிபர் திரு.ஏ.எல்.சீனிவாசன், இநக்குநர் ப.நீலகண்டன் இவர்கள் கூட்டணியில் “திருடாதே”(1961) திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருந்தார் மக்கள் திலகம். அபிநய சரஸ்வதி கதாநாயகியாக எம்.ஜி.ஆருடன் நடித்த முதல் திரைப்படம் இதுவே. இதற்குப்பின் அவர் எம்.ஜி.ஆருடன் சுமார் 28 படங்களில் நடித்து அதிகபட்ச எண்ணிக்கையில் நடித்த பெருமையைப் பெற்றார்.
பானுமதி அவர்கள் “நாடோடி மன்னன்” படத்தினால் வேறு படங்கள் நடிக்க முடியாமல் சிரமத்திற்கு உள்ளானார். இதனால் சற்று கோபத்துடன் “ஒரு படம் எடுப்பதற்கு இத்தனை நாட்களா? இயக்க முடியவில்லை என்றால் வேறு ஒருவரை வைத்து இயக்கி முடிப்பது தானே?” என்று எம்.ஜி.ஆரிடம் பேச, அவருக்கு வந்தது ஆத்திரம். “இது நான் உருவாக்கும் திரைப்படம். நான்தான் இயக்குநர். என் இஷ்டம் போல்தான் எடுப்பேன். நடிக்க வேண்டியது மட்டுமே உங்கள் வேலை. இஷ்டமிருந்தால் நடியுங்கள். இல்லையென்றால் விலகிக் கொள்ளுங்கள்” என்று எம்.ஜி.ஆர்.சொல்ல, அத்துடன் எம்.ஜி.ஆர் பானுமதி ஏற்கனவே எடுக்கப்பட்டக் காட்சிகளோடு நிறுத்தி விட்டார் எம்.ஜி்.ஆர். பானுமதியின் கதாபாத்திரத்தை இறந்து விட்டது போல் எடுத்து அந்தக் கதாபாத்திரத்துக்கு முற்றுப்புள்ளியும் வைத்தார் எம்.ஜி்ஆர்.
மேற்கொண்டு இரண்டாம் கதாநாயகியாக யாரைத் தேர்ந்தெடுப்பது என்ற யோசனையில் இருந்த எம்.ஜி.ஆருக்கு “தங்கமலை ரகசியம்” படத்தில் நடித்துப் பிரபலமான அபிநய சரஸ்வதி சரோஜா தேவி நினைவுக்கு வர, அவரையே நடிக்க வைத்து ஒரு வழியாக “நாடோடி மன்னன்”(1958) படத்தை முடித்து வெளியிட்டார் எம்.ஜி.ஆர்.
1959 ஆம் ஆண்டு ஸ்ரீதரின் இயக்கத்தில் வெளிவந்த ‘கல்யாணப்பரிசு’ திரைப்படம், தமிழ் சினிமாவில் அவருக்கு நட்சத்திர அந்தஸ்து பெற்றுத்தந்தது.
இதனைத் தொடர்ந்து, ‘வாழவைத்த தெய்வம்’, ‘பார்த்திபன் கனவு’, ‘பாலும் பழமும்’, ‘குடும்பத்தலைவன்’, ‘பாசம்’, ‘ஆலயமணி’, ‘பெரிய இடத்துப் பெண்’, ‘தர்மம் தலைக்காக்கும்’, ‘நீதிக்குப் பின் பாசம்’, ‘படகோட்டி’, ‘புதிய பறவை’, ‘எங்க வீட்டுப் பிள்ளை’, ‘நான் ஆணையிட்டால்’, ‘நாடோடி’, ‘பறக்கும் பாவை’, ‘அன்பே வா’, ‘குல விளக்கு’, ‘தாய்மேல் ஆணை’ போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் மாபெரும் நட்சத்திரமாக வெற்றிக் கொடி நாட்டினார்.
‘தங்கமலை ரகசியம்'(1957) ‘நாடோடி மன்னன்’ (1958), ‘சபாஷ் மீனா’ (1958), ‘தேடி வந்த செல்வம்’ (1958), ‘பாகப்பிரிவினை’ (1959), ‘கல்யாண பரிசு’ (1959), ‘வாழவைத்த தெய்வம்’ (1959), ‘எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’ (1960), ‘இரும்பு திரை’ (1960), ‘பார்த்திபன் கனவு’ (1960), ‘மணப்பந்தல்’ (1960), ‘பாலும் பழமும்’ (1961), ‘பனித்திரை’ (1961), ‘திருடாதே’ (1961), ‘குடும்பத்தலைவன்’ (1962), ‘பாசம்’ (1962), ‘ஆலயமணி’ (1962), ‘இருவர் உள்ளம்’ (1963), ‘பெரிய இடத்துப் பெண்’ (1963), ‘பணத் தோட்டம்’ (1963), ‘தர்மம் தலைக்காக்கும்’ (1963), ‘நீதிக்குப் பின் பாசம்’ (1963), ‘படகோட்டி’ (1964), ‘தெய்வத்தாய்’ (1964), ‘புதிய பறவை’ (1964), ‘என் கடமை’ (1964), ‘எங்க வீட்டுப் பிள்ளை’ (1965), ‘கலங்கரை விளக்கம்’ (1965), ‘நான் ஆணையிட்டால்’ (1966), ‘நாடோடி’ (1966), ‘பறக்கும் பாவை’ (1966), ‘அன்பே வா’ (1966), ‘குல விளக்கு’ (1969), ‘தேனும் பாலும்’ (1971), ‘தாய்மேல் ஆணை’ (1988), ‘தர்ம தேவன்’ (1989), ‘ஒன்ஸ் மோர்’ (1997), ‘ஆதவன்’ (2009), ‘இளங்கதிர் செல்வன்’ (2010).
அபிநய சரஸ்வதி’ சரோஜாதேவி அவர்கள், 1967 ஆம் ஆண்டு ஸ்ரீஹர்ஷா என்பவரை திருமணம் செய்துகொண்டார். ஸ்ரீஹர்ஷா பி.ஈ பட்டம் பெற்ற ஒரு என்ஜினியர் ஆவார்.
விருதுகளும், மரியாதைகளும்
1965 – கர்நாடக அரசால் ‘அபிநய சரஸ்வதி’ என்னும் பட்டம்.
1969 – இந்திய அரசால் ‘பத்ம ஸ்ரீ’ விருது.
1980 – கர்நாடக அரசால் ‘அபினண்டன் காஞ்சனா மாலா’ விருது.
1989 – கர்நாடக அரசின் ‘ராஜ்யோத்சவ’ விருது.
1992 – மத்திய அரசால் ‘பத்ம பூஷன்’ விருது.
1997 – சென்னை சினிமா எக்ஸ்பிரஸ் மூலம் ‘சாதனையாளர் விருது’.
1997 – தமிழக அரசால் ‘எம்.ஜி.ஆர்’ விருது.
2001 – ஆந்திர அரசால் ‘என்.டி.ஆர் தேசிய’ விருது.
2003 – ‘தினகரன் சாதனையாளர்’ விருது.
2006 – பெங்களூர் பல்கலைக்கழகம் சார்பில் ‘கௌரவ டாக்டர் பட்டம்’.
2007 – ரோட்டரி ‘சிவாஜி’ விருது.
2007 – ‘என்.டி.ஆர்’ விருது.
2008 – வாழ்நாள் சாதனையாளருக்கான ‘இந்திய அரசின் தேசிய விருது’.
2009 – நாட்டிய ‘கலாதர்’ விருது.
2009 – கர்நாடக அரசின் ‘ராஜகுமார்’ தேசிய விருது.
2010 – தமிழ்நாடு அரசின் ‘வாழ்நாள் சாதனையாளருக்கான’ விருது
திரைப்படத்துறையில் சுமார் கால் நூற்றாண்டுக்கும் மேல் முன்னணிக் கதாநாயகியாக விளங்கிய இவர், சினிமாவில் தன்னுடைய நடிப்பிற்கென தனி பாணியை உறவாக்கிக் கொண்டவர். ஆடை, அணிகலன்கள், சிகை அலங்காரம் என அனைத்திலும் புதுமையைப் புகுத்தியவர். நடை, உடை, பாவனையில் கூட பல அபிநயங்களை நடிப்பில் வெளிபடுத்தி ‘அபிநய சரஸ்வதி’ எனப் பெயர் பெற்றவர். குறிப்பாக சொல்லப்போனால், சரோஜாதேவி அவர்கள், சினிமா துறைக்கு கிடைத்த ஒரு பொக்கிஷம்.
சிறுவயதில் சரோஜா தேவியை அவரது தாத்தாவுக்குப் பிடிக்காதாம். எப்போதும் இவரைத் திட்டிக்கொண்டே இருப்பாராம். அதிர்ஷட வசமாக திரைத்துறையில் இவர் முன்னணிக் கதாநாயகி அந்தஸ்து பெற்றபோது இவரைத் தான் இறக்கும் வரையிலும் பாராட்டிப் புகழ்ந்து பேசியதும் இவர் தாத்தா தான்.
“அபிநய சரஸ்வதி” சரோஜா தேவி யின் உடன் பிறந்தவர்கள்:
மூத்த சகோதரிகள்: 1. சரஸ்வதி தேவி, 2. பாமா தேவி, 3. சீதா தேவி, 4. ராதா தேவி (சரோஜா தேவி),
5. வசந்தா தேவி( இளைய சகோதரி)
இவரது மகன்: கெளதம ராமச்சந்திரா
மகள்கள்: இந்திரா, புவனேஸ்வரி ஆகியோர். இறையருளோடு நல்ல தேக ஆரோக்கியத்துடன் நீடூழி வாழ வாழ்த்துகிறது மின்கைத்தடி.காம் மின்னிதழ்…